‘இந்தியா கூட்டணி’யின் சிறப்பு ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 30-ல் புது டெல்லியில் நடந்து முடிந்துள்ளது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்!

தன்னிச்சையாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கம் செய்தல்!

வாக்குத் திருட்டை இல்லாதொழித்தல்!

EVM வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துதல்!

…உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றுக்காக காங்கிரஸ் தலைமையில் பல்வேறு கட்சியினர் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, சில போராட்ட அறிவிப்புகளை இக்கூட்டத்தில் மேற்கொண்டுள்ளது.

இக்கோரிக்கைகள் உட்பட இன்னும் விரிவடைந்த கோரிக்கைகளையும், தேர்தல் தில்லுமுல்லு மோசடிகள் குறித்தான அம்பலப்படுத்தல்களையும் விரிவாக எடுத்து இயம்பி அனைத்து அரசியல் இயக்கங்கள், தொழிலாளர்கள் விவசாயிகள், மாணவர்கள் இளைஞர்கள், வெகுமக்கள் இணைந்த வீதிப் போராட்டங்களின் அவசியத்தையும் இதே தளத்தில் எண்ணற்ற கட்டுரைகள் இதற்கு முன் படைத்துள்ளோம்.

தற்போது இந்தியா கூட்டணி, தேர்தல் ஆணைய தில்லு முல்லு மோசடிகளுக்கு எதிரான போராட்டங்கள் என்ற முடிவின்படி…

அக்டோபர் 2 முதல் 8 வரை ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டங்களைத் தொடர்வது;

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி குடியரசுத் தலைவரை சந்தித்து விரிவான முறையீடு அளிப்பது;

மாவட்ட தலைநகரங்களில் பேரணிகள் – ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது;

அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவது! என்ற வகையில் போராட்டங்களை அறிவித்திருந்தாலும் இவை போதுமானது அல்ல.

2024 வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படல் வேண்டும்; அதில் 2025-க்குப் பின் தயாரித்த SIR எனும் மோசடி வாக்காளர் பட்டியலை அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்துவிட்டு, கடந்த காலங்களைப் போல் இறந்தவர்களை மட்டும் நீக்கிவிட்டு 18 வயதை எட்டியவர்களைச் சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் 2025 ஆண்டைய கணக்கீட்டின்படி வெளியிடப்படல் வேண்டும்.

புதிய புதிய படிவங்களை கொடுத்து, வினாக்களை தொடுத்து மக்களை குழப்பக் கூடாது. பழைய முறையே தொடர வேண்டும்.

தேர்தல் ஆணையாளர்களை நியமனம் செய்யும் குழுவில் பழைய முறையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அல்லது தற்போதைய பல்வேறு மோசடி அனுபவங்களை கணக்கிற் கொண்டு நேர்மையான வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசித்து எப்படிப்பட்ட புதிய குழுவை உருவாக்கலாம் எனத் தீர்மானிக்க வேண்டும்.

தேர்தல் முடிந்து விட்டால் மறு தேர்தல் வரும் வரை தேர்தல் ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்படாமல் முற்காலத்தைப் போல பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும்.

*குற்றவாளி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகினால் மட்டும் போதாது; அவர் செய்திட்ட ‘ஜனநாயகப் படுகொலை’ எனும் பெரும் குற்றச் செயலுக்கு வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். அது மட்டுமல்ல; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர்களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

படிக்க:

♦ பீகார் தேர்தல்: அதற்குள் தேர்தல் திருட்டு! என்ன செய்யப் போகிறோம்?

♦ தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த… தேர்தல் ஆணையம் – மோடி, அமித்ஷாக்களின்… கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முதலே, தில்லு முல்லு மோசடிகள் அனைத்துத் தேர்தல்களிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து தேர்தல் வெற்றிகளும் மோசடித்தனமானவையே எனக் கொள்ள வேண்டும்.எனவே பாராளுமன்றமும் அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்படல் வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் புதிய தேர்தல் நடத்தப்படல் வேண்டும். புதிய மக்களவை; புதிய சட்டசபைகள் உருவாக்கம் செய்யப்படல் வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையரைத் தவிர்த்து மற்ற இரு ஆணையாளர்கள் தேர்தல் மோசடிகள் குறித்து குறைவான அளவில் தான் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் இது குறித்து முழுமையான விவரங்கள் அறிய பகிரங்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படல் வேண்டும். என்னென்ன குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை முழுமையாக விசாரித்தறிந்து குற்றவாளிகள் ஒருவர் விடாமல் கைது செய்து தண்டிக்கப்படல் வேண்டும்.

தன்மான உணர்ச்சிக்கு இடம் அளிக்காமல் இந்தியா கூட்டணி, சுய விமர்சன கண்ணோட்டத்தோடு ஏற்கனவே இணைந்திருந்து, கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள கட்சிகளை பிணைத்தும், CJP எனும் கரப்பான் பூச்சி கட்சியை இணைத்தும், வெகு மக்களை கவர்ந்திழுத்தும் போராட்டங்களை பரந்து விரிந்த அளவில் உக்கிரமாக முன்னெடுக்க வேண்டும்.

பாஜக-வையோ தேர்தல் ஆணையத்தையோ எதிர்க்கும் கட்சிகள் சிதறுண்டு கிடக்கலாமோ?

திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ‘இந்தியா கூட்டணி’யிலிருந்து விலகி நிற்கின்றன.

திமுக, இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு மூல காரணம் காங்கிரஸ் கட்சியே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஏனெனில் தமிழ்நாட்டில் அதன் சக்திக்கு மேம்பட்ட இடங்களை திமுக-விடம் பெற்றுவிட்டு தேர்தல் ஆணைய முறைகேடு களால் மட்டுமே தோல்வியைத் தழுவிய திமுகவிற்கு நாமம் சாற்றிவிட்டு பாஜகவின் கள்ளக் குழந்தையான விஜய்-யின் தவெக-வில் கூட்டணி சேர, ராகுல் காந்தியும் தமிழ்நாட்டின் மாணிக்கத் தாகூரும் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. இச்செயல்

மாநில மற்றும் அகில இந்திய காங்கிரசின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தவிர வேறொன்றும் இல்லை. அந்த வகையில் திமுகவின் காங்கிரசின் பாற்பட்ட கோபமும், முரண்களும் நியாயமானதே.

எனினும் இன்றைய காலக் கட்டத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் அதன் தலைமை சக்தியான ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பல் நாட்டின் பாசிச பேரபாயமாகத் திகழ்வதையும் அதனை முறியடித்தே ஆக வேண்டும் என்பதையும் திமுக உணரத் தலைப்படல் வேண்டும். எனவே ‘தலைமைத் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும்; பிரச்சனைகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என்ற பழைய பாணியில் அறிக்கை விடுவதோடு திமுக நின்று கொள்வது அபாயகரமானது. எனவே திமுக ,ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ஒதுங்கிடாமல் போராட்டக் களம் கண்டேயாக வேண்டும்.

தவெக எனும், நடிகர் விஜய்யின் பிழைப்புவாத மற்றும் சந்தர்ப்பவாத கட்சி, எப்பொழுதும் பாஜக பின்னால்தான் அணி வகுக்கும். அக்கட்சியை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான் முடியும்.

‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யில் அங்கம் வகிப்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ யூ எம் எல் போன்ற கட்சிகள், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவோ பாஜக-விற்கு எதிராகவோ அக்கூட்டணியின் தலைவர் விஜய்யும் அவரது தவெக கட்சியும் பிழைப்புவாதக் ‘கள்ள மௌனம்’ கொண்டிருப்பது குறித்து வாய் திறக்காமல் இருப்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும். நடிகர் விஜய்யின் உண்மையான பாஜக சார்பு நிலையை இக்கட்சிகள் மட்டுமின்றி இடதுசாரிகள் எனச் சொல்லிக் கொள்ளும் சிபிஐ மற்றும் சிபிஐ-எம் முதலான கட்சிகளும் துளியும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எனவே இத்தருணத்தில் குறைந்த பட்சம் பாஜக மற்றும் அதன் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்க அமைப்புகளின் தில்லு முல்லு மோசடிகளிலிருந்து குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை பாதுகாத்துக் கொள்ள, உணர்வு படைத்த அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் பணிகளில் (EGO) அகந்தை – ஆணவம் – தன்முனைப்பு இல்லாமல் பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டக் களம் கண்டால் ஒழிய இந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிசக் கும்பலை வீழ்த்துவது கடினமாகிவிடும். அதற்கான முயற்சிகள் அனைத்துத் தரப்பிலிருந்தும் எடுக்கப்படல் வேண்டும்.

அந்தப் பாதையில் முன்னேறுவோம்!

பிழைப்பு வாத சந்தர்ப்பவாதக் கட்சிகளை – தலைவர்களைத் தோலுரிப்போம்!

ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிச சக்திகளை வீழ்த்துவோம்!

தேர்தல் திருட்டுக்கு மிக முக்கியக் காரணமான தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாரைக் கைது செய்ய வலியுறுத்துவோம்!

குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவோம்!

கோடிக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்! வெற்றிதனை ஈட்டுவோம்!

– எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here