அசாம் மாநிலத்தில் விவசாய வளர்ச்சி என்ற பெயரில் “கோருகுடி ஒருங்கிணைந்த விவசாய திட்டத்தை” அம்மாநில பாஜக அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக நிலங்களை கைப்பற்ற, பிரம்மபுத்திரா கரையோர பகுதியில் வாழ்ந்து வந்த வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை “சட்டவிரோத குடியேறிகள்” என்று முத்திரை குத்தி துணை ராணுவ படை கொண்டு பலவந்தமாக வெளியேற்றியது. நிலங்களை விட்டு வெளியேற மறுத்தவர்களில் இரண்டு பேரை சுட்டுக் கொன்றும், குண்டாந்தடிகளால் அடித்தும் நொறுக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் அம்மக்களை விரட்டியடித்தது.
தங்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், வேறொரு பகுதியில் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை நம்பியும் மக்கள் தங்கள் நிலங்களை, உடைமைகளை விட்டுவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வெளியேறினர். அப்படி செப்டம்பர் 2021-ல் வெளியேற்றப்பட்ட ஏறக்குறைய 2000 குடும்பங்களுக்கு அரசு உத்தரவாதம் அளித்தவாறு மாற்று இடம் ஒதுக்கித் தராமல் பிரம்மபுத்திரா நதியின் மணல் திட்டுகளில் “எப்போது இங்கிருந்தும் விரட்டியடிக்கப்படுவோமோ?” என்ற அச்சத்துடன் திக்கு தெரியாமல் தங்கியுள்ளனர்.

நிலங்களிலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அம்மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அருகிலுள்ள ஊர்களில் கிடைக்கும் வேலைகளைச் செய்து தங்கள் குழந்தைகளின் பசியாற்றி வருகின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய் தன் மகனை தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு இவர்களுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யாமலும், எந்தவித நிவாரணம் தராமலும் கைவிட்டுள்ளது.
சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள் இன்று “சட்டவிரோத குடியேறிகள்” என்று முத்திரை குத்தப்பட்டு அத்துக்கூலிகளாக சிதறடிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலம் நெருங்கி வருவதால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு இவர்களுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யாமலும், எந்தவித நிவாரணம் தராமலும் கைவிட்டுள்ளது.
வளர்ச்சி என்ற பெயரிலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரிலும் சென்னை உட்பட இந்தியாவில் பல நகரங்களிலும், மாநிலங்களிலும் உழைக்கும் மக்கள், சாதாரண விவசாயிகள், பழங்குடியினர், மற்றும் மீனவர்களிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்படும் வாழ்விடங்கள், நிலங்கள், காடுகள், கடற்பரப்புகள் கார்ப்பரேட்டுகளிடம் கையளிக்கப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காகவே “நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை” முந்தைய மன்மோகன் அரசாங்கம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.
தங்களுக்கு படியளக்கும் ஒருசில முதலாளிகளின் லாபவேட்டைக்காக செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களின் விளைவாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும் மக்கள் உள்நாட்டு அகதிகளாக மாற்றப்பட்டுவருகின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்த நடவடிக்கை இன்னும் வேகமெடுத்துள்ளது. பாரத்மாலா, சாகர்மாலா, ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களினால் பாதிக்கப்படும் மக்கள் அவற்றை எதிர்க்கும் போது அவர்களை வளர்ச்சியின் எதிரிகளாகவும், நாட்டின் எதிரிகளாகவும் காட்டி அரசும், பாஜக-வின் காலை நக்கிப்பிழைக்கும் ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றன. அந்த வகையில்தான் அசாமிய முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேறிகளாகவும், ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் பழங்குடியின மக்கள் மாவோயிஸ்டுகளாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றனர்.
படிக்க:
♦ நாகாலாந்து படுகொலைகள்! பாசிச பயங்கரவாதமே ‘இந்திய ஜனநாயகம்’!
♦ இந்துத்துவ மிரட்டல்களுக்கு அடிபணியும் இந்திய ராணுவம்!
தற்போது “வளர்ச்சி” என்ற சொல்லே இந்தியாவில் எதிர்மறை பொருளில் ஒட்டுமொத்த மக்களுக்கும் விலைவாசியில் மட்டுமே வளர்ச்சியைக் கொடுத்து அம்பானி அதானி போன்ற ஒருசில தரகு முதலாளிகளுக்கு மட்டுமேயான உண்மையான வளர்ச்சியாக பரிணமித்துள்ளது.
தங்களின் எஜமானர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டுக்காக நாட்டையே கூறுபோட்டு கூட்டிக்கொடுக்கும் RSS- பாஜக காவி பாசிஸ்டுகளை அரசியல் அதிகாரத்திலிருந்தும், நாட்டிலிருந்தும் விரட்டியடிப்பதில்தான் உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலை அடங்கியுள்ளது.
நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு சில முதலாளிகளின் வளர்ச்சிக்காக பலியிடத்துடிக்கும் இந்த பாசிஸ்டுகளை விரட்டி அடிக்க நாடு தழுவிய அளவில் ஐக்கிய முன்னணி கட்டியமைப்போம்! கார்ப்பரேட்-காவி பாசிசத்தை எதிர்ப்பவர்களை ஓரணியில் திரட்டி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டியமைப்போம்!
- ஜுலியஸ்