எல்ஐசி பங்கு விற்பனை: உங்கள் காப்பீட்டுத் தொகை சூதாடிகளின் கையில்!

2012-17 காலகட்டத்தில் ரூ. 14,23,055 கோடியை எல் ஐ சி அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முதலீடாக கொடுத்துள்ளது.

0

எல்ஐசி பங்கு விற்பனை: உங்கள் காப்பீட்டுத் தொகை சூதாடிகளின் கையில்!


நாட்டின் முன்னேற்றத்திற்காக, நாட்டு மக்களின் நலனுக்காகத் தான் எல்ஐசின் பங்குகளை விற்பதாக கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதாவது தேனீக்களிடம் தேனைக் கொண்டு சேர்ப்பதற்காக தான் தேன்கூட்டை கலைப்பதாக கூறுகிறார். என்ன புல்லரிக்கிறதா? புல்லரிகலாம் ஆனால் ஆத்திரப் படக்கூடாது ஆத்திரப் பட்டால் நீங்கள் ஆன்டி இண்டியன் (தேசதுரோகி) ஆகிவிடுவீர்கள்.
இந்தக் கட்டுரையைப் படித்து பிறகு பிஜேபி கும்பலின் மீது ஆத்திரப் படாமல் இருக்க முடிகிறதா என்பதை முயன்று பாருங்கள்!

எல்ஐசி -ஐ தனியார்மயம் ஆக்குவதன் மூலம் எல்ஐசி -யின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரப் போவதாக கூறுகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது உண்மையா?

ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி -யின் கணக்கு வழக்குகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதன் வரவு செலவு அறிக்கை குறித்து எம்பிக்கள் கேள்வி எழுப்ப முடியும்; விவரங்களை கேட்டு அறிய முடியும். எம்பிக்கள் மட்டுமல்ல தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுமக்களாகிய நாமும் எல்ஐசி -யின் கணக்கு வழக்குகள், நிர்வாகம் தொடர்பான விவரங்களை கேட்டு பெற முடியும் என்பதுதான் தற்போதைய நிலை.

தனியார் கைக்குப் போனால் எல்ஐசி -யின் கணக்கு வழக்குகளிலும் நிர்வாகத்திலும் வெளிப்படைத்தன்மை இதைவிட அதிகமாக இருக்குமா? எந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இதைவிட வெளிப்படைத் தன்மை உள்ளது? தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், நிர்வாக முறைகள் குறித்து பொதுமக்கள் கேட்டு அறிய முடியுமா? எவ்வளவு பெரிய பொய்யை கூசாமல் சொல்கிறார் நிர்மலா சீதாராமன்.

எல்ஐசி பங்குகளை விற்பதன் மூலம் கீரை விற்கும் ஆயாவையும் எல்ஐசியின் முதலாளியாக போவதாக கதையளக்கிறார் நிதி அமைச்சர். எல்ஐசி பங்குகளை வாங்குபவர்கள் குறைந்தபட்சம் 15 பங்குகளை வாங்கி ஆக வேண்டும் சுமாராக ஒரு பங்கின் விலை 900 என்று கணக்கிட்டால் குறைந்தபட்சம் ரூ.13,500 கொடுத்துதான் பங்குகளை வாங்க முடியும். இந்த நிலையில் கீரை விற்கும் ஆயா எல்.ஐ.சி பங்குகளை வாங்க முடியுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

பணமதிப்பு நீக்கம் மூலம் கீரை விற்கும் ஆயாவின் சுருக்குப் பையை பதம் பார்த்தது போதாது போலும். இன்னொரு புதிய வழியை திறக்கிறார்கள். வரும் காலத்தில் கீரை விற்கும் ஆயா போட்ட காப்பீட்டுத்தொகை திரும்ப வருவதே உறுதியற்றதாக மாற போகிறது என்பதுதான் உண்மை.ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை(LIC) முழுதாக கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் பாஜக கும்பல் அதற்கான முன் தயாரிப்பு வேலையை, பங்கு விற்பனையை, தற்போது துவங்கிவிட்டது.
எல் ஐ சி ஐ தனியார்மயம் ஆக்குவது இந்தியாவின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் எவ்வளவு பெரிய கேடுகளை ஏற்படுத்தும் என்பதை  அறிந்து கொண்டால்தான் எல்ஐசி தனியார்மயம் என்பது கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்காக செய்யப்படும் அயோக்கியத்தனம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எல் ஐ சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றையும் அதற்கான காரணத்தையும் இந்த நிறுவனம் இந்திய மக்களின் நல்வாழ்வுக்கும் இந்திய அரசின் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கும் செய்துள்ள பங்களிப்பையும் பார்ப்போம்.

1940 மற்றும் 50 களில் இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டு இருந்தன. இந்த நிறுவனங்கள் மக்கள் செலுத்தும் காப்பீட்டுத் தொகையை தமது சொந்தத் தொழிலில், சொந்த லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருந்தன.

இந்த நிலையில் தான் ஏறக்குறைய 25 காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாகின.
இந்த நிறுவனங்களில் காப்பீடு செய்திருந்த மக்களின் பணம் திரும்ப கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் செல்வதை தடுத்து மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்ற தேவை எழுந்தது.

எனவே 1956ல் அவசர சட்டம் இயற்றப்பட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. இதன்மூலம் இந்திய காப்பீட்டு நிறுவனம் ( LIC) தோற்றுவிக்கப்பட்டது.
அரசு ஐந்து கோடி ரூபாயை மட்டுமே முதலீடாக போட்டு இந்திய காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கியது. இப்படி ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட எல் ஐ சி இல் இருந்து ஒரு ஆண்டில் மட்டும் (2019-20 நிதி ஆண்டில் மட்டும்) ரூ.2,611 கோடி அரசுக்கு ஈவுத் தொகையாக கிடைத்துள்ளது. எல்ஐசி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஈவுத் தொகையாக (எளிமையாக புரியும் வகையில் சொல்வதென்றால் லாபமாக) அரசுக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாக கூறப்படும் ஐந்தாண்டு திட்டங்களுக்கு(பெரும் பெரும்அணைகள் கட்டியது போன்ற திட்டங்களுக்கு) எல்ஐசி -யில் இருந்துதான் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடாக கொடுக்கப்பட்டது.
2012-17 காலகட்டத்தில் ரூ. 14,23,055 கோடியை எல் ஐ சி அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முதலீடாக கொடுத்துள்ளது.

ரூ.28,84,331 கோடியை ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் பல்வேறு ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும் அரசின் பத்திரங்களில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.
அரசு நிறுவனங்கள் சிறந்த சேவையை மக்களுக்கு அளிப்பதில்லை தனியார் துறையின் மூலமாக தான் சிறந்த, தரமான சேவை மக்களுக்கு கிடைக்கும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாதங்கள் அத்தனையையும் தவிடுபொடியாக்கி வந்துள்ளது எல்ஐசி நிறுவனம்.

பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ள போதும் அந்த நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி மக்களுக்கு மிகச் சிறந்த சேவை அளிக்கும் நிறுவனமாக மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை எல்ஐசி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காப்பீடு எடுத்துள்ள பாலிசிதாரர்களுக்கு வாக்களித்தபடி முறையாக பணப் பட்டுவாடா செய்வதில் (40 கோடி பாலிசிதாரர் களுடன்) காப்பீட்டுத்துறையில் உலகிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது எல்ஐசி நிறுவனம். இப்படி தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் நெருங்கவே முடியாத அளவுக்கு, மக்கள் சேவையில், வெகு உயரத்தில் நிமிர்ந்து நிற்கிறது எல்ஐசி நிறுவனம். எல் ஐ சி நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

கார்ப்பரேட்டுகள் அடிமாட்டு விலையில் எல்ஐசி அபகரித்து கொள்வதற்காக எல்ஐசி -யின் சொத்துக்களை மதிப்பிடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

49 சதவீத பங்குகளை விற்க உள்ளதாக கூறிய காவி கும்பல் தற்போது 3.5 சதவிகித பங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆண்டுகளில் 49 சதவீத பங்குகளை மட்டுமல்ல அதைத் தாண்டியும் கணிசமான சதவீதப் பங்குகளை கார்ப்பரேட்டுகளின் அடிவருடியான இந்த காவிக் கும்பல் விற்றுவிடும் என்பது உறுதி.
ஆரம்பத்தில் தனித் தனி நபர்களால் வாங்கப்படும் எல் ஐ சி யின் பங்குகள் ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தால் அது அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்று இருக்கும் அதன்மூலம் எல்ஐசி தனியார் (கார்ப்ரேட்) காப்பீட்டு நிறுவனம் ஆக மாற்றப்பட்டு விடும்.

அப்படி மாற்றப்பட்டால் அரசின் சமூக நலத் திட்டங்களுக்காக மீண்டும் அமெரிக்க, ஜப்பானிய வங்கிகள் மற்றும் உலக வங்கி போன்றவற்றிடம் கடும் நிபந்தனைகளுடன் கடன் வாங்க வேண்டி வரும். அந்த வங்கிகள் சொன்னபடிதான் அந்தத் தொகையை இந்திய அரசு செலவு செய்ய முடியும். கார்ப்பரேட்டுகளின் தாளத்திற்கு ஏற்ப தான் இந்திய அரசு ஆட முடியும் என்ற நிலையில் இந்திய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடும்?

அப்படி கார்ப்பரேட்மயமானால் காப்பீடு என்ற கோட்பாடே காலாவதியாகிவிடும். காப்பீடு என்பதன்‌ நோக்கமே எதிர்காலத்தில் வாழ்க்கை பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதுதான். அது பங்கு சந்தை சூதாடிகளின் கைக்குப் போகும்போது வாழ்க்கை உத்தரவாதம் ‘ஆண்டவன்’ கையில்தான்.

இதையெல்லாம் முறியடிக்காமல் நாட்டை முன்னேற்றவோ நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவோ முடியாது. காவிக் கும்பல் கொடுக்கும் தேசத்துரோக பட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்போம். எல் ஐ சி ஐ காக்கும் போராட்டத்தில் ஒன்றிணைவோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here