இயற்கை ஆர்வலரும், வேளாண் விஞ்ஞானியுமான கோ. நம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்து ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஆகிறது. கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தை மொத்தமாக சூறையாடி அதில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டி அடிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் நம்மாழ்வாரின் நினைவு போற்றத்தக்கது.
இந்த நாட்டின் மண்ணுக்கேற்ற பாரம்பரிய மரபு விதைகளையும், மண்ணுக்கேற்ற விவசாயத்தையும் நடத்துவதின் மூலம் நமது விவசாய மரபை அதாவது பல நூற்றாண்டுகளாக கட்டிக் காத்து வந்த உணவு உற்பத்தி பாரம்பரியத்தின் சங்கிலி அறுந்து போவதில் இருந்து இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று போராடிய அரிய மனிதர்களுள் நம்மாழ்வாரும் ஒருவர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு என்ற ஊரில் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி பிறந்த நம்மாழ்வார், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் ஆ நாளில் மறைவை எய்தினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டப்படிப்பை முடித்த நம்மாழ்வார் ஜப்பான் இயற்கை விஞ்ஞானி மாசானு புக்கோபு மூலம் இயற்கை விவசாயத்தை பாதுகாக்கின்ற சிந்தனைக்கு வந்தடைந்தார்.
பசுமை புரட்சி அமல்படுத்தப்பட்ட காலத்தில் பாரம்பரிய உணவு முறைகளை மாற்றி நவீன எந்திரங்களான உழு படை கருவிகள் மற்றும் டிராக்டர்கள் கொண்டுவரப்பட்ட போது “மாடு சாணம் போடும், டிராக்டர் சாணம் போடுமா” என்று ஜே சி குமரப்பா எழுப்பிய கேள்வியை ஊர்தோறும் எழுப்பிய சிந்தனையாளர்.
இயற்கை உரங்களையும், கால்நடைகளின் கழிவுகளையும் உரமாக பயன்படுத்தி பல நூற்றாண்டுகளாக விவசாயம் செய்து வந்த இடத்தில் ஹைபிரிட் ரகங்களை, விதைகளை இறக்குவதற்கு பொருத்தமாக, மண்ணின் தன்மையை மாற்றுவதற்கு செயற்கை உரங்களை கொட்டுவதன் மூலம் மண்ணின் தன்மையை மாற்றினார்கள் வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இந்த செயற்கை உரங்களை பயன்படுத்தினால் அது சில ஆண்டுகளுக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும் என்பது சிறிதளவு உண்மைதான். ஆனால் அதன் பிறகு படிப்படியாக மண் மலடாகி ஏற்கனவே நடந்த விவசாயத்தையும் செய்ய முடியாமல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலையை தான் பசுமைப் புரட்சி திட்டம் நாடு முழுவதும் உருவாக்கியது.
அதற்கு அடுத்த பேரிடியாக 1990-களில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறு காலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தபட துவங்கியது முதல் இந்தியாவின் பாரம்பரியமான விவசாயம் ஒரு கலை என்ற நிலையிலிருந்து மாறி விவசாயம் ஒரு வியாபாரமாக மாறியது. சொந்த நாட்டு மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை செய்து கொடுப்பதன் மூலம் ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று முழங்கிய இந்திய விவசாயத்தின் பாரம்பரியத்தை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டது.
இதனால் உணவுப் பயிர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொடுத்துவிட்டு உணவு பண்டத்திற்கு கையேந்துகின்ற கையறு நிலைக்கு இந்திய விவசாயத்தை தள்ளியது இந்திய ஆளும் வர்க்க கும்பல்.
இந்த காலகட்டத்தில் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் நலனுக்கு ஏற்ப காவு கொடுப்பதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார் நம்மாழ்வார் குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் மற்றும் உணவு பயிர்கள் ஆகியவை ஏற்படுத்த போகின்ற விளைவுகளை சுட்டிக்காட்டி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து மக்களை அணி திரட்டினார்.
இதையும் படியுங்கள்: 100 நாள் வேலைத்திட்டம் குறித்து நம்மாழ்வாரின் பேச்சு! | சீமான் தம்பிகள் கவனத்திற்கு|
இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை பிரச்சாரம் செய்யும் போது “நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி காட்டுக்கு!” என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வந்தார். இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்கள் புதுச்சேரியில் உள்ள இயற்கை ஆர்வலர் பெர்னார்டு மூலம் இயற்கை விவசாயத்தில் நேரடியாக ஈடுபட துவங்கினார். மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் ராதே லால் ஹெர்பால் ரிச்சார்யா மூலம் பாதுகாக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவரது இந்த பணிக்காக தன்னுடைய வேலை வாய்ப்பை இழந்தவர் என்ற காரணத்தினால் அவர் மீது மிகவும் மதிப்பு கொண்டு பாராட்டி அவரை பல இடங்களில் போற்றிப் புகழ்ந்து வந்தார் நம்மாழ்வார்.
ஆனால் 2003 ஆம் ஆண்டு 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை சின்ஜெண்டா என்ற அமெரிக்க வேளாண் வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கிய போது கதறி அழுதார். அதற்கு எதிராக விவசாயிகளை தூண்டி போராட வைத்தார்.
தான் படித்த கல்வியை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு அரசு வேலையை வாங்கி அதன் மூலமாக தன்னை வளப்படுத்திக் கொள்வது தனது குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்கு முயற்சி செய்வது என்ற குறுகிய எண்ணத்துடன் வாழ்கின்ற பல்வேறு இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கல்வி நாட்டு மக்களின் நலன் இருக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கிராமங்களில் தங்கி பாரம்பரிய விவசாயத்தைப் பற்றி இயற்கை விவசாயத்தைப் பற்றி பல வகுப்புகளை நடத்தி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை திருப்பினார்.
ஒற்றை நெல் சாகுபடி என்பது 1960களில் மடகாஸ்கர் முறை என்று இந்தியாவில் ஆளும் வர்க்கத்தினரால் கொண்டுவரப்பட்டது. அதனை கேள்விக்குள்ளாக்கி தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒற்றை நெல் சாகுபடி இருந்ததை பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிய நம்மாழ்வார், அதன் பிறகு தமிழக அரசுடன் இணைந்து செம்மை நெல் சாகுபடி என்ற விவசாய உற்பத்தியை மண்ணின் தன்மைக்கு ஏற்ப முன் வைத்தார்.
இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 27 மூட்டைகள் நெல் உற்பத்தி செய்வதற்கும் அன்னிய விதைகள், அந்நிய உரங்கள் ஏதுமின்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி இந்த விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை நேரடியாக விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை இயற்கை வேளாண்மைக்கு திருப்பியவர் தான் நம்மாழ்வார்.
தஞ்சை நெற்களஞ்சியத்தை காவிரி பாயும் டெல்டா பகுதியை குறிவைத்து கொண்டுவரப்பட்ட மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் போன்றவற்றை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடினார் நம்மாழ்வார்.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மூலதனம் இன்று உலகை தனது பிடிக்கும் கொண்டு வருவதற்கு வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது இதில் முக்கியமாக விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனும் தனது உணவு தேவைக்காக கார்ப்பரேட்டுகளின் டப்பா புட்டி உணவிற்கு கையேந்தி நிற்க வேண்டும் என்ற லாப வெறியுடன் அலைகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொடூரமான சிந்தனைகளுக்கு எதிராக நமக்கு பல நம்மாழ்வார்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவில் விவசாயிகளின் விவசாய புரட்சியை நடத்துவதற்கு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடி மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து இறுதிவரை அதில் உறுதியாக நின்று போராடிய நம்மாழ்வார்களை உயர்த்தி பிடிப்போம்.
செயற்கை உரங்களையும் அன்னிய தானியங்களையும் உண்டு செரிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ள நமது உணவு பழக்க வழக்கங்களை பாரம்பரிய முறைக்கு மாற்றுவதற்கு நம்மாழ்வாரின் வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்போம்.
- பா. மதிவதனி