மது புதிய ஜனநாயகம் தினசரி‌ முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் தேதி “மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! என்பது ஏன்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். எமது கட்டுரையை விமர்சிப்பது என்ற பெயரில் கட்டுரையில் சொல்லப்படாத வார்த்தைகளை கற்பனையாக சேர்த்து திரித்து கூறியுள்ளனர். அதிலும் கட்டுரையில் சொல்லப்படாத வார்த்தையை கற்பனையாக சேர்த்தது மட்டுமின்றி அதற்கு விளக்கமும் கொடுத்து தங்களது அரிப்பை சொரிந்து ‘அறிவு’ சுகம் கண்டுள்ளனர் நவீன திரிபுவாதக் குழுவான செங்கனல். சிபிஎம் கட்சியின் நம்பூதிரிபாடு போல, தனக்கு பொருத்தமான, பிடித்தமான வரிகளை மட்டும் எடுத்துப் போட்டு சொந்த முறையில் வியாக்கியானம் கொடுப்பதன் மூலம், நவீன திரிபுவாதக் கும்பலின் தலைமைக்கு போட்டியிடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றனர்.

செங்கனலின் பொய்யும்! எமது உண்மையும்!

செங்கனல் இணையதளத்தில் சென்ற ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி “ஆதரிப்போம், நிர்பந்திப்போம்” என கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கலைப்புவாதிகள்! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுளனர். அந்த கட்டுரையில் “ஏற்கெனவே திமுகவை பாசிச எதிர்ப்பின் நம்பகமான சக்தியாகத் தேர்ந்தெடுத்துவிட்ட கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாத கும்பல்” என எழுதியுள்ளனர். எவ்வளவு மோசமான அறிவு நாணயமற்றவர்களாக இருந்தால் இப்படியொரு பொய்யைச் சொல்லுவார்கள்! எம்மை அறிந்த யாரும் இப்படி ஓர் அபாண்டத்தை நம்ப மாட்டார்கள் என்பதால் பின்வரும் மேற்கோள் ஒன்றை இந்த அபாண்டத்திற்கு ஆதாரமாக தனது கட்டுரையில் காட்டுகிறது செங்கனல் குழு.

“இந்தக் கட்டுரையில் திமுக என்பது பாசிச எதிர்ப்பின் ஒரு நம்பகமான சக்தி என்றும், அதனைப் பயன்படுத்தி பாசிச சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட முடியும் என்று கூறுகிறார்கள்” என எமது கட்டுரையில் எழுதியுள்ளதாக அல்லது கூறியுள்ளதாக அப்பட்டமாக புளுகியுள்ளனர். இந்த வரிகள் எமது கட்டுரையின் எந்த பக்கத்தில் எழுதப்படவும் இல்லை. சொல்லப்படவும் இல்லை.

எமது கட்டுரையில் “கார்ப்பரேட் காவி பாசிச சக்திகளை முறியடிப்பதற்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பாசிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாத, அதே சமயம் ஏற்கனவே நிலவிய போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை, போலி ஜனநாயக ஆட்சி முறையை உயர்த்திப் பிடிக்கின்ற அரசியல் கட்சிகளை வைத்து தேர்தல் காலங்களில் அவர்களை மீண்டும் ஆட்சியை கைப்பற்ற விடாமல் தடுப்பது மிக அவசியமான கடமையாக மாறியுள்ளது” என்றே எழுதியுள்ளோம். இதில் எங்கும் நம்பகமான சக்தி என்று எழுதவில்லை. “ஏற்கனவே நிலவிய போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை, போலி ஜனநாயக ஆட்சி முறையை உயர்த்திப் பிடிக்கின்ற அரசியல் கட்சிகள்” என்று தெளிவாக எழுதி உள்ளோம். இதனை திரித்து ‘நம்பகமான சக்தி’ என எழுதியுள்ளதாக தனது நவீன திரிபுவாதப் புத்தியை அப்பட்டமாக காட்டியுள்ளது செங்கனல் குழு.

மேலும், எமது அமைப்பு ‘திமுகவை நம்பகமான சக்தி’ என முடிவெடுத்துள்ளதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி உள்ளனர். உண்மையில், எமது அமைப்பு திமுகவை பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் கட்சி என்றே வரையறுத்துள்ளது. இதனை பகிரங்கமாக அறிவித்தும் உள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் “பாசிச எதிர்ப்பில் சமரச – ஊசலாடும் திமுக போன்ற கட்சிகளை ஆதரித்தாலும், அவர்களின் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும்” என தெளிவாகவே எழுதியுள்ளோம். இந்த உண்மையை மறைத்து விமர்சனம் என்ற பெயரில் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளது திரிபுவாத குழுவான செங்கனல்.

மீண்டும், மீண்டும் மேற்கோள் திரிப்பு பித்தலாட்டம்! செங்கனல் குழுவின் நவீன திரிபுவாதம்!

“மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! என்பது ஏன்?” என்ற தலைப்பில் எமது ஆசிரியர் குழு எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை மேற்கோளாக எடுத்து காட்டி அதற்கு இவர்களே ஒர் விளக்கம் கொடுத்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்டுள்ள மேற்கோளுக்கு முன்னும், பின்னும் உள்ள வரிகளை திட்டமிட்டே மறைத்து தங்களது வசதிக்கேற்ப வெட்டி சுருக்கி வியாக்கியானம் செய்வதுதான் நவீன திரிபுவாத அணுகுமுறையாகும்.

படிக்க:

 உண்மையறிவோம் லெனின்- ஸ்டாலின் குரூப்ஸ்கயா

 மார்க்ஸ் ரிப்பன் பில்டிங் வாயிலில் தொழிலாளர்களுக்கு துணையாக நின்றிருந்தார்

அதாவது “நாடு தழுவிய அளவில் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்துவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவே இந்திய அளவில் பார்த்தால் ஒரு சிறிய கட்சிதான். ஏனென்றால் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சிறிய கட்சிதான். இருந்தபோதும் இந்தியா கூட்டணியில் திமுக குறைந்தபட்ச திட்டத்தை வைத்து பாசிச பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளையும், சக்திகளையும் ஒன்றுதிரட்ட முடியும்; பாசிசத்திற்கு எதிராக களமாட முடியும் என்று நம்புபவர்கள், தமிழகத்தில் திமுகவை நிர்ப்பந்திப்போம் என்றால் மட்டும் இதெல்லாம் சாத்தியமா என்று அங்கலாய்க்கின்றனர்.” (மேற்படிக் கட்டுரை) என எமது கட்டுரையில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு விளக்கம் என “இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை திமுகவினால் ஒரு குறைந்தபட்ச திட்டத்தை வைத்துப் பாசிசத்திற்கு எதிராக களமாட ஒரணியில் திரட்ட முடியும் என்று கூறுகிறார்கள்” என வியாக்கியானம் செய்துள்ளது செங்கனல் குழு.

இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் செங்கனல் குழு, எமது கட்டுரையில் எடுத்து எழுதியுள்ள மேற்கோளுக்கு முன்னே உள்ள வரிகளே ஆகும். அதாவது,” நிர்பந்திப்போம்! ஆதரிப்போம் என்று முழக்கத்தை முன் வைத்தவுடன் அவர்களை நிர்பந்திப்பதற்கு போதுமான சக்திகள் உங்களிடம் உள்ளதா? அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக கருதுவார்களா? அவர்களை நிர்பந்திப்பதற்கு என்ன வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றத் துவங்கி விட்டனர்” என்ற வரியை திட்டமிட்டு மறைத்து விட்டனர்.

குறிப்பாக, திமுக குறைந்தபட்ச திட்டத்தை வைத்து பாசிச பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளையும், சக்திகளையும் ஒன்றுதிரட்ட முடியும்; பாசிசத்திற்கு எதிராக களமாட முடியும் என்று நம்புபவர்கள், தமிழகத்தில் திமுகவை நிர்ப்பந்திப்போம் என்றால் மட்டும் இதெல்லாம் சாத்தியமா என்று அங்கலாய்க்கின்றனர் என்ற வரிகள், மேற்சொன்ன குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் பற்றிய கருத்தாகும். இதனை திரித்து எமது அமைப்பு “இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை திமுகவினால் ஒரு குறைந்தபட்ச திட்டத்தை வைத்துப் பாசிசத்திற்கு எதிராக களமாட ஒரணியில் திரட்ட முடியும்” என கூறியுள்ளதாக எழுதியுள்ளனர் நவீன திரிபுவாதிகளான செங்கனல் குழு.

செங்கனல் குழுவின் பின் புத்தியும்! எமது முன் யோசனையும்!

“திமுகவின் யோக்கியதையைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நடந்த குழாயடி சண்டைகளும், கூட்டணிக் கட்சியினரே ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டதும், இதன் காரணமாக பாசிசம் பல இடங்களில் வெற்றி பெற்றதும் நம் கண்முன்னே இருக்கும் உதாரணங்கள்” என செங்கனல் குழு தனது நடைமுறையில் இருந்து பின் யோசனையுடன் எழுதியுள்ளது.

படிக்க:

 மார்க்சிய லெனினிய பாரம்பரியத்திலிருந்தும்,  நக்சல்பாரி அரசியலிலிருந்தும்  அதிகாரப் பூர்வமாக வெளியேறிய வினவு கும்பல்!

 இந்தியப் பொதுவுடமை இயக்கமும், சூறாவளிகளும்! தோழர் லெனின் வழியில் எதிர்கொள்வோம்!

ஆனால், எமது ஆசிரியர் குழு இண்டியா கூட்டணி அமைந்த போதே அதன் செயல்பாடுகள் பற்றிய கட்டுரையில், இண்டியா கூட்டணி பாசிச எதிர்ப்பு திட்டமின்றி செயல்படுகிறது என்று விமர்சித்தும், அதிகாரம் வேண்டுமென அவர்கள் கூட்டணியை உடைப்பார்கள் என அவர்களின் ஓட்டரசியல் யோக்கியதை அம்பலப்படுத்தியும் 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான புதிய ஜனநாயகத்தில், “எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மட்டும் வீழ்த்துமே தவிர பாசிசத்தை ஒழிக்காது என்பது நிதர்சனமான உண்மை. பாசிசத்தை வீழ்த்துவதற்கு எந்தத் திட்டமும் இந்த 26 கட்சிகளிடமும் இல்லை. இதனை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துவதும் தேர்தலுக்கு வெளியிலும் பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணி உருவாக்கப் போராடுவதும் புரட்சிகர அமைப்புகளின் கடமை.

பாசிசத் தன்மை கொண்ட மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும், பாஜக-வின் B-டீமாக செயல்பட்ட ஆம் ஆத்மி கட்சியும், இந்துத்துவா கொள்கையே முதன்மையாகக் கொண்ட சிவசேனா கட்சியும் இந்தக் கூட்டணியில் உள்ளனர். பாசிச பாஜக-வை தேர்தல் அரசியலில் இருந்து வீழ்த்த ஒன்றிணைந்து இருப்பது இவர்களின் தற்போதைய கோரிக்கை என்றாலும் தேர்தலுக்குப் பின் கூட்டணியை உடைக்கவும் அல்லது அதிகாரம் தனக்கு வேண்டுமென பிரச்சனை செய்யவோ அதிக வாய்ப்புகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் மற்ற கட்சிகளுக்கு உண்டு” (பாசிசத்தை வீழ்த்த கூட்டணி போதாது! ஐக்கிய முன்னணியே தேவை! ஆகஸ்ட்-2023 புதிய ஜனநாயகம்) என முன் யோசனையுடன் தெளிவாகவே எழுதியுள்ளோம்.

இதுமட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே,”எதிர் கட்சி கூட்டணியல்ல! பாசிச எதிர்ப்பு கொள்கையுடன் ஒன்றிணையும் ஐக்கிய முன்னணியே தேவை! என்ற கட்டுரையில் மே- 2024 புதிய ஜனநாயகம் இதழில் இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே இண்டியா கூட்டணி செயல்படுகிறது என்பதையும், கூட்டணிக் கட்சியினரே ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது பாசிச பாஜக-விற்கு சாதகமாகவே அமையும் என அப்போதே விமர்சித்து எழுதியுள்ளோம்.

எனினும் இதையெல்லாம் தனது புதிய கண்டுபிடிப்பாக இப்போது எழுதுகிறது செங்கனல். அது மட்டுமின்றி பாசிச எதிர்ப்பு பற்றியும் , கட்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆழமாக புரிதல் உள்ளது போல நடிக்கிறது.

(தொடரும்…)

புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

மே 2026 இதழ்

1 COMMENT

  1. ‘செங்கனல்’ குழுவினரின் நாணயமற்ற முறையிலான அவதூறுகள், பொய்ப் பரப்புரைகளை – சித்தாந்த ஓட்டாண்டித்தனங்களை அவ்வப்போது
    இவ்வாறு அம்பலப்படுத்தி, முகத்திரை கிழித்திடும் பணிகளைச் செய்வது மிகச் சிறப்பான முன்னெடுப்பு. அவ்வாறில்லையேல் அவர்களின் (செங்கனல் கும்பலின்) திட்டமிட்ட அவதூறுகளைக் கண்ணுறும் மக்களுக்கு – அணிகளுக்கு சரி எது? தவறு எது? என்பது புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here