நீட் தேர்வில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பெண் மூலமாக சுமார் 1600 பேர் பலன் அடைந்துள்ளதாகவும், அதனால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  குற்றம் சுமத்தப்பட்டு நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் முன்னுரிமை பெற்றுள்ளது.

ஏற்கனவே பள்ளியில் தேர்வு நடத்தி மதிப்பெண் பெற்ற மாணவர்களை மீண்டும் ஒரு முறை தகுதி தேர்வு என்ற முறையில் தேர்வு வைத்து அவர்களில் சிலரை மட்டும் வடிகட்டி தேர்வு செய்கின்ற முறை அயோக்கியத்தனமானது என்பதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்து போராடி வருகிறது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பாசிச பாஜகவின் அமைச்சரான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தேசிய தேர்வு முகமை மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தேசிய தேர்வு முகமை நம்பத் தகுந்த அமைப்பாகும். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். இதனால் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழிமுறை உருவாக்கப்படும்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஈவிஎம் எந்திரத்தின் மூலம் முறைகேடு செய்துள்ளார்கள் என்று குற்றம் சுமத்தினால், ”இல்லை இல்லை தேர்தல் அனைத்தும் சுதந்திரமாகவும், எந்த விதமான சிக்கலின்றியும், நேர்மையாகவும் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை குறை சொல்லாதீர்கள்” என்று வாயடைக்கிறார்கள்.

”பங்கு சந்தையில் பல்வேறு ஷெல் நிறுவனங்களின் மூலம் இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகை மோசடி செய்யப்படுகிறது. செயற்கையாக பங்குகளின் விலை ஏற்றப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. விலை ஏறி மதிப்பு உயர்ந்த பங்குகளின் மதிப்பு திடீரென்று வீழ்த்தப்படுகிறது. இந்த பங்கு சந்தை மோசடி ஒரு சில தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு ஆதாயத்தை கொடுக்கிறது” என்று விமர்சித்தால் பங்கு சந்தையை குறை கூறாதீர்கள். ஏனென்றால் செபி உள்ளிட்ட அமைப்பு நேர்மையாக நடந்து கொள்கிறது என்று வாயடைக்கின்றார் நிதியமைச்சர்.

அதிகார வர்க்கம் நேர்மையாக செயல்படுகிறது என்று நிரூபிப்பதற்கு பார்ப்பன பாசிச கும்பல் பிரம்மபிரயத்தனங்களை மேற்கொள்கிறது என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகின்ற போதிலும் மீண்டும் மீண்டும் அவர்களின் மீது நம்பிக்கை வைக்க சொல்கிறார்கள்.

ஒரு எடுத்துக் காட்டாக இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெற்றது. ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட்தேர்வைப் பொருத்தவரை ஒருகேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகடிவ் மார்க் முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.

அவ்வாறு கணக்கிடும்போது அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர் சரியாக விடையளிக்கும் போது 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரே ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அந்த வகையில் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு மோசடியை அம்பலப்படுத்தியது.

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மாட்டிக் கொண்ட தேசிய தேர்வு முகமை “நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் வரும் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு முடிவுகள் வரும் 30 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்” என்று உச்சநீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளது. இதன் மூலம் நீட் மோசடியை மறைக்க முயல்கிறது.

எப்படி இவ்வாறு மோசடிகள் நடக்கும் என்ற கேள்விக்கான விடையை பீகாரில் நடந்த தேர்வின் போது 35 மாணவர்களுக்கு தேர்வு நேரத்திற்கு முன்னதாகவே போட்டி தேர்வின் வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது என்று பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்ப்பலமானது இதைதான் மறுத்து வினாத்தாள் லீக் அவுட் ஆகவில்லை. நம்புங்கள் பார்ப்ப்ன சாம்ராஜ்ஜியம் அருகில் உள்ளது என்கிறார் த்ர்மேந்திர பிரதான்.

இது மட்டுமல்ல போட்டித் தேர்வுகளில் போது குறிப்பிட்ட மையத்தில் எழுதுகின்ற மாணவர்கள் வெற்றி பெறுவதும், அவர்கள் அனைவரும் ஒரு சில பயிற்சி மையங்களில் படித்து வருவதும் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

நீட் போன்ற போட்டி தேர்வுகளின் மூலம் கொள்ளையடிப்பது யார் என்றால் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடந்து வரும் கோச்சிங் சென்டர்கள் தான். நீட் தேர்வு மட்டுமல்ல போலீசு தேர்வு முதல் குரூப் தேர்வு வரை அனைத்திலும் இது போன்ற மையங்கள் வினாத்தாள் தயாரிக்கும் குழுவுடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொள்வதும், அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி முன்னதாகவே வினாத்தாள்களை பெற்று தனது மாணவர்களுக்கு வழங்கி பயிற்றுவிப்பதும் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

படிக்க:

நீட் தேர்வில் தில்லுமுல்லு! மாணவர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது!
 நீட் போன்ற போட்டி தேர்வுகள், பயிற்சி மையங்கள், தற்கொலைகள்!

இதுபோன்ற மோசடிகள் ஒருபுறமிருக்க இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலவுகின்ற சாதி, தீண்டாமை கொடுமை காரணமாக  ஒரு குறிப்பிட்ட சாதியினர், அதாவது பார்ப்பன மற்றும் மேல் சாதியினர் மட்டும் தொடர்ச்சியாக போட்டி தேர்வுகள், தகுதி தேர்வுகள் போன்றவற்றில் வெற்றி பெறுவது நிலைமையாக உள்ளது.

பிறப்பு மட்டுமல்ல, அவர்கள் வளர்கின்ற சூழல், அவர்களின் பெற்றோர் செய்து வரும் வேலை மற்றும் அவர்களின் வசதியான சூழல் ஆகிய அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களின் கல்வி உரிமையை தீர்மானிக்கின்றது. இத்தகைய சூழல் இயல்பாகவே பார்ப்பன மற்றும் மேல் சாதிகளுக்கு வாய்க்கப்பட்டுள்ளது என்பதுதான் சமூகத்தில் உள்ள யதார்த்த நிலைமையாகும்.

இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு மாணவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக புரட்சிகர அமைப்புகளால்  எழுப்பப்பட்டு வந்தாலும் தற்போது நிலவுகின்ற கட்டமைப்பிற்குள் இதற்கான தீர்வை தேட முடியாது.

பார்ப்பன மற்றும் மேல் சாதி கும்பலுக்கு இணையாக இயல்பாக போட்டியிடுகின்ற அளவிற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களின் வாய்ப்புகள் கிடைக்கின்ற வரையிலும் இட ஒதுக்கீடு போன்றவை கட்டாயம் வழங்கப்பட்டாக வேண்டும். அதுபோல மாணவர்களிலேயே குறிப்பிட்ட சிலரை வடிகட்டி தேர்வு செய்கின்ற போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.

தற்போது நடந்துள்ள மோசடிகளின் மூலம் நீட் போன்ற தேர்வுகள் அம்பலமாகியுள்ள சூழலில், அதற்கு எதிராக தொடர்ந்து போராடி நீட் தேர்வை ரத்து செய்! நீட் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முடிவு கட்டு! என்ற முழக்கம் நாடெங்கிலும் எழுப்பப்பட வேண்டும்.

முகம்மது அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here