தமிழ் நாட்டில் பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரை பாசிச எதிர்ப்பு என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருந்த போலி இடதுசாரிகள் மற்றும் அம்பேத்கரிய வாதிகள் அனைவரும் ஊசலாடத் துவங்கினர். சீட்டு எண்ணிக்கையில் சிறுபான்மை என்ற வகையில் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டு நேரடியாக ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற வியாக்கியானங்களுடன் விஜய் ஆட்சியை ஆதரிக்கத் துவங்கினார்.
பாசிச கோமாளி விஜய் ஒரு பாஜகவின் பினாமி என்பதையும், தனக்குள்ள கவர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு அரசியலற்ற அரசியலை முன்னிறுத்தி செயல்பட்டுக் கொண்டுள்ளார் என்றும் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய ஜனநாயகம் தினசரி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தை ஆண்டு வந்த திமுக கார்ப்பரேட் ஆதரவு கொள்கையில் சிறிதும் சமரசம் இன்றி கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது என்பது மட்டுமின்றி உச்சகட்டமாக ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட மசோதா 2023’ என்ற பெயரில் ஏப்ரல் 21, 2023 அன்று கொண்டு வந்தது. 100 ஹெக்டேருக்கும் (247 ஏக்கர்) அதிகமான பெரிய நிலப்பரப்பை அதிரடியாக – உள்ளாட்சி அமைப்புகளை – கேட்காமல் கையகப்படுத்தலாம் என்று முன் வைத்தது. அதனை அப்போதே தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர்.
அவர்களின் வழியிலேயே கார்ப்பரேட் சேவைக்கு விசுவாசமாக செயல்பட்டு வரும் பாசிச கோமாளி விஜய் ஆட்சியும் தற்போது புதிய வகையில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்ட திருத்தம் (2026) என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது.
படிக்க:
♦ விஜய் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி
♦ அரசியலற்ற அரசியலும் கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக பாசிசக் கோமாளி விஜய்!
இந்த மசோதாவின் மூலமாக, நல்ல நிலையில் உள்ள நன்செய் நிலங்கள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமோ, அந்த மாவட்ட ஆட்சியரிடமோ கேட்க வேண்டியதில்லை. அது கார்ப்ப்ரேட் தொழிற்சாலைத் தேவைக்கு பயன்படும் என்ற பட்சத்தில் அப்படியே கையகப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொடுக்கலாம் என்கிறது.
ஏற்கனவே, நிலவி வரும் சட்டங்களின் படி ஒர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் போது அந்த ஊராட்சியில் அதற்காக தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை அங்கீகரிக்க வேண்டும். அதை மீறி நிலத்தை கையகப்படுத்த முடியாது என்பதை எல்லாம் ஒழித்துக் கட்டுகின்ற வகையில் இந்த சட்ட திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
‘உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் அந்தப் பகுதிக்கு கொண்டு வர வேண்டுமா? வேண்டாமா? என முடிவெடுக்க வேண்டும்’ என்ற முந்தைய சட்டத்தை காலி செய்கிறது, இந்த புதிய சட்டம்.
தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத – முழுமையான விவசாயப் பகுதிகளை – நில மேம்பாட்டுக்காக எடுக்கிறோம் என இந்த மசோதாவின் மூலமாக முன் வைக்கிறது பாசிச கோமாளி விஜய் அரசு. விளைநிலங்களில் தொழிற்சாலை நிறுவுவது என்பது விவசாயத்தை அழிப்பதாகும். அதை மூடி மறைத்து நிலமேம்பாட்டிற்காகவே இத்தகைய நிலங்களை கையகப்படுத்தப் போவதாக அப்பட்டமாக பித்தலாட்டம் புரிகிறது, இந்த மசோதா.
அதற்காக ஊராட்சி மற்றும் நகராட்சி ஆகியவற்றுக்கு மேலாக சூப்பர் அதிகாரம் கொண்ட புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவரான நகர ஊரமைப்பு திட்ட இயக்குநர் என்ற பதவிக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப் போகிறார்களாம்.
இனி கார்ப்பரேட் முதலாளிகள் கேட்ட மாத்திரத்தில் விவசாய நிலங்களையும், நீர் ஆதாரப் பகுதிகளையும் நகர்புற மேம்பாடு என்ற பெயரில் அதிரடியாக காவல்துறையை களத்தில் இறக்கி, விவசாயிகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நிலத்தை எடுத்துக் கொடுத்து சேவை செய்வதற்கே தவெக அரசு இந்த அமைப்பை உருவாக்கவுள்ளது.
இதே காலகட்டத்தில் தான் தூத்துக்குடி கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக 16 உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக்கொன்ற போலீசுக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. திமுக காலத்திலேயே முன்வைக்கப்பட்ட இந்த நீதிமன்ற பதில் மனுவை துணிச்சலாக பொதுவெளியில் அறிவித்ததும் வழக்குகள் நிலுவை என்ற பெயரில் போலீசுக்கும் கருணை காட்டுகின்ற அளவிற்கு ‘விஜய் அங்கிள்’ ஆட்சி கார்ப்பரேட் சேவையில் முன்னேறிக் கொண்டுள்ளது.
படிக்க:
♦ அகர்வாலுக்காகவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலை!
♦ தூத்துக்குடியை விழுங்கப் பார்க்கும் ‘மலைப்பாம்பு’!
“வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், உள்நாட்டு அதானி, அம்பானி போன்ற திமிங்கலங்களுக்கும் தடையின்றி சேவை செய்வதையே புண்ணியமாக கருதும் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் ஏவலாளாக இங்கே வீற்றிருக்கும் தலைமை செயலாளர் சாய்குமாரின் திட்டமே இந்த சட்டமாக வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் யார் ஆட்சித் தலைமைக்கு வந்தாலும், அவர்கள் அதிகாரிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளே என்பது O.P.பன்னீர் செல்வம் காலத்தில் தொடங்கியது. அது அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், விஜய்..எனத் தொடர்கிறது”. என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடக ரசிகர் மன்றத்தின் தலைவரான புதிய தலைமுறை சமஸ் பாணியில் செயல்பட்டு வரும் திருவாளர் சாவித்திரி கண்ணன் புலம்பித் தவிக்கும் அளவிற்கு இந்த சட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி கார்ப்பரேட் சேவையில் ஏற்கனவே ஆண்ட திமுகவைப் போலவே விசுவாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் திமுகவை காட்டிலும் பல மடங்கு வேகமாகவும் கார்ப்பரேட் சேவை செய்வதில் முன்னேறி கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி தூக்கியெறிவது தான் தீர்வாகும்
◾மருது பாண்டியன்.
புதிய ஜனநாயகம் தினசரி






