1930 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடி பெருமந்தமாக மாறியது. உலகம் முழுவதும் அதுவரை சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளில் ஆட்சியை தொடர்வது இந்த தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு அல்ல என்பதை புரிந்து கொண்ட முதலாளித்துவ கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் ஜனநாயகத்திற்கு மாற்றாக பாசிச சர்வாதிகாரத்தை தீர்வாக முன் வைத்தனர். அதற்கு மற்றொரு முக்கிய காரணம் சோவியத்தில் வெடித்து கிளம்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரமானது முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மட்டுமல்ல முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகின்ற வகையில் சோவியத் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தது.
எனவே ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கம்யூனிசத்தின் பக்கம் போய் விடக்கூடாது என்பதை மிக கவனமாக கையாண்ட ஏகாதிபத்திய முதலாளிகள் தேர்வு செய்து கொண்ட வழிமுறைதான் அப்பட்டமான, அம்மணமான பாசிச சர்வாதிகாரமாகும்.
இந்த பாசிசமானது அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு பிற்போக்கான மதவெறி, இனவெறி, நிறவெறி ஆகியவற்றின் பின்புலத்துடன் ஆதரவை பெற்று பொருளாதார நெருக்கடிகளுக்கு உண்மை காரணத்தை கண்டறிய விடாமல் பெரும்பான்மை மக்களை தடுக்கின்ற திருப்பணியை செய்து வருகிறது.
படிக்க:
♦ வரம்புள்ள செயல்தந்திரம் : ஐக்கிய முன்னணிகள் கட்டியமைப்பது குறித்து
♦ உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமந்தம் உருவாக்கிய பாசிச மற்றும் நாஜிச கொள்கைகளும் அதன் பின்னர் உலகில் தோன்றிய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக உருவான பாசிச கொள்கைகளும் ஒரே தன்மை கொண்டது அல்ல.
பாசிசம் தோன்றுவதற்கான அடிப்படைகளை தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற பெயரில் அதனை முன் வைத்தார்.
இந்த ஐக்கிய முன்னணி தந்திரத்தை அப்படியே நாம் எடுத்துக் கொண்டால் இந்தியாவை முதலாளித்துவ நாடு என்று வரையறுத்து விட வேண்டிய சூழல் ஏற்படும் என்று அச்சமற்ற மார்க்சிய லெனினியவாதிகள் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் இணைந்து கொண்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கு வழி காட்டுகிறது என்பதால் இதனை அரைகுறையாக புரிந்து கொண்ட பலரும் பாசிசத்தை அதன் துவக்க கட்டத்திலேயே முறியடிப்பது என்ற வேலையை செய்யாதது மட்டுமின்றி பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற இன்றைய சூழலில் கூட பாசிசமா அது வந்து விட்டதா இல்லையா என்றும், நவ பாசிசம் என்றும் பல்வேறு கோணங்களில் பூதக்கண்ணாடி வைத்து ஆய்வு செய்து கொண்டுள்ளனர்.
பாசிசத்தை வீழ்த்துவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திலேயே பாசிச எதிர்ப்பு பிரிவையும் உள்ளடக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பாசிசத்தை வீழ்த்துவதற்கானபோராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கம்யூனிச அகிலத்தின் வழிகாட்டுதல் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமானது என்ற வகையில் தோழர் டிமிட்ரோவின் பிறந்த தினத்தில் புரிந்து கொண்டு களமாடுவோம். பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியையும் கட்டி அமைத்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி முன்னேறி செல்வோம்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்







