னாதனம் குறித்து திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அம்பலப்படுத்தி பேசியவுடன், “இதனையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு INDIA கூட்டணியை ஒன்றும் இல்லாமல் ஆக்குங்கள். ஏனென்றால் INDIA கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, காங்கிரசு, திரிணமூல் காங்கிரசு, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சனாதனத்தை ஆதரிக்கின்ற கட்சிகள் ஆகும். உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி INDIA கூட்டணியை உடைப்பதற்கு வேலை செய்யுங்கள்” என்று தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளாராம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே பி நட்டா.

நாடு முழுவதும் சனாதன ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. இட ஒதுக்கீடு குறித்து மண்டல் கமிஷன் வெளியானவுடன் மண்டலா? கமண்டலா? என்று இரு பிரிவாக நாடே பிரிந்து மோதிக்கொண்டதைப் போல புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டம், நிலவுகின்ற நாடாளுமன்ற அரசு கட்டமைப்பு, 1947 முதல் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் போலி ஜனநாயகம் ஆகிய அனைத்தைப் பற்றியும் தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய சூழலை ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கியுள்ளது.

“2024 தேர்தலில் பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும்! இது ஒன்றே முழக்கமாக இருக்க வேண்டும்” என்று பொதுவாக பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதைதான் சனாதன தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்று ஒன்றிணைந்துள்ள ஆர்எஸ்எஸ்- பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நடைமுறையின் மூலமாக தெளிவாக முன் வைத்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்துவது என்பது தேர்தல் அரசியலில் மட்டுமல்ல. தேர்தலுக்கு வெளியில் மக்கள் எழுச்சியின் மூலம் நிரந்தரமாக முறியடிப்பதை நோக்கி அரசியல் விவாதங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். மீண்டும் ஆர்எஸ்எஸ்- பாஜக இந்திய அரசியலில் தலை தூக்காத வண்ணம் குறிப்பான பிரச்சனைகளை பற்றி நாடு முழுவதும் அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை கடும் நெருக்கடிக்குள் உள்ளாக்கி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற மறுகாலனியாக்க கொள்கைகள் முதல் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்ற சாதி தீண்டாமை வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம், ஆணாதிக்க வக்கிரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய சனாதனம் என்பதன் இன்றைய வடிவமான காவி பாசிச அரசியலையும் பற்றி விவாதங்களை கொண்டு செல்ல வேண்டும்.

“வரலாற்றுக்குள் போக வேண்டாம். ஆனால், அரசியல்சாசனப்படி உண்மையில் உறுதியாக இருங்கள். சனாதனம் குறித்த தாக்குதல்கள அமைதியாக எதிர்கொள்ளக்கூடாது. சனாதனத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உண்மையை கொண்டு பதிலடி தர வேண்டும்.” என்று தனது கட்சிக்காரர்களுக்கு இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்கால வரலாற்றை எழுதுவதற்கு கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால நடைமுறையும் புரிந்து கொள்வதும், அதன் வெளிச்சத்தில் இருந்து எதிர்கால வாழ்க்கையை கட்டமைத்து கொள்வதும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள கடமையாக மாறியுள்ளது.

பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்தியா அதன் மோசமான விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறது. காஷ்மீரில் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டது முதலாக காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரம் அனைத்திற்கும் கல்லறை கட்டப்பட்டு “ஒரே இந்தியா” என்ற அகண்ட பாரதத்தின் கீழ் கொண்டு வந்து துப்பாக்கி முனையில் ஒற்றுமையை கட்டியுள்ளனர்.

சமகாலத்தில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சி மற்றும் கார்ப்பரேட் கனிமவள கொள்ளைக்கு மணிப்பூரை பலியாக்கியதன் விளைவு குக்கி, மெய்த்தி இன மக்களிடம் நிரந்தர ஒற்றுமை ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது.

அதானி, அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் லாப வேட்டைக்காகவும், அவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கும், நாட்டின் பொதுச் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு, வாரி வழங்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தும் வாராக் கடன்கள் என்ற பெயரில் 12 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் நாசமாகி கொண்டிருப்பது மட்டுமின்றி, வங்கிகள் தனது இருப்புத் தொகையை இழந்து திவாலாகும் நிலையில் தத்தளித்துக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கை சொல்ல முடியாத அளவிற்கு துயரத்தில் ஆழ்ந்து கொண்டுள்ளது. விளைபொருள்களுக்கு விலை கிடைக்காத சிக்கல் முதல் தண்ணீர் தனியார்மயம், இடுபொருள்கள் அனைத்தும் கார்ப்பரேட் மயம், தேசிய நதிகள் ஒருங்கிணைக்கப்படாமல் வெள்ளம், வறட்சி ஆகிய இரண்டு வகையான இயற்கை சூழலாலும் பாதிக்கப்படுவது, விவசாய நிலங்கள் கார்பரேட்டுகளுக்காக பறிக்கப்படுவது, ஒப்பந்த விவசாய முறை திணிக்கப்படுவது என்று விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறுமை அதிகரித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டு மக்களை குறிப்பாக படித்த இளைஞர்களை கடுமையாக பாதித்துள்ளது. படித்த படிப்புக்கு வேலை என்பது கிடைக்காது என்பதே வாழ்க்கையாகி விட்டது. அன்றாடம் 500 முதல் 1000 வரை தினக்கூலி வேலைகளுக்காக swiggy, zomato முதல் கட்டிட வேலைகள், பெரிய துணிக்கடைகள், ஷாப்பிங் மால்கள் வரை அனைத்திலும் கிடைத்த வேலையை செய்வதற்கு படித்த பட்டதாரிகள் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபோன்று அனைத்து வகையிலும் பாதிப்படைகின்ற மக்களை தொகுப்பாக பார்த்தால், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் என்றும், வர்க்க ரீதியாக விவசாயிகள் தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவர்கள், பலவகையான வேலை செய்கின்ற அரை பாட்டாளிகள் என்ற உழைக்கும் வர்க்கமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எதிர்கொள்ளும் எந்த சிக்கலுக்கும் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியிடம் தீர்வு கிடையாது.

நாட்டை அமெரிக்கா மேல்நிலை வல்லரசு மற்றும் ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் காலடியின் கீழ் ஒப்படைத்துவிட்டு மீண்டும் ஒரு காலனி ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு தான் அடிமை சேவகம் புரிந்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

சொல்லிக் கொள்ளப்படும் மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகள், பன்மைத்துவம், மாநிலங்களின் ஒன்றியம் போன்ற அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஒற்றைத் தன்மை கொண்ட பாசிச பயங்கரவாத, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவதற்கு தான் பாரதிய ஜனதா திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம் என்று வரையறுக்கப்படுகிறது.

தேர்தல் அரசியலில் எதிர்க்கட்சிகள் INDIA கூட்டணி என்று ஒன்றுபட துவங்கியவுடன் பீதியடைந்து, அவர்களை பிளவுபடுத்துவதற்கு திட்டமிட்டு கொண்டிருப்பதுடன், கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்படுகின்ற சலசலப்புகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடித்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் பாரதிய ஜனதா கையில் கிடைத்துள்ள ஆயுதம்தான் சனாதனம்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக சனாதன தர்மம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு, சமத்துவ உரிமை, ஜனநாயக உரிமைகள், பெண்ணுரிமை போன்ற அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்ட இந்து ராஷ்டிரத்தை, ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை மீண்டும் அமைப்பதற்கு சனாதனம் பற்றிய பெருமிதத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நிலவுகின்ற அரசு கட்டமைப்பின் மூலம் சலுகை பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், ஆதிக்க சாதி வெறியர்கள் அனைத்திற்கும் மேலாக பார்ப்பன கும்பல் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து சனாதனத்தின் மூலம் தான் பெற்ற சுகபோக வாழ்க்கையை பட்டியலிட்டு சனாதனத்தை உயர்த்தி பிடிக்கலாம்.

ஆனால் டாக்டர் அம்பேத்கர் கேள்வி எழுப்பியது போல “இந்தியாவில் நாய், பூனைகளுக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதை கூட தலித் மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதால் இந்தியாவை ஏன் எனது தாய்நாடு என்று கூறவேண்டும்” என்ற கோணத்தில் எழுப்பப்பட்ட கேள்விதான் சனாதனத்திற்கு சரியான பதிலடி ஆகும். சனாதனத்தின் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் பெருமை கொள்ள நிறைய இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஏதுமில்லை.

சனாதன எதிர்ப்பு, ஆதரவு என்று இந்தியா இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது நீங்கள் யார் பக்கம்?

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here