து ஏதோ பைபிள் வாசகம் அல்ல! தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழில்நுட்ப பணியாளர்கள் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைதான் இது!

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இந்து பத்திரிகையில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களில் முன்னணி நிறுவனமான கூகுள் பற்றி மிகவும் வியந்து இவ்வாறு எழுதியது.

“தகவல் தேடுபொறியில் கூகுள் நிறுவனம் முன்னணியில் இருப்பதன் விளைவாக கூகுளே கடவுளாக மாறும் வாய்ப்பு உள்ளதாக” ஆருடம் தெரிவித்தது.

ஆனால், என்ன ஒரு சோதனை! ‘ஏகாதிபத்தியத்தின் விட்டு விட்டு தாவக்கூடிய வளர்ச்சி காரணமாக எதையும் கணிக்க இயலாமல் போகிறது’என்று புலம்பித் தீர்க்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள்.

கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு பணிநீக்கம் பற்றி மழுப்பலாக, “எதிர்காலத்தை கணிப்பது மிகவும் கடினமானது, எனவே துரதிர்ஷ்டவசமாக என்னால் நேர்மையாக இங்கு அமர்ந்து நம்பிக்கையூட்டக்கூடிய எதிர்காலத்தை பற்றிய உறுதி மொழிகளை சொல்ல முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

முதலாளித்துவம் தோல்வியே அடையாது, கம்யூனிஸ்டுகள் தான் தொழிற்சங்கத்தை உருவாக்கி ஆலைகளை மூடிக் கொண்டிருக்கிறார்கள், கம்யூனிச பொருளாதாரம் தீர்வு கொடுக்காது என்றெல்லாம் மார்தட்டி வந்த ஏகாதிபத்திய நிதி மூலதனமும், அதன் அறிவுக்கொழுந்துகளான செயல் அதிகாரிகளும் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு முதல், வீழ்ச்சி அடைய தொடங்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களின்  மூலமாக தனது சுரண்டல் கொடுங்கரத்தை நீட்டி பல்வேறு வழிமுறைகளில்  கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு அவதாரங்களை எடுத்து பார்த்தாலும் தனது தொழில்நுட்ப பணியாட்களுக்கு வேலை தர துப்பில்லாமல் போய்விட்டது.

2008 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மீள முடியாத, மீண்டு எழவே முடியாத பொருளாதார நெருக்கடியில் வீழ்ச்சி அடைந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் சந்தித்த நெருக்கடியை காட்டிலும் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

2008 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து 65,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டிலும் 65,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அதிலிருந்து மீண்டு விட்டதாக பசப்பி கொண்டே இருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 965 நிறுவனங்களில் இருந்து  ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக 2022 நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில்  ட்விட்டர், சேல்ஸ் போர்ஸ், நெட்பிளிக்ஸ், சிஸ்கோ, ரோகு போன்ற நிறுவனங்களில் இருந்து 73 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு இவ்வாறு கொடூரமான பணி நீக்கத்தினால் நிரம்பி வழிந்த சூழலில் 2023 ஆண்டு துவக்கம் முதலே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பணி நீக்கம் என்ற அச்சுறுத்தல் காத்துக் கொண்டுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் மெட்டா துவங்கி, சங்கிலி தொடர் ஷாப்பிங் மால்களையும் இணையதள வர்த்தகத்தையும் இன்னும் பல்வேறு தொழில்களையும் நடத்தி வரும் அமேசான், மைக்ரோசாப்ட், சேல்ஸ் போர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பல ஆயிரம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.

கொரோனா துவங்கிய காலத்தில் இருந்து 1495 நிறுவனங்களில் இருந்து இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 267 பேர் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார்கள். இதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வேலை உத்திரவாதம் கொடுக்கும் லட்சணமாகும்.

ஏகாதிபத்திய முதலாளித்துவம் தகவல் தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தியும், செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்தியும் மீமிகு உற்பத்தியில் தொழிலாளி வர்க்கத்தை ஈடுபடுத்தி வருகிறது. இதன்மூலம் உலகிற்கு தேவையான நுகர்வு பொருட்களையும், ஆடம்பர உல்லாச ஊதாரி தனத்திற்கு தேவையான பொருட்களையும், பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை விரயம் அடிக்கும் சூழ்ச்சிகளின் மூலமும் பல லட்சம் கோடிகளை லாப வேட்டையாடிக் கொண்டு வருகிறது.


இதையும் படியுங்கள்: Google நிறுவனத்தில் இந்துத்துவ வெறி!


சாதாரண தொழிற்சாலையில் பணிபுரிந்தால் சம்பளம் குறைவு என்பதால் எப்பாடு பட்டேனும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வீட்டிற்கு ஒருவரை தயார் செய்து அனுப்பி வைத்து விட்டால் குடும்பத்திற்கு சிக்கல் இல்லை. வருமானத்திற்கும் பிரச்சனை இல்லை என்று நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையிலான பணி நீக்கங்கள் மிகப்பெரும் அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிலிருந்து செயல்படும் பிக் டெக் நிறுவனங்களைப் போலவே சீனாவிலிருந்து செயல்படும் பிக் டெக் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்ய துவங்கியுள்ளது என்பதை சீனாவின் பிரபல சியோமி நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்ய துவங்கியிருப்பது காட்டுகிறது.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை நம்பி பொருளாதாரத்தை காவு கொடுக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளை முற்றாக ஒழித்து அனைவருக்கும் வேலை உத்தரவாதத்தையும், லாப நோக்கமற்ற, மனித குலத்திற்கு தேவையான பொருட்களை முன்னுரிமை கொடுத்து உற்பத்தி செய்யும் ஆலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற வகையில் உற்பத்தி முறையை மாற்றும் சோசலிச பொருளாதாரமே இன்றைக்கு உலகத்தை காப்பாற்றும் என்பதே நிதர்சனம்.

  • சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here