
சீமான் போன்றவர்கள் பேசுவது தமிழ் தேசியமா என்பதை பற்றியும், தேசிய இன பிரச்சனைகள் குறித்து தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முன்வைக்கின்ற அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகள் தமிழ் சமூகத்திற்கு பொருத்தமானதுதானா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பாக சீமான் போன்றவர்கள் எந்த சூழ்நிலையில் உருவாகிறார்கள் என்பது முக்கியமாக அவதானிக்கத் தக்கதாகும்.
இந்தியா போன்ற அரைக் காலனி நாடுகளில் 90களில் முன்வைக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டின் செல்வவளங்களை அந்நிய ஏகபோகங்கள், அதாவது தேசங்கடந்த தொழிற்கழகங்கள் (TNC) மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) தடையின்றி கொள்ளையடித்துச் செல்வதை அனுமதிக்கிறது.
”ஒரு மொழி பேசும் மக்கள், ஒரே பண்பாட்டை கொண்ட மக்கள், ஒரே அரசியலமைப்பின் கீழ் வாழும் மக்கள், ஒரே பொருளாதாரம் மற்றும் பூகோள அமைப்பின் கீழ் வாழும் மக்கள் ஒரு இனமாக அமைகிறார்கள். அதாவது முதலாளித்துவம் உலகில் தோன்றிய பிறகுதான் இந்த நான்கு கூறுகளையும் உள்ளடக்கிய தேசிய இனங்கள் தோன்றின”.
இதனால் வாழ்க்கையை இழந்து நிற்கின்ற விவசாயிகள், தொழிலாளிகள், படித்த மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் வர்க்க ரீதியாக இந்த மறுகாலனியாக்க சுரண்டலுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடக்கூடாது என்பதற்காகவே சாதியவாதம், மதவாதம், இனவாதம் போன்றவை கூர்மையாக பட்டை தீட்டப்பட்டது.
இதன் காரணமாக சாதியம், தேசியம், மதம், இனம் போன்ற வகைகளில் ”அடையாள அரசியல்” முன் வைக்கப்பட்டன. இந்திய சமூக அமைப்பில் நிலவுகின்ற அரசியல் சட்டத்தின் வாயிலாக முன்னேறிய பிரிவினர், ஆளும் வர்க்கத்தில் கலந்து கரைந்த பிரிவினர் இத்தகைய அடையாள அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இது போலவே 2007 ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக மேற்கண்ட அடையாள அரசியல் போக்குகள் புதிய உத்வேகத்தை எடுத்தன.

இதன் அக்கம் பக்கமாக இலங்கையில் ஈழ விடுதலையை முன் வைத்துப் போராடிய விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டப் பிறகு தமிழர்கள் மத்தியில் உருவான தேசிய இன உணர்வு மற்றும் மேலே குறிப்பிட்ட மறுகாலனியாக்க சூழல் போன்றவை இணைந்து தீவிர இனவாதம் பேசுகின்ற நபர்களை பிரசவிக்க ஊக்குவித்தது.
தேசியம், தேசிய இனப்பிரச்சனைகள் குறித்து..
மார்க்சிய லெனினிய ஆய்வின்படி குறிப்பாக தோழர் ஸ்டாலின் வரையறுத்தபடி, ’ஒரு தேசிய இனம் என்பது என்னவென்றால், ”ஒரு மொழி பேசும் மக்கள், ஒரே பண்பாட்டை கொண்ட மக்கள், ஒரே அரசியலமைப்பின் கீழ் வாழும் மக்கள், ஒரே பொருளாதாரம் மற்றும் பூகோள அமைப்பின் கீழ் வாழும் மக்கள் ஒரு இனமாக அமைகிறார்கள். அதாவது முதலாளித்துவம் உலகில் தோன்றிய பிறகுதான் இந்த நான்கு கூறுகளையும் உள்ளடக்கிய தேசிய இனங்கள் தோன்றின”.
தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆண்டார்கள்; பின்னர் பல குறுநில மன்னர்கள் ஆண்டார்கள்; இப்படி பல பிரதேசங்களை தமிழ்நாடு கொண்டு இருந்தது. ஆனால் இவ்வாறு பல பிரதேசங்களை கொண்ட பல பெரிய, சிறிய மன்னர்களை கொண்ட தமிழ்நாடு ஒரு தேசிய இனமாக உருவாகி விடவில்லை. தமிழ் தேசியம் என்று நாம் எப்போது இருந்து சொல்கிறோம் என்றால் ஒரு மொழி, ஒரு பூகோள நிலை, ஒரு அரசியல் பொருளாதார அமைப்பின் கீழ், ஒரு பண்பாட்டின் கீழ் தமிழகம் எப்போது வந்ததோ அப்பொழுதுதான் தமிழ் தேசிய இனம் உருவாகியது என்றே வரையறுக்கிறோம்.
படிக்க: ♦ சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?
ஆனால் இந்த சமூக விஞ்ஞான அறிவியலுக்கு புறம்பாக, தமிழன், தமிழ்த் தேசியம், தமிழா ஒன்றுபடு என்ற முழக்கங்கள் 1885-கள் திராவிட இயக்க முன்னோடி என்றழைக்கப்படும் அயோத்திதாசர் காலத்திலிருந்தே தமிழகத்தில் புழங்கி வந்த போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த தலைவர்கள் முன்வைக்கின்ற தமிழ் தேசிய அரசியலை உண்மை என்று நம்பி ஏமாறுவதும், மீண்டும் சிறிது கால இடைவெளி விட்டு புதிதாக ஒருவர் தோன்றும் போது அவர் பின்னால் ஓடுவதும் ஒரு நிகழ்ச்சி போக்காகவே நீடிக்கின்றது.
1946 ஆம் ஆண்டில் தமிழரசுக்கழகம் துவங்கி தமிழ்த் தேசியத்தின் மூலவராக, மூத்த தலைவராக முன்னிறுத்தப்பட்ட மா.பொ. சிவஞானம் 1960-களில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியவர். 1967 க்கு பின் ஆளும் திராவிட இயக்கத்தில் பதவி பெற்று கரைந்து போனார்.
1958 ஆம் ஆண்டு வாக்கில் நாம் தமிழர் எனக் கூறிப் புறப்பட்ட ஆதித்தனார் தமிழ் பேரரசை இலக்காக்கினார். அதற்கு வழி காட்டாமல் ஆளும் திராவிட இயக்கத்தில் அமைச்சராகி மறைந்தார். இவ்விருவரது வாழ்வும் வரலாறும் தமிழகம் அறிந்ததுதான்.
படிக்க: ♦ சீமான் ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள் மீள்பதிவு
”மேற்கண்ட இருவரும் அவர்கள் காலத்தில் வலுவுடன் எழுந்த திராவிட இயக்கத்திற்கு மாற்றாக நாம் மக்கள் செல்வாக்கு பெற வேண்டும் என்பதற்காக தான் தமிழ் தேசியம் பேசினார்கள் திக, திமுகவிற்கு எதிர் குறிக்கோளாய் எங்கள் குறிக்கோள் என்பதை மறைமுகமாக தமிழ்த் தேசியம் என்று முழங்கியவர்கள் தான் அவர்கள்” என்கிறார் பெரியார் எனும் பெரொளி நூலை எழுதிய புலவர் சி. முத்தையா.
தனித்தமிழ் இயக்கம் மறைமலை அடிகள் மூலம் துவக்கப்பட்டு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மூலமாக உரமிடப்பட்டது. இவர்கள் வழியில் தமிழ் தேசிய செயல்பாடுகள் மற்றும் தனித்தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உறுதி குலையாமல் போராடிய பாவலேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் உருவாக்கிய தமிழ் தேசியம் மற்றும் அதன் சார்பான இயக்கங்கள் பரவலாக மக்களை சென்றடையாமல் சிறு இயக்கங்களாக தேங்கின
இந்த வகையில் சீமான் உருவான காலத்தில் அதற்கு முன்பாக தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருந்த பெ.மணியரசன், கி.வெங்கட்ராமன், தியாகு முதல் பொழிலன், நெடுமாறன் உள்ளிட்டோரும், அரசியல் கட்சிகளாக தன்னை அறிவித்துக் கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் போன்றவர்கள் தமிழ் சமூகத்தை தமிழினத்தின் பெயரால் ஒன்று திரட்டுவதில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெற்றி பெறவில்லை.
ஆனால் சீமான் நாம் தமிழரை மீட்டுருவாக்கம் செய்த காலம் முதல் அதிரடியாக பேசுவதும், சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அபத்தங்களை முன்வைத்து சவாடால் அடிக்கின்ற போதும் அரசு இயந்திரமும், இந்திய ஒன்றியத்தின் உளவுத்துறையான ’ரா’ அமைப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தின் குறுக்கு நெடுக்காக பரவவிட்டது. மைய ஊடகங்கள், பார்ப்பன இதழியல்கள் அவரை முன்னிறுத்தியது. சீமான்கள் உருவாக்கப்பட்டதற்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது என்றே அவதானிக்க முடிகிறது.
சீமானுக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக முன்வைக்கின்ற அகண்ட பாரதம் இந்து ராஷ்டிரம் என்ற கோட்பாட்டிற்கும், அவர்களின் மூதாதையர்களான ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களுக்கும் நெருக்கமான கருத்தியல் உறவு உள்ளது என்பது ஏற்கனவே தோழர் கலையரசனால் ஆழமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே நாம் அதற்குள் செல்லவில்லை.
எனினும் பார்ப்பன இந்திய தேசியத்திற்கு எதிராக மொழி வழி அமைந்த மாநிலங்கள் தனது இனத்தின் மீது இந்திய தேசியத்தின் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்ற போதெல்லாம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு வர்க்க விடுதலையை முன்வைத்துப் போராடும் தலைமை பலவீனமாக உள்ள சூழலில் ஆளும் வர்க்கத்தின் தயவோடு சீமான் போன்றவர்கள் அதனை கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
(தொடரும்…)
- மருது பாண்டியன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி