உலகை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவுத்திறன் அதன் அடுத்த கட்ட தாக்குதலை உழைப்பாளி மக்களின் மீது தொடுக்க துவங்கி உள்ளது என்பதை கூகிள் டீப் மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“இந்த செயற்கை நுண்ணறிவு திறத்தினால் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட போகிறது. அதனால் புதிய தலைமுறை இளைஞர்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு திறனுடன் போட்டியிடுவதற்கு தயாராக வேண்டும் என்றும்” முன்மொழிந்துள்ளார்.
இந்த செயற்கை நுண்ணறிவுத்திறன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது மனித குலத்தின் வேலை வாய்ப்புகளை பறித்து விடும் என்று அச்சம் வெளிப்படத்துவங்கியது.
அந்த காலகட்டத்தில் AI தொடர்பான ஆராய்ச்சியில் முன்னோடியான ஜெப்ரி ஹிண்டன், ‘’ஏ.ஐ., என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத் தான் செய்வர். அதனால், AI பற்றிய அச்சம் தேவையில்லை. ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை விட, AI பயன்படுத்தி போட்டோக்களை துல்லியமாக ‘எடிட்’ செய்ய முடியும். வீடியோக்களில் ஒருவரின் குரலை உண்மையாக பேசுவது போல செய்ய முடியும்.”என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக செயற்கை நுண்ணறிவு திறன் பற்றி புகழ்ந்து தள்ளி இருந்தார்.
அசலுக்கு நிகராக போலிகளை உருவாக்குவது மட்டும்தான் இந்த செயற்கை நுண்ணறிவு திறனின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் அல்லது இதன் மூலம் தனது வேலைகளை சுலபமாக செய்து முடித்து விட முடியும் என்று கருதி கொண்டிருந்தவர்கள் அனைவரையும் கூகுள் சிஇஓ வின் மிரட்டல் அச்சுறுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் என்பது கணினியை மனிதர்களை போன்று சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் தொழில்நுட்பம், அலெக்ஸா, சாட் ஜிபிடி போன்றவற்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இவைமட்டும் அல்லாமல் வேறு சில வழிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை பின்னுக்குத் தள்ளி அனைத்திலும் நுழைந்து வருகிறது செயற்கை நுண்ணறிவுத்திறன்.
இது பற்றி ஏற்கனவே எமது தோழமை அமைப்பான புதிய கலாச்சாரம் இதழின் சார்பில் சிறப்பு வெளியீடு ஒன்றை கொண்டு வந்திருந்தோம். அதில் செயற்கை நுண்ணறிவு திறன் ஏற்படுத்தப் போகின்ற பாதிப்புகளை பற்றி விளக்கிக் கூறியிருந்தோம்.
படிக்க:
🔰 ஆயுதப் போருக்கு இணையாக தகவல் போரை நடத்திய கோயபல்சின் வாரிசுகள்!
மனித உழைப்பு சக்தி உலகம் முழுவதும் கொட்டி கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாப வெறியினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை சர்வதேச தொழிலாளர் நிறுவனம் தெரிவிக்கின்றது.

உலகளாவிய அளவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் தற்போது 13% ஆக உள்ளது – இது கிட்டத்தட்ட 65 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு சமம்.. மேலும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய வேலைவாய்ப்பு மீட்சியை அனைவரும் அனுபவிக்கவில்லை என்று ILO கூறுகிறது.
“சில பிராந்தியங்களில் உள்ள இளைஞர்களும் பல இளம் பெண்களும் பொருளாதார மீட்சியின் பலன்களைப் பார்க்கவில்லை.” என்றும் உலக தொழிலாளர் அமைப்பின் அறிக்கை முன்வைக்கின்றது. அது மட்டுமல்ல உலகம் முழுவதும் பிராந்தியங்களுக்கு இடையில் வேலை வாய்ப்பின்மை ஏற்றத்தாழ்வாக உள்ளதாகவும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது..
“வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த இளைஞர் வேலையின்மை விகிதங்களைத் தக்க வைத்துக் கொண்டாலும், பிற பிராந்தியங்கள் பின்தங்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அரபு நாடுகள், கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், இளைஞர் வேலையின்மை விகிதம் 2019 ஐ விட 2023 இல் அதிகமாக உள்ளது” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள்தொகை வல்லுநர்கள் ‘இளைஞர் நிலநடுக்கம்’ என்று அழைப்பதை நோக்கிச் செல்லும் அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், ஆப்பிரிக்கா முழுவதும் , இளைஞர்கள் வேலைவாய்ப்பு நன்றாக இல்லை – வட ஆபிரிக்காவில் வேலையின்மை விகிதம் “மிகவும் அதிகமாக” உள்ளது மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி இளைஞர்கள் பாதுகாப்பற்ற வேலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மனித மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து உருவாக்கிய இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 இன் படி , “இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகை 2011 இல் 61 சதவீதத்திலிருந்து 2021 இல் 64 சதவீதமாக அதிகரித்துள்ளது, மேலும் இது 2036 இல் 65 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது”
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2025 ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியதாக புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக கொண்டுவந்துள்ள கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகள் விவசாயத்திலிருந்து விவசாயிகளை விரட்டியடித்து வருகிறது என்பதால் நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தின் கீழ் உழன்று வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட பணி மற்றும் உத்தரவாதமான வேலைவாய்ப்பு ஆகியவை குறைந்து கொண்டே செல்கிறது என்று இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய ஆய்வு அறிக்கைகள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது.
உலகின் மிகப் பெரும் பணக்கார நாடான அமெரிக்கா துவங்கி ஐரோப் மற்றும் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா வரை வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற சூழலில் செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்துவது மக்களின் வாழ்க்கை நிலைமையை புதை குழிக்குள் தள்ளும் என்பதே நிச்சயமாகும்.
மனித உழைப்பை சுரண்டி கொழுத்து திரிந்து வரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், மனிதர்களை வேலையில் இருந்து துரத்தி விட்டு அதற்கு பதிலாக எந்திரங்கள், ஆளில்லாத ட்ரோன்கள், செயற்கை முறையில் இயக்கப்படுகின்ற ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு திறன் ஆகியவற்றை பயன்படுத்தி தனது கொள்ளை இலாபத்தை பல மடங்கு அதிகரித்துக் கொள்வதற்கு துடித்துக் கொண்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மனிதர்களின் வேலைவாய்ப்பு மட்டுமல்ல. அவர்களின் மருத்துவம், சுகாதாரம், உயிர் வாழ்கின்ற உரிமை, நல்ல உணவு, தரமான காற்று ஆகியவை அனைத்தையும் கொடுப்பதற்கு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையினால் ஒருபோதும் முடியாது.
ஒரு சிலர் கொள்ளை லாபமடித்து பல்லாயிரம் கோடி சொத்து குவிப்பதும், பல ஆயிரக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுவதும் என்ற இரு துருவ ஏற்றத்தாழ்வை ஒழித்துக் கட்டுவதற்கு சோசலிச புரட்சியின் மூலம் புதிய உலகை படைப்பது தான் இன்றைய தேவையாக மாறியுள்ளது.
அதற்கு முன் நிபந்தனையாக செயற்கை நுண்ணறிவுத் திறன் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கு சேவை செய்கின்ற வகையில் மாற்றுகின்ற கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும்.
“லாபம், லாபம் மேலும் லாபம்” என்று வெறியுடன் திரிந்து கொண்டிருக்கின்ற ஏகாதிபத்தியங்களால் இதனை ஒருபோதும் செய்ய முடியாது.
◾ முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி