லெனின்
ஆசான் லெனின்

சோவியத் ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில்-ஸிம்பீர்ஸ்க் நகரில் நிக்கலாயெவிச் உல்யானவ் (கல்வித்துறை இயக்குனர்)- மரீயா அலெக்ஸாந்திரவ்னா தம்பதியருக்கு 1870 ஏப்ரல் 22-ல் பிறந்தவரே நமது ஆசான் லெனின். இவரது அக்காள் ஆன்னா(6), அண்ணன் அலெக்ஸாந்தர்(4)… இவர்களுக்குப் பிறகு, மூன்றாவதாகப் பிறந்தவர் நமது ஆசான் லெனின். (இவருக்குப் பிறகும் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தனர்). தாய் குழந்தையை தொட்டிலில் கிடத்தி கணவர் உல்யானவ்-வுடன் மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஆன்னாவும், அலெக்ஸாந்தரும் சேர்ந்து தொட்டிலை ஆர்வமுடன் எட்டிப் பார்க்க, தந்தை “குழந்தைகளே! உங்களுக்குத் தம்பி பிறந்திருக்கிறான்” என்றார்.

“எவ்வளவு சின்னூண்டுப் பயல்” என்று வியந்திருக்கிறாள் ஆன்னா.
“வளர்ந்ததும் பெரியவனாகி விடுவான்” – தந்தை பதிலளித்தார்.
“இவன் பெயர் என்ன?” என்று தம்பியை நன்றாக பார்ப்பதற்காக நுனிக் கால்களில் எம்பி நின்றபடியே கேட்டான் அலெக்ஸாந்தர்.

“விளாதீமீர் என்று கூப்பிடுவோமே” – என்றாள் தாய் மரீயா. ஆம்! அந்த விளாதீமிர் இல்யா நிக்கலாயெவிச் உல்யானவ்-தான் பிற்காலத்தில் மாபெரும் கம்யூனிஸ்ட் புரட்சியாளனாகப் பயணப்படும் தருணத்தில் தமக்கு அவரே சூட்டிக்கொண்ட பெயர்
தான் “லெனின்”! உலகம் முழுமையும் இன்றும் நிலைத்து நிற்கக்கூடிய பெயர் தான் “லெனின்”!

ஆசான் லெனினிடமிருந்து முதலில் எதைக் கற்பது?

லெனின் எண்ணற்ற நூல்களை படித்திருக்கிறார்; எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார்; எண்ணற்ற உரை வீச்சுகளை நிகழ்த்தியிருக்கிறார்; எண்ணற்ற அமைப்புகளைக் கட்டமைத்திருக்கிறார்; எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறார்; எண்ணற்ற முறை சிறை ஏகியிருக்கிறார்; ஈடு இணையற்ற எண்ணற்ற தியாகங்களைப் புரிந்திருக்கிறார்; யார் மன்னனை வீழ்த்தியதில் தன்னைப் பாத்திரம் வகித்தவர் அவரே! ரஷ்ய (அக்டோபர்) நவம்பர் சோசலிசப் புரட்சியை தலைமை ஏற்று சாதித்த வரும் அவரே!தான் பிறந்த நாட்டு உழைக்கும் மக்களுக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்குமான பாட்டாளி மக்களின் விடுதலைக்கான மார்க்சிய- லெனினிய பொக்கிசத்தை-நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கிச் சென்றுள்ளார் ஆசான்…!

ஆசான் லெனினது 157-வது பிறந்தநாளில் மேற்கண்டவற்றை முழுதும் கற்றறிந்து
ஒரே கட்டுரையில் அவர் விட்டுச்சென்ற தொடர் ஓட்டப் பெரும் பணியாம் பாட்டாளி வர்க்கத்துக்கான விடுதலை குறித்த சோசலிசம்- கம்யூனிசம் சென்றடையும் வழிமுறை குறித்த – கலங்கரை விளக்கத்தைப் படம் பிடித்துக் காண்பிப்பதென்பது எளிதன்று.

அவரது பள்ளிப் பருவக் காலத்திலேயே ஆசிரியர்கள் அவரிடம் நேரடியாகக் கேட்கும் கேள்விகளுக்கும் சரி; தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் சரி; ‘உருப்போட்டு ஒப்புவிக்கும் முறை’-யில் அல்லாமல் தன்னுடைய சுயேச்சையான அறிவுத் திறனை வெளிப்படுத்தியே பதில் அளித்து வந்துள்ளார். ஒரு முறை அவர் எழுதிய கட்டுரையைப் படித்து பார்த்து விட்டுப் பள்ளித் தலைவர், “எந்த ஒடுக்கப்படும் வர்க்கங்களை பற்றி நீர் இங்கே எழுதுகிறீர்? எதற்காக அது இங்கே எழுதுகிறீர்?” -என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இப்படிப்பட்ட அறிவுக் கூர்மை உள்ள இளசுகளை முதலாளித்துவ சுரண்டும் வர்க்கக் கல்விச்சாலைகள் (இந்த காலத்திலேயே பெரும்பாடு படும் சூழல் நிலவுகின்ற பொழுது) அந்தக் காலத்தில் அனுமதித்திருக்குமா என்ன? பள்ளிப் பருவத்திலேயே ஒருமுறை பள்ளி நிர்வாகத் தலைவரால் இடைநீக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

தனது தந்தை உல்யானவ்,பேராசான் மார்க்ஸின் தந்தை (சிறந்த வழக்கறிஞர்) ஹென்ரிச்சைப் போலவே சிறந்த கல்வியாளராகவும், நேர்மையாளராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின்-இன ரீதியாக ஓரம் கட்டப்பட்ட மக்களின் மீது இரக்க சுபாவம் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார். அப்பண்பாடுகள் குழந்தைகளுக்கும் ஒட்டிக் கொண்டுள்ளது.

எனினும் மதம் – கடவுள் சம்பந்தப்பட்ட விடயத்தில் தந்தையின் எண்ணத்திற்கு மாறுபாடு கொண்டவராய் திகழ்ந்துள்ளார் லெனின். நாட்டில் ஜார் ஆட்சியின் கீழ் மக்கள் படும் துயரங்கள் ஏற்றத்தாழ்வுகளை கண்ணுற்ற லெனின் உள்ளத்தில் மத நம்பிக்கை – இறை நம்பிக்கை இள வயதிலேயே ஓரம் கட்டப்பட்டிருந்தது.

படிக்க: சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்

லெனின் தம்மிடம் ஒருமுறை இளவயது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது இப்படிச் சொன்னதாகப் பதிவிடுகிறார் அவரது இணையர் குரூப்ஸ்கயா.

“தமது 16- ஆம் வயதில் மதத்துடன் உள்ள தமது தொடர்பை துண்டித்துக் கொண்டு விட்டாராம். ‘தம் குழந்தைகள் சர்ச்சுகளுக்கு ஒழுங்காக போவதில்லை’ என்று உல்யானவ் ஒரு முறை தம் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருடன் பேசுகையில் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னாராம். விருந்தாளியோ விளாதீமிரைப் பார்த்து ‘விளாற வேண்டும்; சவுக்காலேயே விளாற வேண்டும்’ என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த விளாதீமிர் மதத்திற்கு ஒரேயடியாகத் தலைமுழுகத் தீர்மானித்தாராம். உடனே வீட்டிலிருந்து வெளியே ஓடிப் போய், கழுத்தில் தொங்கிய சிலுவையை அறுத்து மண்ணில் எறிந்து விட்டுத் திரும்பினா ராம்”. அப்பொழுது அவருக்கு வயது 16 மட்டுமே.

இந்த ஒரு விடயத்தை தவிர தந்தையாரின் மற்றைய சிறந்த பண்பாடுகளை லெனின் பின்பற்றத் தவறவில்லை. தனது அக்காள் ஆன்னா, அண்ணன் அலெக்ஸாந்தர் இருவர் மீதும் இள வயது முதல் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டிருந்தார் லெனின்.
படிக்கும் காலத்திலேயே அண்ணனும் தம்பியும் எண்ணற்ற அறிவு சார்ந்த நண்பர்
களைப் பெற்றிருந்திருக்கிறார்கள். அதேபோல ஆன்னாவும், அலெக்ஸாந்தரும் தம்பி லெனின் மீது அளவு மீறிய பற்று வைத்திருந்தார்கள்.

தனது அண்ணன் ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு எதிராக சிந்திக்கிறார்; போராடத் துணிகிறார் என்ற செய்தி தெரிந்த உடனேயே லெனினுக்கு அண்ணன் மீது கூடுதலான பற்று ஏற்பட்டு விடுகிறது. அலெக்ஸாந்தர் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்து பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி யாக வேண்டும் என்ற நோக்கில் சேர்வதற்கு புறப்படும் தருணம். அப்பொழுது அண்ணனும் தம்பியுமாக அவர்களது குழந்தைப் பருவம் முதல் விரும்பி ரசிக்கும் ‘வெளியேத்ஸ்’ எனும் செங்குத்தான வோல்காக் கரைப் பகுதிக்கு சென்றார்கள். இயற்கையைக் கண்டு ரசித்தார்கள்.

அத்தருணத்தில் “மனிதனிடம் உனக்கு எல்லாவற்றையும் விடப் பிடித்தது எது?” என்று அண்ணனிடம் லெனின் கேட்டுள்ளார். “உழைப்பு, விஷயஞானம், நேர்மை” என்று அலெக்ஸாந்தர் பதில் அளித்துவிட்டு “நம் தகப்பனார் அப்படிப்பட்டவர் என்றே நினைக்கிறேன்” என்றாராம். அண்ணன் மீது தம்பிக்கு கூடுதலான பேரன்பு ஏற்பட்டது. அண்ணன் பொதுவான சமூக நோக்கில் இருந்து மார்க்சியத்தை நோக்கிப் பயணப்பட முனையும் பொழுது மிக இளம் வயதிலேயே நாட்டு நிலைமைகளை உள்வாங்கி இருந்த லெனினுக்கு அண்ணன் மீது மேம்பட்ட மரியாதை முன்னெப் போதையும் விடக்கூடியது. தமது அண்ணனிடமிருந்து மார்க்சிய இலக்கியம் பற்றி முதன் முதலாக லெனின் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

லெனினின் 16-வது வயதில் (1886-ல்) தந்தை உல்யானவ்மறைந்தது குடும்பத்தில் இடியாய் இறங்கியது.‌ தந்தையின் பென்ஷன் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைப்பது குடும்பத்தை பராமரிப்பது என்பது தாய் மரீயாவுக்கு மிகுந்த சிரமத்தை அளித்தது.தந்தை மறைந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பம் மீள்வதற்கு முன்னரே இன்னொரு பெரும் விபத்து காத்திருந்தது. ஆம்..!
ஜார் மூன்றாவது அலெக்ஸாந்தரைத் தாக்குவதற்கான ஆயத்தங்களில் பங்கெடுத்துக் கொண்டோரில் அலெக்ஸாந்தர் உல்யானவ்-வும் ஒருவர் என குற்றம் சாட்டி 1887 மார்ச் மாதம் பீட்டர்ஸ்பர்க்கில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு மே மாதம் அலெக்ஸாந்தர் ‘ஸ்லீஸெல்பர்க் கோட்டை’யில் மரண தண்டனைக்கு உள்ளானார். இந்த இரண்டாவது அதிர்ச்சி குடும்பத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

தம்பி அலெக்ஸாந்தரின் வீர மரணம் குறித்து அக்காள் ஆன்னா, இப்படியொரு கருத்தைப் பதிவிடுகிறார். “அலெக்ஸாந்தர் இல்யீச் வீர மரணம் அடைந்தார்; அவருடைய இரத்தம் அவரைப் பின்பற்றிய தம்பி விளாதீமீரின் வழியைப் புரட்சித் தீயின் சுவாலையால் ஒளியுறுத்தியது”-என்று எழுதினார் ஆன்னா.

அலெக்ஸாந்தரின் ‘புரட்சி வழி’ சரிதானா? என சிந்திக்கலானார் லெனின்!

தமது தமையனார் மரண தண்டனைக்கு ஆளானதால் லெனின் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் என்பது உண்மையே. இம்மரணம், தமது வாழ்க்கையை புரட்சிப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்கும் அவரது சங்கற்பம் இதனால் இன்னும் உறுதிப்பட்டது என்பதும் உண்மையே; தமையனாரினதும், அவரது தோழர்களதும் வீரத்திற்கும், தன்னலமின்மைக்கும் லெனின் அந்த வயதிலேயே அஞ்சலி செலுத்தினார் என்பதும் உண்மையே; அதே நேரத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையை லெனின் நிராகரித்தார் என்பது மட்டுமே ஈங்கு நாம் பெரிதும் கவனிக்கத்தக்கது.

ஜார் ஆட்சி அதிகாரத்தின் தனித் தனி பிரதிநிதிகளையும் அல்லது யாரையுமே கொன்றொழிப்பதன் மூலமாக எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடுவதாக அமைந்திடாது. இது தவறான பாதை; குறிக்கோளை அடைவதற்கு இவ்வழி ஏற்றதல்ல” என்று இளைஞர் லெனின் கருதினார். “இல்லை, நாம் செல்லப் போவது அந்த வழியில் அல்ல; அந்த வழியில் செல்வது கூடாது” என்று அறைந்து கூறினார் லெனின்.

இத்தருணத்தில் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் கல்வி மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் வென்றார் லெனின். அவருக்குத் தகுதி இருந்தும் கூட, அவரது பல்வேறு வகைப்பட்ட முற்போக்கு நடவடிக்கைகளால் இப்பதக்கத்தை அளிக்கலாமா என்று பலமுறை ஆலோசனை செய்தது கல்வி நிர்வாகமும் அரசாங்கமும். இறுதியில் உண்மைத் திறமையை மூடி மறைக்க முடியாது அல்லவா? இறுதியில் தங்கப் பதக்கத்தைக் கொடுத்து விட்டார்கள்.
அவர் 1887-ம் ஆண்டு ஆகஸ்டில் கஸான் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு படிப்பதற்காகச் சேர்ந்தார்.

லெனினது முதல் கைதும் – சிறைவாசமும்…!

பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தருணத்திலேயே லெனின் முற்போக்கு மாணவர்கள் மத்தியில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். 1887 டிசம்பரில் மாணவர்கள் கூட்டத்தில் செயல்முறைகளில் பங்கு எடுத்துக் கொண்டதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தம்மை சிறைக்கு இட்டுச் சென்றபோது அதிகாரியுடன் நடந்த உரையாடலை லெனின் இப்படிப் பதிவு செய்துள்ளார். “எதற்காக நீங்கள் கலகக் கிளர்ச்சி செய்கிறீர்கள் இளைஞரே? இது சுவராயிற்றே” என்று உபதேசிக்கும் தோரணையில் அவரிடம் சொன்னாராம் போலீஸ் அதிகாரி.

“சுவர்தான், ஆனால் மட் கிப்போனது – லேசாகக் குத்தினால் போதும், தகர்ந்து சிதறிவிடும்” – என்று தமது 17-வது வயதில் பதிலளித்தாராம் ‌லெனின். ஆம், இவ்வகையில் தான் ஜாராட்சி எதேச் சதிகாரத்துக்கு எதிராக புரட்சி போராட்டப் பாதையை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் லெனின். அக்காலக் கட்டம் துவங்கி சோசலிசப் புரட்சி ஈடேறும் காலம் வரை அவர் போலீஸ் கண்காணிப்பிலிருந்து தப்பவே இல்லை.

“கஸானிலிருந்து கிராமத்துக்கு அனுப்பப்பட்ட அடுத்த ஆண்டில் நான் படித்த அளவு என் வாழ்வில் அப்புறம் ஒருபோதும், பீட்டர்ஸ் பர்கிலும், சைபிரியாவிலும் சிறைவாசம் செய்த போது கூட நான் படிக்க வில்லை என்று தோன்றுகிறது. அதிகாலை முதல் இரவு வெகு நேரம் வரை ஒரே ஆவேசத்துடன் அப்போது படித்தேன்”- என்று பிற்காலத்தில் நினைவு கூர்ந்தார் லெனின்.

லெனின் வெளிநாட்டுக் கல்வி பயில விண்ணப்பித்துக் கொண்ட பொழுது ஜார் அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. காரணம் அவரது பெயர் அரசாங்கத்தின் “நம்பத் தகாத புள்ளிகள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.அக்காலச் சூழலில் கஸானில் சட்ட விரோதமான-இரகசிய வட்டங்கள் சில இயங்கின.ருஷ்யாவின் முதலாவது புரட்சிகர மார்க்சிய வாதிகளில் ஒருவரான பெதொஸேயெவ். லெனின் இவர் சார்ந்த குழுவோடு தம்மை உறுப்பினராக்கிக் கொண்டார்.

படிக்க: தோழர் லெனின் அதிகம் தேவைப்படுகிறார்!

…அக்காலம் தொட்டு லெனின், மார்க்சியம் என்பது புரட்சிகரப் போதனை. அதன் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸின் பெயரால் அது மார்க்சியம் என அழைக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தையும் எல்லா உழைப்பாளி மக்களையும் மூலதனத்தின் அதிகாரத்திலிருந்து விடுவிப்பதற்கே மார்க்ஸும் அவரது நண்பர் பிரெடெரிக்
எங்கல்ஸும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார்கள். சமூக வளர்ச்சியின் விதிகள் பற்றிய விஞ்ஞானத்தை அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் உருவாக்கினார்கள். சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் வழிகளைக் காட்டினார்கள்…

… பாட்டாளி வர்க்கத்தின் இந்த மாண்புமிக்க ஆசான்கள் விஞ்ஞான முறையில் நிரூபித்தது என்னவென்றால், மிகச் சில முதலாளிகள் உழைப்பாளி மக்களைச் சுரண்டித் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் சமூக அமைப்பு சாஸ்வதமாக நிலவப்போவதல்ல‌; முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து மனித குலத்துக்கு விமோசனம் அளிப்பதற்கு, பூர்ஷ்வா ஆட்சி அதிகாரத்தை கவிழ்த்தவும், புதிய சோசியலிஸ்ட் சமூகத்தை நிறுவவும் வல்ல சக்தி தேவை. இந்த சக்தி தான் பாட்டாளி வர்க்கம்–கூலித் தொழிலாளர்களின் வர்க்கம். பூர்ஷ்வாச் சமூகத்தில் யாவற்றிலும் அதிகமாக கொடுக்கப்பட்டிருப்பது. யாவற்றிலும், அதிக ஸ்தாபன அமைப்பு உள்ளது. யாவற்றிலும் புரட்சிகரமான வர்க்கம்–பாட்டாளி வர்க்கமே…! என்ற கூர்மையான சிந்தனை போக்குக்கு மிக இள வயதிலேயே வரலானார் ஆசான் லெனின்.

லெனின் எழுதுகிறார்:

“மார்க்ஸும் எங்கெல்ஸும் ஆற்றிய உலக வரலாற்று முக்கியத்துவம் உள்ள தொண்டு என்னவென்றால், எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்துக்கு அவர்களது பாத்திரத்தை, அவர்களது கடமையை, அவர்களது வேலையை இவ்விருவரும் காட்டியது தான். அதாவது மூலதனத்துக்கு எதிராக புரட்சி போராட்டத்தை முதன்முதலாகத் தொடங்குவதும் எல்லா உழைப்பாளி மக்களையும், சுரண்டப்படுவோரையும் இந்தப் போராட்டத்தில் தம்மை சுற்றி அணி திரட்டி ஐக்கியப்படுத்துவதுமே”

இந்த சமூக விஞ்ஞானத்தை புரிந்து கொண்டால், …பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்குமிடையே தொடரும் போராட்டத்தில் முடிவில் சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்றும், தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தை கவிழ்த்து விட்டு உழைப்பாளி மக்களின் நலன்களின் பொருட்டுப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை, அதாவது தனது ஆட்சி அதிகாரத்தை ஸ்தாபிக்கும் என்றும் மார்க்ஸும் எங்கெல்ஸும் விஞ்ஞான ரீதியாக கற்பித்தார்கள்…

என்பதை தான் கற்றது மட்டுமின்றி, அவ்விதப் புரட்சியை ஈடேற்றுவதற்கு ஆசான்கள் காட்டிய இயக்க இயல் பொருள் முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதத்தைத் தெள்ளத் தெளிவாகக் கற்று சமூக உற்பத்தி நிலைகள் – அதன் மூலமாக உற்பத்தி உறவுகள் – அரசின் வடிவங்கள்- அரசாங்கத்தின் தில்லுமுல்லுகள் அனைத்தையும் உள்வாங்கி மக்களைத் திரட்டுவதற்கு முன் கட்சி கட்டுவது, தொழிற்சங்கங்களை கட்டுவது, விவசாய சங்கங்களை கட்டுவது, மாணவர்- இளைஞர் அமைப்பு களைக் கட்டுவது என்ற பயணத்தில் தலைமை தாங்கி மேலும் மேலும் முன்னேறி சென்றார். மார்க்ஸ் காலத்திற்குப் பிந்தைய முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக உருவெடுத்து விட்டது என்பதை உலகுக்கு அறிவித்தார். அவர் சைபீரியாவில் சிறைவாசம் அனுபவித்த பொழுதுதான், மற்றெல்லாக் காலங்களையும் விட எண்ணற்ற நூல்களைப் படித்துக் கற்றுணர்ந்துள்ளார்; எண்ணற்ற நூல்களையும் படைத்துள்ளார்.

படிக்க:உண்மையறிவோம் லெனின்- ஸ்டாலின்  குரூப்ஸ்கயா

அவரது “அரசும் புரட்சியும்”, “என்ன செய்ய வேண்டும்”, “தேசிய இனப் பிரச்சனைகளும் – பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்”, “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் அன்றைய உலகின் – ருஷ்யாவின் எதார்த்த சமூக சூழலிலிருந்து படைக்கப்பட்டவை ஆகும். இதைத் தவிர லெனினின் …தேர்வு நூல்கள், நூல் திரட்டுகள்… இவற்றில் எண்ணற்ற நூல்கள் ஒருங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் படைத்துள்ளார். உரைவீச்சுக்களை நிகழ்த்தியுள்ளார்.

அவரே குறிப்பிட்டுள்ளது போல, மார்க்சிய விஞ்ஞானத் தத்துவம் உலகம் முழுமைக்குமான பாட்டாளி மக்களின், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்கான பேராயுதம் என்பதைப் பறை சாற்றினார். 1906-ல் “பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்” என்றார் லெனின்.பின்பு அவரே ருஷ்ய மக்களின் எதார்த்த சூழல் – சமூக சூழலை உணர்ந்து போலி பாராளுமன்றத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் 1907-ல் பங்கேற்பும் செய்தார்.

நமது நாட்டில் கூட முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல; இடதுசாரிகள் என்று கூறப்படும் அமைப்பினர் கூட அரசுக்கும், அரசாங்கத்திற்குமிடையிலான வேறுபாடுகளைப் பாரதூரமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலர்களாக இல்லாமல்தான் இருக்கிறார்கள். அதனால் தான் சோவியத் புரட்சிக்குப் பின்னர் கூட 1919 ஜூலை 11- லேயே ‘ஸ்வேர்திலோவ்’ பல்கலைக்கழகத்தில் “அரசு” என்ற தலைப்பில் ஆசான் லெனின் ஆற்றிய உரையை நாம் மீண்டும் மீண்டும் கற்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

“அரசு என்றும் இருந்தது இல்லை என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்; அரசு ஒன்று இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது; எங்கெங்கே, எவ்வெப்போது சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசும் தோன்றுகிறது”

“மனிதனை மனிதன் சுரண்டும் முதல் வடிவம் வர்க்கங்களாக- ஆண்டைகளாகவும் அடிமைகளாகவும் பிரிகிற முதல் வடிவத்திலேயே ‘அரசு’ தோன்றி விடுகிறது” இக்காலக் கட்டத்தில் தான் ரோமானிய அடிமை ‘ஸ்பார்த்தக்கஸ்’ ஆண்டைகளுக்கு முதல் அடி கொடுத்து ‘மாவீரன்’ என்று புகழ் பெற்றான். ஆரம்பகால ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் கூட ‘ஸ்பார்த்த கிஸ்டுகள்’ என்றே பெயர் சூட்டிக் கொண்டனர்.

மார்க்சிய தத்துவத்தின்படி பொருள் உற்பத்தி சமுதாய அமைப்புகள் ஒவ்வொரு சமூகக் கட்டத்திலும் புரட்சிகரமாக மாறி வருகின்ற பொழுது அந்தந்தக் கால அறிவியல் முன்னேற்றத்திற்குத் தகுந்தபடி அரசின், அதாவது அடக்குமுறைக் கருவியின், அதாவது குண்டாந்தடியின் வடிவங்களும் மாறுபட்டே வந்துள்ளன; அல்லது வளர்ச்சி அடைந்தே வந்துள்ளன.

இந்த அடக்குமுறைக் கருவியை-மற்ற குண்டாந்தடியை அனைத்து மக்களுக்குமான – பொதுவான – பாதுகாக்கும் கருவி – இயந்திரம் எனப் பறைசாற்றுகிறது சுரண்டும் முதலாளித்துவ வர்க்கம். ஒரு சமூகம் இணக்கம் காண முடியாத அளவிற்கான வர்க்கங்களாக, அதாவது முதலாளி – தொழிலாளி; சுரண்டுபவன் – சுரண்டப்படுபவன்; ஏழை – பணக்காரன்; நிலப்பிரபு- கூலி விவசாயி… எனப் பிளவுபட்ட பிறகு இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு ‘அரசு’ இருக்க முடியாது என்றே மார்க்சிய வழியில் ஆசான் லெனின் பறைசாற்றுகிறார்.

எனவேதான் லெனின் குறிப்பிட்டது போல மற்ற எந்த ஒரு பொருளை விடவும் கூட ‘அரசு’ என்ற பொருளைப் பற்றி எதிரிகள் (முதலாளித்துவ பிண்டங்கள்) குழப்பி விட்டது போல் வேறு எந்த ஒரு பொருளையும் குழப்பிவிட்டதில்லை என்று சாடுகிறார்.

படிக்க:  அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின் | மீள்பதிவு

இந்தியாவில் அதானி, அம்பானி, அனில் அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களுக்குச் சேவகம் செய்யும் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், பெரும்பணக்காரர்கள், நிலச்சு வான்தார்கள்… இக்கும்பலுக்கும், சாதாரண ஏழை எளிய உழைக்கும் வர்க்கமான பாட்டாளிகளுக்கும் ஒரே விதமான முறையில் தான் காவல்துறை/ நீதித்துறை/ஐஏஎஸ்/ஐபிஎஸ்/ ராணுவம் உட்பட அனைத்து அதிகார வர்க்கமும் ‘கடமை’ ஆற்றுகின்றனவா? என்பதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேண்டாம். பழங்குடியின மலைவாழ் மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மக்களுக்கான பாதுகாவலர்களாக விளங்கிய மாவோயிஸ்டுகளை ‘மார்ச் 31 உடன் இந்தியாவில் ஒரு நக்சல்பாரி கூட இல்லாத நாடாக மாற்றிக் காண்பிப்போம்’ என்று பழங்குடியின மக்களையும், போராளிகளையும் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறதே பாசிச காவிக் கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவமும் போலீசும் இவை அனைத்து மக்களுக்கும் பொதுவான இயந்திரமா?

தூத்துக்குடியில் அனில் அகர்வாலின் வேதாந்தா குழும ஸ்டெர்லைட்டை மூடக்கோரி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, காக்கை குருவிகளைப் போல எடப்பாடியின் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றதே -இதுதான் அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு இயந்திரமா!

அண்ணா காலத்தில் கீழவெண்மணி, கருணாநிதி காலத்தில் மாஞ்சோலை, எம்ஜிஆர் காலத்தில் வள்ளியூர், வாகைகுளம், வேடசந்தூர், வட ஆற்காடு, ஜெயலலிதா காலத்தில் வாசாத்தி, சென்னை மீனவர்கள், எடப்பாடி காலத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் என எங்கும் எண்ணற்ற தொழிலாளர்களை – விவசாயிகளை – மீனவர்களை – போராளிகளை – புரட்சியாளர்களை இந்த குண்டாந்தடி போலீஸை வைத்துக் கொன்றொழித்தார்களே, இவைதான் அனைத்து மக்களுக்குமான பொதுவான ‘அரசு’ வடிவமாக இருக்க முடியுமோ?

இப்படிப்பட்ட கொடும் சம்பவங்கள் தொடர்கதையாகின்ற பொழுது, அதைப் பாதுகாக்கின்ற பணியையே, ‘மக்கள் பிரதிநிதித்துவ’ சட்டமன்ற – பாராளுமன்ற அரசாங்க வடிவம் ஆற்றுகிறது. ஆக இந்த சுரண்டும் சமூக அமைப்பில் அதிகார வர்க்க ‘அரசு’ம் (குறிப்பாக அடியாள் படையும்), ‘மக்கள் பிரதிநிதித்துவ’ பாராளுமன்ற ஜனநாயகமும் சுரண்டும் கூட்டத்தின் நலன் காக்கும் நாயகர்களாக இருந்தே பணி புரிகின்றனர். சுரண்டப்படும் மக்களுக்கு எலும்புத் துண்டுகளை – இலவசங்களை வீசி எறிந்து அடக்கி ஒடுக்கியே ‘சேவகம்’ புரிகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் 2014 முதல் மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ்  -பாஜக
கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு வர்க்க முரண்களை மூடி மறைத்து ஆன்மீகத்தின் பெயரில் மதங்களின் பெயரில் மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியல் பரப்பி மடைமாற்றும் வேலையைச் செய்து கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் அந்தப் பிரதான காவிக் கும்பலை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் வீழ்த்த வேண்டிய அவசியம் நமக்கும் கூட இருக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் நாம் முதலாளித்துவ இயக்கங்களின் ஒரு பிரிவினருடன்கூட ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் மற்றும் புரட்சி வரை இயக்கங்களின் ஒற்றுமையை கட்டி கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டியதும் ஜனநாயக கூட்டரசை நிறுவ வேண்டியதும் அவசியமாகிறது. இதுவும் கூட மார்க்சிய-லெனினிய வழியின் பாற்பட்டதே என்பதை இன்றைய லெனின் 159 ஆவது பிறந்த நாளில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாகக் கொள்வோம்!

இத்தருணத்தில் முடிவாக லெனினின் முக்கியமான கருத்துரைகளை மனதிற்குள்வோமாக:

“நீங்கள் கூறுகிறீர்கள் உங்கள் அரசு சுதந்திரம் ஆனது என்று; ஆனால் உண்மையில், தனி உடமை என்பது நீடிக்கிற வரையில் உங்களுடைய அரசு, அது ஜனநாயகக் குடியரசாக இருந்தாலும் கூட, தொழிலாளர்களை அடக்குவதற்காக முதலாளிகள் பயன்படுத்தப்படும் இயந்திரமே தவிர வேறு எதுவுமன்று”

“இந்த அரசு என்பது, சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமேயாகும். இனி, மூலதனத்தின் பலத்தைத் தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரத்தை ஒப்படைப்போம். அரசு என்பது சர்வ ஜன சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது எனும் பழைய மனக் காழ்ப்புகளை எல்லாம் நாம் மறுப்போம். ஏனெனில் அது வஞ்சனையாகும். சுரண்டல் நீடிக்கிற வரையில், சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரபு தொழிலாளிக்குச் சமம் என்றோ அல்லது பசித்த மனிதன் வயிறார உண்டு கொழுத்த மனிதனுக்குச் சமம் என்றோ கூற முடியாது. அரசு என்பதற்கு பொது ஜன ஆட்சி என்று பொருள் எனும் பழங் கதைகளை நம்பிக் கொண்டு மூடத்தனமான பய பக்தியுடன், மக்கள் அதன் முன் வணங்கி நின்றார்களே அந்த அரசு எனும் இயந்திரத்தைப் பாட்டாளி வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அது பூர்ஷ்வா பொய் என்று பறைசாற்றுகிறது. முதலாளிகளிடமிருந்து இந்த இயந்திரத்தைப் பறித்து, அதை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம். இந்த இயந்திரம் அல்லது குண்டாந் தடியைக் கொண்டு எல்லா சுரண்டலையும் நாம் தகர்த்தெறிவோம்.

சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போனபோது நில சொந்தக்காரர்களும், ஆலைச் சொந்தக்காரர்களும் எங்குமே இல்லை எனும் போது சிலர் மட்டும் வாரி வாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது எனும் நாளில் தான் இந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்போது அரசு என்பதும் இருக்காது சுரண்டலும் இருக்காது. நம் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கா இதுவே”

‘போல்ஷ்விக்’குகள் தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கத்தின் ருஷ்ய சோசலிசப்
புரட்சிக்குப் பின் லெனின் ஆற்றிய உரையின் கடைசிப் பகுதியே மேலே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வரிகளாகும்.

லெனின் கூறியது போல மார்க்சியம் உலகம் முழுமையும் வாழும் பாட்டாளி வர்க்கத்தின்-தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான மாமருந்தாகும். அதனை இந்திய நாட்டின் பொருள் உற்பத்தி நிலைமைகள், சாதி தீண்டாமை, ஆன்மீகம் இவற்றின் ஊடாக பருண்மையாக பொருத்தி கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை
வீழ்த்தவும், ஜனநாயகக் கூட்டரசை நிறுவவும், அவற்றினூடாக ஜனநாயகப் புரட்சி – சோசலிச புரட்சியை நோக்கி முன்னேறவும் தியாகபூர்வமான போராட்ட வழிமுறைகள் மூலம் ஆசான் லெனின் வகுத்துத் தந்த பாதையில் முன்னேற அவரது 159-வது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

எழில்மாறன்

குறிப்பு:  “லெனின் வாழ்க்கை கதை”, “அரசு” என்ற சிறு நூல்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here