தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் தமது சிகிச்சைக்காக புகழ்பெற்றவை. அண்டை மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்டவையிலிருந்தும் கூட பெருவாரியான மக்கள் சென்னைக்கு சிகிச்சைக்காக படையெடுக்கிறார்கள். அந்த அளவிற்கு தரமான இலவச மருத்துவத்தை தந்து வருகின்றன சென்னையின் அரசு மருத்துவமனைகள்.

இந்த அரசு மருத்துவமனையில் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வார்டு பாய்களாக, ஸ்ட்ரக்சர் தள்ளுபவர்களாக என சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மூன்று முதல் பத்து ஆண்டுகளாக பணி செய்து வரும் இவர்களின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே காலை 6 மணிக்கு வந்தால் மாலை 5 மணி வரை வேலை செய்கிறார்கள் சில நேரங்களில் கூடுதலாக ஆறரை மணி வரை வேலை செய்கிறார்கள். சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பல்லாயிரம் தொழிலாளர்கள் இப்படி காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிகிறார்கள். அவர்களின் ரத்தத்தை, வியர்வையை உறிஞ்சி குடிக்கும் அட்டைகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இத்தகையவர்கள் செய்யும் வேலை என்பது தற்காலிகமானது அல்ல. வார்டை தூய்மை செய்வது, மாப்போடுவது, ஸ்ட்ரக்சர் தள்ளுவது உள்ளிட்டவை அன்றாடம் நடக்கின்ற நிரந்தரமான வேலைகள்.  அதாவது மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதும், நோயாளிகள் பல்வேறு துறைகளில் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு தங்குவதும் தொடர்கிறது. வார்டுகளில் எப்போதும் நோயாளிகள் நிரம்பியே இருக்கிறார்கள். அப்படி இருக்க அந்த நோயாளிகளுக்கான சேவையை தரும் இத்தகைய பணியாளர்களை மட்டும் நிரந்தரமாக எடுக்காமல் காண்ட்ராக்ட் முறையில் எடுத்துதான் மருத்துவமனைகளை இயக்கி வருகின்றன. அதிலும் கூட பேசியபடி ஊதியத்தை தராமல் பிடித்தம் எனும் பெயரில் வெட்டுகிறார்கள். ஏற்கனவே ஆண்ட அரசாங்கங்களின் தவறான பாதையிலேயே பயணிக்கிறது தற்போது ஆளும் த.வெ.க.வும்.

ரிப்பன் மாளிகை முற்றுகை!

சென்னை பெருநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியதை நாம் பார்த்தோம்.

சென்னை ரிப்பன் மாளிகையில் 800-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே மாதத்திற்கான முழு ஊதியம் வழங்கப்படாமை, புதிய வருகைப்பதிவு செயலி மூலம் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவது மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

வேலை செய்த நாட்களுக்கு உரிய முழுமையான சம்பளத்தை தர மறுக்கிறார்கள். பத்து நாட்கள் அல்லது 15 நாட்களுக்கான சம்பளத்தை மட்டுமே போடுகிறார்கள். அதுவும் பத்தாம் தேதி 12ஆம் தேதி என தாமதப்படுத்தியே தருகிறார்கள் என்றெல்லாம் பிரச்சனைகளை முன் வைத்து பேட்டி கொடுத்ததையும் நாம் பார்த்திருந்தோம்.

படிக்க:

 தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!

 தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!

ரிப்பன் மாளிகையில் கூடியவர்களின்  பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. அப்படி இருக்க சென்னையின் மிகப்பெரும் மருத்துவமனையான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை என ஒவ்வொரு மருத்துவமனைக்குள்ளும் சென்று பார்த்தால் கள நிலவரம் நம்மை மேலும் கவலைக்குள்ளாக்குகிறது.

தழைத்து நிற்கும் மனித நேயம்!

ஒரு நோயாளியை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்பொழுது சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி போர்டிகோவில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். என்ன பிரச்சனை என்று விசாரித்தேன். தனது போனை நேற்று மறந்து வைத்துவிட்டு சென்றதாகவும், அதை திரும்பப் பெற்றுச் செல்வதற்காக வந்துள்ளதாகவும், அதை எடுத்து வைத்திருக்கும் பணியாளர் சிறிது நேரத்தில் வரப்போவதாகவும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி வந்து தவற விட்ட  பொருளை ஒப்படைத்து ஆறுதலோடு பேசினார். வயதான பெண்மணியோ நன்றி பெருக்கோடு பணம் தர முன்வந்த போது அந்த பணியாளர் புன்னகையுடன் அதை மறுத்துவிட்டார்.

தினந்தோறும் இங்கே பொருளை மறந்து வைத்து விடுகிறார்கள் அல்லது ஸ்கேன், ஆப்ரேஷன் தியேட்டருக்கு போகும்போது  நகையை கழட்டி வைத்து விட்டு எடுக்க மறந்து விடுகிறார்கள். இப்படி  பலவற்றை பார்த்து வருகிறோம். உங்கள் பொருள் தானே? அது உங்களுக்குத்தானே சொந்தம்? அதை எடுத்து தருவதில் எனக்கு ஒரு  சந்தோஷம்,  என்று பேசி அனுப்பி வைக்கிறார். இப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக இருக்கும் பெண்மணிகள் அரைவயிற்று சோற்றுக்கு திண்டாடடும் நிலையில் இருப்பவர்கள் தான்.

அந்த மருத்துவமனையின் வளாகத்தில் நான் பார்த்தவரை மருத்துவர்கள் செவிலியர்களை தவிர்த்த யாரும் அரசு மருத்துவமனையின்   இலட்சணையுடன் கூடிய எந்த சீருடையும் அணிந்திருக்கவில்லை. இப்படி நான் பார்த்ததில் பெரும்பாலானோர் அந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தொடர்பு இல்லாத QPMS  தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேல் சட்டையையே அணிந்திருந்தார்கள். சென்னையில் 12 ஆயிரத்தை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால் கசப்பான புன்னகை தான் வெளிப்படுகிறது.

பீ-மூத்திரம் அள்ளித்தான் சமாளிக்கிறோம்!

இந்த வருமானத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஒரு  பணியாளரிடம் கேட்டார் எனது நண்பர். “சமாளிக்கிறது கஷ்டம் தான்; என்ன பண்றது சார்! இங்க வந்த பேஷண்டுகளுக்கு பீ-மூத்திரம் அள்ளுனா (பேம்ப்பர்ஸ் மாற்றி விட்டால்) அவர்கள் பார்த்து அம்பதோ, நூறோ கொடுப்பாங்க! அதைத்தான் சேர்ந்து வேலை செய்ற நாங்க எங்களுக்குள்ள பிரிச்சுக்குவோம். இப்படித்தான் சார் எங்க பொழப்பு ஓடுது” என்றார்.

கம்பெனி சார்பில் டீ, சாப்பாடு எல்லாம் தருகிறார்களா? என கேட்டதற்கு, “எதுவும் தருவதில்லை. நாங்க ஊட்டுல இருந்து கொண்டாந்து தான் சோறு திங்கறோம்” என்றார். “ நீ வாங்கி தரமாட்டியா சார் ஒரு வேளை சோறு?” என்று சிரித்துக் கொண்டே நண்பரிடம் கேட்டார்.  மருத்துவமனைக்கு நண்பர் வந்து இரண்டே நாளில் உரிமையுடன் பழகி உள்ளார்.

படிக்க:

 சென்னை அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை – மாறுபட்ட அனுபவம்.

 அரசு மருத்துவர்- ஏழை நோயாளி முரண்பாடு: தீர்வுகாண வழி என்ன?

வாழ்க்கையின் வலியை அவலத்தை பேசும் பொழுது கூட, அதையும் ஒரு வகையான கசப்பான புன்னகையுடன் கடந்து செல்கின்றனர் இந்த உழைப்பாளிகள். கம்பெனிக்காரனையோ அரசையோ சபிக்கவில்லை.

அதே நேரம் விஜய் வந்து விட்டதால் மாற்றம் வரும் என்ற மாயையும் இவர்களிடம் வெளிப்படவில்லை. “விஜய் வந்து மட்டும் என்ன சார் மாறிட போகுது?” என்கின்றனர்.

உழைத்து வாழும் இவர்களிடம் உள்ளுக்குள் கோபம் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மோடியின் மீது நிறையவே இருக்கிறது.  ஒரு மூத்த பெண்மணி “மூணு வயசு புள்ள சார்! அத நாசம் பண்றான் ஹிந்திக்காரன். அங்க சோறு இல்லாமல் தான் பொழைக்கிறதுக்காக நம்மூரை பார்த்து வரானுங்க. அந்த அளவுக்கு அங்கு அந்த நாட்ட நாசம் பண்ணி வச்சுருக்கான் மோடி. இங்க வர்ரவன் ஒழுங்கா இருக்கிறானா? வந்து நம்ம ஊர்ல இருக்குற பொண்ணுங்கள நாசம் பண்றானுங்க. இதுக்கு எல்லாம் மோடிதான் காரணம். மோடியை முதல்ல ஒதைக்கணும் சார்! என்று அவரின் புரிதலில் இருந்து ஆதங்கத்தை கொட்டினார்.

வர்க்க பாசத்துடன் ஜொலிக்கும் இவர்கள் யார்?

மருத்துவமனைக்கு வந்து தங்கி சிகிச்சை எடுக்கும் சாதாரண உழைக்கும் மக்களுடன் உறவினர்களாகவே இவர்கள் பழகுகின்றனர். பல்வேறு சேவைகளையும் செய்கின்றனர். அதாவது வர்க்க பாசம் இவர்களிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது.

என்னுடன் பேசியவர்கள் நம்மைப் போல் உழைக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒரு சிலரே. அவர்களின் நலன் கருதி  அவர்கள் பணிபுரிந்த வார்டையோ, அவர்களின் பெயர்களையோ இங்கு குறிப்பிடவில்லை. அவ்வளவு ஏன்? நான் அவர்களின் பெயரை கேட்கவே இல்லை.  இவர்களை நவீன கொத்தடிமைகளாக சுரண்டும் நிறுவனம் எது? அரசின் நிலத்தில், பல்லாயிரம் கோடி முதலீட்டில் உருவான அரசு மருத்துவமனையில், ஆயிரக்கணக்கானோரை பணியில் அமர்த்தி அவர்களின் உழைப்பு சக்தியை கொண்டு கோடிகளை குவித்து வரும் நிறுவனம் எது? அதையும் பார்ப்போம்.

QPMS எனும் சுரண்டல் கூட்டம்!

QPMS (Quality Property Management Services) என்பது சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி ஒருங்கிணைந்த சொத்து மற்றும் வசதி மேலாண்மை (Facility Management) நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு வணிக வளாகங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகளுக்குத் தேவையான ஒப்பந்த தொழிலாளர்களை (Contract Workers) வழங்கி மேலாண்மை செய்கிறது.

QPMS இன் ஒப்பந்த பணிகள்!

QPMS நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் பின்வரும் துறைகளில் பணியாற்றுகின்றனர்:

  1. தூய்மைப் பணி (Housekeeping & Janitorial): அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களைப் பராமரித்தல்.
  2. பாதுகாப்புச் சேவை (Security Services): வளாகங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு.
  3. தொழில்நுட்பப் பராமரிப்பு (MEP): மின்சாரம், இயந்திரங்கள் மற்றும் பிளம்பிங் வேலைகள்.
  4. உணவு வழங்கல் (Industrial Catering): தொழிற்சாலைகளுக்கான பெரிய அளவிலான உணவுச் சேவைகள்.
  5. பூந்தோட்டப் பராமரிப்பு (Landscaping): பசுமை வளாகங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்.
  6. கழிவு மேலாண்மை (Waste Management): கழிவுகளைச் சரியாகப் பிரித்து அகற்றுதல் உள்ளிட்டவைகளாகும் .

இப்படி தலைநகர் சென்னையை அதன் பல்வேறு துறைகளை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான அத்தியாவசிய பணிகளான மேற்கண்டவைகளை கான்ட்ராக்ட் முறைகளில் செய்து தருவதற்காகவே பிறப்பெடுத்துள்ள கொடூர நிறுவனம் தான் QPMS. இவர்களிடம் பணி நிரந்தரம் கேட்கக்கூடாது. ஒப்பந்த அடிப்படையில் தான் இவர்கள் ஒதுக்கும் நிறுவனங்களில், தரும் வேலை செய்து கொள்ள வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எஃப் மட்டும் பிடித்து தருவார்கள். இதுபோல் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முளைத்து இருக்கின்றன.

வாடிக்கையாளர் சேவை மட்டுமே உயர்தரம்!

வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் பலவற்றிற்கு நாங்கள் விரிவான வசதி மேலாண்மைத் தீர்வுகளை வழங்குகிறோம் ; உங்கள் வளாகத்தின் ஒவ்வொரு பகுதியும் கடிகார முள் போலத் துல்லியமாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, நம்பகமான குழுக்களை நிகழ்நேர டிஜிட்டல் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கிறோம். என பெருமை பொங்க அறிவிக்கிறது. (https://qpms.in/about-us/)

“இந்தியாவை உலகின் மிகத் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே எங்கள் நோக்கம். நாங்கள் சேவை செய்யும் ஒவ்வொரு இடத்திலும் சமரசமற்ற வசதி மேலாண்மைத் தரங்களை வழங்குவதன் மூலம் இதைச் செய்கிறோம்” என்று பீற்றிக்கொள்ளும் இவர்கள்தான் தமது பணியாளர்களுக்கு உலக தரத்திலான ஊதியத்தை அல்ல; உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையோ, சட்ட பூர்வ உரிமைகளையோ கூட வழங்க மறுக்கிறார்கள்.

‘மாற்றம்’அரசாங்கத்தில் வந்தால் போதாது!

“மாற்றத்திற்காக” என்று வாக்களித்தவர்களால்தான் விஜய் இன்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார். முதல்வர் விஜய், உழைக்கும் மக்களாக தலைநகரிலேயே அவதிப்படும் இத்தகைய தொழிலாளர்களை மதிப்புடன் பார்ப்பாரா? பணி நிரந்தரம் செய்து, ஒப்பந்த நிறுவனத்தை விரட்டி அடித்து, உழைக்கும் மக்களின் வயிற்றில் பால் வார்ப்பாரா? அல்லது முந்தைய ஆட்சியாளர்களின் வழியை பின்பற்றி வயிற்றில் ஏறி மிதிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here