“பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் ஆகப் படுமோசமான, ஆகப் பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட, ஆகப் படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கர தன்மைகொண்ட சர்வாதிகாரம்” என்று 1935-ஆம் ஆண்டிலேயே பாசிசத்தை வரையறுக்கிறார் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், பாசிச எதிர்ப்பு போராளியுமான தோழர் டிமிட்ரோவ்.

இந்த வரையறையின்படி பாசிசத்துக்கு ஒரு பொருளாதார அடித்தளம் உண்டு என்பதும், அந்த அடித்தளத்தை தகர்க்காமல் பாசிசத்தை வீழ்த்தமுடியாது என்பதும் தெளிவு.

பாசிசத்தின்
பொருளாதார அடிப்படை

பாசிசம் என்பது வெறும் கருத்தியலான, மத/இனவெறியை அடிப்படையாக கொண்டு பண்பாட்டு கலாச்சார தளங்களில் மட்டும் இயங்குவதல்ல மாறாக ஒரு குறிப்பிட்ட சாராரின் பொருளாதார நலன்களுக்காகவே இயங்குகிறது. ஆதலால் பாசிசத்துக்கு ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது என்பது விளங்குகிறது. ஆனால் அது எந்த பொருளாதார அடிப்படை?

பேராசான் மார்க்ஸ் வகைப்படுத்திய மனித சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்களில் இரண்டாம் கட்டமான அடிமை சமுதாயம் முதற்கொண்டே மனித உழைப்பைச் சுரண்டி சேர்த்த செல்வம், அதாவது நிலம், விலைபொருள், கருவிகள், விலைமதிப்புமிக்க பொருட்கள், பணம் போன்றன அந்தந்த காலகட்டத்தின் ஆளும்வர்க்கத்தினால் திரட்டப்பட்டுள்ளது. இவற்றை மறுஉற்பத்திக்கு பயன்படுத்தும்போது “மூலதனம்” என்று மாறுகிறது. இந்த மூலதனத்தின் முற்றுமுழுதான நோக்கம் இலாபம் மட்டுமே. முதலாளித்துவ அமைப்பில், மூலதனம் எந்த தொழிலில் நுழைந்தாலும் அது எப்படி மனிதகுலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுத்தள்ளும் என்றல்லாமல், அத்தொழிலின்மூலம் எப்படி இலாபத்தை அல்லது மூலதனத்தை மீண்டும் பெருக்கிக்கொள்ளலாம் என்று மதிப்பிடப்பட்டு மட்டுமே அக்குறிப்பிட்ட தொழிலில் முதலீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு தொழில்களில் மூலதனத்தை முதலீடாகப் போட்டு தொழில் தொடங்கும் முதலாளிகள் தங்களின் இலாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் தமது சேவகர்களான ஆளும்வர்க்கத்திற்கு வரி குறைப்பு, வரி சலுகைகள், அரசு கொள்முதல், போட்டியாளர்களை முடக்குவது, தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வகைதொகையில்லாமல் சுரண்டுவதற்கு சாதகமான சட்டங்கள், குறைந்த வட்டியில் கடன், கடன் தள்ளுபடி, நட்டஈடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.

இக்கோரிக்கைகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றித்தருபவர்களே ஆட்சி அதிகாரத்தில் நீடித்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.  இவ்வாறு முற்று முழுதாக இலாபத்தை மட்டுமே அடிநாதமாக கொண்டு இயங்குவதால் மூலதனம் ஒருபோதும் மக்கள்நலன் சாராதது. மூலதனத்துக்கும் மக்கள் நலனுக்குமிடையே எதிர்மறையான உறவே உள்ளது. அதனால்தான் இலாபம் அதிகரித்து பணக்காரர்கள்/முதலாளிகளின் சொத்து மதிப்பு கூடக்கூட மக்களின் வறுமையும் அதிகரிக்கிறது.

மூலதனமும் அரசும்

மூலதனத்தின் கொடூர சுரண்டலுக்காக அமல்படுத்தப்படும் கடுமையான வரிகள், விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு, இயற்கைவள சுரண்டல் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மூலதனத்திற்கு எதிராக அணிதிரளும்போது அவர்களை ஒடுக்க வேண்டிய தேவை எழுகிறது. அதை செய்வதற்காகவே உள்ள மூலதனத்தின் சேவகர்களான ஆளும் அதிகார வர்க்கம் வன்முறையை மக்களின் மீது ஏவுகிறது. நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும், மக்களின் உழைப்பையும் மூலதனத்தின் இலாபவெறிக்கு படையல் வைப்பதும், எதிர்க்கும் மக்களை ஒடுக்கும் பணிகளை சிறப்பாக செய்பவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாக பதவியில் அமர்த்தப்படுவார்கள். இதுவே முதலாளித்துவ “ஜனநாயகம்” எனப்படுகிறது.


இதையும் படியுங்கள்: இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வரலாற்று புரட்டுகளே ஆர்.எஸ்.எஸ்-சின் மூலதனம்!


இந்த ஜனநாயக அமைப்பில் குறைவான கூலி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் வாங்கும்சக்தி குறைவால் சுருங்கும் சந்தை, உற்பத்தி பொருட்களின் தேக்கம் போன்றவற்றால் மூலதனத்தின் இலாபம் குறைந்து மூலதனத்தின் கொள்ளைக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அவ்வாறு நெருக்கடி ஏற்படும் காலகட்டத்தில் மூலதனம் சொல்லிக்கொள்ளும்படியான இந்த ஜனநாயகக் கட்டமைப்பை தகர்த்துவிட்டு நிதி மூலதனத்தின் ஏகபோக கொள்ளைகளுக்கு வழிவகை செய்யும் மூர்க்கமான பாசிஸ்டுகளை அதிகாரத்தில் அமர்த்துகிறது. எப்போதெல்லாம் மூலதனத்திற்கு நெருக்கடி முற்றுகிறதோ அப்போதெல்லாம் உலகில் பாசிசமும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது அதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன.

மூலதனம்
என்னவெல்லாம் செய்யும்?

தொழிற்புரட்சியின் விளைவாக குவிந்த மூலதனத்துக்கான புதிய சந்தைகளுக்காகவும், உள்ளூர் முதலாளிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்காகவும் ஐரோப்பாவின் முதலாளிகளுக்கிடையே நடந்த போட்டியின் விளைவாக முதல் உலக போர் நடந்தது. அப்போரில் தோல்வி அடைந்ததால் ஜெர்மனியின் வசமிருந்த கொஞ்சநஞ்ச காலனி நாடுகளையும் பிற ஏகாதிபத்திய காலனிய நாடுகள் பங்குபோட்டுக்கொண்டன. இதனால் பாதிப்புக்குள்ளான ஜெர்மன் முதலாளிகள் ஹிட்லர் தலைமையில் நாஜிக்களை அரசு அதிகாரத்திற்குக் கொண்டுவந்தனர்.

இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினியையும், ஜப்பானில் ஜெனரல் ஹிடேகி டோஜோவையும் பதவியில் அமர்த்தி மீண்டும் உலகை மறுபங்கீடு செய்துகொள்ள கோடிக்கணக்கான மக்களை கொன்றுபோட்ட மாபெரும் இரண்டாம் உலகப் போரை நடத்தினர். உலகெங்கும் நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் போர்கள் அனைத்தும் இவ்வகையானதே.

“அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப்பின்னலின் ஒரு பகுதியாக மாறுவதற்கு உலக தலைவர்களை தூண்டுவது. முதலில் இந்த தலைவர்கள் மீளமுடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் பின்பு நமது அரசியல், பொருளாதார, இராணுவ தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக அவர்கள் தங்கள் மக்களுக்கு தொழில் பூங்காக்கள், மின்சக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைத்து தருவதன் மூலம் தங்கள் நிலையை பலப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்க நாடுகளின் பொறியியல், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள்” – ஜான் பெர்கின்ஸ் (ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்).

லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து நடக்கும் ஆட்சிக்கவிழ்ப்புகளும், மத்திய ஆசியா, எகிப்து, துனிசியா போன்ற நாடுகளின் வண்ணப்புரட்சிகளையும் நடத்தும்,  சிலி-யின் சால்வடார் அலாண்டே, ஈராக்கின் சதாம் உசேன், வெனிசுவேலாவின் சாவேஸ் போன்ற தனக்கு ஒத்துவராத தலைவர்களைக் கொல்லவும் செய்யும்.

உயிர்வாழ்வதற்காக நிராயுதபாணியாகப் போராடும் மக்களை சுட்டுத் தள்ளவும் செய்யும் (ஸ்டெர்லைட்), தனது இலாபவெறிக்காக ஒன்றுமறியா அப்பாவிமக்களை தூக்கத்திலேயே துடிக்கத்துடிக்க கொன்றும்போடும் (போபால் யூனியன் கார்பைடு), பாக்சைட் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்க்கும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் பழங்குடி மக்களை பலவந்தமாக அடித்தும் விரட்டும், தனது நாட்டு ஆயுத கம்பெனி முதலாளிகளுக்காக நாடுகளுக்கிடையே போர்களை தூண்டியும் விடும். இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் மூலதனம் போகும் என்பதற்கு மிகச் சில உதாரணங்கள் இவை.

மீளாநெருக்கடியில்
மூலதனம்!

2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியாத மூலதனம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை மக்கள் தலையில் கட்டுவதற்கு ஏதுவாக பல நாடுகளிலும் பாசிஸ்டுகளை பதவியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில்தான் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் முதல் இந்தியாவின் நரேந்திர மோடி வரை பல நாடுகளில் கடைந்தெடுத்த பாசிஸ்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தேசிய வெறி+மதவெறி என்றால், முன்னாள் சோவியத் நாடுகளில் தேசிய வெறி+இனவெறியும், இலங்கையில் மதவெறி+இனவெறியும், அமெரிக்காவில் இனவெறி+நிறவெறிம், உக்ரைன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளில் நவநாஜிக்களின் எழுச்சியும் பாசிசத்தின் பிடியில் நாடுகள் ஒவ்ஒன்றாக போய்க்கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

“பாசிசம் அரசியல் துறையில் மட்டுமல்லாது அரசின் அனைத்துத் துறைகளிலும் பற்றிப்பரவி வருகிறது. மக்களும் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளுக்குக் காரணம் மூலதனத்தின் சுரண்டல் இல்லை, வேற்று நபர்கள், வேற்று இனத்தவர், வேற்று நிறத்தவர், வேற்று மொழியினர், வேற்று மதத்தவர், வேற்று சாதியினர்தான் என்று நம்பவைக்கப்படுகிறார்கள். பாசிஸ்டுகளின் இத்தகைய பிரச்சாரத்திற்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. மட்டுமல்லாமல், பாசிசத்தை நேரடியாகவே அனுபவித்தாலும், கண்டும்காணாமல், ஒன்றும் செய்ய விரும்பாமல் கடந்துபோகும் பெரும்பாலானவர்களின் மௌனத்திலும்தான் பாசிஸ்டுகளின் வெற்றி அடங்கியுள்ளது.”

மூலதனத்தின் செல்லப்பிள்ளைகளான பாசிஸ்டுகள் அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்துத் தளங்களில் பரவி நாட்டின் சுதந்திரமான அமைப்புகள் என ஜனநாயகவாதிகள் சொல்லிக்கொள்ளும் பத்திரிகை, ஊடகம், தேர்தல் ஆணையம், நீதித்துறை, கல்வி, போலீசு, இராணுவம், விசாரணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்திக்கொண்டு மக்களின் மனங்களை கட்டுப்படுத்தி வருகிறார்கள். இல்லாவிட்டால் உலகிலேயே அறிவாளிகள், ஜனநாயகவாதிகள் “நிரம்பி வழியும்” அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் போல ஒரு அடிமுட்டாள் அதிபராக முடிந்திருக்குமா, இல்லை இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை துள்ளத்துடிக்கக் கொன்ற கொலைகாரர்களும், இலங்கையில் 1-1/2 லட்சம் தமிழர்களை குவியல் குவியலாகக் கொன்றுபோட்ட இனப்படுகொலைகாரர்களும் பதவிக்கு வரமுடிந்திருக்குமா?

கம்யூனிசம்
ஒன்றுதான் அருமருந்து!

பாசிசத்தின் பிடியிலிருந்து உலகை மீட்கவும், பாசிஸ்டுகளுக்கு நிரந்தரமாக முடிவுகட்டுவதற்கும் சுதந்திர சிந்தனையாளர்களும், முற்போக்குவாதிகளும், ஜனநாயகவாதிகளும் சொல்வதுபோல வெறும் கருத்தியல் தளத்திலான பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகள் மட்டும் போதாது என்பதை தோழர் டிமிட்ரோவின் மேற்கண்ட வரையறையிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.


இதையும் படியுங்கள்: தெற்கு உலகை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிதி மூலதனம்! உட்சா பட்நாயக்.


பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் பக்கவிளைவு என்ற வகையில் அதன் ஆணிவேரான நிதி மூலதனத்தை தகர்த்தெறிய வேண்டும். அதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளையும், நிதி மூலதனத்தின் அடிப்படையில் இலாபத்தைமட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்புக்கு மாற்றாக மக்கள் நலனை மட்டுமே பொருளாதார அடித்தளமாகக் கொண்டுள்ள சோசலிசம்/கம்யூனிசம் தான் ஒரே மாற்று.

உலகில் எப்போதெல்லாம் பாசிசம் எழுச்சியடைகிறதோ அப்போதெல்லாம் அதனை மோதி வெற்றி கண்டவர்கள் கம்யூனிஸ்டுகளே. இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியை நாற்சந்தியில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டது முதல் ஹிட்லருக்கு அவனது பாதாள அறையிலேயே சமாதி கட்டியது வரையில் அனைத்தையும் செய்து காட்டியது கம்யூனிஸ்டுகள்தான். அந்த வகையில்தான் உலகையே மீண்டும் விழுங்கிவரும் பாசிசத்தை வீழ்த்தவேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் உண்டு. அதற்காக கம்யூனிஸ்ட்களுடன் கைகோர்க்கு வேண்டிய கடமை ஒவ்வொரு முற்போக்குவாதிக்கும் உண்டு.

“பாசிசம் என்பது முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது மிகவும் கொடூரமாக கோரமாக நடத்தும் தாக்குதலாகும்;

பாசிசம் என்பது கடிவாளம் இல்லாத இனவெறியும் ஆதிக்க வெறிபிடித்த யுத்தமாகும்;

பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குத்தனமும் எதிர்ப்புரட்சியும் ஆகும்;

பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதி ஆகும்” – தோழர் டிமிட்ரோவ் (ஐக்கிய முன்னணி தந்திரம்).

என்பதை சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டியது ஜனநாயகத்தையும், மக்கள் நலனையும், தன் சொந்த நலனையும் விரும்பும் ஒவ்வொருவரின் தற்போதய கடமையாகும். நமது நாட்டை பீடித்துள்ள கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளுக்கு எதிரான ஒவ்வொருவரையும் இணைத்துக் கொண்வோம்,

ஐக்கிய முன்னணியைக் காட்டுவோம்!

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்!

சிவராமன்

புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here