இந்தியாவை 5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றப் போவதாகவும், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகில் முதல் மூன்று பொருளாதரங்களில் ஒன்றாக மாற்றப் போவதாகவும் இந்தியா ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அடிக்கடி சவால் விட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா முதல் இடத்திற்கே சென்றாலும், அதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன என்பதை பற்றி மோடி வாய் திறப்பது கிடையாது. பட்டினி குறியீட்டில் 151 வது இடத்தில் உள்ள இந்தியா என்று சொன்னால் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவர்கள் மற்றும் அரைப் பாட்டாளிகள் போன்றவர்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் தனது வாழ்வாதாரங்களை இழந்து மேலும் மேலும் நொடித்துக் கொண்டே போகிறார்கள்.
அன்றாட தேவைகளான மூன்று வேளை உணவு, சுகாதாரமான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான கல்வி வசதி, குடும்பத்திற்கு தேவையான மருத்துவ வசதி, குடியிருக்க பொருத்தமான வீடு போன்றவற்றை பெறுவதற்கே தனது அன்றாட வருவாயில் கணிசமான தொகையை செலவிட்டு வருகின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் விலைவாசி உயர்வு கடும் நெருக்கடியை உருவாக்குகிறது.
அன்றாட உணவு தேவைக்காகவே வாங்குகின்ற அரிசி, பருப்பு வகைகள், காய்கறி எண்ணெய், உணவுப் பொருட்கள் போன்றவை அனைத்தும் அன்றாடம் ஒரு விலை என்று ஏறிக்கொண்டே போகிறது இதனை ஈடு கொடுக்க முடியாமல் அல்லும், பகலும் உழைக்க வேண்டியிருக்கிறது.
எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு 12 முதல் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவல நிலைக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டு அருகில் உள்ள சாதாரண மளிகை கடை முதல் நகரங்களில் உள்ள பெரிய மளிகை கடை வரை, தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி விடுதிகள், காய்கறி, பழக்கடைகள் போன்ற அனைத்திலும் குடும்பத்துடன் வேலை செய்தால்தான் தொழில் நடக்கும் என்ற நிலைமை கொடுமையாக இருக்கின்றது.
இந்த நிலையில் சாதாரண தனியார் பள்ளி முதல் ஆண்டுக்கு சில லட்சங்களை பிடுங்குகின்ற தனியார் பள்ளிகளாக இருந்தால் கல்விக்கு என்று தனது வருவாயில் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாதமும் மருத்துவத்திற்கு என்று குடும்பத்தில் யாருக்காவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு கணிசமான தொகையை அதில் இழக்க வேண்டி உள்ளது.
கட்டுக்கடங்காத செலவினங்களால் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நல்ல காரியங்கள் அல்லது துக்க காரியங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது கூட பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக உள்ளது. இதற்கு ஆகும் செலவு தனது வருமானத்தை தாண்டிய புதிய தேவையாக உள்ளது.
போக்குவரத்து செலவினங்கள், வாகன பராமரிப்பு செலவினங்கள், வாகன பழுது, சாலைகளில் அபாயகரமான பயணம், நீண்ட டிராபிக் நெருக்கடிகள் போன்ற அனைத்தையும் அன்றாடம் எதிர்கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கே மிகப் பெரும் போராட்டமாக உள்ளது. இதுதான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் நிலைமை.
இதையும் படியுங்கள்: இந்தியப் பொருளாதாரம்: விலைவாசி உயர்வு / பணவீக்கம்:
தன்னுடைய குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோர் கொண்டு வருகின்ற வருவாய் ஈடுகட்ட முடியாமல், கிராமப்புறங்களில் குழு கடன் அட்டைகள் மூலம் கடன் பெற்றுக் கொள்வதும், நகர்ப்புறங்களில் வட்டிக் கடன் பெற்று சமாளிப்பதும், ஓரளவு உத்தரவாதமான வருமானம் உள்ளவர்கள் வங்கி கடன்களில் சிக்கிக் கொண்டு தவிப்பதும் நிலைமையாக உள்ளது.
நாட்டு மக்கள் இவ்வாறு துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்ந்திருக்கும் போது எரிச்சல் ஊட்டுகின்ற வகையில் “ஆட்டோமொபைல், மருந்துப் பொருட்கள், சுற்றுலா துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் முன்வைப்பது உண்மைதான். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இந்தியா என்று அவர் புரிந்து கொண்டிருப்பது தனது சக பாடிகளான அதானி, அம்பானி போன்றவர்களை தான்.. குஜராத்தை சேர்ந்த தேசங்கடந்த தரகு முதலாளிகளான இவர்களைப் போன்றவர்கள் தான் இந்தியா என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதால் அவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று பெருமை பீற்றி கொள்கிறார்.
இதையும் படியுங்கள்: கௌதம் அதானி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக; தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்கள்!
நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை இவ்வாறு இருக்கும் போது சமூக வலைதளங்களில் ஆர் எஸ் எஸ் பாஜக மோடிக்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்வதற்கு நாடு முழுவதும் 30 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். இவர்களின் வேலை தினமும் காலையிலிருந்து இரவு வரை மோடியை பற்றி துதிபாடி செய்திகளை பரப்புவதும், ஆர்எஸ்எஸ் மோடிக்கு எதிராக செயல்படுகின்ற எதிர்க்கட்சிகளை பற்றி பல்வேறு அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்புவது என்பதே வேலையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள், முகநூல் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) போன்ற அனைத்திலும் பொய் செய்திகள் நிரம்பி வழிகின்றன.. உண்மை இரண்டு காலில் நடந்து கொண்டிருக்கும்போது பொய் ராக்கெட் வேகத்தில் உலகை சுற்றி வருகிறது.
எனவே, நாட்டைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை. சமூக வலைதளங்களில் யூடியூப் சேனல்களில் அமர்ந்து கொண்டு லட்சக்கணக்கானவர்களை ஃபாலோயிர்கள் ஆக்கி தினமும் சில வீடியோக்களை விடுவதால் எந்த பயனும் இல்லை. வீதிகளில் இறங்கி ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச குண்டர் படையை நேருக்கு நேர் வீழ்த்துகின்ற வகையில் தயாராவது ஒன்றுதான் சமீபத்திய எதிர்காலத்தில் செய்ய வேண்டிய உடனடிப்பணியாகும். நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாட்டுப்பற்றுடன் செயல்பட முன் வாருங்கள்.
- மருது பாண்டியன்.