ந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் 2-0 என்ற வகையில் தோல்வியை சந்தித்துள்ளது என்ற செய்தி 2k கிட்ஸ் மத்தியில் கடுமையான சோகத்தை உருவாக்கி உள்ளது.

நேற்று ஆட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே நியூசிலாந்து வீரர்களின் சுழலில் சிக்கி ஒவ்வொருவராக ஆட்டம் இழந்து கொண்டிருக்கும்போது இந்த இளைஞர்களின் மனம் பெரும் கவலைக்கு உள்ளானது.

இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது ஒரு தோல்வி என்றாலும் அது உலகக்கோப்பை போட்டியுடன் தொடர்புடையது என்பதால் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல சோகமான முகத்துடன் தனது நண்பர்களுடன் ஒன்றுகூடி இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பலவிதமான விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் என மொத்தமாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் கட்டாயம் வெற்றி பெற்றதாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய நிர்வாகம் வருகிற 30 மற்றும் 31ம் தேதிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற வேண்டும் என்று பிசிசிஐ கட்டாயப்படுத்தி உள்ளது என்ற செய்தி வெளியானவுடனே தீபாவளி என்று கூட பார்க்காமல் கிரிக்கெட் வீரர்களை வாட்டி வதைக்கிறார்கள் என்று ஒப்பாரி வைக்க துவங்கி விட்டனர் இளைய தலைமுறையினர் என்பது மட்டுமின்றி, அடுத்து வருகின்ற ஆறு ஆட்டங்களையும் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் என்று தனது அன்றாட திட்டத்தில் குறித்துக் கொண்டு அதுபற்றி விவாதிக்க துவங்கி விட்டனர்.

கிரிக்கெட் என்ற போதை விளையாட்டின் மூலமாக பிசிசிஐ பல்லாயிரம் கோடி சுருட்டுவதும்; அதை விளம்பரப்படுத்தும், அதற்கு ஸ்பான்சர் செய்யும் கார்ப்பரேட்டுகள் பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடிப்பதும் இத்தகைய இளைஞர்களுக்கு ஒரு பொருட்டாகவோ, கவலையாகவோ இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இதே நாளில் தான் தமிழகத்தில் விக்கிரவாண்டி வி சாலையில் சினிமா நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி(க்) கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றுக் கொண்டுள்ளது என்ற செய்தியும், சமூக ஊடகங்கள் துவங்கி அச்சு ஊடகங்கள், செய்தி ஊடகங்கள் வரை அனைத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆளும் வர்க்கம் உருவாக்கும் நபர்கள் தான் விஜய்யும் சீமானும்! | மக்கள் அதிகாரம் | தோழர் சி.ராஜூ

ஒரு லட்சம் பேர் கொள்ளளவு உள்ள அந்த திடலில் ஏறக்குறைய 90 சதவீதம் நிரம்பி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன என்றவுடன் ஏற்கனவே சினிமா கவர்ச்சியை முன்வைத்து தமிழக அரசியலில் கொட்டை போட்டுள்ள விஜயகாந்த் மனைவி பிரேமலதா மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் துவங்கிய போது 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்றும் அது தான் உலக வரலாற்றில் சாதனை படைத்த மாநாடு என்று தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையடித்துக் கொண்டுள்ளார்.

நாட்டை சூழ்ந்து வரும் அபாயகரமான கார்ப்பரேட் காவி பாசிச சூழலில் இருந்து விடுவிப்பதற்கு பொருத்தமான எந்த திட்டமோ, கொள்கையோ இல்லாமல் திடீரென்று கட்சியை துவங்கி ஆறு மாதத்திற்குள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் களத்தில் குதித்துள்ள திருவாளர் விஜய் இளைஞர்களின் நம்பிக்கை என்பதைப் போல ஊடகங்கள் ஊதிப் பெருக்கி வருகின்றன.

இதே ஊடகங்கள் தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்துகின்ற குக் வித் கோமாளி போன்ற அரைவேக்காட்டு நிகழ்ச்சிகளையும், தற்போது விஜய் சேதுபதி பங்கெடுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பற்றி செய்திகளை எழுதி குவித்து சமூகத்திற்கு இது போன்ற காசுக்கு மாரடிக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ மிகப்பெரும் கடமையாற்றி வருவதைப் போல சித்தரித்து உசுப்பேத்தி வருகின்றனர்.

’உண்மை உறங்கும் போது, பொய் ஊர் சுற்றும்’ என்ற முதுமொழிக்கேற்ப கொள்கை அதனை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான அமைப்பு முறை, அதனை நிறைவேற்ற நடக்கின்ற வேலைகளைப் பற்றி விவாதிப்பது, அதற்கு ஏற்ற வகையில் விமர்சனம், சுய விமர்சனம் போன்ற கடினமான பாதை இளைஞர்களுக்கு எட்டிக்காய் போல கசப்பான வழிமுறையாக சித்தரிக்கப்படுகிறது..

அவர்களுக்கு இது புரிந்தாலும் புரியாவிட்டாலும் ஏற்கனவே இதைப் புரிந்து கொண்டுள்ள 80 மற்றும் 90 கிட்ஸ் இதுபோன்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளை பற்றி பல்வேறு கதையாடல்களை பொதுவெளியில் கதைத்து புதிய தலைமுறை இளைஞர்களின் மத்தியில் பெருத்த அவநம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பாசிசத்தை ஆதரிக்கும் மற்றுமொரு கவர்ச்சிவாத கட்சியான தமிழக வெற்றிக் கழகம்!

உலகத்தை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரித்து தனது நிதி மூலதன லாப வேட்டைக்கு பொருத்தமான உற்பத்திக் கூடங்களை தெற்கு பகுதியில் தள்ளிவிட்டு, வடக்கு பகுதியை தொடர்ந்து உல்லாச குபேரபுரிகளாக மாற்றுவதில் நிதி மூலதன ஏகபோகங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றது.

இதற்காகவே மனித உழைப்பு சக்திகள் அதிகம் உள்ள ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை குறிவைத்து பல்வேறு கார்பரேட்டுகள் தனது மூலதனத்தை குவித்து வருகின்றனர் என்பது மட்டுமின்றி, குறைந்த கூலிக்கு மக்களை சுரண்டுவதும், அங்கு கிடைக்கின்ற இயற்கை கனிமவளங்களை தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கேள்விக்கிடமில்லாமல் கொள்ளையடித்துக் கொண்டு செல்வதும் புதிய உலக நிகழ்ச்சிப் போக்காக மாறியுள்ளது.

இத்தகைய அபாயகரமான சூழலில் இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பிற்போக்கு வலதுசாரி கும்பலான பாசிச பயங்கரவாத சக்திகள் உள்நாட்டில் பெரும்பான்மை மக்களாக வளர்ந்து வருகின்ற இளைஞர்களை ’அரசியலிலிருந்து நீக்கம்’ செய்வதற்கு பொருத்தமான வழிமுறைகளை தேடுகின்றனர். அதில் முக்கியமானது தான் கிரிக்கெட் என்ற போதை விளையாட்டு மற்றும் கொள்கை, கோட்பாடுகளற்ற கோமாளிகளை அரசியலுக்கு கொண்டுவருவது ஆகிய இரண்டும்.

எதை எடுத்தாலும் விமர்சனமாக வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். சமூகத்தில் நடக்கின்ற மாற்றங்களுக்கு பொருத்தமாக நீங்களும் சிந்தியுங்கள்! இல்லையென்றால் ’பூமர்களாக மாறிவிடுவீர்கள்’ என்று கொள்கை, லட்சியங்களை முன்வைத்து பேசுபவர்களை கரித்துக் கொட்டுவதாலேயே இது போன்ற நிலைமைகள் மாறிவிடாது.

அதே சமயத்தில் ’எய்தவர்கள் இருக்க அம்புகளை நோவது’ என்ற தவறான அணுகுமுறையையும் நாம் கையாள முடியாது என்ற போதிலும், எய்தவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சில விஷ அம்புகள் பாய்ந்து வருவதையும் புரிந்து கொண்டு எதிர்த்து களமாட வேண்டியதும், அது புரியாமல் களப்பலியாகின்ற கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அதனை புரிய வைப்பதும் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

  • ஆல்பர்ட்.

3 COMMENTS

    • தோழரே தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்போது புதிய தலைமுறை இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சொற்களில் ஒன்று தான் பூமர் என்பது. காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறுபவர்களை அப்படி அழைக்கிறார்கள். குறிப்பாக பார்ப்பனர்களை சில இடங்களில் கலாய்க்கவும் இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள். நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here