சமீபத்தில் உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு  அரசு முறை பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் அதிபரை சந்தித்து பேசிய பிறகு, உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இணைந்து கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், “உக்ரைன் – ரஷ்ய போர், ஏதோ ஒரு நாடு கச்சா எண்ணெய், கனிமங்கள், உலோகங்கள் அல்லது உரங்கள் வாங்குவதை நிறுத்தினால் மட்டும் தீர்க்கப்பட்டு விடாது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான வழிகள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சவால்களைப் புரிந்துக் கொள்வது அவசியம். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்  வாங்குவதால் போர் நீடிக்கவில்லை. போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்றால், அதனை செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என பேட்டியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், “இந்தியா தன் சொந்த எரிசக்தி தேவைக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது; உக்ரைன் போருக்கு நிதியளிக்க ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் எண்ணெய் வாங்கவில்லை” என தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதர் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது பற்றி அடுத்தடுத்து பேசியதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் நடந்த இந்திய- ரஷ்ய வர்த்தக உறவுகள் புதுப்பிக்கப்பட்டதே ஆகும். அதிலும், இந்தியா-ரஷ்யாவிடம் வர்த்தக உறவுகள் பற்றி பேசி முடித்துள்ளதால் உக்ரைன் அதிபரை சமாதானம் செய்யவே வெளியுறவு துறை அமைச்சர் உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றால் மிகையல்ல.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்கமாக பேசியுள்ளார் என்றவுடன், இந்தியா அமெரிக்காவை எதிர்த்து செயல்படுகிறது என நினைப்பது முட்டாள்தனம். தனது புரவலரான திருவாளர் அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்காக ரஷ்யாவுடனும் வர்த்தக ரீதியாக மட்டும் இணைந்துள்ளது.

இந்திய – ரஷ்ய வர்த்தக உறவுகளும்! அம்பானி- அதானி உள்ளிட்ட முதலாளிகள் நலன்களும்!

ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய போது, குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா உத்தரவிட்ட பிறகும் தொடர்ந்து எண்ணெய் வாங்கியதால், அமெரிக்கா இந்தியாவிற்கு 50% வரை வரி விதித்தது. இதனால் 50% வரியை திரும்ப பெற அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து இந்திய சந்தையை அமெரிக்காவின் குப்பை தொட்டியாக மாற்றியதுடன் ரஷ்யாவிலி்ருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டது பாசிச மோடி அரசு.

இந்நிலையில், அமெரிக்கா மேலாதிக்க வெறியோடு ஈரான் மீதான இராணுவ தாக்குதல் நடத்தியதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த எரிசக்தி நெருக்கடியால் தங்களது கொழுத்த லாபம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரிலையன்ஸ், நயாரா உள்ளிட்ட கார்ப்பரேட் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்  மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க பாசிச மோடி அரசுக்கு தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக ரஷ்ய- இந்திய வர்த்தகத்தில் எரிசக்தி இறக்குமதி மீண்டும் முக்கிய அம்சமாகத் தொடர்கிறது.

இதன் மூலம் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு, ஜூன் மாதத்தில் மட்டும் 48%- மாக உயர்ந்துள்ளது. இது அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என்கின்றனர் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள் கொழுத்த இலாபம் அடைய மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, இந்தியா-ரஷ்யா வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் (IRIGC-TEC) 27-வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவில் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் தான் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில்கொண்டு, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக வாய்ப்புகள் குறித்த தங்களது பார்வையைத் தொடர்ந்து புதுப்பித்து, புதிய சாத்தியக் கூறுகளை ஆராய்வது; எரிசக்தி இறக்குமதியை தொடர்வது: வர்த்தக பற்றாக்குறை சரிசெய்வது: 2030-ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 100 பில்லியன் டாலராக (9.5 லட்சம் கோடி) உயர்த்துவது என முடிவு செய்துள்ளனர்.

படிக்க:

♦ ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி: லாபத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசு!

♦ உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்: உலகம் முழுவதும் நடக்கும் போர் எதிர்ப்பு போராட்டங்களின் வரைபடம்

அதாவது, 140 கோடி மக்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக எண்ணெய் வாங்குகிறோம்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் போர் நிறுத்தம் ஏற்படாது போன்ற வியாக்கியானமும், வக்காலத்தும் செய்து, மீண்டும் ரஷ்ய- இந்திய வர்த்தக உறவுகளை தீவிரப்படுத்தியிருப்பது அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் கொழுத்த லாபம் புரியத்தானே அன்றி மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல்- டீசல் – கேஸ் வழங்குவதற்கு இல்லை.

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பும்!  மக்களுக்கான ஆபத்தும்!

ரஷ்ய- வர்த்தகம் 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 1.05 லட்சம் கோடியாக (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது. ஆனால் 2025-26 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5.6 லட்சம் கோடியாக (59.86 பில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது. வர்த்தகம் உயர்ந்துள்ளது போல் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 62,000 கோடியாக (6.6 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது. 2025 ஆம் ஆண்டில் 4.8 லட்சம் கோடியாக (50 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது. இவ்வளவு வர்த்தக பற்றாக்குறை உயர காரணம் குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது‌ என அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததே ஆகும்.

இதனால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளது. ஆனால் மோடி மக்களை சிக்கனமாக இருக்க சொல்கிறார். வெளியுறவுத் தறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதனிடம் வர்த்தக பற்றாக்குறை குறைக்க இந்திய பொருட்களை இறக்குமதி செய்யுமாறு கெஞ்சுகிறார். மொத்தத்தில் ரஷ்ய இந்திய வர்த்தக உறவுகளால் மக்களுக்கு பெரிய அளவில் பயன்கள் இல்லை. ஆனால் அம்பானி அதானி உள்ளிட்ட தேசம் கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளே கொழுத்த லாபம் அடையப்போகின்றனர்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மேல்நிலை வல்லரசான அமெரிக்காவிற்கு கோபத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.  இதனால் மீண்டும் வரியை‌ உயர்த்துவார் ட்ரம்ப். இதன் விளைவாக பாதிக்கப்பட போவது‌ இந்தியாவின் பொருளாதாரமும்  சிறு- குறு நிறுவனங்களுமே. அதாவது எந்த ஒரு நாட்டின் இறையாண்மையையும் மதிக்காமல் தான் ஒரு நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தால் அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எந்த பொருளையும் இறக்குமதி செய்யக் கூடாது என மேலாதிக்க வெறியோடு அலைகிறது மேல்நிலை வல்லரசான அமெரிக்கா.

வரிகளை உயர்த்தும் வர்த்தக போரின் மூலமாக சரிந்து கிடக்கும் இந்திய நாணய மதிப்பை மேலும் மோசமானதாக மாற்றுவது மற்றும் பங்குச்சந்தைகளை உடனடியாகச் சரியச் செய்வதும்,  அதன் பிறகு வரி விலக்கு என்ற அறிவிப்பு மூலம் சந்தை உயர்த்துவது என மொத்த இந்திய சந்தையை அமெரிக்கா ஆட்டிப்படைக்க போகும் அபாயமும் உருவாகியுள்ளது. இது நேரடியாக மக்களையே பாதிக்கும்.

பாசிச மோடி அரசை பொருத்தவரை தனது கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்கு பொருத்தமாக அமெரிக்க மேல்நிலை வல்லரசுடன் குறிப்பிட்ட சில அம்சங்களில் ஒத்துப் போவதும், வேறு சில அம்சங்களில் சீன, ரஷ்ய கூட்டணியுடன் ஒத்துப் போவதும் என்ற இரட்டை நிலைப்பாடு எடுத்து இதையே ராஜதந்திர நடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து மக்களையும் ஏமாற்றி வருகிறது. உண்மையில் பாசிச மோடி அரசு தீவிரமாக கடைபிடிக்கும் மறுகாலனியாக்கக் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையிலேயே அமெரிக்கா, இரஷ்யா, சீனா என அனைத்து நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது.

படிக்க:

♦ அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

♦ ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!

இராணுவ மேல்நிலை வல்லரசான ரஷ்யாவுடன் வர்த்தகம் அல்லது ஒற்றை துருவ மேல்நிலை வல்லரசான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என எது செய்தாலும்  மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. ஏனெனில் மோடி அரசு கடைபிடிக்கும் மறுகாலனியாக்க பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது தேசங் கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் வளர்ச்சியாகவும், ஏகாதிபத்திய அடிமைத்தனமுமாக மட்டும் இருக்குமே தவிர உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உண்மையான வளர்ச்சியாக இருக்காது.

இதற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் பொருளாதார கொள்கையும், அயலுறவு கொள்கையும் ஜனநாயகக் கூட்டரசில் மட்டுமே கடைபிடிக்கப்படும். ஜனநாயகக் கூட்டரசை நோக்கிய மாற்றமே தற்போதைய தேவை!.

  • விஜயன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here