மிழகத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மன விரக்தியில் கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 03 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும் 50 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுபவர்கள் தங்களது சம்பள பணம் மட்டுமின்றி, வட்டிக்கு கடன் வாங்கி  சூதாட்ட ரம்மியை விளையாடி பணத்தை இழந்து, வாங்கிய கடனை கட்ட முடியாமல் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதுடன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது, குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்வது என்பதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி ஆட்டத்திற்கு அடிமையாகி பணத்திற்காக வழிப்பறி, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு சமூக குற்றங்கள் பெருகும் நிலையும் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் ரம்மியும்!
அவசர சட்டங்களும்!

சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்கொலைகள் அதிகரித்து பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டதால் மக்கள்  மத்தியிலிருந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் கோரிக்கை வலுப்பெற்று வந்தது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பொது நலவழக்குகளும் போடப்பட்டன.

இதே நிலை தமிழகத்திலும் இருந்ததால் 2020 – ஆம் ஆண்டில் எடப்பாடி  தலைமையிலான அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு சூதாட்ட சட்டம் – 1930,  சென்னை மாநகர காவல் சட்டம் – 1888,  தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் – 1859 ஆகிய சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2020 தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் அவசர சட்டமாக கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட சில நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான பி.எஸ்.ராமன், ஏ.கே. கங்குலி, அபிஷேக் மனு சிங்வி,  ஆரியமா சுந்தரம் என 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இவ்வழக்கில், ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டே, அது சூதாட்டம் அல்ல என்றும், இந்தச் அவசர சட்டம் வணிக நோக்கத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை அரசு விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2021 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதிலிருந்து நீதிமன்றங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய விடாது என்பதை புரிந்து கொள்ள முடியும். மத்திய அரசே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தனிச்சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தடுக்க முடியும். மாநில அரசுகள் எந்த விதிகளை உருவாக்கி தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் ரத்து செய்யப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.


இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மி: ஆட்கொல்லி சூதாட்டம்!


தற்போதைய ஸ்டாலின்  தலைமையிலான தி.மு.க.அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அவசர சட்டம் அக்டோபர் 1-ஆம் தேதி இயற்றியது. அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் மாதம் 28 – ந்தேதி அனுப்பி வைத்தது.

ஏற்கனவே பல மசோதாக்களை கிடப்பில் போட்டது. இந்த மசோதாவையும் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்பதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால் அரசியலமைப்பு சட்டத்தின் படி சட்டமன்றம் கூடியதிலிருந்து ஆறு வாரங்களில் அவசரச் சட்டம் காலாவதியாகும் என்பதை வைத்தே, அந்த அவசர சட்டத்தை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வரை கையெழுத்திடாமல் இருந்து அந்தச் சட்டம் காலாவதியாக்கியுள்ளார் ஆளுநர் ரவி.

ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளார் என்பதால் இதிகாசங்களின் மேன்மையை புகழ்ந்து வருபவர். எனவே மாகாபாரதத்திலேயே தருமர் சூதாடினார். நாம் சூதாடுவது தான் பாரதப் பண்பாடு என்று கூறினாலும் ஆச்சரியம் அடைய முடியாது.

சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்!
வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி 25 நாட்கள் கடந்த பிறகே பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதினார். நவம்பர் 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப் பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது. அதன் பிறகும் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டே காலம் கடத்தி வருகிறார் ஆளுநர்.

மக்களின் வரிப்பணத்தில் மூலம் தமிழக ஆளுநர் மாளிகைக்கான ஆண்டுச் செலவு கிட்டத்தட்ட 8 கோடி. மக்களின் பணத்தை செலவு செய்து வயிறு வளர்த்துக் கொண்டும், இந்துத்துவா கருத்துக்களை பிரச்சாரம் செய்தும், சொகுசாக வாழ்க்கை வாழும் ஆளுநர் தமிழக மக்களைப் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுக்கும் தடை சட்டத்திற்கு  உள்நோக்கத்துடனே ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

குறிப்பாக, மக்கள் பாதிக்கும் பிரச்சினைகளை கவனம் செலுத்தாமல், பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட முதலாளிகளை உடனுக்குடன் சந்திக்கிறார். மறுபுறம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்து அதன் மூலம் மக்களிடமும் கார்ப்பரேட் நிறுவனத்திடமும் கொள்ளையடிக்க நினைக்கும் உள்நோக்கமும் இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தடையாக இருக்கும் என்பதால் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் ஆளுநர் ரவி. ஆனால், ஆளுநர் சூதாட்ட நிறுவன முதலாளிகளைச் சந்தித்ததையோ, அவசர சட்டம் காலாவதியாகும் வரை ஒப்புதல் தராமல் இருந்ததையோ பேசாமல் தமிழக அரசு தான் காரணம் என அண்ணாமலை பிரச்சினையை திசை திருப்பி வருகிறார்.

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உட்பட 36 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது.


இதையும் படியுங்கள் : சூது கவ்வும் ஆன்லைன் விளையாட்டுகளும்! சூனியக்கார அரசுகளும்!


மக்களுக்கு வேலை செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதே சரியானதாக இருக்கும். ஆனால் தமிழக அரசோ, ஆளுநருக்கு எதிராக வெற்று சவடால் அறிக்கைகள் விடுவதும் மசோதாவை ஒப்புதல் அளிக்குமாறு கெஞ்சுவதும் என்றே உள்ளது. ஆளுநருக்கு எதிராக செயல்பட்டால் ஒன்றிய அரசு ஆட்சியை கலைத்து விடும் என்ற பயத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளுநரின் அடாவடித்தனங்களை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களோ தினம் தினம் ஆன்லைன் ரம்மி விளையாடி சாகின்றனர். ஜனநாயக அமைப்புகளையும் மற்ற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் விரோத ஜனநாயக விரோத ஆளுநர் முறையே வேண்டாம் என ஆளும் திமுக அரசு குரல் எழுப்பி போராடுவதே தற்போதைய தேவை. ஆளுநரை வெளியேற்றினாலும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க முடியாது. ஏனெனில் அது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் திட்டம்.

ஏகாதிபத்தியத்தின் சிலந்தி வலை!
பெருகும் ஆன்லைன் போதை கலாச்சாரம்!

உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாம். இதனால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உட்பட பல விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. அதேபோல, இந்தியா இதுவரை 560 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் 650 மில்லியனாக அதிகரிக்கும் என்கின்றனர் இணையதள ஆய்வாளர்கள். இதன் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சந்தை விரிவாக்கத்தையும் மக்கள் ஆன்லைன் போதையில் ஆழ்த்தப்பட்டுள்ளதையும் புரிந்து கொள்ள முடியும்.

2010-ல் வெறும் 25 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2022-ல் அது பல மடங்காக உயர்ந்து 400 நிறுவனங்களாக உள்ளது என்கிறது ஓர் ஆய்வு அறிக்கை. இதன்மூலம் மக்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கைபேசிக்குள் மூழ்கி கிடக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்படுவதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

மக்கள் தங்கள் மீதான சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதை இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பறிக்கப்படுவதைப் பற்றி உணராமல் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வாங்குவதிலும் அதனை பயன்படுத்துவதிலுமே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதைத் தான் ஏகாதிபத்திய முதலாளித்துவமும் விரும்புகிறது. இதற்கேற்ற வகையில் தான் ஆன்லைன் விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஏகாதிபத்திய சிலந்தி வலையை அவசர சட்டங்கள் மூலமோ, நீதிமன்றத்தின் மூலமோ தடை செய்ய முடியாது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிராக களமிறங்குவதே சரியானது.

இரணியன்

புதிய ஜனநாயகம் (மா.லெ)
டிசம்பர்-ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here