நுரையீரல் புற்றா? காசு இருந்தால் பிழைக்கலாம்!
கீமோதெரபியைவிட குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் பல நோயாளிகள் இம்யூனோதெரபியையே விரும்புகிறார்கள். இருப்பினும், ஏற்கெனவே அதிக செலவாகும் புற்றுநோய் சிகிச்சையால் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்த சிகிச்சையின் அதிக விலை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது” என்கிறது  தினகரன் இணையதளம்.

ருத்துவத்துறையில் நடக்கும் புதிய ஆய்வுகளின் விளைவாக புதிய மருந்துகள் சந்தைக்கு வருகின்றன. ஆனால் இதை “டிரக் மாஃபியாக்கள்” எனப்படும் மருத்துவ கார்ப்பரேட்டுகள் பெரும் கொள்ளை லாபமீட்டும் வணிகமாகவே  மாற்றிவிடுகிறார்கள். எனவே ஒரு நோயாளி நோய் தாக்குதலுக்கு எதிராக நவீன சிகிச்சையை பெற வேண்டும் என்றால், அவன் கோடீஸ்வரனாக இருந்தாக வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோச் பார்மா காட்டில் மழை!

டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்று அழைக்கப்படும் இந்த மருந்தை ‘ரோச் பார்மா இந்தியா (Roche Pharma India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சிகிச்சை முறையை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நரம்பு வழியாக (IV Infusion) குளுக்கோஸ் மூலம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை செலுத்தப்படும்.

ஆனால், இந்த மருந்து தற்போது தோலின் கீழ் வெறும் 7 நிமிடங்களில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவான நுரையீரல் புற்றுநோய் வடிவமான Non-Small Cell Lung Cancer – NSCLC:-ஆல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக இந்த சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.3.70 லட்சம் ஆகும். மேலும் பல நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சுமார் 6 டோஸ்கள் வரை தேவைப்படும். அதாவது சிகிச்சைக்கு ரூ.20 லட்சத்தைக் கையில் வைத்திருப்பவர்கள்தான் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள முடியும்.

சுவிட்சர்லாந்தின் ரோச் பார்மா (Roche Pharma) இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (தோராயமாக ₹14,500 கோடி) முதலீடு செய்யவுள்ளது. மருத்துவ பரிசோதனை (R&D) திறன்களை மேம்படுத்துதல், சுகாதார கண்டுபிடிப்புகள், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சேவை மையங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு!

“இந்த ஊசியின் அறிமுகம் புற்றுநோய் பராமரிப்பில் இம்யூனோதெரபியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி, ஆரோக்கியமான செல்களையும் சேதப்படுத்தும் கீமோதெரபி போல் இல்லாமல், இம்யூனோதெரபி என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது.

கீமோதெரபியைவிட குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் பல நோயாளிகள் இம்யூனோதெரபியையே விரும்புகிறார்கள். இருப்பினும், ஏற்கெனவே அதிக செலவாகும் புற்றுநோய் சிகிச்சையால் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்த சிகிச்சையின் அதிக விலை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது” என்கிறது  தினகரன் இணையதளம். https://m.dinakaran.com/var/www/article/News_Detail/10146960

தவறான மருந்து கொள்கை!

“நாங்கள், “நிலையான, புதுமையான தீர்வுகளின் மூலம் இந்தியாவில் சுகாதாரத்துறையை மாற்றி அமைக்கவும், ஒவ்வொரு நோயாளியின் வாழ்வையும் பேணவும் நாங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறோம்” என்ற எங்களின் துணிச்சலான தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகிறோம்” என்கிறது கார்ப்பரேட் மருந்து மாஃபியாவான ரோச்.

125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட ரோச் நிறுவனமானது உலகெங்கும் கிளை பரப்பி உள்ளது. இந்தியாவைப் பொறுத்த அளவில்  “ரோச் நிறுவனம் 60 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதற்கு பெருமிதமும்” கொள்கிறதாம். ஆனால் ரோச்சை பார்த்து இந்திய மக்கள் பெருமிதப்படவோ மகிழவோ எதுவும் இல்லை.

ரோச் போன்ற கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் மருந்து கொள்கையை தான் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் முன்னெடுக்கின்றன. இவை மாற்றப்பட வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னுள்ள நோக்கம்!

புற்றுநோய் செல்களை அழிக்கும் சிகிச்சையில் ஆய்வுகளை நடத்தி, புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் பெரும் முதலீடுகளை செய்து ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.

இந்த போட்டியின் பின்னுள்ள நோக்கம் உலக மக்களை நோய்களின் தாக்கத்திலிருந்து மீட்டெடுப்பதோ, உலக மக்களின் ஆயுளை நீட்டிப்பதோ அல்ல. மாறாக, உயிர் பயத்தில் இருக்கும் நோயாளிகளிடம் உள்ள பணத்தை மொத்தமாக கரந்து கோடிகளில் புரள்வது தான் உண்மையான நோக்கமாக உள்ளது.

படிக்க:

♦ பாசிச பாஜக ஆட்சியில்  உயிர் காக்கும் மருத்துவத் துறையில் தலைவிரித்தாடும் போலி மருந்துகள்!

 நவம்பர்-14, நீரிழிவு தினம்: லாப வேட்டையில் மருத்துவ கார்ப்பரேட்டுகள்.

இந்திய மக்களிடமிருந்து பணத்தைக் கறப்பதற்காக தான் இந்தியாவில் 100 விநியோகஸ்தர்களை அமர்த்தியுள்ளது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன், புற்றுநோய் மருத்துவர்களுடன் கூட்டும் வைத்துள்ளது.

அறிவுசார் சொத்துடமை எனும் ஏமாற்று!

உலகில் கண்டுபிடிப்புகள் இடையராது நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இருப்பதிலிருந்து தான் புதிதாக ஒன்றைப் படைக்கிறார்கள். கடந்த கால கண்டுபிடிப்புகளையும், அதன் பயன்பாடுகளையும் ஆதாரமாகக் கொண்டுதான் அதிலிருந்து மேம்பட்ட ஒன்றை படைக்கிறார்கள்.

அந்த வகையில் எந்த ஒரு கண்டுபிடிப்பும் கண்டுபிடிப்பை செய்த தனி நபரின் தனிப்பட்ட உடமையாக, அவரின் அறிவு சார்ந்த சொத்தாக கருதப்படக் கூடாது. அது கடந்த கால அறிவின் தொடர்ச்சி மற்றும் நீட்சியாக தான் பார்க்கப்பட வேண்டும்.

அந்த வகையில் புதிய மருந்துகளும் கூட தனி ஒரு நிறுவனத்தின் அல்லது தனி ஒரு ஆய்வாளரின் சொத்தாக கருதப்படக் கூடாது. “அறிவு சார் சொத்துரிமை” என்று வகைப்படுத்தியுள்ள மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் தூக்கி குப்பையில் எரிய வேண்டும்.

ரோச்சை நடுத்தெருவிலா நிறுத்துவது!

நடுத்தெருவுக்கு விரட்ட தேவையில்லை. ரோச்சின் கண்டுபிடிப்புக்கு எது தகுதியானதோ அதை தந்து விட வேண்டும். அதாவது ரோச்சின் கண்டுபிடிப்புக்கு சன்மானமாக ஒரு தொகையை உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் தந்து விட்டு, இம்மருந்தை உலக மக்களின் பயன்பாட்டுக்கானதாக மாற்றிவிட வேண்டும்.

அதாவது, உயிர் காக்கும் மருந்துகளை  உலக நாடுகளின் அரசுகளே காப்புரிமையை கைகழுவி,  எந்த ஒரு கப்பத்தையும் எந்த ஒரு நிறுவனத்துக்கும் கட்டாமல், தமது தேவைக்கு உற்பத்தி செய்து கொள்ள அனுமதி தந்து விட வேண்டும்.

படிக்க: 

 சென்னை அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை – மாறுபட்ட அனுபவம்.

 முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான மாநில ஒதுக்கீட்டை ரத்து செய்யும் உச்சி ‘குடுமி’ மன்றத் தீர்ப்பு!

கார்ப்பரேட்டுகளின் தயவு ஆட்சியை நடத்தும் அரசாங்கங்கள், இத்தகைய மாற்றத்திற்கு உடன்பட மாட்டார்கள். எனவே, கார்ப்பரேட்டுகளின் ஆதரவு அரசாங்கங்களை தூக்கி எறிந்து விட்டு, கார்ப்பரேட்டுகளால் கட்டமைக்கப்பட்ட அரசு கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஒரு ஜனநாயகக் கூட்டரசை அமைத்து அதன் மூலம் தான் இத்தகைய மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட முடியும். அதுவரையில் கோடீஸ்வரர்கள் மட்டுமே நுரையீரல் புற்றுக்கான ரோச்சின் புதிய மருந்தை பயன்படுத்தி சிகிச்சை தொடர்வார்கள். தமது  ஆயுளையும் நீட்டிப்பார்கள்.  உழைக்கும் மக்களே அரசு மருத்துவமனையில் கீமோதெரபிக்கு சென்று சிதைவார்கள்.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here