மூன்று நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 3 அன்று, இதே தளத்தில் “இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் – தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!” – என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் முதல் பத்தியிலும், இறுதி வரிகளிலும் நூற்றாண்டு காலத்திற்கு முன்பே ஆசான் லெனின் கூறிய “பாராளு மன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்” என்ற கூற்றை ஒன்றிய பாஜகவும், தமிழ் நாட்டின் தவெகவும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன என எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதப்பட்ட மை கூட காயவில்லை. செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விஜய் நிகழ்த்திய உரையின் மூலம், ‘லெனினின் அவ்வார்த்தைகள் அனைத்தும் 100 சதவீதம் உண்மையே’ என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளார் அவர்.
ஆம், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 3 அன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பாக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) போன்ற முக்கிய நபர்கள் உள்ளிட்ட சிலர் பேசினார்கள். குறிப்பாக உதயநிதி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கேட்டிருப்பது; 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் நடந்திருப்பது; கொலைகள், ஆணவப் படுகொலைகள்; காவல் நிலைய மரணங்கள்; சிறை மரணம்; எண்ணற்ற பாலியல் வன்கொடுமைகள்; தவெக-வினரே பாலியல் வன்கொடுமைகள் – இன்ன பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருப்பது; தூய்மை பணியாளர் போராட்டம்; மாணவர்கள் கோரிக்கைக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை விதித்தக் கொடுமைகள்; காவல்துறையும் உளவுத் துறையும் செயலிழந்து போய் இருப்பது…என அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை விஜய் தலைமையிலான தவெக அரசு மீது சுமத்திப் பேசினார்.
உதயநிதி பேசப் பேச இருப்புக் கொள்ளாமல் விஜய் அவதிப்பட்ட காட்சியைத் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோர் உணர்ந்திருக்கக் கூடும். எனவே கெட்டிக்காரத்தனமாக செப்டம்பர் 3 அன்று, ‘அனைத்துக்கும் நான் திங்கள்கிழமை வந்து பதில் சொல்கிகிறேன்; அன்று யாரும் வெளியில் ஓடிறாதீங்க’ என்று எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுதே ‘வீராதி வீரன்’ என்று பாவனை காண்பித்து விட்டு விஜய் வெளியில் தப்பித்து ஓடினார். அதுதான் உண்மை. அதைக் கூட உதயநிதி ‘இப்பொழுது யார் பதில் சொல்லாமல் ஓடுகிறார்கள் என்பதை அனைவரும் பாருங்கள்’ என்று கூட கிண்டல் செய்ததையும் பார்த்தோம்.
சாக்கடை மன்றமே சட்டமன்றம்
முதலாளித்துவ வகைப்பட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என்றாலும் கூட குறிப்பிட்ட அளவில் நாம் அதனுடைய செயல்பாடுகளை குறிப்பிட்ட அளவிலாவது கண்காணிக்கவும் அதுகுறித்து வரையறுத்து மக்களிடத்திலே வெளிப்படுத்தவும் வேண்டி உள்ளது. இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தில் சிற்சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிகிறது தான். பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது, சுயமரியாதைத் திருமணம், சமத்துவ புரம் எழுப்புதல், சில பொருளாதார இலவச திட்டங்களை அறிவித்தல் போன்றவற்றை சில கட்சிகள் முன்னெடுக்கவே செய்கின்றன.
சனாதன பார்ப்பனியத்திற்கு எதிராக முதலாளித்துவ கட்சியாக இருந்தாலும் திமுக போன்ற கட்சிகளில் முன்னோடி தலைவர்கள் அளவிலாவது வினையாற்றுகிறார்கள். விலைவாசி உயர்வு, மொழி உணர்வு, இந்தி சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, சுயமரியாதை கொள்கைகளைப் பரப்புதல் உள்ளிட்டவற்றுக்காக போராடி இருக்கிறார்கள்; சிறையும் சென்றிருக்கிறார்கள். சிலர் தியாகமும் புரிந்திருக்கிறார்கள். ஓரளவு இச்சமூகக் கட்டுமானத்தில் அரசியல் பேசவும் தெரிந்து இருந்தார்கள். ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ எதிர்ப்பில் குறிப்பிட்ட வினையாற்றுதல் செய்திருக்கிறார்கள்.
படிக்க:
♦ ‘அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் விஜய்’ தான்! தற்குறிகளின் அலம்பல்!
♦ அரசியலற்ற அரசியலும் கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக பாசிசக் கோமாளி விஜய்!
ஆனால் தற்போது முதலமைச்சராக வந்துள்ள நடிகர் விஜய்க்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது. அரசியல் குறித்து நான்கு வார்த்தைகள் பேசவும் தெரியாது; அரசியல் பிழைப்புக்காக சில முன்னோடி தலைவர்களின் படங்களை மட்டும் தன் பின்னே மாட்டிக் கொண்டு படம் காண்பிக்கிறார் விஜய்! பாசிசத்திற்கும் பாயசத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடமையாளராக தம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் அவர் வெட்கப்பட்டுக் கொண்டதில்லை. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எவற்றுக்காகவும் அவர் வீதிகளில் இறங்கிப் போராடியவர் கிடையாது; சிறை ஏகியவர் இல்லை. ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பார்ப்பன கொலை வெறிதாண்டவ நடவடிக்கைகள் எதையும் இவர் கண்டு கொண்டதே இல்லை! சினிமா கவர்ச்சி வாதம் மூலம் பல்வேறு குறுக்கு வழிகளில் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த கதைகளை எல்லாம் ஏற்கனவே இதே தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வாயிலாக அம்பலப்படுத்தி உள்ளோம்.
இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும் எண்ணற்ற மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் படுவதும் அதன் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் புரிவதும் அவற்றுக்கு அந்தந்த சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பதும் ஒரு சம்பிரதாய மான வழக்காக இருந்து வந்துள்ளது.
ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மீனவ அமைச்சரிடம் பதில் கேட்டால் தொழில் அமைச்சர் பதில் சொல்கிறார்; நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார்; எந்தெந்த அமைச்சர் எவை எவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற விவஸ்தேயே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்க சட்டமன்றத்தின் ‘நல்ல’ சபாநாயகரும் இடம் அளித்து விட்டார். விஜய் அளிக்க வேண்டிய பதில்களுக்குப் பதிலாக ஆதவ், ராஜ்மோகன், அல்லது நிர்மல் குமார், அருண் ராஜ் என்போர் பதில் அளிக்கிறார்கள்.
படிக்க:
♦ விஜய் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி
♦ கழுத்தில் கட்டிய கலயம் தற்போது அடையாள அட்டையில் அதிகாரப்பூர்வமாகிறது! பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில்
இப்படித்தான் கடந்த செப்டம்பர் 3 அன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது சட்டமன்றத்தில் மேலே முந்தைய பத்திகளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட பல உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு (மூன்று நாட்கள் சட்டமன்ற விடுப்பு நாட்களுக்குப் பிறகு) செப்டம்பர் 7-ல் பதில் அளிப்பதாக ‘சன்டப்பிரசண்டம்’ செய்துவிட்டு போனார் விஜய்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல; படித்த அறிவு ஜீவிகள் கூட செப்டம்பர் 7ல் நடிகர் விஜய் அனைவரையும் பொளந்து கட்டப் போகிறார் என்றே எதிர்பார்த்து கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு தொலைக்காட்சி பெட்டிகள் முன் அமர்ந்து சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கவும் – கேட்கவும் ஆர்வம் காட்டி இருந்தனர்.
ஆனால் நடந்தது என்ன? இதற்கு முன்பு நடந்த ஆட்சிக் காலங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றாலே – காவல்துறை மானியம் என்றாலே அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கக் கூடிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் கூறுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு – கேள்விகளுக்கு – விமர்சனங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் அன்றைக்கே பதில் சொல்வார்கள். ஆனால் நடிகர் விஜய்யோ சட்டம் ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும், கேள்விகள் கேட்கப்பட்ட நாளன்றே பதிலளிக்கத் திராணியற்று ஓடிப் போனார். மூன்று நாட்கள் கடந்து சட்டமன்றத்தில் வந்த பிறகும், அந்த மூன்று நாட்களில் எழுதி மனப்பாடம் செய்து வைத்திருந்த விவரங்கள் கூட காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலாக அல்லாமல், சினிமா வசனப் பாணியில் குறிப்பாக திமுகவை வழக்கம் போல குற்றம் சுமத்தி பலமான கூக்குரலுடன் 1970-களின் வேறு விவரங்களுக்கு மடை மாற்றினார். தமக்கு ஏதுவாக தேர்வு செய்யப்பட்ட அணில் குஞ்சுகளான அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வழக்கம்போல் மேஜைகளைத் தட்டி ‘தன்னிகரற்ற தலைவன்’னது ‘ஈடிணையற்ற பேச்சுக்கு தாங்க முடியாத சிரிப்புக்களுடன் ஒத்தூதினர்; எதிர்க்கட்சிகளை நோக்கி ஏளனம் செய்தனர். ஒரு வகையில் சினிமா சூட்டிங் அரங்கேறியது!
சட்டமன்றத்தில் விஜய்யின் பேச்சு, பொதுக் கூட்டத்தில் நாலாந்தரப் பேச்சாளன் பேச்சுக்கு இணையானதாக இருந்தது என்றே சொல்லலாம். அரசியலில் இந்த ஆள் ஒரு ஞான சூனியம் என்பதனை நிர்வாணமாக நின்று காண்பித்து விட்டார். ‘ஒரு சங்கீதா போனா என்ன? அவருக்கு ஆயிரம் ஆயிரம் சங்கீதாக்கள் அக்கா தங்கைகளாக இருக்கிறோம்; ஏன், பொண்டாட்டியாகக் கூட இருந்து விட்டுப் போகிறோம்’ என்றும், ‘நான் இன்று வரை விஜய்யைக் காதலிக்கிறேன்; இது விஜய்க்கும் தெரியும்; இந்த விஷயத்தை அவரது அப்பா சந்திரசேகரிடம் கூட முன்பே தெரிவித்து விட்டேன்; இந்த விவரம் என் புருஷனுக்குக் கூடத் தெரியும்; …’ என்றும் வெட்கம் மானம் சூடு சொரணை ஏதுமின்றி பரப்புரை செய்யும் சிற்சில பெண்கள் – விசில் அணில் குஞ்சுகளுக்கு வேண்டுமானால் விஜய்யின் இத்தகைய சினிமா பாணி சட்டமன்ற அநாகரிக பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் விவரம் அறிந்த உழைக்கும் மக்கள், படித்த அறிவு ஜீவிகள் இவரது பொருளற்ற அரசியல் அற்ற – அநாகரிகமான பேச்சுக்களை – விவாதங்களை யாரும் ரசிக்கவே மாட்டார்கள். கடுமையான ஆத்திரம் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.
படிக்க:
♦ கொல்லூர் ‘ஸ்ரீமூகாம்பிகை’யும் – எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் கும்பல் கூத்துக்களும்!
♦ ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டும் நடிகர் விஜய்யின் ஆட்சி!
அந்த வகையில் சட்டமன்றத்தை சாக்கடை மன்றம் ஆக்கி லெனின் சொற்றொடர்படி பன்றிகள் தொழுவமாக்கிய ஆகப்பெரும் பெருமை விஜய்யை மட்டுமே சாரும் என்றால் அது மிகையான கூற்று அல்ல.
அணில் குஞ்சுகள் ஒரு புறம் கிடக்கட்டும்! விஜய்யின் உரை குறித்து அவருக்கு முட்டுக் கொடுக்கும் ‘முற்போக்காளர்கள்’ ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்?
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு நடிகர் (‘முதல்வர்’ என்று சொல்வதற்கே நா கூசுகிறது) விஜய்யின் எகனைக்கு- முகனையான, அரசியலற்ற – பொருளற்ற வழக்கமான ஆபாசப் பதிலுரையை சட்டமன்றத்தில் வீற்றிருந்த சிவப்பு துண்டுக்காரர்கள் நால்வரும் ஏற்றுக் கொள்கிறார்களா? சி பி ஐ., சி பி எம் தலைவர்கள் இது குறித்து என்ன கூறுகிறார்கள்? ‘திமிரி எழு! திருப்பி அடி’ – என்ற வீர முழக்கத்திற்கு சொந்தக்கார விசிகவின் ஒருவர் ‘மானமிகு’ அமைச்சர் ஆகி விட்டதால் எஞ்சிய ஒருவரும் விஜய் உரையை ரசிக்கிறாரா? இதுகுறித்து தொல் திருமா ஏன் வாய் திறக்கவில்லை? ‘சிறுபான்மையினரின் பாதுகாவலன்’ என்று விஜய்யை உச்சி மோர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யின் ஒரு ‘மாண்புமிகு’ போக, எஞ்சியவர் உறங்கிக் கொண்டிருந்தாரா? அதன் தலைவர் காதர் மொய்தீன் விஜய்க்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறாரா? வைகோ கட்சிக் காரர்கள் திமுக-காரர்கள் ஆகிவிட்டதால், ‘விஜய்யின் பதிலுரைக்கு இணை உலகத்தில் வேறு எவர் உரையும் அமையப்போவதில்லை’ என்று கருப்புத் துண்டை இழுத்து விட்டுக் கொண்டு கர்ஜிக்கிறாரா வைகோ? சொல்லவே வேண்டாம் காங்கிரஸ் கட்சிக்காரர்களை! ராகுலுக்குப் போட்டியாக பிரதமர் விஜய்தான் என்று விசில் கூட்டம் ஓங்கி விசில் அடித்தாலும் காதை பொத்திக் கொள்பவர்கள் அல்லவா இந்த மானங் கெட்டவர்கள்! இதற்காக அலட்டிக்கொள்ளப் போகிறார்கள்?
தமக்கு ‘கொள்கை எதிரி பாஜக’ தான் என்றார் இந்த பித்துக்குளி. ஆனால் அந்தக் கொள்கை எதிரியைக் குறித்து வாய் திறந்து பேசுவதே இல்லை. தப்பித் தவறி ஓரிரு தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் விஜய் குறித்து விமர்சித்து பேசுகின்றதை சட்டமன்றத்திலே ஒரு அமைச்சர் பாஜகவை விமர்சித்து பேசுகிறார்; இன்னொரு அமைச்சரோ அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுகிறார்.
படிக்க:
♦ கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!
♦ திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
கொள்கை எதிரியோடு கும்மாளம் அடிக்கிறார் விஜய் என்பதே பேருண்மை! பாஜக இந்துத்துவ கும்பலால்தான் விஜய் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது என்பதனை நன்றாகவே உணர்ந்துள்ளார். ‘கொள்கை எதிரி’ எனக் கூறிக் கொள்வதெல்லாம் அரசியல் பம்மாத்து வேலை தவிர வேறு எதுவும் இல்லை. இது விஜய் -அமித்ஷா கூட்டணிக் கும்பலுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அதனால் தான் தமிழ்நாட்டின் அனைத்து நலன்களுக்கும் எதிராக இருக்கக்கூடிய ஒன்றிய பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சட்டமன்றத்திலோ பொதுக்கூட்டத்திலோ வாய் திறக்காத விஜய், தோற்றுப்போன திமுகவை சட்டமன்றத்திலும் பொது கூட்டங்களிலும் மிக இழிவான முறையில் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருகின்ற கேவலத்தைப் பார்க்க முடிகிறது.
அரசியல் தெரியாத ஒரு தற்குறி நடிகர் தமிழ்நாட்டின் முதலமைச்சனாய் அமர ஒரு வாய்ப்புக் கிடைத்துவிட்டது. தவெக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை விஜய் சட்ட மன்றத்தையும், தமிழ்நாட்டையும் சினிமா சூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றாமல் இவர் ஓயப் போவதில்லை. இந்த லட்சணத்தில் தான் இருக்கக்கூடிய சட்டமன்ற கட்டிடம் போதாதென்று மேலும் மேலும் கூத்தடிக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 1200 கோடி செலவில் புதிய சட்டமன்றம் கட்டப் போகிறார்களாம் இந்தக் கோமாளிகள்!
அதுவரை தற்போதைய சட்டமன்றம் அமைந்துள்ள ராமலிங்கம் மாளிகையில் பத்தாவது தளத்தில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆறு கோடி செலவில் முதலமைச்சருக்கு தனியான அலுவலகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கூத்தாடிகள்!
இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களை கூர்மையான அரசியல் பாதையில் தெளிவுபடுத்தப்பட வேண்டியதும், தற்குறி நடிகர் விஜய்யை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டி அடிக்கப்படவும், களம் கண்டு செயலாற்ற வேண்டியதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாக முன் நிற்கிறது.
- எழில்மாறன்








நான் எனது பதிவுகளில் நடிகர் என்றுதான் குறிப்பிடுவேன். முதல்வர் என்று குறிப்பிடுவதில்லை. அவர் முதல்வர் அல்ல இன்றும் நடிகன்தான் என்பதை அவரே அடிக்கடி நிரூபித்து வருகிறார்.
நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதுதான் தோழரே!
மனுதர்மத்தின் பழைய தந்திரமும்… விஜய்யின் நச்சு அரசியலும்!
மனுஸ்மிருதியின் 7:41-ஆம் சுலோகம், பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த வேனன், நகுஷன் போன்ற மன்னர்களுக்கு ஏற்பட்ட அழிவை எச்சரிக்கையாகக் காட்டுகிறது. அன்று வர்ணாசிரமத்தைக் காக்க மன்னர்களைப் பயன்படுத்திய பார்ப்பனியம், இன்று தேர்தல் ஜனநாயகத்திலும் புதிய வடிவங்களில் தன் மேலாதிக்கத் தந்திரத்தைத் தொடர்கிறதா?
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த திராவிட இயக்கத்தையும் திமுகவையும் பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து வெறுப்பது ஏன்?
கொள்கையோ, சமூகநீதிப் பார்வையோ இல்லாத விஜய் போன்ற திரை நட்சத்திரங்களின் அருவருப்பான உடல்மொழியுடன் கூடிய பேச்சும், திமுக எதிர்ப்பு மட்டுமே மூலதனமாகக் கொண்ட கூச்சலும் யாருக்கான அரசியல்? ‘திமுக எதிர்ப்பு’ என்ற ஒரே முழக்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் பார்ப்பனிய மடைமாற்றச் சதியைத் தோலுரிக்கும் விரிவான கட்டுரை.
முழுக்கட்டூரையை வாசிக்க இணைப்பைச் சொடுக்குங்கள்:
👇
https://hooraan.blogspot.com/2026/09/blog-post_07.html?m=1
ஆம், தங்களின் இந்த கட்டுரையை நான் ஏற்கனவே படித்துள்ளேன். எனினும் இன்று மீண்டும் படிக்க நேர்ந்தமைக்காக மகிழ்கிறேன்.
சினிமாவில் நாலாந்தர நடிகனாகவும்,
அரைகுறை ஆடைகள் அணிந்த நடிகை களுடன் ஆபாசமாக குத்தாட்டம் போட்டவனும், இதன்பால் Genz இளைஞர்களை சினிமா ஆபாசக் கவர்ச்சி
மோகங்களினூடே வளைத்துப் போட்டுக் கொண்டவனும், பல்லாயிரம் கோடி சொத்துக்களை குவித்துப் போட்டுக் கொண்டதால், அதனைப் பயன்படுத்தி இந்த ஆளை அரட்டி உருட்டி மிரட்டி திராவிட இயக்கங்களை அழிப்பதற்குப் பகடைக்காயாய் பயன்படுத்தி அரசியல் கட்சி துவங்குவதற்கு வித்திட்ட பாஜக பாசிஸ்ட்டுகள் வெற்றியும் அடைந்து உள்ளனர். இந்த மைனாரிட்டி வெற்றிக்கு
விஜய்யின் தனிப்பட்ட சினிமா கவர்ச்சி மோகம், ஊடகப் பிரச்சாரங்கள், பார்ப்பனியப் பாதம் தாங்கிகளின் வன்மங்கள் ஒருபுறமிருக்க, ECI, பாஜக மூலமாக SIR, EVM-ஐப் பயன்படுத்தி தில்லுமுல்லு மோசடிகளைச் செய்து
ஆட்சி அதிகாரத்தை அபகரித்துக் கொண்டுள்ளனர்.
கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல
முதலாளித்துவ பாணியிலான அரசமைப்பு வடிவம் கொண்ட இந்நாட்டில், தமிழ்நாடு இந்த அளவிற்கு வளர்ந்தோங்கி நிற்பதற்கு – சனாதனப் பார்ப்பனியத்தை ஓரளவு சாய்ப்பதற்கு- தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அளவிற்காவது முன்னேற்றத்தைப் பெறுவதற்கு திராவிட இயக்கங்களைத் தவிர குறிப்பாக தந்தை பெரியார் அவர் வழியிலான திமுக இவர்கள் மட்டுமே காரணம் என்பதை இன்றைய கால தலைமுறையினருக்குத் தெரியாது. ஆக, வரலாறு மறைக்கப்பட்டு இருப்பதையே மூலதனமாகக் கொண்டு இப்படிப் பட்டதொரு கூட்டத்தை இந்த பொறுக்கி நடிகரால் தன் பின்னால் இழுத்து வர முடிந்துள்ளது.
அதைவிடக் கொடுமை, இந்த உண்மைகளை எல்லாம் ஆய்ந்திட முன்வராமல் இடதுசாரிகள் எனப்படுவோர், முற்போக்கு அரசியல்வாதி என பறைசாற்றுக் கொள்வோர் அந்த ஆளுக்கு – நடிகருக்கு பக்கவாத்தியம் வாசிக்கின்ற கொடுமைதான் பெரும் கொடுமை தோழரே!
இந்த எனது பதிவில் நடிகர் விஜய்யை சற்று கடுமையான வார்த்தைகளால் கூட விமர்சித்து உள்ளேன். அந்த அளவிற்கு நாட்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் ‘கரூர் மரண வியாபாரி’ தற்குறி விஜய் மீது தீராத கோபம் இருப்பதாலேயே அப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டியவனேன்.