வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் தனது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடியதும், அதை எதிர்த்து தமிழக மக்கள் ஆதரவுடன் தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி ஆலையை மூட வைத்திருப்பதும் பழைய கதை. தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை தாமிர உற்பத்தியை செய்ய இருப்பதாகவும் அதற்கான அனுமதி வேண்டியும் வழக்கு தொடர்ந்து உள்ளார் அனில் அகர்வால். இது லாப வெறிபிடித்து அலையும் கார்ப்பரேட் முதலையான அனில் அகர்வாலின் இரண்டாம் சுற்று ஆட்டம்.
நேத்து வச்சது விஷம்: இப்ப தரப்போறது அமிர்தமாம்!
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ‘கிரீன் காப்பர்’ (Green Copper) எனப்படும் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஜனவரி மாதத்தில் கோரிக்கை மனு போட்டுள்ளது.
இதுவரைக்கும் நான் தந்தது விசமா இருக்கலாம்; அது காத்து, தண்ணி, மண்ண கெடுத்ததோடு உசுரயும் பறிச்சு இருக்கலாம். ஆனா இப்ப நான் தரப்போறது அமிர்தம் நம்புங்க! – என்கிறார் வேதாந்தாவின் முதலாளி.
வழக்கமான தாமிர உருக்காலைகளுடன் ஒப்பிடும்போது, மிகக்குறைந்த அளவே கார்பன் உமிழ்வை வெளியிடும் தொழில்நுட்பமே ‘கிரீன் காப்பர்’ ஆகும். இதில் 30% மறுசுழற்சி செய்யப்பட்ட தாமிரம் பயன்படுத்தப்படும். இதனால் கழிவுகள் (Slag) உருவாவது 15% குறையும். சர்வதேச சராசரியை விட 50% குறைவாக, அதாவது 1 கிலோ தாமிரத்திற்கு 0.9 கிலோவிற்கும் குறைவான கார்பன் டை ஆக்சைடு மட்டுமே வெளியாகும். இந்த ஆலை 24 மணிநேரமும் காற்றாலை மற்றும் சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும். இப்படி எல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு முட்டுக் கொடுத்து எழுதியுள்ளது. (https://tamil.indianexpress.com/tamilnadu/green-copper-to-replace-sterlite-vedanta-seeks-permission-for-sustainable-plant-in-thoothukudi-11008482)
வேதாந்தா நிறுவனம் தனது மனுவில் பழைய உற்பத்தி முறைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இது முற்றிலும் மேம்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன தொழில்நுட்பம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்திக்குத் தாமிரம் மிக அவசியம். இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் சுயசார்பு நிலையை இது உறுதி செய்யும். இந்த ஆலை மூலம் MSME எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாவதோடு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இத்திட்டம் மூலம் ஆலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச்சூழலைச் சீரமைக்க (Remediation) முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு!
கடந்த ஜனவரிதலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. வேதாந்தா நிறுவனம் தனது கோரிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற சட்டப்பூர்வ அதிகாரிகளிடம் விண்ணப்பமாக சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
படிக்க:
அப்போது அரசுத் தரப்பு கூடுதல் பிளீடர் விஜய் ஆனந்த் ஆஜராகி, ”பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மட்டுமே மனு அளிக்கப்பட்டிருக்கிறது. முறையாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கப்படவில்லை. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கு நிலுவையில் உள்ளன” என்றார். நிலுவையில் உள்ள வழக்கினையும், இந்த வழக்கினையும் இணைத்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
ஊரைச் சுற்றிய மலைப்பாம்பு!
தாமிர கனிமத்தை வெட்டி எடுக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு ஒரு தாமிர ஆலை கூட கிடையாது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றால் அவர்கள் ஏன் தாதுவை விற்க வேண்டும்? அதை உருக்கி தாமிரமாக்கி கொழுத்த லாபத்திற்கு தானே ஏற்றுமதி செய்து இருக்க வேண்டும். அப்படி நடக்காததில் இருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது பசுமை தாமிரம் என்பது கட்டுக்கதைதான்.
நன்கு தெரிந்தே மக்களின் வாழ்வை உயிரை பறிக்கின்ற ஒரு நச்சு நாசக்கார ஆலையை தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைத்து, ஒரு தலைமுறையின் வாழ்வை சிதைத்த மலைப் பாம்பாகத்தான் ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால் இருக்கிறார்.
1997-ல் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, இந்தியாவின் தாமிரத் தேவையில் 36% விழுக்காட்டைப் பூர்த்தி செய்து வந்தது. சுமார் 20,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வழங்கியது.
படிக்க:
♦ தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?
அதாவது, இந்த மலைப்பாம்பு சில இரைகளை போட்டு மக்களை விழுங்குவதற்காக வளைத்து பிடித்திருந்தது. அதில் சிலரை விழுங்கியதுடன் மக்கள் போராட்டம் வெடிப்பதை பார்த்து கண் துடைப்புக்காக 100 கோடியை அபராதமாக செலுத்தியும் உள்ளது.
அனில் அகர்வாலின் உற்ற தோழராக ‘நமது‘ பிரதமர் மோடி இருக்கிறார். மோடி இங்கிலாந்து செல்லும் போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான மொத்த செலவையும் அணில் அகர்வால் தமது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். தமிழகத்திற்குள் தூத்துக்குடிக்குள் ஆலையை நுழைய விட்டது பாசிச ஜெயா என்றால், மக்களின் எதிர்ப்பையும் தாண்டி மீண்டும் ஆலையை திற என்று துணை நிற்கிறது பாசிச மோடி அரசு.
“உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைதான் என்றால் இதை அயோத்தியில் அமைத்துக் கொண்டு சிறப்பாக தொழிலை நடத்துங்கள். அல்லது அனில் அகர்வால் இருக்கும் இங்கிலாந்தின் லண்டனில் இந்த ஆலையை அமைத்து உற்பத்தியை செய்து கொள்ளச் சொல்லுங்கள்” – என மக்கள் இவர்களின் முகத்தில் காரி உமிழ வேண்டும்,
வரலாறு மீண்டும் திரும்புகிறது!
அரசின் துணையுடன் சட்டபூர்வமாக மக்களின் உயிரோடு விளையாடும் இந்த நாசகார ஆலையை எதிர்த்து சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர். ஊரடங்கு உத்தரவையும் மீறி அணிவகுத்தனர். நூறு நாட்களை எட்டிய போராட்டத்தின் முடிவில் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு தோட்டாக்களை நெஞ்சிலும், தலையிலும், வாயிலும் தாங்கி தமது இன்னுயிரையும் ஈந்து இந்த ஆலையை முடக்கியுள்ளனர். அதாவது மலைப் பாம்பின் இடுப்பை 2018-ல் உடைத்துள்ளனர். ஆனாலும் பாம்பு சாகவில்லை. மீண்டும் இரையை விழுங்குவதற்கு தனது வாயை அகல திறக்கிறது.
பசுமை தாமிர உற்பத்தி என்று கதையளந்து வரும் பாம்பை இம்முறை அடித்து விட்டு தப்ப விடக்கூடாது. வரலாற்று தவறை திருத்தி எழுதுவோம்.
ஸ்டெர்லைட் எனும் மலைப்பாம்பின் தலையை நசுக்கித்தான் தூக்கி போட வேண்டும். அதாவது ஸ்டெர்லைட் ஆலையை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எறிய வேண்டும். அப்படி செய்வதற்கு தமிழக அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை தமிழக மக்கள் ஆதரவுடன் தூத்துக்குடி மக்கள் முன்னெடுக்கவும் வேண்டும்.
அரசியல் கட்சிகள் தமது தேர்தல் வாக்குறுதியில் மூடுவதாக அறிவிக்க வேண்டும். தாமிர ஆலையை எதிர்ப்பவர்களை மட்டுமே ஊருக்குள் வாக்கு கேட்டு கால் வைக்க அனுமதிக்க வேண்டும். வேதாந்தாவின் எலும்பை கவ்வியபடி தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, நாட்டு முன்னேற்றம் என்று கதை அளந்து வருபவர்களின் வாலை நறுக்க வேண்டும்.
இளமாறன்







