ஆர்.எஸ்.எஸ் தடை பற்றி பரிசீலனை
படம்: பரிப்லப் சக்ரபோதி

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF  – United States Commission on International Religious Freedom)  மார்ச் 4, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவில் ஆர் எஸ் எஸ் -ன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்  என்று கூறியிருக்கிறது. USCIRF என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு  அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் மதசுதந்திரம் மிகப்பெரும் அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதில் ஆர் எஸ் எஸ் -ன் பங்கையும்  அதே சமயம் இந்தியாவை ஆண்டு வரும் பாஜகவும் மதசுதந்திரத்தை சிதைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதையும்  தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி ஆர் எஸ் எஸ் மீது அமெரிக்கா தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்த USCIRF அமைப்பு கூறியுள்ளது.

சர்வதேச மதச் சுதந்திர சட்டத்தின் (IRFA – International Religious Freedom Act)  விதிகளை மீறிச் செயல்படும் –  இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு எதிரான நிகழ்வுகளை சகித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. இந்தியாவில் இந்துமத வெறியர்களால் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது குறித்தும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

படிக்க: அமெரிக்காவில் சாதி வெறிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றம்! சட்டத்தை எதிர்க்கும் இந்து மத வெறியர்கள்!!

“லவ் ஜிகாத்” என்பது இந்து மத வெறியர்கள் பரப்பி வரும் மிகப்பெரிய பொய் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் “லவ் ஜிகாத்” என்ற பெயரில் நடக்கும் மதமாற்றங்களை தடுப்பதாக கூறிக்கொண்டு மதம் கடந்த திருமணங்களை தடுக்கும் சட்டத்தை அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக  அரசு கொண்டு வரப் போவதாக கூறியுள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

மகாராஷ்டிரா, அசாம்,  உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பாஜக அரசுகள் மதமாற்ற தடைச் சட்டங்கள் போட்டிருப்பதையும், இந்திய பாஜக அரசு வஃக்ப் வாரியம் தொடர்பான சட்டம் போட்டு இருப்பதையும் குறிப்பிட்டு இவை மத சுதந்திரத்திற்கு எதிரானவை என்று இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த அக்டோபரில் சத்தீஸ்கர் மாநில அரசு முன்மொழிந்துள்ள மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் என்பது மதக் கூட்டங்கள் நடத்துவதை குறி வைத்துள்ளது (தடுக்கும் நோக்கம் கொண்டது) என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

மேலும் பிற நாட்டில் இருந்து வந்த அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்யா அகதிகளை இந்திய அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு அவர்கள் அனைவரையும் இந்திய எல்லையில்  மியான்மார் நாட்டின் கடற்கரைக்கு அருகில் கடலில் தள்ளிவிட்டு கடலில் நீந்திச் செல்ல கட்டாயப்படுத்தியதாகவும் இந்த அறிக்கை இந்திய அரசை குற்றம் சாட்டுகிறது.

2020 ஆம் ஆண்டில் நடந்த சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட  உமர் காலித், சர்ஜில் இமாம் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஐந்து ஆண்டுகளாக இவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும்  இந்த அறிக்கை பேசுகிறது. இது போன்ற பல காரணங்களை கூறி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பை அமெரிக்காவில் சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பு அமெரிக்க அரசிற்கு அறிக்கையை அளித்துள்ளது.

படிக்க: இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா!

இந்திய பிரதமரும், அவருடன் உள்ள அமைச்சர்களும் பொதுவெளியில்  வெளிப்படையாக மதவெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவதை உலகமே கண்டு காரி துப்பி வருகிறது. இஸ்லாமியர்களுக்கும்  கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இந்தியாவில் நடக்கும் தாக்குதல்களை கண்டும் காணாமலும் இருந்து வருவதற்காக இந்தியாவை ஆளும் பாசிச பாஜக கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.

பாசிஸ்டுகள் இத்தகைய கண்டனங்களை கண்டு சிறிதும் மனவருத்தம் கொள்வதில்லை. மாறாக, உத்தரப்பிரதேசம்,மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஹரியானா, டெல்லி(யூனியன் டெரிட்டரி) போன்ற மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகள் தங்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களின் வீடு – கடைகளை புல்டோசர் கொண்டு இடித்து வெளிப்படையாகவே தங்களை மதவெறியர்களாக காட்டிக் கொண்டு வருகின்றன. பாஜக வேறு ஆர்எஸ்எஸ் வேறு அல்ல; பாஜக என்பது ஆர் எஸ் எஸ் இன் அரசியல் பிரிவு என்பதை அனைவரும் அறிவர்.

இந்தியாவில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவும் தேசம் கடந்த தரகு முதலாளிகள் இந்தியாவை கொள்ளை அடித்து உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்று இருப்பதற்காகவும் ஆர்எஸ்எஸ் பாஜக அரசுகள் சிறுபான்மை இன மக்களை மட்டுமல்ல பெரும்பான்மை இந்துக்களையும் கூட ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்கி சுரண்டி வருகின்றன.

இத்தகைய பாசிச அமைப்புகளை வேரோடு அழித்து ஒழித்திடுவதன் மூலமாகத்தான் இந்தியாவில் முழு ஜனநாயகத்தையும் மக்களுக்கான வளமான வாழ்க்கையையும் கொண்டு வந்திட முடியும். இதற்கு கார்ப்பரேட்- காவிப் பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசை அமைக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

குமரன்

ஆதாரம்: USCIRF Urges Sanctions on RSS, RAW; Congress Says Report Vindicates Its Concerns – The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here