மார்க்சிய லெனினியத்தை கற்றுக் கொள்வது என்பதும், பருண்மையான சூழலில் அதை பருண்மையாக அமல்படுத்துவது என்பதும் தலைமை தாங்கும் கலைகளில் முக்கியமானது. அதுமட்டுமின்றி புரட்சிகர அமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் ஆசான்களிடமிருந்து கற்றுக் கொள்வது: அதனை நமது நாட்டிற்கு பொருத்தமான வகையில் அமல்படுத்துவது என்பதை பல்வேறு காலகட்டங்களில் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றது.

ஒரு எடுத்துக்காட்டாக இந்திய சமூக அமைப்பு அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற வகையில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுகின்ற போது நிலப்பிரபுத்துவம் என்பது சாதிய உறவுகளாக பொருளுற்பத்தி அடித்தளத்தில், உற்பத்தி முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக போராடுவதும், குறிப்பாக சாதிய உறவுகளில் பார்ப்பன சாதி மேலாதிக்கம் செலுத்துவதை குறிப்பாக சுட்டிக்காட்டிப் போராட வேண்டும் என்பதை முன்வைத்து பலவிதமான போராட்டங்களை எடுத்துள்ளது.

பார்ப்பனர்கள், பார்ப்பனியம் என்ற பேச்சை எடுத்தாலே பதறுகின்ற போலி இடதுசாரிகள் மத்தியில் இந்திய சமூக கட்டமைப்பு குறித்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்வு செய்தும், அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்ற புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தற்போதைய கார்ப்பரேட் – காவி பாசிச சூழலில் எடுத்து வருகின்ற அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சில வரட்டுவாத அறிஞர்கள் தனிப்பட்ட முறையிலும், முகநூல் பக்கங்களிலும் கூச்சலிட்டுக் கொண்டே உள்ளனர். இன்னும் சிலர் கட்சிக் கட்டுப்பாடுகளை வெறுத்து, தான் தோன்றித்தனமாக செயல்படுவதையே ஜனநாயகம் எனப் பிதற்றி வருகின்றனர்.

இத்தகைய வரட்டுவாத போக்குகள் குறித்து கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே எமது உட்கட்சி பத்திரிக்கை ஒன்றில் புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர் தோழர் கபிலன் எழுதி வெளியிட்ட வரட்டுவாதத்தை எதிர்த்து என்ற கட்டுரையை வாசகர்களுக்கும், அத்தகைய அறிஞர்களுக்கும், வரட்டுவாதிகளுக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்

000.

வரட்டுவாதத்தை எதிர்த்து

இன்றைக்கு நிறைய பேர் மார்க்ஸ், லெனின், மாவோ புத்தகங்களை படிக்கிறார்கள். அது பற்றியெல்லாம் சோர்ந்து போகும் அளவு பேச விரும்புகிறார்கள். வாதம் செய்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு பிரச்சனையின் தோற்றத்தையோ, அதன் வளர்ச்சியையோ புரிந்துக் கொள்ள முடிவதில்லை. காரணம் அவர்கள் இன்றைய தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்யாததே ஆகும். எனவே அவர்கள் பல மார்க்சிய புத்தகங்களை படித்தும் நிகழ்காலத் தேவைகளுக்கு அவற்றை விளக்க முடிவதில்லை.

படிப்பது என்பது மார்க்ஸ், லெனின், மாவோ புத்தகங்களை படிப்பது மட்டுமல்ல. நமது நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக, இராணுவ விவகாரங்களையும் படிப்பதாகும். நமது நாட்டின் வரலாறு, தேசிய இனங்களின் வரலாறு, காலனிய கால நாட்டு வரலாறு, அதன் மத, சாதிய அமைப்புகள் ஆகியவற்றையும் உட்கொண்டதாகும்.

பொருளாதார விஷயங்களை படிப்பதில் மார்க்சியப் பொருளாதாரத்தோடு நம் நாட்டில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்த கிராமியப் பொருளாதாரம், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பால் கிராமியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், தேசிய தொழில் துறையின் தோற்றமும் வளர்ச்சியும், 1947 க்கு பின் இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் இங்குள்ள தேசிய இனங்களின் வரலாறு, மத அமைப்புகள், சாதி முறைகள் பற்றி படிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

படிக்க:

 ”அரசின் ஒடுக்குமுறைகளும், பாசிச பயங்கரவாதமும் ஒன்றல்ல!” பாசிச எதிர்ப்புப் போரை சீர்குலைக்கும் சக்திகளை அம்பலப்படுத்துவோம்!

 மதுர் சத்யா விவகாரம்: குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளே, வெட்கித் தலை குனியுங்கள்!

நமது தோழர்கள் மார்க்சிய, லெனினிய, மாசேதுங் சிந்தனைகள் பற்றியப் புத்தகங்களை ஓரளவு படித்திருக்கிறார்கள். ஆனால் அதே வேலையில் நம் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரப் பிரச்சனைகளை படிப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கிறார்கள். இந்த புறக்கணிப்பால் மார்க்சியத்தை பருண்மையான உள்நாட்டு தேவைகளுக்கு பொருத்துவது என்பதில்லாமல் மார்க்சியத்தை வரட்டு சூத்திரமாக உச்சரிக்கும் நிலை ஏற்படுகிறது.

மார்க்சியக் கொள்கைகளை ஆழமாக படித்து புரிந்துக் கொள்வது மிக அவசியமாகும். ஆழமாக படித்து புரிந்துக் கொள்வது அதனை நிகழ்காலத் தேவைகளுக்கு நடைமுறைப்படுத்தவே. ஆனால் லெனின் எழுதிய புத்தகத்தின் ஆறாவது தொகுப்பில் இந்த விஷயம் இருக்கிறது என்று துல்லியமாக கூறும் அளவிற்கு படித்திருக்கும் நபர்கள் உள்நாட்டு நிலைமைகளை பற்றி படிக்காமல் இருந்தால் அவர்களால் ஒரு பயனும் இல்லை. இவர்களிடம் இருக்கும் இந்த வியாதியை மற்றவரிடம் பரப்புகிறார்கள், தங்களை ஒத்த கிளிப்பிள்ளை போன்ற செயலுக்கு உதவாத வரட்டு தத்துவவாதிகளை உருவாக்குகிறார்கள். நிகழ்கால அவசியப் பிரச்சனை பற்றி படிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை அல்லது மிகப் குறைவாகவே அக்கறை செலுத்துகிறார்கள். இவர்களால் மார்க்சியத்தை பருண்மையான நிலைமைகளுக்கு பொருத்த முடியாது. இம்மாதிரித் தோழர்கள் தங்களின் சித்தாந்த அறிவாற்றலை செயலாக்க முயற்சி எடுத்துக் கொண்டால் அது புரட்சிக்கு உதவியாக இருக்கும்.

நமது நாடு குறைந்த படிப்பாளிகளைக் கொண்ட அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதால் பெருமளவில் படிப்பாளிகளை வென்றெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்களையோ, படிப்பாளி களிடையே அறிஞர் எனப் புகழ் பெற விரும்பும் நபர்களையோ அல்ல.

இந்த மாதிரியான போக்கு மார்க்சியத்தை புத்தகங்களில் படித்துவிட்டு வரட்டு சூத்திரமாக கூறி திரியும் போக்கு, இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில் தொடர்ந்து இருந்து வரும் போக்காகும். மார்க்சியத்தை புத்தகங்களில் படித்துவிட்டு தலைவர்களாகும் (மேதாவிகள்) போக்கு, திரிபுவாத கட்சி தலைவர்களின் போக்காகும். இந்த போக்கு முறியடிக்கப்பட வேண்டும். (படிப்பாளிகள் தங்கள் சிந்தனை ஆற்றலை தொழிலாளர் விவசாயிகளுடைய கருத்தை கொண்டு செல்லும் பாதையில் படிப்படியாக கவனத்தைத் திருப்ப வேண்டும்) எனவே நாம் மார்க்சியத்தை படிப்பதோடு நமது நாட்டு நிலைமைகளைப் பற்றி படிப்பதிலும் கவனம் செலுத்தி வரட்டு சூத்திர வாதத்தை முறியடிக்க வேண்டும்.

(தொடரும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here