ந்தியாவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சராசரியாக 65 முதல் 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு என்பது நிலவுகின்ற நாடாளுமன்ற கட்டமைப்பை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நம்பி, அதன் மூலம் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுப்பப்படுகிறது. உலகம் முழுவதும் வலதுசாரி போக்கு அதிகரித்துள்ள சூழலில் தேர்தல் ஜனநாயகமாக நடப்பதும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது என்கிறார் தேர்தல்களை அவதானித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி.

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், “வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன” என்கிறார்.

இன்னோரு புறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், “நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்” என்கிறார்.

இந்தியாவில் 1970களில் நக்சல்பாரி இயக்கம் துவங்கியது முதல் தேர்தல் அரசியலின் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எந்த விடிவையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதை வலியுறுத்தி தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகிறது.

குறிப்பிட்ட சூழலில் தேர்தலில் பங்கெடுப்பதா அல்லது புறக்கணிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்கின்ற மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் குறிப்பாக கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், நாட்டில் சொல்லிக் கொள்ளப்படும் இறையாண்மையையும், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டுவதற்கு பாசிஸ்டுகள் செயல்படுகின்ற சூழலில், தேர்தலையும் ஒரு போராட்டம் வடிவமாக பயன்படுத்துவோம் என்று முடிவு செய்தனர் மா.லெ இயக்கத்தினர்.

இவ்வாறு முடிவு செய்ததற்கு புறநிலை காரணங்கள் முக்கியமான அம்சமாக இருந்த போதிலும், அகநிலையாக நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை மக்கள் எழுச்சியின் மூலம் உடனடியாக வீழ்த்துவதற்கு ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க இயக்கமும், அதன் கீழ் ஆயுதமேந்திய படைகளும் இல்லாத சூழலில் தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை முன்வைத்து செயல்பட்டது.

தேர்தலில் பிரச்சாரம் செய்ததற்கான காரணங்களை மீண்டும் ஒருமுறை விளக்குவது எதற்காக என்றால், நாளை (04-05-2024) தேர்தலில் முடிவுகள் வந்தவுடன், பாசிச பாஜகவின் திட்டப்படியே வெற்றி அறிவிக்கப்பட்டால் அதை பிடித்துக் கொண்டு, ”பார்த்தீர்களா? இதைத்தான் நாங்கள் முன்னேயே கணித்து சொன்னோம், தேர்தலில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்து பாஜகவை முறியடிப்போம் என்று பிரச்சாரம் செய்த நாங்கள் தான் அதிபுத்திசாலிகள், பியூர் கம்யூனிஸ்டுகள்” என்று சிலர் குதூகலிக்கக் கூடும்.

பாசிச பாஜகவின் பிளான் A வின்படி தேர்தலில் மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தாலும், அதிகார வர்க்கத்தின் துணையுடனும், தேர்தல் ஆணையத்தின் துணையுடனும், வாக்களிக்கும் இயந்திரத்தின் துணையுடனும் மீண்டும் வெற்றி பெற்று விட முடியும் என்று துணிச்சலுடன் செயல்படுகின்றனர்.

ஒருவேளை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து தேர்தல் ஆணையம் வாக்குகளை நேர்மையாக எண்ணத் துவங்கினால், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் சூழலில், பிளான் B ஒன்றை தாங்கள் வைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.

எனவே, தேர்தல் முடிவுகளில் பாசிச பாஜகவின் வெற்றி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் அல்லது எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் பிளான் B என்ற திட்டத்தை, அதாவது கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என்ற திட்டத்தை அமல்படுத்தலாம். அப்படி ஒரு நிலைமையில் மக்களிடம் பாசிசத்தை வீழ்த்தும் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்து முன்னணியில் நின்று செயல்படுவோம்.

அவ்வாறு பாஜக வெற்றி பெற்றால் தனது தோல்விக்கான காரணத்தை பரிசீலிக்கும் போது, பாசிசத்தை முறியடிப்பதற்கும், தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் பொருத்தமான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளுக்கு மாற்றாக புதிதாக ஒரு அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும், அதன் மூலம் மட்டுமே மக்களிடம் நம்பிக்கை பெற முடியும் என்பதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பாசிச பாஜக என்று பேசுவது முதல் கட்ட நகர்வு என்றே கருதுகின்றோம்.

வாக்கு சதவீதம், உள்ளூர் வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் பண பலம் ஆகியவற்றை வைத்து மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதுவும் குறிப்பாக பாசிச பாஜகவை தேர்தலில் முறியடிக்க முடியாது என்பதையும், இந்த சூழலில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் அப்போது தான் பாசிச பாஜகவிற்கு எதிரான ’உண்மையான ஜனநாயகத்தை’ அதாவது தற்போது நிலவுகின்ற ஜனநாயகத்தை, அரசியலமைப்பு சட்டத்தைக் கூட பாதுகாக்க முடியும் என்பதை உணர்வார்கள் என்றும் கருதுகிறோம்.

படிக்க: 

♦ பாட்டாளி வர்க்க கட்சியின் இயல்பு பற்றி ; நூல் அறிமுகம்.

♦ பாசிச மோடி பேசுவது வெறுப்பு அரசியல் மட்டுமல்ல! கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம்!

இது ஒரு புறமிருக்க கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவது என்பது அவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை முறியடிப்பது மட்டுமல்ல அதனை நிலைநாட்டுவதற்கு அவர்கள் உருவாக்கியுள்ள பாசிச குண்டர் படையையும் எதிர்த்து நேருக்கு நேர் தாக்குதல் தொடுக்கின்ற அளவிற்கு மக்களை படையாக கட்டுவது என்பதையும் உள்ளடக்கியே உள்ளது என்பதையும், நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவது என்பது அதற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து அவர்களை பாதுகாக்கின்ற வகையிலான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஜனநாயக கூட்டரசு ஒன்றுதான், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே தீர்வு என்பதை மீண்டும், மீண்டும் முழங்குவோம்.

பாசிச பாஜக ஆதரவு அல்லது எதிர்ப்பு, தேர்தல் புறக்கணிப்பு அல்லது பங்கேற்பு ஆகியவற்றைத் தவிர மூன்றாவதாக ஒரு நிலையை எடுத்து மக்களை அரசியல்படுத்துகின்ற மகத்தான கடமை என்று உணர்கிறோம். தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் சூழலில் இத்தகைய மகத்தான கடமையை முன்னிறுத்தி மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

  • மருதுபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here