ரோம் நகர் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனை விட மோசமானவர்கள் இந்த பாசிச கும்பல் என்பதை நிர்மலா சீத்தாராமனின் திமிர் பேச்சு நிரூபித்துள்ளது.

கும்பமேளா, ராமர் கோவில் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கணக்குவழக்கு பார்க்காமல் செலவழிக்கும் இந்துத்துவ கும்பல், மக்கள் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் போது நிதியளிக்காமல் திமிர்தனமாக பேசுவது பாசிசத்தின் உச்சம்.

உண்மையை சொல்ல வேண்டுமானால்  அமைச்சர் உதயநிதி கூறியது போல் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர் அப்பன் வீட்டு பணத்தை ஒன்றும் கொடுக்கப் போவதில்லை. இந்தியாவின் வரி பங்களிப்பில் அதிகமாக வழங்கும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மக்களின் வரிப்பணத்தை மக்கள் பேரிடரில் சிக்கியுள்ள சமயத்தில் கூட அவர்களிடம் கெஞ்சி தான் பெற வேண்டுமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.

 

தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் என்பது மிகப்பெரிய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை சரி செய்ய வேண்டுமானால் தமிழ்நாடு கேட்டுள்ள நிதியே போதாது என்பது தான் உண்மை.

சென்னையைப் போன்று வெள்ளம் வடிந்த பின்னர் தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்ப முடியாத நிலை தான் உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் பெரும் பொருட்சேதத்தை சந்தித்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் அடிப்படைக் கட்டமைப்பான சாலைகள், பாலங்கள், சீரமைப்பது உடைந்து போன ஏரிகளை சீர் செய்வது மின்துறை செலவுகள் என மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அதிகம். இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் பெரும் நிதி தேவைப்படுகிறது.

தமிழ்நாடு அரசு சென்னை பெரு வெள்ளத்திற்கு 5000 கோடி பேரிடர் நிதியை ஒன்றிய அரசிடம் கோரியிருந்தது. அடுத்த சில தினங்களிலேயே தென் மாவட்ட மழை பாதிப்பினால் இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கோரியிருந்தார். இது சம்பந்தமாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியையும் பார்த்து பேசி வந்தார்.

பேரிடர் நிதி:  நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு!  தமிழக மக்கள் மீதான வன்மம்!

இந்நிலையில்தான் சென்னை வந்திருந்த நிர்மலா சீத்தாராமன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அனைவர் மத்தியிலும் கோபத்தை கிளறி உள்ளது. இது செட்டப் செய்யப்பட்ட பேட்டி என்பதை பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

மழை வெள்ள பிரச்சனையை பயன்படுத்திக்கொண்டு உள்ளூர் சங்கிகளான சீமான், அண்ணாமலை போன்றோர் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் டெல்லியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒன்றிய நிதிஅமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் வேறு ‘பாஷை’யில் நிதி தர முடியாது என்று பேசியுள்ளார்.

அவரின் ஊடகப்பேட்டி முழுக்க பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லாமல் முழுக்க திமுகவை தாக்கும் அரசியல் பேட்டியாகவே இருந்தது. அதில் தமிழக அரசை தாக்க பொய்யை கூறவும் தயங்கவில்லை.

டிசம்பர் 12ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வந்த போதும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியள்ளார். உண்மை என்னவென்றால் வானிமை ஆய்வு மையம் ஒரு சில இடங்களில் கன, மிக கனமழை என்றே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழையின் அளவோ  10 – 21 சென்டிமீட்டர், ஆனால் பெய்ததோ அதிகபட்சமாக 95 சென்டிமீட்டர். இந்த நிலையில்  வானிலை ஆராய்ச்சி மையம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார் நிர்மலா சீதாராமன்..

மேலும் பேசிய நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய 2023ற்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிதி ஆண்டு தோறும் கொடுக்கக் கூடிய பொதுவான நிதியே. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசிடம் 813.15 கோடி பேரிடர் நிதி இருப்பதாகவும் கூறியுள்ளார். நிர்மலா சீத்தாராமனின் இந்த பேச்சின் அர்த்தம் என்னவென்றால் இதற்கு மேல் நிதி தர முடியாது என்ற திமிர் தான்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு வேலையே மக்கள் பேரிடரில் சிக்கியிருக்கும் போது உதவுவது தான் இதனை மோடியும் அமித்ஷாவும் செய்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

கன்னியாகுமரி ஒக்கி புயலின் போது தேசியப்பேரிடர் குழு மீனவர்களை மீட்ட லட்சணத்தை தான் நாடே பார்த்து சிரித்ததே. ஹெலிக்காப்டர் கொண்டு மீனவர்களை மீட்க துப்பில்லாததால் படகுகளை எடுத்துச் சென்று மீனவர்களே மீட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.

அதே சமயத்தில் மக்கள் இடர்பாட்டில் சிக்கியபோது உதவாத ஹெலிகாபிடர் அடிமை ஓ பன்னீர் செல்வம் குடும்பத்திற்கு உதவியதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். இதுவெல்லாம் நிர்மலா சீத்தாராமன் உதவியுடன் தான் நடந்தது.

“தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மொத்தம் 21,692 கோடி தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நிதி அறிவிக்கவே அவர் பேட்டி ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். ஆனால் நிதி கிடையாது என்று சொல்வதற்காக எதற்கு ஒரு பேட்டி தர வேண்டும்”  என காட்டமாக கேள்வி எழுப்புகிறார் தங்கம் தென்னரசு.

இதையும் படியுங்கள்:

மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் பேரிடர் சேதங்களை சரி செய்ய தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரியத் தொகை 1,27,655.80 கோடி. இதில் பாசிச பாஜக அரசு ஒதுக்கிய தொகை வெறும் 5884.49 கோடி மட்டுமே.  கேட்ட தொகையில் 4.61% மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது என தனது அறிக்கையில் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு தரும் 1 ரூபாய் வரிப்பணத்திற்கு 2 ரூபாயாக மோடி அரசு திருப்பி தருவதாக எந்த கூச்சமும் இல்லாமல் புளுகுகிறார்.

மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதில் முனைப்பாக செயல்படும் பாசிஸ்டுகள் எப்படியாவது தமிழகத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று நோக்கத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் தமிழ் மக்களிடம் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குகின்றனர். தமிழ்நாட்டில் திமுகவை ஒழித்துக்கட்டி விட்டால் அடிமைகளின் துணையுடன் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைத்து அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். மாநில அரசு கேட்கும் நிதியை ஒதுக்காமல் மழை வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இப்படி செயல்படுவதற்கு அடிப்படை அசுர பலமாக ஆட்சியில் இருப்பதும், அதனை பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பலை அதிகாரத்தில் அமர்த்தியதுமே.  இதனால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்மலா சீதாராமன் சர்வாதிகாரியைப் போல் பேச முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்க நினைப்பதற்கும் அதுவே காரணம்.

இந்திய மக்கள் ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஏற்படுத்தியுள்ள தேசிய பேரிடரில் சிக்கியிருக்கிறார்கள். இந்நாட்டு மக்களை மீட்க மாநிலத்தின் அதிகாரத்தை மீட்க வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஆதரித்து பாசிச கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வேரறுக்க மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here