நடிகர் விஜய் தனது கட்சி மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், பாசிசம் குறித்து பேசியது விவாதப் பொருளாகியுள்ளது. பேச்சு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்கப்பட்டு பேசியிருந்தாலும் கூட விஜய்-ன் கருத்தாக தான் பார்க்க முடியும்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி 6 மாதங்கள் கழித்து மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்திருக்கிறார். நடிகரும் அரசியல் தலைவராக பரிணமித்திருக்கும் விஜயை பார்க்க லட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்ததை செய்திகளில் பார்க்க முடிந்தது.
இந்த மாநாட்டில், முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அங்கமாய் உள்ள ஊழலை ஒழிப்பேன், சமூக நீதியை பாதுகாப்பேன் என ஏக வசனங்களை பேசியிருக்கிறார். தன் ரசிகர்கள் யாரும் கைவிட்டு போய்விடக் கூடாது என அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர் என எல்லா அரசியல் தலைவர்களையும் பயன்படுத்திக் கொண்டு தான் இந்த மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்.
சாதிவெறி கட்சியான பாமகவும் கூட அம்பேத்கர், பெரியாரை தங்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு தேவைப்படும் போது ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளும். கூட்டணியில் இருந்துக் கொண்டு பெரியாரை சங்கி கும்பல் தூற்றினாலும் கூட ‘பெட்டி’ தான் முக்கியம் என்று எதுவும் கண்டுக் கொள்ளாது.
லட்டு புகழ் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூட ஆரம்பத்தில் அம்பேத்கர், பெரியார் என சில்லறை சிதறவிட்டவர்தான். அவர்தான் தற்போது சனாதனத்தைப் பாதுகாக்க சண்டமாருதம் செய்து வருகிறார்.
நடிகர் விஜய் எப்படி இருப்பார் என்பது போகப்போக தான் தெரியும். இன்றைய அரசியல் சூழலில் ஒரு கட்சி யார் பக்கம் நிற்கிறது என்பது முக்கியம். இந்தியாவின் சூழல் அது போல் உள்ளது. பாசிசத்தின் பக்கமா? அல்லது அதற்கு எதிர் நிலையிலா? ஆனால் விஜய் இன்னும் நடிகர் விஜய்-ஆக இருப்பதினால் பாசிசம் பாயசம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
நிச்சயம் இவர் எடுக்கும் முடிவுகள் பாசிஸ்டுகளுக்கு சாதகமாகவே முடியும் என்பதே எமது கூற்று. அதற்கு ஒரு உதாரணம் 2024 நாடாளுமன்றத் தேர்தல்.
அசாதரண சூழலில் நடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக கட்சி ஆரம்பித்திருந்த நடிகர் விஜய் தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் நேரடியாக 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் சரியான நிலைப்பாடு எடுத்து தனது ரசிகர்களையோ அல்லது தொண்டர்களையோ வழிநடத்தாமல் அல்லது முடிவெடுக்க திராணியில்லாமல் உங்கள் விருப்பப்படி யாருக்காவது ஓட்டு போடுங்கள் என்று தலைவராக இல்லாமல் நடிகராக விலகிச் சென்றார்.
ஊழல் ஒழிக்க போவதாக முழக்கமிடுகிறார். அரசியலுக்கு வரும் யாராக இருந்தாலும் இதை கூற மறக்க மாட்டார்கள். காரணம் மக்களுக்கு லஞ்சம் ஊழலால் ஏற்பட்ட பாதிப்பு தான். தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு இதில் அவர்களும் அங்கமாகிவிடுகிறார்கள் என்பது வேறு கதை. ஆனால் விஜய் அப்படி இல்லை. அவர் ஏற்கனவே ஊழல் செய்தவர் தான். தனது படம் வெளியாகும் போது 100 ரூபாய் டிக்கெட்டுகளை 1000 ரூபாய்க்கு விற்கும் போது அதை எதிர்த்து இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. மாறாக அதை அங்கீகரிக்கும் விதமாக மௌனமாக கடந்துச் சென்றிருக்கிறார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் A1 ஊழல் குற்றவாளியான ஜெயாவை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அவர் வெற்றிப் பெற்ற பின்னர் தனது தந்தையோடு வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தான் ஜெயாவின் வெற்றிக்கு அணிலாக வேலை செய்தேன் என்று பெருமை பொங்க பேசினார். இவர் தான் ஊழலை ஒழிக்க புதிய அவதாரமெடுத்திருக்கும் தவெக தலைவர்.
கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியும், விஜய் கட்சி மாநாட்டு ’வெற்றியும்’? எதைக் காட்டுகிறது?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் இது தான் எங்கள் கொள்கை என்று வீர வசனம் பேசியிருக்கிறார் நடிகர் விஜய். அதெப்படி விஜய் உங்கள் படத்தை பார்க்க வரும் ரசிகன் பஞ்ச பராரியாக இருக்கும் போது நீங்கள் 445 கோடி(கணக்கில் காட்டப்படும் சொத்து மட்டும்) சொத்து வைத்திருக்கும் போது எல்லோருக்கும் எல்லாம் எப்படி கிடைக்கும்?. இந்த கேள்விகளெல்லாம் வந்திருந்தால் உங்கள் ரசிகர்களே உங்கள் எதிரிகளாகி விடுவார்கள்.
பாசிசம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. பாசிசம் பாயாசம் என்று பயமுறுத்துகிறார்கள் என்று தற்குறிதனமாக பேசுகிறார் நடிகர் விஜய். அவருக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. இந்தியா முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களில் துரத்தப்படுவது தெரியவில்லை. எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் பல வருடங்களாக அவதியுறும் சமூக செயற்பாட்டாளர்களின் வலியும் புரியவில்லை. இதெல்லாம் தெரியும் என்றால், தெரிந்தே பாசிசத்தை இயல்பானதாக, சாதரணமானதாக காட்ட முயல்கிறார் என்று பொருள்.
பாசிசத்தை ஆதரிக்கும் மற்றுமொரு கவர்ச்சிவாத கட்சியான தமிழக வெற்றிக் கழகம்!
மொத்தத்தில் விஜய்யின் மாநாடு தனது படத்தை போல எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து 6 மணி நேரம் நீட்டி கிண்டப்பட்ட பலவித மசாலாக்கள் கலந்த பாயாசம். இந்த மாநாட்டிற்கு விஜய் பேசுவதற்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தவர் அட்லியை போன்று அதிக காப்பியடிக்கும் பழக்கம் கொண்டவர் போல.
மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களை சீமானை போன்ற கழிசடைகள் காயடித்துக் கொண்டிருக்கும் வேலையில் புதிதாக அந்த பணிக்கு ஆளும் வர்க்கத்தால் நியமிக்கப் பட்டிருக்கும் நபர் தான் நடிகர் விஜய்.
சினிமாவில் இளைஞர்களை சீரழிக்கும் விதமாக காட்சிகள் அமைத்து கல்லாக் கட்டிய விஜய், தற்போது சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்க, அரசியலிலும் கல்லாக் கட்ட புதிய அவதார மெடுத்திருக்கிறார். இளைஞர் இவர் போன்ற கழிசடை கும்பலிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, சமூக மாற்றத்தை நோக்கி சரியான திசைவழியில் பயணிக்கும் இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும்.
- நந்தன்
நந்தனின் நடிகர் விஜய் பற்றிய அம்பலப்படுத்தும் கட்டுரை சிறப்பாக உள்ளது. எனினும் ஓரிரு பத்திகளைக்
கூட்டி நாடு முழுமைக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், கடந்த கால மக்களின் குறிப்பாக உழைக்கும் மக்களின் விவசாயிகளின் தொழிலாளிகளின் போராட்ட காலத்தின் போது இந்த நடிகர் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார்? அதற்கெல்லாம் அவர் முகம் கொடுத்தாரா? குரல் வழியாகவாவது போர்முழக்கம் செய்தாரா? எத்தனையோ கொடுமை நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் அரைகுறை ஆடைகளுடன் பிரவேசித்த
நடிகைகளுடன் கட்டிப் புரண்டு குத்தாட்டம் போட்டு தமிழ் ‘இளசு’களின் ‘மனசு’களில்
நச்சுக் கலாச்சாரத்தை விஷ வித்தாக ஊன்றி சீரழித்துக் கொண்டு, வெள்ளைப் பணம் கால் பங்கு, கருப்பு ப் பணம் முக்கால் பங்கு என கோடி கோடியாய் குவித்தவர் தான் இன்றைக்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவராக முதல்வராக வரவேண்டும் என்று கனவு காண்கின்றார்! ஊழலை ஒழிப்பேன் என்று ஊளையிடுகிறார்! வாரிசு அரசியல் பற்றி வாய் கிழிய பேசும் இந்த விஜய், தனது அப்பன் சந்திரசேகரன், ஆத்தாள் உஷா முதலானோரை முன்னிறுத்தி அரசியல் பண்ணுவது குடும்ப அரசியல் இல்லையோ என்பதனை அவர் யோசிப்பதில்லை. கட்டுரை சிறப்பு தான் என்றாலும் இப்படிப்பட்ட சில அம்சங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்பது என் அவா.
நடிகர் விஜய் தனது கொள்கை தலைவர்கள் என முன் நிறுத்தி காட்டும் அரசியல் என்பது,
பெரியாரை காட்டி திராவிட ஓட்டுகள்,
அம்பேத்கரை காட்டி தலித் ஓட்டுகள்,
காமராசரை காட்டி நாடார் ஓட்டுகள்,
சேர, சோழ, பாண்டிய மன்னனை காட்டி ஆதிக்க சாதி ஓட்டுகள்,
பெண் தலைவர்களை காட்டி பெண்கள் ஓட்டுகள்,
தனது (விஜய்) படத்தை காட்டி விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டுகள்
என கணக்கிட்டு காக்டெய்ல் அரசியலை முன் நிறுத்துகிறார்.
மேலும், தமிழ் நாட்டில் பாசிச சக்திகளை பல்லக்கில் தூக்கி வரும் அடுத்த முள் பொறுக்கி கட்சிதான் த.வெ.கழகம்..
லஞ்சம் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார், முதலாளி முதலாளித்துவம் இருக்கும் வரை லஞ்சம் ஊழல் இருக்கும், பாஜக சித்தார்த்த எதிரி என்று சொல்கிறார், திமுக அரசியல் எதிரி என்று சொல்கிறார், முதலில் தமிழக வெற்றி கழகத்தின் சித்தாந்தம் என்ன? ஒரு சித்தாந்தத்தால் தான் இன்னொரு சித்தாந்தத்தை வீழ்த்த முடியும். அவருடைய மாநாடு பேச்சுகள் முழுவதும் படத்தின் பஞ்ச் டயலாக்குகளே நிரம்பி உள்ளன,சினிமா வேறு அரசியல் வேறு என விரைவில் புரிந்துகொள்வார்.
தான் வாங்கிய காருக்கு வரி கட்டாமல் ஏமாற்ற முயன்றவர் ஊழலை ஒழிப்பாரா?
பாசிசம் பாயாசமா? என கேட்கிறார். பாசிசம் என்ன தெரியாதவர். என்ன அரசியல் செய்ய போகிறார். பிரிவினை வாதிகளை எதிர்ப்போம் பிஜேபி தான் பிரிவினை வாத கட்சி. இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவர் பிரிவினை வாதிகளை எதிர்ப்பாரா?
இவர் கட்சிக்கு என்று கொள்கை இல்லை. பெரியார் கொள்கைகளில் கொஞ்சம், அம்பேத்கர் கருத்துகளில் கொஞ்சம், அண்ணா கருத்துகளில் கொஞ்சம் இப்படி பல பேரின் கருத்துகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து இதை கொள்கை என பேசுகிறார். ஆக கொள்கையே இல்லாத ஒரு கட்சி தான் தமிழ்க் வெற்றி (வெட்டி) கழகம்.
இது தமிழகத்தின் சாபக்கேடு!