உடல் முழுவதும் கிழிந்த துணிகளை போட்டுக்கொண்டு திண்டுக்கல் நகரத்தின் முக்கியமான வீதிகளில் திரிந்து கொண்டிருந்தான் மன நோயாளி ஒருவன். அவனது நிலைமையை கண்டு பரிதாபப்பட்ட ஆசிரியர் ஒருவர் கடையிலிருந்து புதுத் துணி ஒன்றை வாங்கி உடுத்திக் கொள்வதற்கு கொடுத்தார்.
ஆனால் என்ன ஆச்சரியம்! பத்து நிமிடங்களில் புதுத் துணியை கிழித்து, மீண்டும் தனது உடலை சுற்றி தொங்க விட்டுக் கொண்டான் அந்த மன நோயாளி. இவன் ஒரு மன நோயாளி இப்படி தான் திரிவான் என்று அவனது நடத்தைகளை கண்டு விலகிச் சென்றனர் சிலர்; ‘ஐயோ பாவம்’ என்று அவனது நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வந்தனர் சிலர்.
உடையை கிழித்து பயன்படுத்தியது மட்டுமின்றி, கீழே கிடந்த பொருட்களை பொறுக்கி திண்ணத் தொடங்கினான் அந்த மன நோயாளி. அதுவரை அவனை அருவருப்பாக பார்த்தவர்கள், ஒருவர் எடுத்த வாந்தியை அவன் வழித்து திண்ணத் தொடங்கியவுடன் அவன் மீது மிகவும் பரிதாபப்பட்டார்கள். உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் நிலைமை இதுதான்.
இந்த சம்பவத்தை தற்போது விவேகானந்தர் பாறைக்கு, அதிநவீன கருவிகளுடன் போட்டோ சூட் நடத்த வந்த பாசிச மோடியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, ஏதோ ஒரு வகையிலான ஒற்றுமை இருவருக்கும் இடையில் வெளிப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத அமைப்பின் நாக்பூர் தயாரிப்பான பாசிச மோடி மன நோயாளி போல் நடித்துக் கொண்டிருக்கின்ற காரியக் கோமாளி.
’தவத்தால் சூரியனை மோடி குளிர்விக்கிறார்” என்கிறார் அவரது சங்க பரிவாரத்தில் இருந்து கோரக்பூர் எம்பி ரவி கிஷண். விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பாசிச மோடி தியானம் என்ற பெயரில் கேலிக்கூத்து ஒன்றை அரங்கேற்றி சென்றிருப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு அவர் உணர்த்தும் செய்தி என்ன?
2047 வரை என்னை ஆட்சியில் அமர்த்தினால் நவீன விஞ்ஞான வசதிகளை இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் உயரடுக்கு பிரிவினர் அனுபவிப்பதற்கும், மூடப்பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை தலைவிதி என்ற பெயரிலும், கர்மா என்ற பெயரிலும் கடைப்பிடிப்பதற்கு, நாட்டின் பெரும்பான்மை மக்களை பயிற்றுவிப்பதற்கும் எனக்கு பார்ப்பன (இந்து) மதத்தின், தியானம், தவம் போன்ற செப்படி வித்தைகள் தேவைப்படுகிறது என்பதை தான்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் செல்வங்களை சூறையாடி, பட்டப்படிப்புகளை பெற்று, பதவிகளை பெற்ற கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலப்பிரபுக்களின் உயரடுக்கு பிரிவினரின் குலக்கொழுந்துகள் அனைத்தும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் செட்டிலாகிவிட, உழைப்பாளி மக்கள் இந்தியாவில் மேலும், மேலும் காட்டுமிராண்டிகளாக மாற்றப்பட்டு, சக மனிதரை படுகொலை செய்கின்ற பார்ப்பன மதவெறியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
சக மனிதர்களைக் ஈவிரக்கமின்றி கொல்லும் இந்த கொடூரத்தின் அடிப்படை என்ன?
”இந்துஸ்தான சமயத்தின், பண்டைய மரபுகள் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கி திளைப்பதை வலியுறுத்தும் மதமாக உள்ள போதே; தன்னைத்தானே வதைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் துறவு மதமாகவும் விளங்குகிறது; லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே; ஜெகநாதனின் மதமும் அதுவே; தேவதாசி மதமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே!” என்று பார்ப்பன (இந்து) மதத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறார் காரல் மார்க்ஸ்
’தியானம் செய்ப விரும்புபவன், தனது வசதி வாய்ப்புகளையும், அந்தஸ்தையும், அன்றாட வாழ்க்கை தேவைகளையும், துறந்து காடுகளுக்கோ, மலைகளுக்கோ சென்று தவம் புரிவது; அதன் மூலம் தான் நம்புகின்ற இறைவனை அடைவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும்” என்பதைத் தான் பார்ப்பன (இந்து) மதம் இவ்வளவு காலமும், வண்டி வண்டியான புராணக் கதைகள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்களின் மூலம் நமது தலையில் கட்டி வருகிறது.
ஆனால் 10, 20 கேமராக்கள் புடைசூழ, பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுப்பது; நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இடையே ஓய்வெடுப்பது; ஹை டெக் மருத்துவ வசதியுடன் தன்னை சோதித்துக் கொள்வது; தியானத்திற்கு முன்பும், பின்பும் தனி விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் பரப்பது என்று ’நாடக தியானத்தை’ முன்வைத்த பாசிச மோடிக்கு சமூக வலைதளங்களை தாண்டி பெரிதாக எதிர்ப்பலைகள், எழாததற்கு காரணம் என்ன என்பதையும் இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் முன் வைத்துள்ள வரையறுப்புகளில் இருந்து புரிந்துக் கொள்வோம்.
”மனிதனை சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்கு பதிலாக அவனை சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தினர்; தானாக வளர்ந்து கொண்டு இருந்த சமூக நிலையை ஒரு பொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தனர். இவ்விதமாக இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையை உருவாக்கியது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன், குரங்குகாகிய அனுமன் முன்பும், பசு மாட்டின் முன்பும் தண்டனிட்டு வணங்கியதில் இந்த சிறுமை காட்சியளித்தது, இவற்றையும் நாம் மறக்கக்கூடாது
படிக்க:
♦ பாசிச மோடியின் மூன்று நாள் விவேகானந்தர் பாறை தியானம்! பித்தலாட்டத்தின் உச்சம்! ஏமாறாதே!
♦ ’தமிழன் திருடன்’: பாசிச மோடியின் தாக்குதல்! சூடு-சொரணை உள்ளவனே! பாஜகவை விட்டு வெளியேறு!
மதம் மனிதனை புறநிலைகளுக்கு எஜமானன் ஆக்குவதற்கு பதிலாக அவற்றுக்கு அடிமைப்படுத்தின என்பதையும், தானே கூறிய சமுதாய வாழ்வை அவை என்றும் மாறாத இயற்கை விதியாக மாற்றியது என்பதையும், இவ்வாறு மிருகத்தனத்தை வளர்த்திடும்படியான முறையில் இயற்கைக்கு அடிபணிந்து அதனை வழிபடும் நிலையை உண்டாக்கின என்பதையும், இயற்கையை ஆட்சி புரிய வேண்டிய அதிபதியாகிய மனிதன் குரங்காகிய அனுமனுக்கும் பசுவாகிய சபலைக்கும் தண்டனிட்டு அஞ்சலி செலுத்த நேர்ந்ததில் கிராம சமுதாயங்களில் இழி நிலை புலனாகிறது.” என்று இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் 1853 லேயே எழுதியிருந்தார். ஏறக்குறைய 170 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு முன்னோக்கி செல்லவில்லை. மாறாக கடந்த பத்தாண்டு கால பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாத கும்பலின் ஆட்சியில் பல மடங்கு பின்னடைந்துள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு நீச்சலடித்து சென்று, மூன்று நாட்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்தவுடன் தனக்கு தோன்றிய அறிவைக் கொண்டு விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிறைவு செய்த போது, “நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது, வேற்றுமை அல்ல” என்று ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்’’ என்றார்.
பார்ப்பன (இந்து) மதத்தில் உள்ள சாதி தீண்டாமை கொடுமைகளையும், காட்டுமிராண்டித்தனமான வழிபாட்டு முறைகளையும், சைவ- அசைவ உணவு பற்றிய அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்குவதற்கு துணிந்த விவேகானந்தர் எங்கே?
’பார்ப்பன தர்மத்தையே’ நாட்டின் பொது பழக்கவழக்கமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து ’ஒரே உணவு; ஒரே பண்பாடு; ஒரே கலாச்சாரம்; ஒரே மதம்; ஒரே கடவுள்’ என்று அனைத்தையும் ஒற்றைத் தன்மையாக்குவதற்கு முயற்சிக்கின்ற பாசிச கோமாளி மோடி எங்கே?
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான நாடக தியானம் என்ற போட்டோ சூட், அகில இந்திய அளவில் அவருக்கு பயனை உருவாக்குகிறதோ? இல்லையோ? தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரின் மண் என்பதால் காரி துப்பப்பட்டும் வாந்தியை வழித்தெடுத்து விழுங்கிய மனநோயாளியை பார்த்த உணர்ச்சியை உருவாக்கியது என்றால் அது மிகையில்லை.
பாசிச மோடி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள்; தமிழக கடலோர பாதுகாவல் படை, இந்திய கடலோர பாதுகாவல் படை, இந்திய கப்பற்படை மற்றும் உளவுத் துறை, அதிகார வர்க்கம் துணையுடன் தியானித்தது;, இந்திய, தமிழக மீடியாக்கள் அனைத்தையும் ஈர்த்தது, சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக செல்வதற்கு தடை விதித்தது, மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதித்தது ’தமிழர்கள் திருடர்கள்’ என்று பேசிய பிறகும் துணிச்சலாக தமிழர்கள் மீது ஏறி ஓட்டுவதற்கு தமிழகத்திற்கு வருகை தந்தது ஆகிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்து காரியக் கோமாளிக்கு எதிராக களமாட வேண்டிய முக்கியமான தருணம் இது.
- மருது பாண்டியன்.