தமிழ்நாடு மின்சார வாரியம் பொது மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தனி நபர் வாழ்க்கையில் சிறு குறு தொழில் மேம்பாட்டில் விவசாயத்தில் முக்கியப் பங்காற்றுவது பொதுத்துறையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம். ஒன்றிய அரசாங்கம் இந்தியா முழுமையும் மின்சாரத்தை ஒட்டுமொத்தமாக பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக லாப ஊற்றாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2011ல் உருவாக்கப்பட்ட மின்சார சட்டம் தொடங்கி தற்போது நிறைவேற்றாமல் வைக்கப்பட்டுள்ள மின்சார திருத்தச் சட்டம் 2025 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால் மக்களின் சொத்தை இந்திய பெரு முதலாளிகளுக்கு வருங்காலங்களில் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் உதய் மின் திட்டம் தொடங்கி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனியாருக்கு விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்கங்களும், இதர தொழிற்சங்கங்களும் நடத்திய போராட்டங்களின் காரணமாக இதுகாறும் அவையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டே வந்துள்ளன.
ஆனால், தவெக அரசாங்கம் பதவியேற்ற பிறகு சிறு சிறு நடவடிக்கைகளாக தொடங்கி முற்றிலும் தனியாருக்கு கொடுப்பதற்கான பணிகள் தீவிரமெடுத்துள்ளன. மேலோட்டமாக பார்த்தால் ஏதோ சில துறைகளில் தனியார்மயம் அமல்படுத்தப்படுவது போல தோன்றும். ஆனால், இவை ஒவ்வொரு துறையிலும் ஆரம்பத்தில் ஆழம் பார்ப்பதற்காக சில அறிவிப்புகளை செய்துவிட்டு இப்போது முழுமையாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
உற்பத்தி
1. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் தனியார், அரசு கூட்டு என்பது எங்குமே இதற்கு முன்பு முயற்சிக்கப்படக் கூட இல்லை. ஆனால், தவெக அரசாங்கத்தின் முதல் மானியக் கோரிக்கையில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் தனியார் – அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் மிகப்பெரும்பாலான பணிகள் மின்சார வாரியத்தால் சுயமாகவே நிறைவு செய்யப்பட்டுவிட்டது.
2. ஆகஸ்ட் 31 அன்று முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள 5*210 = 1050 மெகாவாட் உற்பத்தி அலகுகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் 2*800= 1600 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் அனல்மின் நிலையம் தனியார் – அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
3. இன்று வந்துள்ள செய்திகளின்படி, உடன்குடி 2 மற்றும் 3 ஆவது விரிவாக்கத் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பிலிருந்து தனியார் – அரசு பங்களிப்புடன் நடைபெறும் என்றும், அது 6*800=4800 மெகாவாட் உற்பத்தி செய்யும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு விரிவாக்கத் திட்டத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியமே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை எண் 11 வெளியிடப்பட்டது. இப்போது அது தனியார் – அரசு பங்களிப்பு என்று மாற்றப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: மின்சார திருத்த மசோதா 2022: தனியார் முதலாளிகளுக்கு வாலாட்டும் மோடி அரசு!
இதன்படி, தமிழ்நாடு தனியார் – அரசு பங்களிப்புடன் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு உடன்குடி, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் சேர்ந்து 5460 மெகாவாட் ஆக இருக்கும். தற்போதையை நிலையை அரசின் பொதுத்துறையில் உள்ள அனல்மின் உற்பத்தி நிலையங்களில் மொத்த உற்பத்தித் திறன் 5640 மெகாவாட். இதில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பழைய அலகுகள் நீக்கப்படும் என்றால் பொதுத்துறையின் வசம் உள்ள அனல்மின்சாரத்தின் மொத்த அளவு 4590 மெகாவாட் ஆக மட்டுமே இருக்கும்.
அதாவது, மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தை விட தனியார் அரசு பங்களிப்புடன் கூடிய உற்பத்தி 870 மெகாவாட் அதிகமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பொதுத்துறையில் உள்ள அனல்மின் நிலையங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது வெறும் நிர்வாக மாற்றமாக இருக்காது. தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட மொத்த சொத்துக்களும், நிலங்களும் அப்படியே தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டுவிடும்.
மின் கடத்திப் பாதை
உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை கடத்தும் (Transmission) கட்டமைப்பிலும் தனியாரை கொண்டு வர தவெக அரசின் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதன்படி கோவையிலிருந்து அரியலூர் வரை உள்ள 765 கிலோ வாட் மின் பாதை தனியார் – அரசு பங்களிப்பிற்கு மாற்றப்படும்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்கள் தான் ஏற்கனவே மின் கடத்தும் பாதையை தனியார் – அரசு பங்களிப்புடன் சில பகுதிகளை அமைத்துள்ளன. கர்நாடகாவில் இது எடியூரப்பா காலத்தில் கொடுக்கப்பட்டது. அதைத் தவிர பாஜக அல்லாத ஒரு அரசாங்கம் மின் கடத்தும் கட்டமைப்பை தனியார் – அரசு கட்டமைப்பிற்கும் விடுவது தவெக அரசாங்கம் மட்டும்தான்.
விநியோகம்
தமிழ்நாடு அரசாங்கம் பட்ஜெட்டில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 50 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன் பிறகு சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் அதேபோன்று உயர் வருமானப் பகுதிகளிலும் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த டெண்டர் கோரியுள்ளது. இதன் பொருள் மின் நுகர்வோர் விருப்பப்பட்ட மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.
ஒரே வீடு அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை முன்கூட்டியே பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். இதன் மூலம் மானியம் என்பது முற்றிலும் துடைத்தெறியப்படும். ஆரம்பக் கட்டத்தில் தனியார் சேவை சிறப்பானது என்று வசதி உள்ள பலரும் தனியார் நிறுவனங்களுக்கு மாறுவதன் மூலம் மின்சார வாரியம் அடிமாடாக மாற்றப்பட்டு பிஎஸ்என்எல் போல மக்களே சாபவிடும் நிலைக்கு உள்ளாக்கப்படும்.
வருவாய்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் முழுவதும் தனியார்மயமாக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கான (பெட்ரோல் பங்க்) எலக்ட்ரிக் வாகன ரீசார்ஜ் ஸ்டேசன்கள் 20,000 தனியார் – அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
எந்தவொரு மாநில அரசும் இவ்வளவு வேகமாக தனியார்மயத்தை அமல்படுத்தியதில்லை. தவெக அரசாங்கம் தலை தெறிக்கும் வேகத்தோடு இவற்றையெல்லாம் தனியார்மயமாக்குகிறது.
விடுதலை அடைந்த காலத்திலிருந்து மக்களின் வரிப் பணத்தில் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்ட மொத்தக் கட்டமைப்பையும் தனியாருக்கு கொடுப்பதற்கான அனைத்துக் கட்ட பணிகளையும் தமிழ்நாடு அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது என்பது ஒரு சோகமான உண்மை. தனியார்மயக் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் அமைதி காப்பது அதைவிட பெரும் சோகம்.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களும், பொது நல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் உடனடியாக இதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு குரல் எழுப்புவது பிணத்திற்கு மருத்துவம் செய்வது போல மாறிவிடும்.
மாருதி நிறுவனம் சுசூகி என்கிற நிறுவனத்தோடு தனியார் – அரசு கூட்டு நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கிறது என்பதை பலரும் மறந்திருக்கக் கூடும். சற்று வரலாற்றை புரட்டி பாருங்கள். நோயாளிக்கு சிகிச்சை செய்வதா? பிணத்திற்கு சிகிச்சை செய்வதா? என்பதை முடிவு செய்யுங்கள்.
Kanagaraj Karuppaiah – முகநூல் பக்கம்







