மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் மீண்டும் ஒரு சிறந்த படைப்பை தந்துள்ளார். தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களை கொண்டு ஒவ்வொரு காட்சியாக கதையை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் வெற்றிகரமான பாணி பாலனிலும் வெளிப்பட்டுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் ஃபர்ஸானா பலாத்திங்கல் மற்றும் ஆதிசேஷன் நடிப்பில் வெளியாகி உள்ள Balan: The Boy படமானது ஒரு தாய் – மகனின் உணர்வுபூர்வமான கதையாகும்.
கணவனைக் கொன்று புதைத்து விட்டு சிறையில் மகனை பெற்றிருக்கும் ஒரு தாயின் பாச போராட்டம் தான் பாலன் திரைப்படம்.
சிறைக்குள்ளேயே தனது பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக ஒரு பெண் கைதி. அவளால் தண்டனை காலம் குறைக்கப்பட்டு முன்கூட்டியே விடுதலையாகும் தாய். சிறுவனான தனது மகனை அழைத்துக் கொண்டு புரோக்கரின் பிடியில் இருந்தும், இந்த சமூகத்தில் பெண்ணை நுகரவும், வேட்டையாடவும் துடிக்கும் நபர்களிடமிருந்தும் எப்படி ஓடுகிறார் என்பது தான் பாலன் திரைப்படத்தின் பாதி திரைக்கதை. அழுத்தமான ஒரு திரைக்கதையை ஜீத்து மாதவன் எழுதியுள்ளார்.
சிறையில் பிறந்த மகனுக்கு ஓவியங்களின் மூலம் வெளி உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நாயை “பப்பி” எனும் சிறுவனை, நாய் என்று திருத்துகிறார். அவன் டாக் என்று சேர்த்துச் சொல்கிறான். இந்த காட்சியின் மூலம் சிறுவன் இப்பொழுதுதான் முதல் முறையாக வெளி உலகத்தை பார்க்கிறான் என்பதை நமக்கு அழகாக கடத்தி விடுகிறார் இயக்குனர்.
வாழ்வதற்கே போராட வேண்டும்!
உழைத்து வாழ்க்கையை நடத்த வேண்டும்; அதில் தனது மகனை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று படத்தின் கதாநாயகி போராடுகிறார். சிறையில் உழைத்ததற்காக கிடைத்த பணம் கையில் இருக்கும் பொழுது ஒரு கிராமத்தில் சிறிய ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு இல்லை என்று பொய் சொல்லி அங்கு வேலை தேடிக் கொள்வதாக எடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு வேலை இடத்திலும் ஏதாவது ஒரு வகையில் ஆண்களின் வலை விரிப்புகள், அத்துமீறல்கள், சீண்டல்கள் நடக்கும் போதெல்லாம் அந்த வேலையையும் அந்த ஊரையும் துறந்து விட்டு மகனை அழைத்துக் கொண்டு ஓடுகிறார். தேனீர் கடை, ரப்பர் எஸ்டேட், கட்டுமானத் தொழில் என தொடர் ஓட்டமாகவே கதை பயணிக்கிறது.
படத்தின் கதையை உரையாடல்கள் மூலம் சொல்வது ஒரு வகையான வழிமுறை. காட்சிகளின் மூலமாக சொல்வது மற்றொரு வழிமுறை இப்படத்தில் அபலைத் தாயின் ஓட்டத்தை சில காட்சிகளின் மூலம் கதை சொல்வதாகவும் மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர்.
“என் புதிய பெயர் என்ன, நமது புதிய கதை என்ன?” என்று அந்தச் சிறுவன் தொடர்ந்து தாயிடம் கேட்கிறான், ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து ஒரு வித்தியாசமான பதில் கிடைக்கிறது.
பள்ளியில் வகுப்பு ஆசிரியர் சிறுவனின் பெயரைக் கேட்கும் போதும் அவனின் அம்மா பெயரை சொல்ல சொல்லும்போது இந்த வழிமுறையை பயன்படுத்தி கதையை நம்மிடம் கொண்டு சேர்க்கிறார்.
மிளிரும் நுட்பமான கலைத்திறன்!
தனது ஊரையும் பெயரையும் மகனின் பெயரையும் மாற்றிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்துகிறார் விபத்தில் இறந்த சிறுவனின் ஆதாரை தனது மகனுக்கு பயன்படுத்துகிறார் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் ஐடி கார்டை தனக்கு வேலை தேடிக் கொள்வதற்காகவும் பின்னர் ஒரு ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்.
இதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. விபத்தில் இறந்து விட்ட சிறுவனின் தாய் கதறி அழுவதை காட்டி, கேமரா அங்கிருந்து நகர்ந்து ஹீரோயினை வந்தடைந்து, ஹீரோயினின் கையில் உள்ள ஆதார் கார்டில் வந்து முடிகிறது. அந்த ஆதார் கார்டுக்கு இணையாக ஹீரோயினின் சிறுவன் அருகில் இருக்கும் விதமாக பிரேம் அமைக்கப்பட்டு என்ன நடக்கப் போகிறது என்பதை ரசிகனை சிந்திக்கத் தூண்டும் வகையில் காட்சியை அமைத்து உள்ளார்கள்.
அதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஒரு பன்னை கொடுத்துவிட்டு அவரின் ஐடி கார்டை கையில் வாங்கிப் பார்க்கும் அந்த தருணத்தில் சாலையில் செல்லும் வாகனத்தின் பிரகாசமான ஒளி ஹீரோயின் முகத்தில் படுகிறது. அதன் மூலம் ஹீரோயின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சிறப்பாக தீர்மானித்துவிட்டார் என்பதை ஒளிரும் முகம் காட்டுகிறது. மிகச்சிறந்த படைப்பாக இந்த காட்சி நிற்கிறது.
கேமரா நகரும் விதத்திலும், வேகத்திலும், பயம் பதட்டம் குழப்பம் உற்சாகம் என பல கலவையான உணர்வுகளை பின்னணி இசையுடன் இணைந்து தேவைக்கேற்ப பொருத்தமாக வெளிப்படுத்துகிறது.
முத்திரை பதிக்கும் திரைக்கதை!
வீட்டில் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகவும் அல்லது வீல் சேர் மூலமும் வாழ்ந்து வரும் ஒரு பாட்டியை கதைக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆண் துணை இல்லாத வீடு, பாதுகாப்பிற்கு ஆட்கள் இல்லாத வீடு என்பது வெளியே தெரிந்தால் திருடர்களின் அச்சுறுத்தலுக்கு வாய்ப்புண்டு. நோய்வாய்ப்பட்ட வயதான மூதாட்டி அதை எப்படி எதிர்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார் என்பதை மாங்காய் திருட வரும் சிறுவர்களை விரட்டுவதன் மூலம் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
“வெள்ளைக்காரனை எதிர்த்து துப்பாக்கியால் சுட்டார் என் கணவர். நாங்க வெள்ளைக்காரனை விரட்டி தியாகியா இருக்கிறோம். என் மகன் அங்கேயே போய் அவங்களுக்கு கைகட்டி வேலை செய்றான். அப்புறம் எப்படி நான் அவன்கூட பேசுவேன்” என விவரிப்பதன் மூலம் மகன் இருந்தும் கூட தனிமையில் வாழும் தனது சூழலையும், தனது கோபத்தையும் அழகாக வெளிப்படுத்தி உள்ளார் பாட்டி.
சிறுவனின் தாய் ஒரு கடைக்குள் கண்ணாடி முன்பு காதில் ஒரு தோடை வைத்து அழகு பார்க்கும் காட்சியில், பின்னணியில் புரோக்கர் பெண்மணி வந்து நின்று விசில் அடிப்பதை காட்டும் போது, இவரின் கண்கள் மகிழ்ச்சியிலிருந்து பயத்திற்கு தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளன.
படத்தின் மறுபாதியை காவல் நிலையத்தின் நல்ல & கெட்ட காவலர்களும், திருடனும் எடுத்துக் கொள்கிறார்கள். இங்குதான் ஒரு காவலன் வில்லனாக தீவிரமாக செயல்படுகிறார். கான்ஸ்டபிளாக தொடங்கி, உதவி ஆய்வாளராக வளர்ச்சி பெற்று கதையின் போக்கையே மாற்றுகிறார்.
திருடனாக வரும் டோவினோ தாமஸ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதையோடு கச்சிதமாக பொருந்தி மனதில் நிற்கிறார். அவரும் சிறுவனும் நெருக்கமாகும் ஆரம்பக் காட்சிகள் ஈர்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பாலன் திரைப்படமானது மிகச்சிறந்த திரைக் கதையையும், மிகச்சிறந்த பொருத்தமான நடிகர் தேர்வும், திரைக்கதைக்கு இணையாக கதை சொல்லலில் கேமராவை கையாண்டிருக்கும் நேர்த்தியும், பொருத்தமான ஒலி ஒளி சேர்க்கையும் இப்படத்தை ஒரு கவித்துவமானதாக மாற்றி உள்ளது.
ஒரு தாய் தனது மகனோடு உழைத்து வாழ்வதற்கு விரும்பினாலும் கூட இந்த சமூகத்தில் அதற்கான வாய்ப்புகள் எந்த அளவு அருகி வருகின்றன என்பதையும், எப்படி பெண்கள் தமது மானத்தை காப்பாற்றிக் கொண்டு வாழ, கௌரவமாக வாழ ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்பதையும் இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. ஆணாதிக்க சமூகம் இதை கணக்கில் எடுத்து திருந்துமா? திருந்த வேண்டும்.
- இளமாறன்






