“இந்தியக் கடற்படைக்குப் ‘பாரம்பரியத் தந்தை’ சத்ரபதி சிவாஜி”  என்கிறார் மோடி. வரலாறு அல்ல, இது வரலாற்றுப் புரட்டு !

மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பலமுறை சிவாஜியின் நம்பகமான படைத்தளபதி தவுலத்கான், அவர் முசுலீம்  என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதாவது, சிவாஜி படையில் முசுலீம் வாடையே கிடையாது  என்பதும் பொய்.

0
136

“இந்தியக் கடற்படைக்குப் ‘பாரம்பரியத் தந்தை’ சத்ரபதி சிவாஜி”  என்கிறார் மோடி. வரலாறு அல்ல, இது வரலாற்றுப் புரட்டு !


“இந்தியக் கடற்படையைப் பெற்றெடுத்தது சிவாஜி” என்று  மோடி சொல்வதில் சிவாஜிக்கு முந்தைய நீண்ட பெரிய கடல்சார் பாரம்பரியத்தையும் மக்கள் வரலாற்றையும் மறைக்கும் காவி பார்ப்பன வக்கிரம் மறைந்திருக்கிறது !

****

மோடி சொல்வது சரியா ? தவறு. வெறுமனே தவறு என்று சொன்னால் போதாது. இந்திய வரலாறு பற்றி  பலரும் ஆழமாக விவாதிக்கின்ற தருணத்தில் புழுத்துப்போன பார்ப்பனப் புளுகையே மக்களின் தலையில் கொட்டுகிறார் மோடி! இதெல்லாம் முழு ஆர்எஸ்எஸ் புளுகு என்று பொதுவெளியில் ஏற்கெனவே அம்பலப்பட்டவைதான். ஆனால்  மீண்டும்  ஆட்சி அதிகாரத்தின் செலவில் காவியை  அணுஅணுவாக விளம்பரப்படுத்தி ‘சத்தியம்’ என்று அடித்துச் சொல்கிறார்.  இவருக்கு யார்  கொடுத்தார் இந்த அதிகாரத்தை? எத்தனைப் பொய்கள் ?

தற்போதுள்ள கடற்படைச் சின்னத்தை மாற்றி  ‘இந்து’ சிவாஜியின் கடற்படைச் சின்னத்தைத் திணித்துள்ளார் மோடி. இம்முறை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள்  தரப்பு முதல் பல சமூகத்தட்டுக்களும் இதற்காக மோடியைக் காய்ச்சியெடுக்கின்றன. அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஓரக்கண்ணால் சிக்னல் கொடுக்க, சங்கிக் கும்பல் உடனே  யூடியூப் மூலம் குஸ்தியில் இறங்கியுள்ளன.

ஒரே நேரத்தில் இரண்டு விசயம் நிறைவேற்ற வேண்டும் மோடிக்கு.  ஒன்று :  எங்கே எதில் பிரிட்டிஷ் ராச்சிய வாடை, பெயர், சின்னம் இருக்கிறதோ அவற்றை மாற்றுவது, தேசியத்தைத் தூய்மையாக்குவது; அப்படிச் செய்யும்போது காவி வாசிப்பை நைசாகப் புகுத்துவது, இந்து தேசியமாக்குவது. புதிய சின்னத்தை உற்றுப்பாருங்கள். அதில் தேவநாகரியில்  எழுதப்பட்டுள்ள “ஸந்நோ வருண” என்ற சூத்திரம் இருக்கும். அதற்குப் பொருள்: “நீர்க்கடவுளான வருணனே, எங்களுக்கு ஆசி வழங்குவாயாக!”.  இது  ‘இந்து’ப் புராணம். தனது கார்ப்பரேட் – காவி ஹைபிரீட் திட்டத்துக்கு ஏற்ப காவிப் புராணத்தைச் சேர்த்து ஆட்டத்தை அவர் தாளம்தப்பாமல் ஆடியுள்ளார்.

PM Modi commissions India's first indigenous aircraft carrier INS Vikrant- The New Indian Express

கடற்படை விழாவில் பேசும்போது, “கடல் வலிமைக்குச் சமமாக ஒரு கடற்படையை  சிவாஜி  உருவாக்கினார்” என்றார் மோடி. இது முதல் பொய்.

B.K. ஆப்தே என்ற இந்திய வரலாற்றாசிரியர் கூறுவதுபோல, “(சிவாஜியின்) மராத்தா  கடற்படை சிறியது.  அதைவிட இங்கிலீஷ் கடற்படை எல்லா அம்சங்களிலும் மிகமிகப் பெரியது, வலுவானது, சிறந்தது.”  சிவாஜியின் மராத்தாப் படையில் வலுவானது குதிரைப்படை மட்டுமே. இங்கிலீஷ் படைகளில்  குதிரைகள்  தவிர துப்பாக்கி வலு ஏராளம். தவிர, தன்னை நிலைநிறுத்துவது மட்டுமே மராத்தாக்களின் கவலை, அக்கறை எல்லாம். முசுலீம் மன்னர்களோடு சேர்ந்து இந்து மன்னர்களைக்கூட அவர்கள் தோற்கடித்தார்கள். தேவையில்லாமல் பிரிட்டிஷ் படைகளோடுகூட மோத மாட்டார்கள். ஆக, சிவாஜியை வெல்ல யாருமில்லை என்பது பொய்.

தவிர, மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பலமுறை சிவாஜியின் நம்பகமான படைத்தளபதி தவுலத்கான், அவர் முசுலீம்  என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதாவது, சிவாஜி படையில் முசுலீம் வாடையே கிடையாது  என்பதும் பொய்.

இதையும் படியுங்கள்: சங்கி கும்பல் உருவாக்கிய, சாவர்க்கர் புல்புல் பறவையில் பறந்த கதை!!!

முசுலீம்களின் அன்றைய சரிவுக் கட்டத்தில்  அப்பேரரசின் சிறுசிறு வட்டாரப் பகுதிகளில் பல மதத்தவரிடையே நட்பு கொள்வது, கூட்டுச் சேருவது என்பதெல்லாம் அப்போதைய வாடிக்கை.  இந்த தெளிவான வாதங்களையெல்லாம் தள்ளிவிட்டு சத்ரபதி சிவாஜி புடம்போட்டு எடுத்த  இந்துக்களின் காவலர் என்ற மோடியின் நினைப்பும் சாதிப்பும் பொய்.

அடுத்ததாக, பெரிய ஆய்வெல்லாம் இல்லாமல்  சில எடுத்துக்காட்டுக்கள் மூலமே கூட  மோடியின் “கடற்படைத் தந்தை சிவாஜி”   மறுக்கமுடியும். சிவாஜி படையின் நடைமுறைத் தந்திரம்  கடலில் தாக்கிவிட்டு ஓடிவிடும்  (hit and run)தந்திரம். அதுவும் கரையோரம் மட்டுமே சண்டை போடும். ஏனெனில் சிவாஜியின் கடற்படைகளுக்கு கடலோர முகடுகள், வளைவுகள் நன்றாகத் தெரியும். கூடுதலாக, மிகப் பெரிய கனமான ஐரோப்பியக் கப்பல்கள்  கரையிலிருந்து மிகத் தொலைவில்தான் நங்கூரமிட்டிருக்கும்.கரைச் சண்டைகளின்போது  சிவாஜி படை எளிதாக நழுவித் தப்பிவிடும்;  மேலும் கொங்கணிய, முகலாய, ஆப்பிரிக்க வம்சாவழி ‘சித்தி’கள் போல வலுவான கடற்படை வைத்திருக்கவுமில்லை. எனவே, சிவாஜி படை சாராம்சத்தில் சிறகு என்று சொல்லக்கூடிய  புடைப்புப் பகுதிமட்டுமே. இதை வைத்து ஆழ்கடலில் சென்று சண்டைபோட சிவாஜி முட்டாளும் அல்ல. அவரது கடற்படைத் தேவை  கரையைக் காப்பது மட்டுமே. ஆக, ஒட்டுமொத்தமாக சிவாஜி ராணுவத் திறமைசாலி என்பதும் பொய்.

1679ல்  கந்தேரித்தீவைப்  பிடித்தார்  சிவாஜி ; பிரிட்டிஷார் அவரது நடமாட்டத்தைக் கூர்மையாகக் கவனித்தார்கள்; பிறகு சிவாஜி தீவைப் பாதுகாக்க கோட்டை மதில் எழுப்பத் திட்டமிட்டார். ஒற்றுஅறிந்த கையோடு  பிரிட்டிஷார்  சிவாஜியை வலுவாகத் தாக்கினார்கள். சிலநாட்களிலேயே அப்பகுதியில்  சிவாஜியின் நிலைமை சரிந்தது.  “பெரிய ராச்சியத்தை ஒருகுடைக்கீழ் ஆண்டவன்”என்று பொருள்படும் ‘சத்ரபதி’ பட்டம் கொண்ட  சிவாஜி,  மோடியின் அண்ணாமலை போல உதார் காட்டவில்லை ; மிக எதார்த்தமாக ஜனவரி 1680-ல் பிரிட்டிஷாருக்கு ஆளனுப்பி கமுக்கமாக ஒப்பந்தம் போட்டார். வீர ஆற்றல்  பெற்ற சிவாஜி என்று மோடி சொல்வது எல்லாமே சும்மா!

சத்ரபதி சிவாஜி அவதாரம்!

தன்னிலை புரிந்த தந்திரசாலி சிவாஜி. அதிகார சூழ்நிலை அறிந்ததும்  காகபட்டன் என்ற  பார்ப்பனச் சூழ்ச்சிக்காரனோடு சேர்ந்துகொண்டார்.  ‘ஹிரண்ய கர்ப்பம்  (தங்கத் தொட்டி)’ என்ற பார்ப்பனச் சடங்கு செய்துகொண்டார். சடங்கு செய்வித்த  காகபட்டனின்  கோத்திரத்தையே கேட்டு வாங்கினார். ஊர் பேர் தெரியாதவன் என்ற அவப் பெயரையும் போக்கிக் கொண்டு சமூக அங்கீகாரத்தோடு  ஜெகஜோதியாக ராஜாவானார். டீக்கடை மோடி —  “ஆர்எஸ்எஸ் + குஜராத் பனியா அரவணைப்பில்”  ராஜா மோடி அவதாரமாக வடிவெடுத்த கதையும் இதுபோலத்தானே ?

என்ன பீலா பாருங்கள் !  சாவர்க்கார் ‘ புல்புல் ‘ பறவை மீது ஏறிச் சிறையிலிருந்து தப்பிவிட்டார் என்று ஊதிவிட்டார்களே, அதுபோலவே இப்போது சிவாஜி விசயம். அதைவிட இது கொஞ்சம் பயங்கரமான பெரிசு !

அந்த நாட்களின் இசுலாமிய வாழ்க்கை, நடைமுறை, கலை, கட்டிடம், போர்த் தொழில் அத்தனைப் பாதிப்பும் சிவாஜி போன்ற மராத்தாக்களிடம் உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதை எல்லாம் ஓரம்தள்ளிவிட்டு ” முசுலீம்களை ஓடச்செய்த வீரன் சத்ரபதி சிவாஜி ” என்ற ஒற்றை வாசிப்பை முன்வைப்பதற்கு ஏன் மோடி கும்பல்  துடிக்கிறது?  ‘இந்து’ என்ற ஒற்றைப் பார்வையை  சிவாஜிமீது வைப்பதற்காக. ‘முசுலீம் எதிர்ப்புப் போராளி ‘என்ற புதிய பட்டத்தைக் கொடுத்து விட்டால் இன்றைய ஆர்எஸ்எஸ்ஸின் முசுலீம் வெறுப்பு அரசியலுக்கு ஆழமும் அழுத்தமும்  கிடைக்கும் என்றும் கனவு காண்கிறது. மேலும்’கடற்படையின் ( பாரம்பரியத் ) தந்தை ‘ என்று சொல்லும்போது  அந்தப் பாரம்பரியத்தில் இசுலாமியக் கலப்பு , நட்பு என்ற வாசிப்பு கொஞ்சம்கூட  சேர்ந்துவிடக் கூடாது என்றும் கவனிக்கிறது. பொய்களை எப்படி எல்லாம் சோடிக்கிறது பாருங்கள் !

இதையும் படியுங்கள்: காந்தி படுகொலை: திகாம்பர் பாட்கேயின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜார்ஜ் 5-ன்பெயரில்  டெல்லி’ராஜ்பத்’  உருவாக்கப்பட்டதையே மாற்றி ‘ கர்த்தவ்யபத் ‘ ஆக்கப்பட்டுள்ளது ; மோடி குடியிருக்கும்  ‘டெல்லிரேஸ்கோர்ஸை’ மாற்றி ‘ கல்யாண் மார்க் ‘ அறிவிக்கப்பட்டுள்ளது ; இப்படியே சுற்றிவளைத்து ‘செயின்ட் ஜார்ஜ்+சிலுவைக் குறி பிணைந்த இந்தியக் கடற்படைச் சின்னத்’ தை ‘சிவாஜியின் கடற்படைச் சின்னம்’ கொண்டு இட்டு நிரப்புவதன்மூலம்  முன்பு இருந்த கிறித்தவச் சிலுவைக் குறியை நீக்குகிறது —  இந்த மாற்றங்கள் எல்லாம்  கட்டுரை ஆரம்பத்தில் சொன்னது போல ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக அடிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலனித்துவக் கறையை நீக்குவது நியாயம் என்ற போர்வையில் காவிமயம்  நிறைவேற்றப்படுகிறது.

அவாளுக்குப்  பொழுதுபோக்கு கிடைக்கிறது; மக்களின் வாழ்க்கை பறிபோகிறது !

சிவாஜிக்கு நூற்றாண்டுகள் முன்பே இந்தியத்துணைக்கண்டத்தில் கடல் பாரம்பரியம், கடற்படைகள் உண்டு !

காவியைத் தோய்த்தெடுக்கும் அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். “இந்தியக் கடற்படைக்கே சிவாஜி தந்தை” என்றால் கடல்சூழ்ந்த இக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் எங்குமே கடல்சார் பாரம்பரியம் இல்லையா ?

நிச்சயமாக உண்டு. அப்பாரம்பரியம் மிக நீண்டது. தமிழக சோழர்கால வரலாற்றில் தலைசிறந்த கடல்தளபதி என்று பெயர் எடுத்த இராசேந்திர சோழனின் கடற்படைகள் பற்றியும், இராசேந்திரனின் தென்கிழக்காசிய ஜாவா – சுமத்திரா – தாய்லாந்து – மலேசியா கடற்படையெடுப்புக்கள், வெற்றிகள் பற்றியும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. உடனடிப் பார்வைக்கு ஒயர் ( The Wire ) கட்டுரை சான்று.

சோழர்கள் தவிர, கலிங்கர்கள், சாதவாகனர்களின் கடற்படைகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் வெறுப்போடும் காழ்ப்புணர்ச்சியோடும் புறக்கணித்துவிட்டு, சிவாஜி பற்றிய கதை காப்பிய முரண்பாடுகளையெல்லாம் செதுக்கிக் களைந்து ‘இந்துராச்சியச் சொக்கத்தங்கம்’ என்று முன்நிறுத்துவது
‘இந்துத்துவ’ப் பார்ப்பன அரசியலின் தந்திரமாகும்.

பொழுதுபோக்குக்காக மோடி (ஜி) கோயில்களுக்குப் போகிறார். ரத்தச் சிவப்பில்  செந்தூரத் திலகம் போடுகிறார்; ராமானுசர் விழாவுக்காக நாமம் போடுகிறார். அது அவரது  திருமுகம், அதில்  பூசட்டும், பூசிக்கொள்ளட்டும்! ஆனால் வரலாற்றுப் பக்கங்களைத் திருத்திப் புரட்டுவது, மாற்றுவது  என்பது வேறு. இந்திய மக்களின்  “நேற்று – இன்று – நாளை” என்ற மூன்று காலங்களின்   போராட்டமயமான  வாழ்க்கையோடு  அவர் விளையாடுகிறார். ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்தின் குடிமக்கள் அப்படிப்பட்ட கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலை அகற்றி அதிகாரத்தை வெல்லவேண்டும் !

ஆதாரம் :    ‘தி ஒயர்’ இணையதளம்( ‘THEWIRE’ ).

ஆக்கம்   : இராசவேல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here