பாகம் 2

ந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதையும் பாதிக்கும்!
பாஜக-வும் அதானியும் தங்கள் சொத்துக்களை குவித்த நிலையில், சொத்துப்பகிர்வு தொடர்பான அறிக்கை வெளியிட்ட ஆக்ஸ்பாம் (Oxfam India) இந்திய மக்கள்தொகையில் வெறும் 10 சதவீதம் பேர் மொத்த தேசிய செல்வத்தில் 77 சதவீதத்தை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளது.

2017-இல் உருவாக்கப்பட்ட மொத்த செல்வத்தில் ஏறக்குறைய 73 சதவீதம், 1 சதவீத பணக்காரர்களிடம் சென்றுள்ளது. அதே சமயம் மக்கள்தொகையில் பாதியாகவுள்ள 67 கோடி ஏழை இந்தியர்களின் செல்வத்தில் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்தியா ஒரு பெரிய சந்தையுள்ள பொருளாதார சக்தியாக அங்கீகரிக்கப்பட்டாலும் அதன் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

ரேஷன் கடைகளில் மோடியின் முகம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களைக் கொண்டு லட்சக்கணக்கானோர் வாழ்கின்றனர். இந்தியா மிகவும் ஏழை மக்களைக் கொண்ட மிகவும் பணக்கார நாடு. உலகின்  அதிகபட்ச சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்று. இந்தியாவின் இந்த வலிகளுக்காக ஆக்ஸ்பாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மோடியின் அரசுக்குத் தொல்லைதரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகங்களை மூடிவிடும்படி துன்புறுத்தப்பட்டுள்ளன.

இவை எதுவும் மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தலைவர்வர்களிடம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹிண்டன்பர்க்-BBC தருணத்தின் சில நாட்களுக்குள், “மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள” சந்திப்புகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் இந்தியா 470 போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதாக அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்க வேலைகளை உருவாக்கும் என்று பிடென் கூறினார். இந்த ஏர்பஸ் விமானங்கள் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின்களால் இயக்கப்படும் என்பதால் “இங்கிலாந்தின் வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கு வானமே எல்லை” என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

இம்மானுவேல் மேக்ரானை கட்டித் தழுவும் மோடி!

ஜூலை மாதம் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்காவிற்கும், பாஸ்டில் தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்சுக்கும் சென்றுள்ளார். நீங்கள் அதை நம்ப முடியுமா? மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் 2024 பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரப் பொருளாக இப்பயணங்கள் மாற்றப்படும் என்பதை நன்கு அறிந்த மக்ரோனும், பிடனும் மிகவும் அவமானகரமான முறையில் மோடியை போற்றிப்புகழ்ந்தனர். அவர்கள் கட்டியணைத்துத் தழுவிய அந்த மனிதனைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா?

குஜராத் படுகொலையில் திரு.மோடியின் பங்கு பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். முஸ்லீம்கள் பகிரங்கமாக அடித்துக்கொலை செய்யப்படுவதையும், திரு. மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்போர் அக்கொலைக்காரர்களுக்கு எப்படி மாலை அணிவித்தார்கள் என்பதையும், முஸ்லீம்களை தனிமைப்படுத்தி அவர்களை முகாம்களில் அடைப்பதற்கான வேகமாக முன்னெடுக்கப்படும் செயல்முறையையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இந்துக் குண்டர்களால் எரிக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

எதிர்கட்சி அரசியல்வாதிகள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் வேட்டையாடப்படுவதையும், அவர்களில் சிலர் நீண்டகால சிறைத்தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது, பல்கலைக்கழகங்கள் மீது காவல்துறை மற்றும் இந்து தேசியவெறியர்கள் சேர்ந்து நடத்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவது, திரைப்படங்களுக்கு தடை விதிப்பது, அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய அலுவலகம் மூடப்பட்டது, BBC-யின் இந்திய அலுவலகங்கள் மீதான சோதனை, சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் விமர்சகர்கள் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் இந்திய, வெளிநாட்டு கல்வியாளர்கள் மீதான அழுத்தம் பற்றியும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:

உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியா இப்போது 161-வது இடத்தில் உள்ளது என்பதையும், சிறந்த இந்தியப் பத்திரிக்கையாளர்கள் பலர் பிரதான ஊடகங்களிலிருந்து வேட்டையாடப்பட்டுள்ளனர் என்பதையும், பத்திரிகையாளர்கள் விரைவில் தணிக்கை மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதையும், அரசாங்கத்தைப் பற்றிய ஊடக அறிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் போலியானதா அல்லது தவறாக வழிநடத்துகிறதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்புக்கு இருக்கும். சமூக ஊடகங்களில் மாற்றுக்கருத்துகளை தணிக்கை செய்வதற்காக புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.

முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையாக குரல் கொடுக்கும் வாள் ஏந்திய, வன்முறையில் ஈடுபடும் இந்து காலி கும்பல்களைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். காஷ்மீரில் 2019-ஆம் ஆண்டு தொடங்கி மாதக்கணக்காக நீளும் தகவல் தொடர்பு முடக்கம் – ஒரு ஜனநாயகநாட்டில் மிக நீண்ட இணைய முடக்கம் பற்றியும், பத்திரிகையாளர்கள் துன்புறுத்தல், கைது, விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலைமை பற்றியும் அவர்கள் அறிந்திருப்பார்கள். 21-ஆம் நூற்றாண்டில் யாரும் இப்படி பூட்ஸ் காலால் கழுத்து நெறிக்கப்படும் ஒரு வாழ்க்கையை வாழவேண்டியதில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கக்கூடும்.

2019-இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்றும், அதை எதிர்த்து டெல்லியில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டங்களில் டஜன் கணக்கான முஸ்லிம்கள் இந்துக் கும்பல்களால் கொல்லப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது என்பது பற்றியும் அவர்கள் அறிந்திருப்பார்கள் (தற்செயலாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக டெல்லியில் இருந்தபோது இது நிகழ்ந்தது, ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட அதைக்குறித்து பேசவில்லை. தெருவில் படுத்துக்கிடந்த முஸ்லிம் இளைஞர்களை இந்திய தேசியகீதத்தைப் பாடச்சொல்லி டெல்லி போலீஸார் எட்டி உதைத்து கடுமையாகக் காயப்படுத்தினர் என்பதும், அவர்களில் ஒருவர் பின்னர் இறந்து போனதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

பாசிஸத்தை உச்சரிக்கத் தயங்குபவர்கள் அதன் கூட்டுச்சதியாளர்கள்: அருந்ததி ராய் பேட்டி

அவர்கள் மோடிக்கு விருந்து வைக்கும் அதே நேரத்தில், வட இந்தியாவில் உத்தரகாண்டில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேறுகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள், பாஜக-வுடன் இணைந்த இந்துத் தீவிரவாதிகள் முஸ்லிம் வீட்டுக்கதவுகளில் “X” குறியிட்டு வெளியேறச் சொன்னார்கள். “முஸ்லிம்கள் இல்லாத உத்தரகாண்ட்” பற்றி வெளிப்படையாகப் பேசப்படுகிறது. மோடியின் கண்காணிப்பில் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலம் காட்டுமிராண்டித்தனமான உள்நாட்டுப் போரில் இறங்கியிருப்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஒன்றிய, மாநில அரசுகளின் ஆதரவுடன் அங்கு இன அழிப்பு நடந்துள்ளது. பாதுகாப்புப் படையினருக்கும், காவல்துறைக்கும், மற்றவர்களுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் பிளவுபட்டுள்ளனர். இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. செய்திகள் வெளியேவர பல வாரங்கள் ஆகிறது.

ஆயினும்கூட, உலக வல்லரசுகள் சமூகக் கட்டமைப்பை அழிக்கவும், இந்தியாவை எரிக்கவும் தேவையான அனைத்து ஆக்ஸிஜனையும் மோடிக்குக் கொடுக்கத் தேர்வு செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இது ஒருவகை இனவெறி. அவர்கள் தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் இனவாதிகள். அவர்களால் கூறப்படும் “மதிப்புகள்” வெள்ளையர் அல்லாத நாடுகளுக்குப் பொருந்த வேண்டும் என்று அவர்கள் நம்புவதில்லை. அது நிச்சயமாக ஒரு பழைய கதைதான், அது முக்கியமில்லை. ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பலத்துடன் போராடுவோம், எங்கள் நாட்டை மீட்டெடுப்போம். இருப்பினும், இந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது முழு உலகத்தையும் பாதிக்கப் போவதில்லை என்று உலக வல்லரசுகள் கற்பனை செய்தால், அவர்கள் உண்மையில் மாயையில்தான் உள்ளார்கள்.

(தொடரும்…)

  • செந்தழல்

இந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதையும் பாதிக்கும் -அருந்ததி ராய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here