ல்கர் பரிஷத் நிகழ்வுக்கும், பீமா கொரேகானில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என இந்த வன்முறை வழக்குகளை விசாரித்து வந்த – சமீபத்தில் ஓய்வு பெற்ற – மூத்த போலீஸ் அதிகாரி கணேஷ் மோரே விசாரணை ஆணையத்தின் முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலமானது, பொய் வழக்கைப் புனைந்து 16 சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கும் புனே காவல் துறையினரையும், தேசியப் புலனாய்வு முகமையின் ( NIA) விசாரணையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும் மோரே, தனது அதிகார எல்லைக்குள் விசாரிக்கப்பட்ட ஒன்பது வன்முறை சம்பவங்களில் எல்கர் பரிஷத் நிகழ்வின் பங்கு எதிலும் இல்லை, அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார். ஓய்வுக்குப் பிறகாவது உண்மையை ஒப்புக்கொண்டாரே!

இப்படி மாநில போலீசின் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. இது இரு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒன்று, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வதைபடுபவர்களை இது விடுவிக்க உதவும். இரண்டாவது, பீமா கொரேகானில் நடந்த வன்முறைக்கு, உண்மையில் காரணமாக இருந்தவர்கள் யார் என்ற கேள்வியின் பக்கம் அனைவரது கவனத்தையும் திருப்பும்.

எல்கர் பரிஷத் நிகழ்வு

2017 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 அன்று புனேவிலுள்ள ஷானிவார் வாடாவில் எல்கர் பரிஷத் ( உரத்த பிரகடனத்துக்கான ஒன்று கூடல்) எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை புனேவிலுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளான கோல்சே பட்டீல் மற்றும் பிபி சாவந்த் ஆகியோரின் முன்னெடுப்பில், 200 – க்கும் மேற்பட்ட சமூக அக்கறையுள்ள அமைப்புகள் ஒருங்கிணைத்தன. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், மோடி அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகவும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக இருந்தது.

பீமா கொரேகான் வன்முறை

1818 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி மராட்டியத்தை ஆண்ட பேஷ்வாக்களை ( பார்ப்பனர்கள்), மஹர்களின் ( தலித்துகள்) போர்த் திறனால் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி கொண்டது. இதன் நினைவாக பீமா கொரேகானில் நினைவுத்தூண் ஒன்று அமைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் தலித்துகள் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். அந்த வகையில் 2018 ஜனவரி 1ஆம் தேதி 200-ஆம் ஆண்டு நினைவு தினத்தைக் கொண்டாட மகாராஷ்டிராத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தலித்துகள் அங்கு ஒன்று கூடினர்.

அங்கு கூடியவர்கள் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகையில், இந்து மதவெறி தலைவர்களான மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோரின் வழிகாட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை உண்மை கண்டறியும் குழுவின் ஐஜி விஸ்வாஸ் நங்கரே வெளிப் படுத்தினார். காவிக் கொடியுடன் “ஜெய் சிவாஜி, ஜெய் பவானி” கோஷத்துடன் கலவரத்தில் இறங்கிய இந்து மதவெறிக் கும்பல், கிராமத்தில் இருந்த தலித் மக்களின் வீடுகளுக்கும், கடைகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

வன்முறைக்குக் காரணம் இந்து மதவெறியர்கள்தான்.

பார்ப்பனர்களைத் தோற்கடித்த தலித்துகளின் வெற்றிக்கான நினைவு நாளை கொண்டாடுவதை பொறுக்க முடியாத இந்து மதவெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்தனர். சாதிய தாக்குதல்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களால் பதிவு செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட FIR – கள் அனைத்தும் எக்போடேவின் “சமஸ்தா இந்து அகாடி” மற்றும் பிடேவின் “ஷிவ் பிரதிஷ்டான் ஹிந்துஸ்தான்” ஆகிய இந்து மத வெறி அமைப்புகளை குற்றம் சாட்டினவே தவிர, இந்த வழக்குகள் எதிலும் எல்கர் பரிசத் நிகழ்வு வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்படவில்லை.

வழக்கின் சாட்சி ஒருவர் சார்பில் வாதாடும் வக்கீல் ராகுல் மகரே, “வன்முறையில் இந்துமத தலைவர்களான எக்போட் மற்றும் பிடே ஆகியோரின் நேரடிப் பங்கை தெளிவாக காட்டும் ஆதாரங்களை நாங்கள் சமர்பித்துள்ளோம். ஆதாரங்கள் அனைத்தும் அரசால் புறந்தள்ளப் பட்டன” என்கிறார். அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் தரப்பால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட FIR – களில், பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் செயல்படும் இந்துத்துவா அமைப்புகளில் அவர்களின் தீவிர செயல்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

இந்த எப்ஐஆர் – களைத் தொடர்ந்து தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தூண்டியதில் நேரடியான பங்களித்ததாக பார்ப்பனத் தீவிரவாத தலைவர்கள் எக்போட் மற்றும் பிடே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு தான் எக்போட் கைது செய்யப்பட்டு சில நாட்களில் வெளியே வந்துவிட்டார். ஆனால் பிடே மீது கை வைக்கப்படவே இல்லை.

தொடர்ந்து இவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள், அரசையும் நீதித்துறையையும் நாடிய போதிலும் காவல்துறையானது எல்கர் பரிஷத் நிகழ்வின் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதில்தான் முனைப்பு காட்டியது.

பீமா கொரேகானில் அம்பேத்கரியவாதிகள் கூடியிருந்த போது, பிடேவின் ஆட்கள் காவிக் கொடிகளை ஏந்தியபடி இந்துக்களின் நம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துபவர்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்போம் என முழக்கமிட்டனர். இது ஆதிக்க சாதியினரான மராட்டியர்களை தலித்துகளுக்கு எதிராக தூண்டும் வகையில் இருந்தது என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போலிசு புனைந்த பொய்வழக்கு

உண்மை இவ்வாறு இருக்க, இந்த வன்முறைக்கு எல்கர் பரிஷத்தில் கூட்டம் நடத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதுதான் காரணம் என போலீசு புதுக்கதையை பிறகு எழுதியது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளது என்றும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பொய்யை உண்மையாக்கத்தான் கிரிமினல் தனமாக யோசித்து, ரோனா வில்சன், ஸ்டேன் சாமி போன்றோரது கணினிகளில் ஹேக்கர் மூலமாக திருட்டுத் தனமாக ஆவணங்களை உட்பகுத்தி ,அதையே ஆதாரமாகக் காட்டி அனைவரையும் கைது செய்தது.

வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஆனந்த் தெல்தும்டே ,சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் ஆகியோர் மட்டும் பிணையில் வந்துள்ளனர். அரசின் அலட்சியத்தால், திமிரால் போதிய மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் ஸ்டேன் சுவாமி கடந்த ஆண்டு சிறையிலேயே மரணித்தார்.

விசாரணை ஆணையம்

ஓய்வு பெற்ற நீதிபதி J.N. பட்டேல் தலைமையிலான இருநபர் விசாரணை ஆணையம், இந்த வன்முறை குறித்து 2018 – லிருந்து விசாரித்து வருகிறது. இதுவரைப் பலமுறை கால நீட்டிப்பு கோரியுள்ளது. பாதிக்கப் பட்டவர்களையும், காவல்துறை மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட அரசின் இயந்திரங்களையும் இந்த ஆணையம் விசாரித்து வருகிறது. அவர்களது வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆணையத்தில்தான் மூத்த போலிசு அதிகாரி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சிறைப்பட்டவர்களுக்காக வாதாடும் மூத்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், “காவல் துறை அதிகாரியின் இந்த வாக்குமூலம் மிக முக்கியமானது, கமிஷன் முன் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாதுதான். எனினும் இது எங்களுக்கு வலு சேர்க்கும்” என்கிறார். மற்றொரு வழக்கறிஞர் நிஹல்சிங் “இந்த வாக்குமூலத்தை ஆணையம் உடனடியாக மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த மூத்த போலீஸ் அதிகாரியின் வாக்குமூலமானது எல்கர் பரிசத் வழக்கின் வேரையே அசைத்து விடும். இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் சிறையில் தங்களது வாழ்வை அவர்கள் இழக்க நேரிட்டது. எனவே இத்தகைய சாட்சியங்கள் உயர்நீதிமன்றத்தால் உடனே கவனிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

இதையும் படியுங்கள்: 2017-பீமா கோரேகான் வன்முறையும், எல்கர் பரிஷத் வழக்கும்! நடந்தது என்ன?

இந்தப் பொய் வழக்குகளில் ஏற்கனவே காவல்துறை காட்டிய ஆதாரங்கள் அனைத்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினியில் ஹேக்கர் மூலமாக திருட்டுத்தனமாக புகுத்தப்பட்டது என இரு முறை அமெரிக்காவைச் சேர்ந்த அர்சனால் கன்சல்டிங் நிறுவனம் மூலம் அம்பலமாகியுள்ளது. இப்போது மூத்த போலீஸ் அதிகாரியின் வாக்கு மூலமும் வந்துள்ளது. அரசின் சதித்தனங்கள் அனைத்தும் அம்பலமானாலும், சிறைப் பட்டவர்கள் வெளியில் வருவது எப்போது என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்து மதவெறிக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதும், அரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப் படுத்துபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. தனது கார்ப்பரேட் – காவி பாசிச அரசுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் பிணை கூட கிடைக்காத வகையில் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவோம், ஒடுக்குவோம் என்பதைத்தான் மோடி அரசு திமிராகச் செய்து வருகிறது.

இதுபோன்ற பொய் வழக்குகளில் புனையப்பட்ட கதைகள் ஒவ்வொன்றாக அம்பலமானாலும், நீதித்துறையின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் நடப்பதால் நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை. நீதி கிடைக்க வேண்டுமானால் புரட்சிகர, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகள், மக்கள் மத்தியில் இதுபோன்ற செய்திகளை பரவலாகக் கொண்டு சென்று போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்: the wire

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here