மோடி மற்றும் பாஜக – விற்கு எதிரான வெறுப்பு – அதிருப்தி மக்களிடம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்தி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான திட்டம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இருக்கின்றனவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதிக்கு என மொத்தம் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 30, ஜூலை 2026 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் ஆகஸ்ட் மூன்றாம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன.

பீகார் மாநிலத்தில் உள்ள பங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்ற வந்த பாஜக, தற்பொழுது நடந்த இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனத் தலைவரான பிரசாந்த் கிஷோரிடம் 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

அதுபோல மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாடியா சட்டமன்றத் தொகுதியில் (இது காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி) நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே பாஜகவின் வசம் இருந்த மஞ்சல்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

 இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளில்  இரண்டில் பாஜகவின் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக வலுவாக உள்ள இந்தி பேசும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வி என்பது பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதையே காட்டுகிறது.

நாட்டு மக்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது, விலைவாசிகள் உயர்ந்து வருவது, நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் போது பாஜக அரசுகள் போலீசை ஏவி போராட்டக்காரர்களை ஒடுக்க முயன்றது போன்ற காரணங்களால் அதிருப்தியுற்ற  மக்கள் பாஜக -வை தோற்கடித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

பாஜக இந்த இடைத்தேர்தலில் இரண்டு இடங்களில் தோற்பதற்கு இப்படி பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணங்கள் இருந்த போதிலும்  பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டது தான் பாஜகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

உதாரணமாக பீகாரின் பங்கிப்பூர் தொகுதியில் பாஜகவிற்கும் (49.25% வாக்குகள்) பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கும்( 34.42% வாக்குகள்) இடையில் நேரடிப் போட்டி இருந்துள்ளது. (காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் நிறுத்தப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் சுமார் 10.96% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்) அதே போல மத்திய பிரதேசத்தில் தாடியா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் இடையில் நேரடி போட்டி இருந்துள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இவ்விரு கட்சிகளுக்கும் கிடைத்ததால் தான் பாஜகவின் தோல்வி சாத்தியமாகி உள்ளது.

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் “பாஜகவின் செல்வாக்கு தகர்ந்து கொண்டிருக்கிறது, மோடியின் செல்வாக்கு விழுந்து கொண்டிருக்கிறது” என்று பேசி காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட மக்களை உசுப்பேற்றுவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.

படிக்க:

 பீகார்: தேர்தல் வெற்றிக்கு சாதிவெறி-பார்ப்பன மதவெறியுடன் பாயும் பாசிச பாஜக! இண்டியாக் கூட்டணியின் கையாலாகத்தனம்.

 பீகார் தேர்தல் முடிவுகள்: எதிர்கட்சிகளுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி!

மோடி மற்றும் பாஜக – விற்கு எதிரான வெறுப்பு – அதிருப்தி மக்களிடம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்தி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான திட்டம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இருக்கின்றனவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் போது பல தொகுதிகளில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டு பாஜகவின் வெற்றிக்கு பாடுபட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. இனி வரும் தேர்தல்களிலும் இது போன்ற நடைமுறையை  எதிர்க்கட்சிகள் கைவிடும் என்று நம்புவதற்கு இடமே இல்லை. பாஜகவிற்கு எதிரான அதிருப்தி டெல்லி GenZ போராட்டங்களின்போது வெளிப்பட்டது.தற்போது இந்த இடைத்தேர்தல் மக்களிடையே பாஜக மீதான அதிருப்தி பிரம்மாண்டமாக வளர்ந்து உள்ளது என்பதையே காட்டுகிறது.

இன்னொருபுறம்,வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் சட்டமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவால் விலைக்கு வாங்கப்படும் அளவிற்கு இந்தக் கட்சிகளிடையே பாஜக எதிர்ப்பு என்பது மிகவும் பலவீனமாக உள்ளது. தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாஜகவிடம் விலை போக மாட்டார்கள் என்று  எதிர்க்கட்சிகளால் அறுதியிட்டு கூறவே முடியாது என்ற நிலை தான் உள்ளது.

பாஜகவின் பலம் அதை ஆதரிக்கும் மக்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை. மாறாக பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றியே ஆகவேண்டும் என்பதை பிரதானமாக நோக்கமாகக் கொண்டு செயல்படாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சுயநலத்தால் தான் பாஜகவின் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பாஜக கொண்டு வந்த, இனி கொண்டுவர இருக்கும் மக்கள் விரோத சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிராக ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையே இந்தக் கட்சிகளிடம் இல்லை. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை பாஜகவை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி விட முடியும் என்ற பேச்சிற்கே இடம் இல்லை.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here