
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்திலும் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் முன்வைக்கின்ற அபத்தமான அவதூறுகள் மற்றும் அதற்கு எதிராக திராவிட இயக்கத்தினர், பொதுவுடமை இயக்கத்தினர் முன்வைக்கின்ற கருத்துகள் ஆகியவை வலம் வருகின்றன.
சீமான் கட்சியை துவங்கிய காலத்திலிருந்து புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் இணையதளம் ஆகியவை தொடர்ந்து சீமானை அம்பலப்படுத்தி வந்தது மட்டுமின்றி தமிழகத்தில் இன வாதத்தை முன்வைத்து வளர்ந்து வருகின்ற தமிழ் பாசிச சக்திகளில் ஒருவர்தான் சீமான் என்பதை வரையறுத்து முன்வைத்தது.
பார்ப்பன இந்திய தேசியத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய உணர்வு பெறும் குட்டி முதலாளித்துவ பிரிவினர் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தனது கவர்ச்சிவாத பேச்சினால் இடம் பிடித்துக் கொண்ட சீமான் முன் வைப்பது தமிழ் தேசியம் என்று கொச்சையாகவும், பாமரத்தனமாகவும் புரிந்துக் கொண்டு அவரது பின்னால் அணி திரண்டு இருக்கின்ற இளைஞர்களை சீமானிடமிருந்து விடுவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதன் போக்கிலேயே தமிழ் தேசியத்தின் பெயரால் நடத்தப்பட்டு வருகின்ற பல்வேறு சந்தர்ப்பவாத சதிராட்டங்கள், போனபார்ட்டிச பிழைப்புவாத செயல்பாடுகள் ஆகியவற்றையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் நாடு தழுவிய அளவில் மிகப்பெரும் பயங்கரவாதமாக உருவெடுத்து பல்வேறு தேசிய இனங்களின் வழியில் அமைந்த மாநிலங்களின் உரிமையை பறித்து ஒற்றை தேசியமாக, ”ஒரே நாடு-ஒரே சந்தை” என்று கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கத்திற்காக இந்தியாவை அதாவது அவர்களின் மொழியில் சொன்னால் இந்துராஷ்டிரத்தை உருவாக்க முயற்சிக்கின்ற சூழலில் இந்தப் பணி மிகவும் அவசியமானது என்றே கருதுகிறோம்.
பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தின் மூலம்; கீழிருந்து விவசாயிகள்-தொழிலாளர்கள் உள்ளடக்கிய பெரும்பான்மை மக்கள் எழுச்சியின் மூலம் உருவானதல்ல இந்திய தேசியம்.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட தோல்வி மற்றும் உலக அளவில் நிலவிய நிர்பந்தம் ஆகியவற்றின் காரணமாக தனது காலனியின் கீழ் இருந்த நாடுகளை ’விடுதலை’ என்ற பெயரில் பல்வேறு ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்கு திறந்து விட்டது பிரிட்டன். 1947 ஆம் ஆண்டு தனது நேரடி காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை ’விடுதலை’ செய்தது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை முற்றாக அழித்து ஒழித்த பின்னர் சீமான் போன்றவர்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் உருவான தேசிய இன உணர்வுகளை நிறுவனமயமாக்குவதற்கு முயற்சித்தது.
இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் தலைமை தாங்குவதற்கு திராணியற்று ஏகாதிபத்தியத்தை சார்ந்து தனது தொழில் துறையை வளர்த்துக் கொண்ட இந்திய முதலாளி வர்க்கமான தரகு முதலாளி வர்க்கம், பிரிட்டன் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு தனக்கு தேவையான பிளவுபடாத, சிதையாத, ஒற்றை இந்திய சந்தை தேவையை முன்னிறுத்தி அதற்கு பொருத்தமான ஒரு சித்தாந்த ஆயுதமாக தேர்வு செய்து கொண்டதுதான் பார்ப்பனிய இந்திய தேசியம்.
இவர்களின் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற பல தேசிய இனங்களை மேலிருந்து அடக்குகின்ற ஆயுதமாக பார்ப்பனியம் செயல்படும்போதே சாதிய வடிவத்தில் செயல்பட்டு கீழிருந்து தேசிய இனங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதையே சீர்குலைத்து இன்றளவும் தடுத்து வருகிறது.
படிக்க: ♦ தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம்: அவரது கொள்கைகளும், லட்சியங்களும் முன்னேறியுள்ளதா?
எனவே ஒற்றை தேச கோட்பாட்டின் சித்தாந்த அடிப்படையிலான இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற கோட்பாட்டை அம்பலப்படுத்தாமல் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு பூர்வ குடி இனவாதம் பேசுவதோ அல்லது தேசிய இனப் பிரச்சனை என்று மனம் போன போக்கில் தேசியத்தை முன்வைத்து பேசுவதோ பார்ப்பனியத்தையும், பார்ப்பன கும்பல் முன்வைக்கின்ற இந்திய தேசியத்தையும் ஒருபோதும் முறியடிக்காது.
பார்ப்பனியம் சாதி அடுக்குகள் என்ற வடிவத்தில் தேச ஐக்கியத்திற்கும், வர்க்க ஐக்கியத்திற்குமே ஒரு தடைக்கல்லாகும். எனவே பார்ப்பனிய சித்தாந்தம், கலாச்சாரத்தை எதிர்த்து முறியடிக்காமல் தேசிய இனங்களின் விடுதலை, புதிய ஜனநாயக புரட்சி ஆகிய இரண்டையுமே நம்மால் சாதிக்க முடியாது.
இதுவே இந்தியாவில் உள்ள தேசிய இனப் பிரச்சனை குறித்த மிக முக்கியமான சிறப்பியல்பாகும். இந்த சிறப்பியல்பை ஒரு பொதுவுடமையாளனாக இல்லையென்றாலும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி என்ற முறையில் புரிந்து கொண்ட தந்தை பெரியார் முன்னோடியாக பல்வேறு அம்சங்களை சிந்தித்து, அதை நடைமுறையிலும் சாதித்துக் காட்டினார் என்பதால்தான் பார்ப்பன கும்பல் அவர் மீது தீராத இனப் பகை கொண்டுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை முற்றாக அழித்து ஒழித்த பின்னர் சீமான் போன்றவர்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் உருவான தேசிய இன உணர்வுகளை நிறுவனமயமாக்குவதற்கு முயற்சித்தது.
படிக்க: ♦ சீமானின் லும்பன் தம்பிகளின் பொறுக்கித்தனமும், பாசிச எதிர்ப்பில் ’நாம் தமிழர்’ ஒழிப்பின் அவசியமும்!
”2009 வாக்கில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து அவர் நடத்தத் தொடங்கிய இனவாத – சந்தர்ப்பவாத அரசியல், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பாசிச ஜெயாவுக்கு காவடி எடுத்தது, ஈழத்தை கோட்சே ஆதரித்தால் நான் கோட்சே கட்சி என்று கொள்கை விளக்கமளித்தது, மும்பை முஸ்லிம் இனப்படுகொலையை நடத்திய சிவசேனாவை ஆதரித்து தேர்தல் வேலை செய்தது, முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு .. என வெகு வேகமாக தன்னைத்தானே அவர் அம்பலமாக்கிக் கொண்டார். பிறகு பெரியார் எதிர்ப்பை மையமாகக் கொண்ட பார்ப்பன அடிவருடி அரசியலை, “திராவிட இயக்க எதிர்ப்பு” என்ற பெயரில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டார். பிறகு மூக்குடைபட்டு மழுப்பினார்.
சீமான் கடை விரித்து வருவது ராஜ் தாக்கரே பாணியிலான இனவெறி அரசியல். இதற்குப் பொருத்தமாக, பிழைப்புவாத லும்பன்களுக்கே உரிய சவடால் பேச்சை அவர் ஆயுதமாக ஏந்தியிருக்கிறார். இந்த சவடால் பேச்சின் காரணமாக அரசியல் எதிர்காலம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவர்கள் தமிழினத்தின் எதிரிகள் அல்லர். சீமானுக்கு மூத்தவர்களான பல இனவாதிகள். சீமான் அளவுக்கு இவர்களுக்குத் தொண்டையில் தெம்பில்லை என்பது மட்டுமின்றி, விஜய் – தனுஷ் ரசிகர்களின் அறிவு மட்டத்திற்குப் பொருந்தும் விதத்தில் தமிழின விடுதலைக்கு திரைக்கதை வசனம் எழுதும் திறன் இவர்களுக்கு இல்லை.
“உலகம் உருண்டையானது” என்ற அறிவியல் உண்மையை வெளியிடுவதாக இருந்தாலும் கூட, தொண்டை நரம்பு புடைக்காமலோ, யாருக்காவது சவால் விடாமலோ, ஒரு கையால் தனது இன்னொரு கையை குத்தித் தள்ளாமலோ அவரால் அதனை வெளியிட முடியாது. “காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்ற வரியை அவர் மேடையில் பேசினாலும், அது “மென்னியைப் பிடித்து கொன்று விடுவேன்” என்பதாக நம் காதில் ஒலிக்கும். காரணம் அவ்வளவு காரம், அவ்வளவு போர்க்குணம்.” என்று தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் என்று 2013 ஆம் ஆண்டில் எமது இணையத்தில் எழுதியிருந்தோம்.
(தொடரும்…)
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
கட்டுரையின் தொடக்கம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீமானது பாசிச –பிழைப்புவாகபண்புகளைக் கொண்ட பல்வேறு அம்சங்களையும், வாய்ச்சவடால்களையும், ஏமாந்து நிற்கும் ”தும்பி’களையும் நன்றாகவே கட்டுரையாளர் தோழர் மருது பாண்டியன் ஆழமான முறையில் மார்க்சிய கண்ணோட்டத்தில் பெரியாரது பங்களிப்பு சீர்திருத்த மயமானது தான் எனினும் அந்தப் பங்களிப்பு தமிழ்நாட்டில் மகத்தானது தான் என்பதனை
நன்றாகவே நிறுவியுள்ளார். தொடர்கின்ற அடுத்த பாகமும் இன்னும் தெளிவாக இருக்கும் என்று நம்புவோமாக…!