ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பாதிக்கப்பட்டு ஆயுதப் படை காவலர் வேலுச்சாமி தன் ஆயுளையே முடிவுக்கு கொண்டு வர முயன்றது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது! ஆன்லைன் சூதாட்டத்தால் அந்நிய நாட்டு பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிச் செல்வதோடு, பல குடும்பங்களையும் அழிவுக்கு தள்ளிவருகின்றனர். மக்களும், மாநில முதல்வர்களும் வலியுறுத்திய போதிலும் இதற்கு முடிவு கட்ட விரும்பாமல் மத்திய அரசு கள்ள மெளனம் சாதிப்பதின் பின்னணி என்ன..?

police velusamy
தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர் வேலுச்சாமி.

சூதாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் போரே மகாபாரதம் எனும் காவியம்! சூதாட்டத்தால் மானம், மரியாதை பறிபோய், ஒட்டுமொத்த குடும்பமே அழியும் என்ற பாடத்தை பல நூற்றாண்டுகளாக மகாபாரத காவியம் எடுத்துரைத்திருந்த போதிலும், அதே போன்ற நிகழ்வுகள், சூதாட்டத்தில் பணம்,சொத்து இழந்தவர்களின் எண்ணற்ற தற்கொலை செய்திகள் வந்த வண்ணம் இருந்தும், இந்த ஆன் லைன் சூதாட்டங்களை இந்திய அரசு தடை செய்யாமல் உள்ளது.

போக்கர்,ஷீட்டிங் பைட்டர்ஸ்,..போன்ற பல பெயர்களில் இந்தியாவில் 132 சூதாட்ட விளையாட்டுகளும், ஆப்களும் உள்ளன. இவற்றை ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் நடத்துகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கடிதங்கள் எழுதியுள்ளனர். மத்திய அரசிடம் மன்றாடிப் பயனில்லை என தெலுங்கானா, மேகாலயா போன்ற ஒரு சில மாநிலங்கள் தாங்களே இதற்கு தடைவிதித்து தங்கள் மாநில மக்களை தற்காத்துக் கொள்ள முயன்று வருகின்றன.

அக்டோபர் 2020 ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தில், ‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு என்ற மிகக்கொடிய சமூக கொடுமையை கூடிய விரைவில் ஒழிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக குறுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும், ஆப்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்,’ என வலியுறுத்தியதோடு, தடை செய்யப்பட வேண்டிய 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணையதளங்கள் மற்றும் ஆப்களின் பட்டியலையும் ஜெகன் மோகன் தனது கடிதத்தில் இணைத்திருந்தார். அந்தக் கடிதம் கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொள்பவர்களின் செய்திகள் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கிறது. இதில் எவ்வளவு இளைஞர்களை, குடும்பங்களை பறி கொடுத்திருப்போம் என்பதற்கு கணக்கு வழக்கில்லை. புதுச்சேரி விஜயகுமார்,கோவை மதன்குமார், மதுரையில் வேங்கட சுப்பிரமணியம்-பட்டுமீனாட்சி என்ற தம்பதி..என ஏகப்பட்ட பெயர்கள் ஞாபகம் வருகிறது.

அதில் புதுச்சேரி இளைஞன் விஜயகுமார் தன் மனைவி மதிக்கு எழுதிய கடிதம் அனைவர் மனதையும் உலுக்கி எடுப்பதாக இருந்ததோடு, எப்படி இதில் இளைஞர்கள் சிக்குகிறார்கள் என்பதை மிக துல்லியமாக விளக்குவதாக இருந்தது. இதோ அவரது மரண வாக்குமூலம்:

“என்னை மன்னிச்சிடு மதி… என்னால ஒன்னும் பண்ண முடியல மதி… தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதை மாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. இதுக்கு முடிவு கட்டணும்!” என எழுதி இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இது போன்ற பல தற்கொலை நிகழ்வுகளைத் தொடர்ந்து சென்ற ஆட்சியின் போது திமுக,பாமக, திராவிடர் கழகம்,மக்கள் நீதி மையம் ஆகியவற்றின் தொடர் வற்புறுத்தல் மற்றும் பொது மக்களின் வேண்டுகோள் ஆகிவற்றை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை அதிமுக அரசு கொண்டு வரும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.

மேலும், இது தொடர்பாக மதுரையின் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரீசீலித்து தடை செய்யும் வழிமுறைகளை ஆராயக் கேட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது.

அந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படவும். தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் அந்த சட்டம் வழிவகை செய்தது.

ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு  இயற்றிய  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன்,ஆகியோர் ஒரு முறை ஆஜராவதற்கே பல லட்சம் பீஸ் வாங்குபவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ‘’இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும்  சூதாட்டம் இல்லை எனறும் வாதிட்ட அவர்கள், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லி கட்டிற்கு தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர்!

இந்த வழக்கில்  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது,உரிய விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது. ஆகவே, உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் கூறி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ரத்து செய்தது. இதில் நாம் கவனிக்க வேண்டியது சூதாட்டத்தை தடை செய்யும் ஒரு சட்டத்தை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கூறியதாகும்!

உண்மை என்னவென்றால், நமது சுதந்திர இந்தியாவில் எது எதற்கோ சட்டம் பிறப்பித்தும் அல்லது இருக்கும் சட்டங்களில்  திருத்தம் கொண்டு வந்தும் மக்களை பாடாய்படுத்தும் மத்திய அரசு சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக தெளிவாக எந்த ஒரு சட்டத்தையும் இது வரை பிறப்பிக்கவில்லை. ஆகவே பிரிட்டிஷ் காலத்தில் 1867 ல் இயற்றப்பட்ட பப்ளிக் கேம்ஸ் ஆக்ட் தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

இதனால் தான் வெளிநாட்டு சூதாட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப திறமையைக் கொண்டு இந்திய இளைஞர்களை,அவர் தம் குடும்பங்களைக் கொன்று சூறையாடிச் செல்வதை தடுக்க வழியின்றி உள்ளது! அம்பானி,அதானிகள் நலன்களுக்கென்றால், உடனே சட்டம் இயற்றுவதா அல்லது இருக்கின்ற சட்டத்தையே திருத்தி மாற்றுவதா என்பதில் சுறு,சுறுப்பாக செயல்படும் பாஜக அரசு ஏன் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வர மறுக்கிறது. இந்தியாவிற்கு சுதந்திரக் கிடைத்தது உண்மை என்றால், நம் நாட்டை தொழில் நுட்பம் என்ற சுருக்கு கயிறால், சூறையாடிக் கொழுக்கும் அந்நிய நிறுவனங்களை ஏன் தடை செய்ய முடியவில்லை..? தமிழக அரசாவது விரைவில் வலுவான ஒரு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர வேண்டும்.

நன்றி,

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here