வினவு தளத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற முன்னாள் மார்க்சிய-லெனினிய அமைப்பைச் சேர்ந்த சிலர், கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர்கள்தான் சிறந்த அமைப்பு என்பதைப் போலவும், அவர்களைப்போல வறட்டுதனமாகவும், குறுங்குழுவாகவும் சிந்திக்காதவர்கள் அனைவரையும், அவர்களின் பூர்வாசிரம வழக்கத்தின்படி திரிபுவாதிகள், பிளவுவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்றெல்லாம் நாமகரணம் சூட்டி, ‘அரசியல் பார்ப்பனர்களைப்’ போல செயல்பட்டு வருகிறார்கள்.

வினவு தளத்தை இயக்கி வந்த இருவரை பல்வேறு சேறடிப்புகள் செய்து 2020ஆம் ஆண்டு வெளியேற்றிவிட்டு, அவர்களுடன் பலரும் தொடர்பு கொண்டு இரகசியமாக செயல்பட்டதாக கதையளந்தனர். ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக புரட்சிகர அமைப்பை பிளவு படுத்தி நாசம் செய்தனர். அதன்பிறகு புரட்சிகர அமைப்பில் இருந்து சிறு கும்பலாக வெளியேறிய பின்னரும் அறிவு நாணயம் சிறிதும் இன்றி அந்த அமைப்புகளின் பெயர், தளம் அனைத்தையும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர், இந்த லட்சணத்தில் தனக்குதானே ’புரட்சியாளர்கள்’, ’சித்தாந்த புலிகள்’ என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டு சுயஇன்பம் காண்கின்றனர்.

வினவு தளத்தை நடத்துகின்ற மிக சொற்பமான சிலர், ஏதோ செயல்பட்டு வருகிறார்கள் என்று நமது பணியை பார்க்கப் போனால் நக்சல்பாரி அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளை திரித்தும் புரட்டியும் செயல்பட்டு வருகின்ற போதிலும் துணிச்சலுடன் பிறரை வசைபாடுவதாலும், நக்சல்பாரி அரசியலுக்கு தாங்கள் தான் முழு குத்தகைதாரர்கள் என்பதைப்போல வாய்ச் சவடால் அடித்து வருவதாலும், ஜனநாயக உணர்வும் புரட்சியின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு சில அணிகள் அவர்களின் பின்னால் நிற்பதாலும்  அவர்களுக்கு சில விடயங்களை புரிய வைக்க வேண்டியது எமது கடமையாக உள்ளது.

அவர்களின் அண்டப்புளுகுகளையும் நம்புவதற்கு தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை என்றபோதிலும் அவர்களின் அரசியல் அடாவடித்தனங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டியுள்ளது.

முதலாவதாக இந்தியாவில் மார்க்சிய-லெனினிய இயக்கம் தோன்றியபோது அதை ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியில் இருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பதை விளக்குகின்ற வகையில் ஆறு அடிப்படை நிலைப்பாடுகளை முன்வைத்தது.

  1. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையையே சிந்தாந்த வழிகாட்டியாகும்.
  2. இந்திய சமுதாய அமைப்பு அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ தன்மை கொண்டது.
  3. ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை தூக்கி எறிவது கட்சியின் கடமை.
  4. விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாக கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி என்ற புரட்சியின் தன்மை.
  5. பிரதான-அடிப்படை முரண்பாடுகள்: ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டிற்கும் உள்ள முரண்பாடு; நிலப்பிரபுத்துவத்திற்கு பரந்துபட்ட மக்களுக்கும் உள்ள முரண்பாடு ஆகிய இரு அடிப்படை முரண்பாடுகள்: நிலப்பிரபுத்துவத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடே புரட்சியின் இன்றைய இடைக் கட்டத்தின் பிரதான முரண்பாடு.
  6. நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்ற இராணுவ போர்த் தந்திரம்

இந்த ஆறு அடிப்படை நிலைப்பாடுகளில் முக்கியமானது நீண்டகால மக்கள் யுத்த பாதை என்ற இராணுவ போர் தந்திரமாகும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இராணுவ போர் தந்திரத்தை வினவு என்று தற்போது பேசிக் கொண்டிருக்கும் சிலர் 2018 ஆம் ஆண்டிலேயே கைவிட்டு விட்டனர்.

“கும்மிடிப்பூண்டி தொடங்கி கன்னியாகுமரி வரை, கோவை தொடங்கி நாகப்பட்டினம் வரை நகரப் பேருந்துகளில் ஏறி பயணித்து சென்றடையலாம். அந்த அளவிற்கு நகரங்கள் பெருகி, அவற்றுக்கு இடையிலான தொடர்புகள் அதிகரித்து விட்டன. அன்று ஒரு பெருநகரம் மட்டுமே இருந்தது. இன்று பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகமாக நகராட்சிகள் தமிழகத்தில் தான் உள்ளன. இதனால் நீண்ட கால மக்கள் யுத்த பாதையை தொடர முடியாது என்ற கருத்துக்கு வருகிறோம்.”

என்று நீண்டகால மக்கள் யுத்த பாதையை கைவிட்டு விட்டனர். அப்போதே அதன் மற்றொரு அம்சமான தேர்தல் புறக்கணிப்பும் காலாவதியாகிவிட்டது. அதிலும் நாடு தழுவிய நிலையை கணக்கில் கொள்ளாமல் இன்று அவர்களால் தூற்றப்படும் திராவிட அரசுகளின் முனைப்பால் விளைந்த போக்குவரத்து வசதி, சாலை வசதி போன்ற அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு நாடு முழுமைக்கும் இதுதான் நிலை என்று முன் வைத்தனர்.

அவ்வாறு நக்சல்பாரி அரசியலின் முக்கிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அதனை தனது அணிகளுக்கும் 2018-ஆம் ஆண்டிலேயே தெரியப்படுத்தி விட்டனர். அவ்வாறு அணிகளுக்கு தெரிவித்த போது நக்சல்பாரிக் கட்சி எடுத்த அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்றான நீண்டகால மக்கள் யுத்த பாதையை ஏன் நிராகரிக்கிறோம் என்பதைப் பற்றி நேர்மையாக எந்த ஆய்வையும் செய்யவில்லை.

2009-ஆம் ஆண்டு தனது அணிகளுக்கு “இந்திய சமூக அமைப்பில் விவசாய உற்பத்தி முறையில் ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா என்பதனை பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்றே தெரிவித்தனர். இந்தியாவின் சமுதாய பொருளாதார படிவத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆய்வு செய்ய வேண்டிய அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை தனது அணிகளிடம் முன்வைத்த போதிலும் 2019 வரை அந்த ஆய்வை மேற்கொள்ள எந்த சாதாரண முயற்சியும் கூட எடுக்கவில்லை. ஆனால் ஆய்வுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட சிலர் நமக்கு பரிச்சயமான சிலரிடம் ’கொல்லைப்புற வழியில்’ இந்தியாவில் “நீண்ட கால மக்கள் யுத்த பாதை பொருந்தாது” என்பதை வாய் வழியில் கசிய விட்டனர்.

புரட்சிகர அமைப்பில் எந்த ஒரு அரசியல் கோட்பாட்டு முடிவையும் பருண்மையான ஆய்வு செய்து முன்வைக்காமல் மனம் போன போக்கில் பேசுவது, மார்க்சியத்திற்கு விரோதமான அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மற்றும் அகநிலை வாதமாகும். ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதத்தை செய்த சிலர் இன்று தன்னை ‘வினவு’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு சொந்த அணிகளை இன்று வரை ஏய்த்துக்கொண்டு வருகின்றனர்.

அன்று தொடங்கிய அவர்களின் சறுக்கல் புதிய ஜனநாயகம் இதழை கைவிட முடிவு செய்தது, உட்கட்சி பத்திரிக்கையை ஒழித்துக் கட்ட முடிவு செய்யாமல் முடிவு கட்டியது, விவசாயிகளின் விவசாய புரட்சி என்ற மைய அரசியலை கைவிட்டு விவசாயிகள் விடுதலை முன்னணியை கலைத்தது, மக்கள் திரள் அமைப்பின் தலைவர்களை பதவி வெறியர்கள், கட்டுப்பாடாதவர்கள் என இழிவுபடுத்தியது, கார்ப்பரேட்-காவி பாசிசம் என்ற அரசியலை திரித்து காவி-கார்ப்பரேட் என்று முன் வைப்பது, அந்த அறிவிப்பையும் பருண்மையான ஆய்வுகள் இன்றி அறிவித்தது, அப்போது அறிவிக்காமல் ஜனநாயக குடியரசு அமைப்போம் என்று திடீரென புரட்டுவது என்பது வரை அவர்களின் திரிப்புகள் தொடர்கிறது.

அவர்களின் திரிப்புகள் அனைத்தும் “அணிகள் ஏற்கும்படி செய்வதில்” சாமர்த்தியமாக இருப்பதால், அதன் உள்ளே புகுந்து அரசியல் அம்பலப்படுத்தல்களை செய்வது அவசியமாகிறது. மனஓசை, கேடயம் துவங்கி செங்கொடி, விடுதலை, மக்கள் யுத்தம், சமரன், சிபிஐ, சிபிஎம் வரை அனைவரையும் அவர்கள் அணுகிய முறையிலேயே நாமும் அணுக வேண்டியுள்ளது.

                                                                                             — தொடரும்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here