“அரசுகள் – அவை எதேச்சதிகார அரசுகள் ஆயினும் சரி; குடியரசுகளாயினும் சரி; அவர்களுடைய பிரதேசங்களில் இருந்து அவரை (கார்ல் மார்க்சை) வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் ஆயினும் சரி; அதிதீவிர ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி; அவர் மீது அவதூறு குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவர் மிஞ்சிவிட போட்டி போட்டனர்;

இவற்றையெல்லாம் அவர் (மார்க்ஸ்) துடைத்து விட்டுக் கொண்டார். நூலாம்படையைத் தள்ளி விடுவதைப் போல துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் அவர் பொருட்படுத்த வில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போது தான் அவைகளுக்குப் பதிலளிப்பார்;

கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களில் இருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் சகல பகுதிகளில் இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார்; நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந் தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இருந்ததில்லை; யுக யுகத்திற்கும் அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்”.

(1883-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ஆசான் கார்ல் மார்க்ஸ் லண்டன் ஹைகேட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட போது அவருக்கு இறுதிவரை தோள் கொடுத்து நின்ற ஆசான் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையே மேலே காண்பதாகும்.)

கார்ல் மார்க்ஸ் மரணமுற்று அடக்கம் செய்கின்ற பொழுது, அவர் குறித்து ஏங்கெல்ஸ் மேற்கண்டவாறு நிகழ்த்திய உரை வெற்றுப் புகழுரை அன்று. மாறாக மனித இனம் தோன்றி பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில், மேலும் மனித குலம் எந்தெந்த வகைகளில் எல்லாம் பரிணாம வளர்ச்சி பெற்று இறுதியில் கம்யூனிசம் எனும் பொன்னுலகத்தை அடையும் என்பதற் கான இயக்கவியல் பொருள்முதல்வாத மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத விஞ்ஞான உண்மையை மார்க்ஸ் தெள்ளத் தெளிவாக உலக மக்களிடையே கொண்டு சென்று சேர்த்தார் என்பதால் மட்டுமல்ல; அந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் மூலம் மனித இனம்,  இணக்கம் காண முடியாத அளவிற்கான வர்க்கங்களாக பிளவுபட்ட பிறகு, தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் ஒட்டச் சுரண்டப்படுகின்றபோது முதலாளி வர்க்கத்தை எதிர்த்து இயற்கையாகவே தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணையச் செய்யும்; தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து முதலாளி வர்க்கத்தை முறியடித்து வீழ்த்தும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வெற்றி கொள்ளும் – என்பதை விஞ்ஞான பூர்வமாக பறையறிவித்தார் மார்க்ஸ்.

படிக்க:

 மார்க்ஸ்  லெனின்: உண்மை அறிவோம்! வினையாற்றுவோம்!!

 ஆசான் மார்க்ஸ் பற்றி அவரது இளமைக் காலத்து சகாக்கள் என்ன கூறுகின்றனர்?

இதனால் அச்சம் கொண்ட முதலாளித்துவ நாடுகள், ‘முதலாளித்துவ தலைவர்கள்’ தான்,  மேலே ஏங்கெல்ஸ் சுட்டிக் காண்பித்தவாறு ஆசான் கார்ல் மார்க்சை சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆட்படுத்தினர் என்பதே உண்மை. தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் முதலாளி வர்க்கத்தால், அவற்றின் ஏவல் படைகளால் விவரிக்க இயலாத துயரங்களை தொடர்ந்து அளித்த போதும், தமது குடும்பம் வறுமையின் உச்சத்தில் இருந்த போதும், தமது அருமை குழந்தைகளை பறி கொடுத்து தவித்த போதும் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து மாறாது தமது இலட்சியத்தை நிறைவேற்ற இறுதிவரை அரும்பாடுபட்ட தியாக சீலர் தான் – மாபெரும் மேதை தான், ஆசான் காரல் மார்க்ஸ்.

ஆசான் கார்ல் மார்க்ஸை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? அவர் வழியில் எவ்வாறு பயணிக்க முற்படுவது?

எதிரி வர்க்கமான பெரு முதலாளிகள் – பெரும் பணக்காரர்கள் – நிலச்சுவான்தாரார்கள் – லேவாதேவிக் கொள்ளையர்கள் – ரியல் எஸ்டேட் அதிபர்கள் – சாதி மத வெறியர்கள் என்போர் தனியே கிடந்து விட்டுப் போகட்டும். அவர்களை நம்முடன் அணி சேர்க்கவே முடியாது.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினர், உழைக்கும் மக்கள் கார்ல் மார்க்ஸை எந்த அளவிற்குப் புரிந்திருக்கிறார்கள்? சமூக அக்கறை, பத்திரிகைகள் வாசித்தல், நூல்கள் படித்தல் போன்றவற்றில் அறவே அக்கறை இல்லாதவர்களைக் கூடத் தள்ளி விடுவோம். ஆனாலும் அவர்களை விடாது துரத்தி வென்றெடுத்துத் தான் ஆக வேண்டும்.

ஆனால் இவற்றை பின்பற்றுவதாக கூறிக் கொள்வோரும்,  ‘நானும் முற்போக்காளன்’ தான்; என்னால் இயன்ற அளவு அமைப்பு களுக்காகப் பணியாற்றியவன் தான்; ஆனால் குடும்ப சூழ்நிலை என்னவோ என்னை ஒரு வரையறைக்குள் மட்டுமே நின்று செயல்படத் தூண்டுகிறது; என்னால் இந்த அளவிற்குத் தான் செயல்பட முடியும்; செயல்பட்டாலும் கூட எனக்கு அமைப்பில் முன் வரிசையில் முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்…’ என்ற பாணியிலான வகைப்படுத்தப்பட்ட ‘தோழர்கள்’ எனப்படுவோரை எந்த கணக்கில் சேர்ப்பது என்பதுதான் முக்கியமான கேள்வி?

இன்னும் சில இளசுகள் துடிப்போடு உள்ளே வருகிறார்கள்; சிறிது காலம் உழைக் கிறார்கள்; பின்பு சுகபோகத்தை நாடி ஒதுங்கி விடுகிறார்கள். இன்னும் சில நடுத்தர வயதினர் எதிர்பார்க்கும் அளவைவிட கூடுதலாகவே உழைக்கிறார்கள்; ஆனால் குடும்ப நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் என்னென்னவோ வியாக்கியானங்களை கூறிவிட்டு முற்றிலுமாக ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு மார்க்சியம் கசக்க ஆரம்பித்து விடுகிறது; அல்லது ஊறுகாயைப் போல தொட்டுக்கொள்ள மட்டும் பயன்படுத்தத் தூண்டுகிறது. அப்பொழுது தானே தாமும்  முற்போக்காளன் தான் எனக் காட்டிக்கொள்ள முடியும். இந்த வியாதி உழைக்கும் தொழிலாளர்கள் பலரையும் கூட பற்றி கொண்டுள்ளது என்பதுதான் வேதனையிலும் வேதனை.

படிக்க:

 ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்…! மார்க்சியம் பயில்வோம்!

♦ இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சொன்னது தான் என்ன?

இவை யாவற்றுக்கும் மத்தியில் தான் எண்ணற்ற இளைய தோழர்கள் முதல் முதிய தோழர்கள் வரை சமூக அக்கறையுடன் புரட்சிகர சமூக மாற்றத்திற்காக தியாக உணர்வுடன் – அர்ப்பணிப்புணர்வுடன் சகல துரோகங்களையும், இடற்பாடுகளையும் கடந்து, களம் இறங்கி பணியாற்றுகிறார்கள் என்பதையும் கண்கூடாய்ப் பார்க்கிறோம்.

ஆசான் காரல் மார்க்ஸ் குடும்பத்தின் பின்புலம்;  அவரது அருமைக் காதலியும் இணையருமான ஜென்னி குடும்பத்தின் (மார்க்ஸ் குடும்பத்தை விடவும் கூடுதலான) பின்புலம் – இவர்களின் கல்வித் தகுதி, அறிவாற்றலுக்கு… அவர்கள் சுகபோக வாழ்வையே லட்சியமாகக்  கொண்டிருக்க விரும்பி இருந்தால் எப்பேர்ப்பட்ட குபேந்திர வாழ்க்கையை நடத்தி இருக்க முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; அவர்களின் வரலாற்றைப் படித்த யாவரும் உணரக்கூடும்.

அப்படிப்பட்ட தியாக சீலர் கார்ல் மார்க்ஸும் அவரது குடும்பமும் ‘தங்கள் வாழ்க்கை மட்டும் சிறக்க இருந்தால் போதும்; உலகம் முழுமையும் ஏழ்மையிலும், வறுமையிலும் ‘நரக வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருந்த கோடானு கோடி உழைக்கும் மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன?’… என்று சிந்திக்க வில்லை. அத்தகைய உழைக்கும் மக்களின் விடியலுக்காக அவர் செலுத்திய மகத்தான பங்களிப்பே – தியாகமே  இன்று உலகம் முழுவதும் உழைக்கும் மக்களால் மட்டுமல்ல; பொறுப்பு வாய்ந்த முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட அவரை உயரத்தில் வைத்து கொண்டாடும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் அவலத்தைத் துடைப்பது எப்படி?

இந்திய ஒன்றிய அளவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் தலை விரித்தாடும் இக்காலச் சூழலில் அதனை முறியடித்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும், சாதி மதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்று சேர்தல் மூலமாகவும் மற்றும் மகத்தான ஐக்கிய முன்னணி உருவாக்கி களம் கண்டு போராடுவதன் மூலமாகவும் முறியடித்தாக வேண்டிய அவசர அவசியக் கடமையை எதிர்கொண்டுள்ளோம்.

ஆனால் தற்போதைய தமிழ்நாட்டின் நிலைமை என்ன? இப்படிப்பட்ட கார்ப்பரேட் காவிப் பாசிசம் குறித்து உரத்த குரல் எழுப்பும் ஆட்சி அதிகாரச் சூழல் உருவாகி உள்ளதா? குறைந்த பட்சம் தந்தை பெரியார், அண்ணா வழி வந்தோர் என மார் தட்டிக் கொள்வோர் ஆட்சியாவது மலர்ந்திருக்கிறதா? மாறாக மறைமுகமான ஆர் எஸ் எஸ்  – பாஜக –  இந்துத்துவ காவிப் பாசிஸ்டுகளின் பினாமி ஆட்சியே தற்குறி நடிகர்  விஜய் தலைமை யிலான ‘தவெக ஆட்சி’ எனும் பெயரில் உருவாகித் தொலைந்து விட்டது.

மாநில – தேசிய – சர்வதேசிய அளவில் சமூகப் பொருளாதார அரசியல் நிலைமைகள் உலக உழைக்கும் மக்களுக்கு மிகவும் சவாலான அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாட்டை சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணராமல், சமூகத்தில் மிக முக்கிய பங்காற்ற வேண்டிய தமிழ்நாட்டு இருபால் இளசுகள் விஜய்க்கு விசில் அடிப்பதும், கொச்சையான மற்றும் செக்ஸியான அரசியலே தமது விடிவுக்கான அரசியலாக தேர்ந்தெடுத்துக் கொண்டி ருப்பதும், சாதி மதவெறி உணர்வுகளுக்கு ஆட்படுவதும்….

படிக்க: 

♦ அமேசான் அமோக விற்பனை! மார்க்ஸ் சொன்னது உண்மைதான்!

 பூனைகள் கண்ணை மூடிக் கொள்வதால் பூலோகம் இருண்டு விடாது!

இவற்றிற்காக எண்ணற்ற ரீல்ஸ், ஊடகப் பக்கங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், விர்ச்சுவல் வாரியர்ஸ்,ஐ.ட்டி விங், ரூட் மாஃபியா போன்றவற்றில் 24 மணி நேரமும் மூழ்கிக் கிடந்து விஜய்க்கு கொடி தூக்குவதும், விடியலுக்கான திசை தெரியாமல், குடும்பப் பெரியோருக்கும், சமூகப் பெரியோருக்கும் அடங்காதோராய் தறி கெட்டுப் போய் தத்தளிப்பதும் ‘காலக் கொடுமை’யாக இருக்கிறது. இப்படிப்பட்ட இளசுகளை சகல வழிகளிலும் உள் நுழைந்து திருத்தி மீட்டெடுக்க வேண்டிய பாரியக் கடமை முற்போக்காளர்கள் கரங்களில் குவிந்து கிடக்கிறது.

அரசியலற்ற தற்கால தமிழக அரசியல் சூழல் மிகவும் ஆபத்து நிறைந்தது. இந்த தற்குறி நடிகர் விஜய்யின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் பிழைப்புவாதிகளாகிவிட்டனர்; அவர்கள் திருந்த வேண்டும்; இல்லையேல் அவர்களது அடுத்த கட்ட நாணயமான கட்சித் தலைவர்கள் – அணிகளை உண்மையை  விளக்கி வென்றெடுக்க வேண்டும். இடதுசாரிகளோ சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறப்பான முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தில் இருத்தப்பட்டு உள்ளனர்.

இப்படி எண்ணற்ற பணிகளை கூர்மையாக முன்னெடுப்பதன் மூலமே ஆசான் காரல் மார்க்ஸின் வழிகளை பின்பற்றுவதற்கான தகுதிகளைப் பெற்றவர்களாவோம்.

கி.மு. – கி.பி. தேவை இல்லை!

கா.மு. – கா.பி. என மாற்றியமைப்போம்!

இப்போது முடிவுக்கு வரலாம். மேலே கண்ட ஏங்கெல்ஸின் இரங்கல் உரையின் இறுதி வரிகளில் குறிப்பிட்டுள்ள மனித குல வரலாற்றில்….

‘யுக யுகத்திற்கும் அவர் (மார்க்ஸ்) பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்’ என்ற சொற்றொடர்கள், சொல்லிக் கொள்ளப் படும் ‘போலித் தலைவர்கள்’ சிலர் மறைவுறும் போது வெற்று புகழுரைக்கு உட்படுத்துவது போல் அன்றி,  உலகின் உழைக்கும் மனித குலத்தின் விடியலுக்காக ஆகச் சிறந்த விஞ்ஞானியாக – போராளியாக நின்று உழைத்தார்; தியாகம் புரிந்தார் என்பதை பறைசாற்றும் விதத்தில் தான் அவ்வார்த்தைகளை ஏங்கெல்ஸ் பிரயோகப்படுத்தினார் என்பதே உண்மை.

அந்த வகையில் ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ வகுத்தளித்தப் பாதைகளில் உலகின் உழைக்கும் மக்கள் பயணப்படுவதைத் தவிர விடியலுக்கு பிரிதொரு வழி இல்லை; இல்லவே இல்லை. தற்போது இந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிச சூழலில், கார்ப்பரேட் – காவிப் பாசிஸ்டுகளை வேரறுத்து முன்னேறிச் செல்ல ஆசான்கள் வகுத்தளித்த பாதைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்! ஆசான்கள் வழியில் மேலும் முன்னேறுவோம்!

இவற்றால் தான் ‘உயிரினங்களின் தோற்றம்’ குறித்து கண்டறிந்த விஞ்ஞானி சார்லஸ் டார்வினைத் தொடர்ந்து மனித இனம் ஒன்று உருவான பின் அவற்றின் வளர்ச்சி போக்கைத்  துல்லியமாகக் கண்டறிந்து வரையறுத்து விஞ்ஞான பூர்வமாக உலகுக்கு அறிவித்த ஆசான் காரல் மார்க்ஸே  மனித குல வரலாற்றின் முக்கியப் புள்ளியாக அமைந்துவிட்டார்.

எனவேதான், இனி மனித சமூக வரலாற்றை வரையறுத்துக் கூறுகின்ற பொழுது கிறிஸ்துவுக்கு முன் – கிறிஸ்துவுக்கு பின் (கி.மு. – கி.பி.) என்பதை மாற்றி, கார்ல் மார்க்ஸுக்கு முன் – கார்ல் மார்க்ஸுக்குப் பின் (கா.மு. – கா.பி.) என வரையறுத்து பிரகடனப் படுத்துவதே சாலச் சிறந்த முடிவாகும். பழைய பிற்போக்குத் தனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுமாகும். உலகளாவிய அளவில் இந்த கோரிக்கை முழக்கம் முன்னிலைப்படுத்தப் படட்டும்! குறிப்பாக பாட்டாளி வர்க்க, அறிவு ஜீவிகளால் முன்னெடுக்கப்படட்டும்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here