முகநூல் (ஃபேஸ்புக்) ஏகாதிபத்தியம் பின்னி வைத்திருக்கும் எதிர்ப்புரட்சி சிலந்தி வலை!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கழுத்தறுப்பு வேலைகளைப் பற்றி தற்போது உலகம் முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தைப் பற்றி 2014ஆம் ஆண்டிலேயே அரசியல் ரீதியாக முடிவு செய்து அனைவரையும் எச்சரித்தது எமது அமைப்பு.
“இணையத்தில் கடந்த சில ஆண்டுகளில் முகநூல் என்ற சமூக வலைதளம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. வேலை நிமித்தம் ஊர்விட்டு, நாடுவிட்டு சென்றாலும் சொந்த ஊர், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள் என அனைவரையும் இணைக்கும் முகம் என்பதாக பேஸ்புக் ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் அரசியல்வாதிகள், பிரபலங்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரின் முதன்மை ஊடகமாக அது மாறிவிட்டது.
செய்திகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்வது நாலைந்து வரிகளில் விமர்சனம், அதற்கு சக பயனாளிகள் விருப்பம் (லைக்) போடுவது, பகிர்ந்து கொள்வது என்பதாக அது செயற்படுகிறது. இவை ஆகப் பெரும்பான்மையாக மொக்கையாகவும், அரட்டையாகவுமே இருக்கின்றன. வெகுஜன ஊடகங்களின் துணுக்கு எழுத்தாளர்கள் போன்றவர்கள் இங்கே மினி நட்சத்திரங்களாக உருவாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவரது நிலைத்தகவலை (ஸ்டேட்டஸ்) பல 100 பேர் விருப்பம் தெரிவித்தும் பகிர்ந்தும் பிரபல படுத்துகிறார்கள்.
இதில் சினிமா, இலக்கியம், மனித உரிமை அரசியல், அரட்டை என பல குழுக்கள் இருந்தாலும் அனைத்திலும் இத்தகைய அரட்டை தன்மைகள் பிரதான பங்கு செலுத்துகிறது. ஆரம்பத்தில் புதிய செய்திகளை தெரிந்து கொள்வது, விவாதிப்பது என்று தொடங்குபவர்கள் கூட, பின்னர் படிப்படியாக எப்படி பிரபலம் ஆவது, தனக்கு எத்தனை லைக், கமெண்ட், ஷேர் வரும் என்று ஏங்குகிறார்கள். தன்னை பிரபலமாக்கிக் கொள்வதே நோக்கம் என்று மாறுகிறார்கள். கணிசமான நேரத்தை இதில் செலவிடுகிறார்கள். மெய் உலகத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு இந்த மெய்நிகர் உலகத்தின் புகழுக்காக ஏங்குகிறார்கள்.
அந்த வகையில் மக்களின் சமூக அக்கறையையும், செயல்பாட்டையும், சிதைக்கும் விதமாகவும் தனிநபர் வாதத்தை தூண்டிவிடும் விதமாகவும் ஃபேஸ்புக் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் தேவைக்கேற்ப, தேவையானவர்களுடன் தான் பேசுகிறோம். ஆனால் இங்கேயோ எதைப் பார்த்தாலும், கேட்டாலும், அதைப்பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் பேஸ்புக் என்ற மாய வலையில் சிக்கியவர்களுக்கு ஏற்படுகிறது. இன்னது வாங்க வேண்டும் என்று மளிகைக் கடைக்குப் போய் அந்தப் பொருளை வாங்கி கொண்டு வருவதற்கு பதிலாக, பொதுவாக கடை வீதிக்கு ஷாப்பிங் போவ தோடும், சூப்பர் மார்க்கெட்டில் பார்ப்பதை எல்லாம் வாங்குவதோடும் இதை ஒப்பிடலாம்.
ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் எனப்படுவோர் மொக்கை மனிதாபிமான செய்திகள், அரசியலை கொஞ்சம் நகைச்சுவையாக பேசுவது, அடிக்கடி பேசுவது என்று ஒரு வடிவத்திற்கு (ஃபார்மேட்) பலியாகின்றனர். நம்மை ஆயிரக்கணக்கானோர் பார்க்கின்றனர் அவர்களை கவருவதற்கு அல்லது தமது பிரபலத்தை தக்க வைப்பதற்கு என்று வலிந்து செயற்கையாக பேசும் ஆளாக குறுகிய காலத்திலேயே மாறிவிடுகின்றனர். இது தமிழ் சினிமாக்களின் மாஸ் மசாலா பார்மட்டை போன்றது. இதில் பிரபலம் ஆகின்ற சிலர் அப்படியே செய்தி சேனல்களில் கருத்து கந்தசாமிகளாகவும் வருகின்றனர். இவர்களது பிரபலத்தை தொலைக்காட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு இவர்கள் தொலைக்காட்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். சாதி, மதம், கட்சி, தன்னார்வக் குழு என்ற வகைகளிலும், தமிழினவாதிகள், போலி கம்யூனிஸ்டுகள், தலித் அரசியல் பேசுவோரும் ஃபேஸ்புக்கில் ஓரளவு இருக்கின்றனர். சிறுபத்திரிக்கை அறிவுஜீவிகளும் தமது இருப்பை ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
இணையத்தில் முகத்தை வெளிக்காட்ட தேவையில்லை என்பதால் அவதூறு செய்வது, அரைவேக்காட்டுத்தனமாகவும், அதே நேரத்தில் சவாடாலாகவும் அரசியல் பேசுவது, இதையே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாக காட்டிக் கொள்வது என்பது ஒரு நோயாக பரவி இருக்கிறது. ஒரு கொள்கை, அந்த கொள்கைக்கான அமைப்பு, அதற்கான நடைமுறை வேலைகள் என்று எதிலும் இறங்கி வேலை செய்ய தயாராக இல்லாத, நடைமுறை குறித்த எந்த அனுபவமும் இல்லாத விளம்பர மோகம் பிடித்த ஒரு கூட்டத்தை பேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. சமூக அக்கறையும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்ட இளைஞர்களை கூட இது சீரழித்து விடுகிறது.
ஃபேஸ்புக் நடவடிக்கைகள் என்பது குறிப்பிட்ட நேர வரம்போடும், கால இலக்கோடும் இருப்பதில்லை. கைப்பேசி மூலமே ஃபேஸ்புக் பார்க்கவும், பதிவிடவும் முடியும் என்பதால் இந்த விச வலையில் சிக்குபவர்கள் நாளுக்கு நாள் இதில் அதிக நேரம் செலவிடுபவராக மாறி விடுகிறார்கள். ஆரம்பத்தில் ஓரிரு சிகரெட்டுகள் பிடிப்பவர் தன்னை அறியாமலேயே செயின் ஸ்மோக்கர் ஆவது போன்றது இது.
எடுத்துக்காட்டாக ஒரு கருத்து சொல்பவர் பற்றி உடனே அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் இறங்குவது, சினிமாவைப் பற்றி ஒரு ‘முடியும்’ தெரியாமல் பல பக்கங்களுக்கு விமர்சனம் எழுதி தள்ளுவது, முகநூல் பக்கத்தில் மனதில் தோன்றிய படி, வாய்க்கு வந்த படியெல்லாம் எழுதி தள்ளுவது, தனது மன அரிப்புகளை சுவற்றில் (அதுதான் வாட்ஸ்அப் முகநூல்) போட்டு சொரிந்து கொள்வது, இத்தனைக்கும் மேல் கக்கூசு சுவர்களில் எழுதும் விடலைகளை போல, தனது பெயர் உலகமே பிரபலமாகிவிட்டது என்று மிதப்பில் திளைக்கும் வியாதி கொள்ளை நோயாக பரவிவிட்டது.
இந்த வியாதியை குறைந்தபட்சம் போக்குவதற்கு இந்த காணொளி உதவும் என்பதால் இங்கே வெளியிடுகிறோம்.
நன்றி: மதன் கௌரி, யூடியூபர்
VIDEO LINK