சிதம்பரம் நடராஜன் கோவில் பற்றிய விவகாரங்கள் அவ்வப்போது பொதுவெளியில் விவாதிக்கப்படும் போது மட்டும் பரபரப்பாக பேசப்படுவதும், அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து வேறொரு செய்தி வந்தவுடன் சிதம்பரம் தொடர்பான செய்திகள் விவாதிக்கப்படுவதில்லை.
பொதுவாக ’சைவத்திற்கு தில்லை; வைணவத்திற்கு ஸ்ரீரங்கம்’ என்ற அடையாளமாக மட்டுமே பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது.
தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள், நாயக்கர்கள், விஜய நகர மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் தனது திரண்ட சொத்துக்களை பதுக்கி வைக்கும் கருவூலங்களாகவும், பஞ்ச, வெள்ள காலங்களில் மக்களுக்கு தேவையான தானியங்களை சேமித்து வைக்கின்ற சேமிப்பு கலன்களாகவும் இத்தகைய கோவில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
அதே சமயத்தில் சைவம், வைணவம் உள்ளிட்ட வெவ்வேறு மதங்களின் கடவுளர்களின் உருவச் சிலைகளை வைத்து அதனை வழிபடுவதற்கு சில வழிபாட்டுமுறைகளை உருவாக்கி பார்ப்பனர்களை பூசாரிகளாக பணியில் அமர்த்தினர்.
”பழங்காலத்து செப்பேடுகளின் கூற்றுப்படி வரலாற்று தொடக்க கால அரச மரபினர் அனைவரும் நால் வருண நெறியை கடைப்பிடிப்பதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு பெரும்கொடை அளித்தலும், பாதுகாத்தலமே தங்கள் வாழ்வின் முதற்கடமையாக கொண்டனர்.
நான்மறையும், நான்மறையாளரும் புகுந்துவிட்ட சங்க காலத்தில் பார்ப்பனர் நன்கு மதிக்கப்பட்டனர் என்று சங்க இலக்கியங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் தம்மை உயர்த்தியும், பிறரை தாழ்த்தியும் சாதி வேறுபாட்டுக்கு விதை ஊன்றினர்” என்கிறார் முனைவர் செ.இராசு.
தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்று 2005 ஆம் ஆண்டு தொல்லியல் துறை கணக்கு வெளியிட்டது. இந்த கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துள்ள பல்வேறு கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் முன் வைத்துள்ள வாதப்படி கோவில்களுக்கு பூஜை செய்கின்ற பார்ப்பனர்கள் பல்வேறு தானங்களை பெற்றுள்ளனர் என்பது உறுதியாகின்றது.
குறிப்பாக தஞ்சை அருகில் உள்ள கரந்தை கல்வெட்டில், ’பிராமணருக்கு கீழ்ப்பட்ட மக்கள்’ என்ற தொடரை காண்கின்றோம். ”பிராமணருக்கு அகரப் பிரம்மதேயங்களும், சதுர்வேதி மங்கலங்களும், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்தியயன விருத்தி, மானியம், சர்வ மானியம், ஏகபோகம், கணபோகம் என பல பெயரிட்டுத் தானாதி வினிமய கிரைய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய்ப் புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை அட்ட போகத்துடன் அனுபவித்துக் கொள்ள பல்லாயிரம் வேலி நஞ்சை நிலங்கள் அளித்த சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் கிழக்கிலோ மேற்கிலோ அவர்கள் குடியிருந்த சிறு நத்தப் பகுதிகள் கூட அவர்களுக்கு சொந்தமாக இருக்கவில்லை. சமுதாயத்தின் மேல் நிலையில் உள்ளவர்கள் ஊர் நிலங்களை பங்கிட்டு விற்பனை செய்யும் போது ’என்னுதான் புலைச்சேரி நத்தமும்’ என்று குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளனர்” என்று கரந்தை கல்வெட்டை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார் முனைவர் செ. இராசு.
இதே போல சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் மூவேந்தர்கள் மட்டுமின்றி பல்வேறு சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொடையாக வழங்கி உள்ளனர் என்பதும், அந்த நிலங்களில் இருந்து வருகின்ற வருவாயை கொண்டு கால பூஜைகளை செய்ய வேண்டும் என்று விதித்து அதன்படி இன்று வரை கடைபிடித்தும் வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருப்பதற்கு இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும் ஆதாரங்கள் உள்ள போதிலும் அவை அனைத்தையும் படிப்படியாக தனது அதிகாரத்தின் மூலம் இருட்டடிப்பு செய்து வருகின்ற தீட்சிதர் பார்ப்பனர்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை ஆட்டவோ அசைக்கவும் முடியாத வகையில் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ளனர்.
இந்த அயோக்கியத்தனத்தை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடி வரும் புரட்சிகர அமைப்புகள் 2014 ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில் ”சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமாக 2571 ஏக்கர் நிலம் உள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்திலேயே குறிப்பிட்டுள்ளது. இது நாள் வரை அந்த நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்தோ, அவற்றின் வருவாய் குறித்தோ தீட்சிதர்கள் முறையாக கணக்கு கொடுத்த தில்லை என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான மனைகளைத் தங்களது உடைமை போல மோசடி செய்து ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தீட்சிதர்கள் விற்றுள்ளது தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் உறங்குகின்றன. இத்தகைய தீட்சிதர்களை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், எல்லா தீட்சிதர்களின் சொத்து விபரங்கள் குறித்தும் நேர்மையான நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் எனவும் சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது’. என தீர்மானம் வெளியிட்டது.
இதற்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட பார்ப்பன ஜெயா ஆட்சியில் தீட்சிதர்கள் அராஜகம் தலை விரித்தாடியது. தற்போதுள்ள திமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 2000 ஏக்கர் வரை திருடு போயுள்ளதை வெளியிட்டனர், இதனை விசாரித்த நீதிபதிகள், ”கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.”
அந்த உத்தரவுப்படியே தமிழக அரசு சார்பில் “கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். இது குறித்த விசாரணை தொடர்கிறது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி, கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி, நடராஜ தீட்சிதர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடராஜர் கோவிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலையத் துறை தலையுட முடியாது எனவும் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினார். இது தான் நீதிமன்றத்தின் நிலைமை.
மணியடிக்கும் பூசாரிக்கு அல்லது இறைவனுக்கு பூஜை செய்கின்ற அர்ச்சகருக்கு நீதித்துறை மட்டுமின்றி பார்ப்பனரல்லாத வைசிய, சத்திரிய சாதிகள் ஏன் அடங்கிப் போக வேண்டும் என்ற கேள்விக்கும், சிதம்பரத்தைச் சுற்றி நான்கு வீதிகளிலும் குடியிருக்கும் வேளாளர் மற்றும் செட்டியார், பிள்ளைமார் போன்ற சாதியினர் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருவதற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதுதான் நடைமுறையில் நாம் கண்டறிந்துள்ள உண்மையாகும்.
சிதம்பரம் நடராசர் கோவில் மக்களுக்கே சொந்தம்! தீட்சிதர் பார்ப்பனர்களை வெளியேற்றுவோம்!
தில்லை நடராசன் கோவிலில் நடராஜனை தரிசிப்பதற்கு தவம் கிடந்து தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்த திருநாளைப் போவார் என்ற நந்தனாரை தீயில் எரித்து கொன்ற பார்ப்பனர்கள் நந்தனாரின் வாரிசுகளுக்கு இதுவரை ஒரு சென்ட் நிலத்தை கூட கொடுத்ததில்லை என்பதே வரலாற்று உண்மை ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவில் நிலத்தை தீட்சிதர்கள் தனியாருக்கு விற்பனை செய்துள்ள ஆதாரத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் கொடுத்துள்ளது.
சிதம்பரம் உள்ளிட்டு அனைத்து கோவில்களும் ஆன்மீக மையங்களாக விளங்குவது மட்டுமின்றி சொத்துடமையை குறிப்பாக நிலவுடமையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற பார்ப்பனர் மற்றும் பிற மேல் சாதிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற மையங்களாகவும் அதனாலேயே இயல்பிலேயே ஆர்எஸ்எஸ் பாஜக உங்களுக்கு துணை போகின்ற அடியாள் படையாகவும் செயல்படுகிறது.
இந்த அடிப்படையிலும் காவி பாசிசத்தின் கோட்டைகளாக திகழ்கின்ற கோவில்களின் நிலங்கள் அனைத்தும் கணக்கிடப்பட வேண்டும். எந்த தயவு தாட்சிண்யமும் இன்றி நேர்மையான முறையில் கணக்கெடுப்பு செய்து அதில் காலங்காலமாக குடியிருந்து வருகின்ற மக்களுக்கு வீட்டடி மனைகளை வழங்குவதும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உழுது பயிரிட்டு நெல் உள்ளிட்ட தானியங்களை விளைவித்து கொடுக்கும் உழைப்பாளி மக்களுக்கு குத்தகை வரி, பகடி போன்றவை உடனடியாக குறைக்கப்பட வேண்டும். படிப்படியாக பட்டா போட்டு தருவதை நோக்கி நகர வேண்டும்.
தீட்சிதர் பார்ப்பனர்களுக்கு எதிராக அவர்கள் செய்த மோசடிகளை நில திருட்டுகளை கண்டுபிடிப்பதற்கு வெளிமாநிலத்தைச் சார்ந்த ஆட்சியர் ஒன்றை ஒருவரை நியமித்துள்ள தமிழக அரசு தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு அராஜகமான செயல்பாடுகளை நடத்தி வருகின்ற தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் போன்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு சாதி தீண்டாமையின் பெயராலும், பல நூற்றாண்டுகளாக உழைத்துக் கொடுத்து உருக்குலைந்து போன ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்ற முறையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையாக்கி பிரித்து தரப்பட வேண்டும். சிதம்பரத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வரும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் 13ம் நூற்றாண்டு காலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் திருத்துறைப்பூண்டி பகுதியில் நடந்த ’குகையிடிக் கலகத்தைப்’ போல கலகத்தில் இறங்குவார்கள் என்பது நிச்சயம்.
- கணேசன்.