இந்தத் தொடர் கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களில் கென்யாவிலும், இலங்கையிலும் அதானி குழுமம் சந்தித்து வரும் நெருக்கடிகளைப் பற்றி பார்த்தோம். சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதாரங்களுடன் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணைக்குப் பின் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதானிக்கு எதிராக எத்தனைக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக வந்தாலும் அவரைக் காப்பாற்றுவதில் குறியாக இருக்கிறது மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு. இப்படியான ஒரு கார்ப்பரேட் கிரிமினலுக்குத்தான் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் தொழில் தொடங்க தரகு வேலை பார்க்கிறார் பாசிச மோடி.
எல்லா நாடுகளிலும் மோடி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதானிக்கு தொழில் ஒப்பந்தங்களை பெற்றுத் தருகிறார்.
அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ போன்ற அரசு வங்கிகளில் இருந்து பெரும் தொகையை கடனாக வழங்கவும் உத்தரவிடுகிறார். அப்படி கடனாக கொடுத்த பெரும் தொகையை வாராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடியும் செய்கிறார். மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட் முதலாளிகளிடம் எப்படி எல்லாம் சென்று சேருகிறது என்று பாருங்கள்.
வெளிநாடுகளில் இப்படி முறைகேடாக தொழில் தொடங்குவதை அந்த நாட்டு மக்களும் அங்குள்ள செயற்பாட்டாளர்களும் எதிர்த்துப் போராட்டங்கள் செய்வது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது ஆகியவற்றின் மூலமாக தடுத்து நிறுத்தவும் முயல்கின்றனர். பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்க கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது அதானிக் குழுமம்.
அமெரிக்காவின் கைது ஆணையை அடுத்து, கென்ய அரசாங்கம் அதானிக்கு கொடுத்திருந்த 736 மில்லியன் டாலர் மின்சாரப்பாதை அமைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதேபோல விமான நிலைய புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தமும் அவருக்கு ரத்தாகியுள்ளது. ஏற்கனவே அங்கு மக்களின் போராட்டத்தாலும், நீதிமன்ற அழுத்தத்தாலும் என்ன செய்வது என்று விழி பிதுங்கி நின்ற அரசாங்கத்துக்கு இப்போது அமெரிக்காவின் நடவடிக்கை ஒரு சாக்காக அமைந்து விட்டது.
மியான்மரில் மண்ணைக் கவ்விய அதானி!
2019 ஆம் ஆண்டில் அதானி போர்ட்ஸ்(Ports) நிறுவனம் மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் உள்ள துறைமுகத்தின் ஒரு முனையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. தென்கிழக்கு ஆசியாவில் தனது இருப்பை விரிவு படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகக் கருதி இந்தத் துறைமுகத்தை உருவாக்கி, இயக்க 290 மில்லியன் டாலர் முதலீட்டில் திட்டமிட்டது.
2020 ஆம் ஆண்டில் சுமார் 127 மில்லியன் டாலரை முதலீடு செய்தது. நிலத்தை குத்தகைக்கு எடுக்க முன்பணமாக 90 மில்லியன் செலுத்தப்பட்டது. ஜூலை 2019-ல் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், கௌதம் அதானியின் மகனுமான கரண் அதானி, மியான்மரின் இராணுவத் தலைவரான மின் ஆங் ஹ்லெய்ங்- ஐ சந்தித்தார். இந்த மின் ஆங் முன்னதாக இந்தியாவின் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு சென்று அதானிக் குழும அதிகாரிகளுடன் பரிசுகளை பரிமாறிக் கொண்டவர்.
- நாடு கடந்தும் அதானி கொள்ளையடிக்க தரகு வேலைப் பார்க்கும் பாசிச மோடி!
- இலங்கையில் அதானிக்கு எதிராக வீசும் அரசியல் புயல்!
இந்த இராணுவத் தளபதி தலைமையிலான மியான்மரின் இராணுவம்தான் 2017 -ல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நிகழ்த்தி மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்களில் ஈடுபட்டது. அதானி குழுமத்தால் வழிநடத்தப்பட்ட இதே நபர்தான் 2021 பிப்ரவரியில் ஆங் சான் சூகி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை சதித் திட்டத்தின் மூலம் கவிழ்த்து, இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவினார்.
ஆட்சிக் கவிழ்ப்பில் அதானிக்கும் தொடர்பு!
இதையடுத்து எழுந்த பரவலான மக்கள் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள், அதானி துறைமுகத்துடன் இராணுவ ஆட்சிக் குழுவின் தொடர்பு குறித்து கவலையை வெளியிட்டன. சர்வாதிகாரி ஹ்லெய்ங்கிற்கும் அதானி குழுமத்துக்கும் இடையேயான உறவு குறித்து பல ஆதாரங்கள் வெளியாகின.
ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து அமெரிக்கா மியான்மருக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதானிக் குழுமம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சட்டபூர்வமானது எனக் கூறி பாதுகாத்தது. ஜூண்டா எனும் ராணுவத் தலைமையுடன் தொடர்புடைய மியான்மர் பொருளாதார கார்ப்பரேஷனுக்கு (MEC) 30 மில்லியன் டாலர்களை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
தனது குழுமத்துக்கு எதிரான விமர்சனங்களை மறுத்த அதானி, துறைமுகத் திட்டத்தில் தாம் மேற்கொண்ட முதலீடு விதிகளுக்கு உட்பட்டது தான் என்று வாதிட்டார். ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து ஏப்ரல் 2021ல் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ், பங்குச்சந்தை நிலைத்தன்மை குறியீட்டிலிருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து துறைமுகத் திட்டத்திலிருந்து அதானி குழுமம் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
ஆகஸ்ட் 2021-ல் மியான்மர் துறைமுகத் திட்டத்தை தொடரப்போவதில்லை என அதானி குழுமம் அறிவித்தது. மே 2022 – ல் MEC உடன் போடப்பட்ட திட்டத்திலிருந்து வெளியேற தான் முதலீடு செய்த 260 மில்லியன் டாலர்களை கோரியது. எனினும் ஒழுங்குமுறைத் தடைகள் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளை முடிப்பதில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக விற்பனை தாமதமானது.
இறுதியில் மே 2023 – ல் யாங்கூன் துறைமுகத்தில் உள்ள முதலீட்டு சொத்துக்களை வெறும் 30 மில்லியன் டாலருக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த இழப்பானது 2023 நான்காம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த லாபத்தை பாதித்தது. ஒட்டுமொத்தமாக 152 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப்படியாக மியான்மரில் இராணுவ சர்வாதிகாரியின் துணையுடன் முதலீட்டு ஒப்பந்தத்தைப் பெற்று, அவரை வைத்தே ஆட்சிக் கவிழ்ப்பிலும் ஈடுபட்டு, அதனால் அமெரிக்க பங்கு சந்தையில் தண்டிக்கப்பட்டு, இறுதியில் நட்டத்துடன் வெளியேறியது அதானிக் குழுமம்.
தொழில் செய்யத் தேவையான குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல், உலகக் கார்ப்பரேட் வரலாற்றில் மாபெரும் கிரிமினலாக வலம் வரும் அதானியை தான் இந்தியாவின் முகமாக பார்க்கச் சொல்கிறார்கள் பாசிச பாஜகவினர். இப்போது இந்தியாவின் முகம் சர்வதேச அளவில் கிழிந்து தொங்குவதை பார்க்கிறோம்.
– (தொடரும்…)