இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சொன்னது தான் என்ன?
சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து அதற்கு சம்பந்தமே இல்லாத கூட்டத்தின் வழிவந்த ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிற்கு – மக்களுக்கு பாடம் புகட்ட முயன்று அதிலும் தோற்றுப் போனார்.

சான் கார்ல் மார்க்ஸின் ‘இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்’  தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் இந்தக் கடைந்தெடுத்த மூடர் R.N. ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

‘இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்’ என்ற அரிய நூல் தமிழ், இந்தி, மலையாளம் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் வெளிவந்துள்ளன. ஆனால் ஆர் என் ரவி இவற்றையெல்லாம் படிப்பதற்கு வாய்ப்பே துளியும் இல்லை. அவர் பக்கா சனாதனவாதியாதலால் அதற்கானத் தகுதியையும் அவர் பெற்றவர் இல்லை.

அந்நூலில் ஆசான் மார்க்ஸ் சுருக்கமாக என்ன சொல்கிறார் எனில்…

‘அரேபியர்கள், துருக்கியர்கள், முகலாயர்கள், மங்கோலியர்கள், இந்தியா மீது படை எடுத்தனர். ஆனால், அவர்களால் இந்திய நாகரீகத்தை அழிக்க இயலவில்லை. மாறாக அவர்கள் இந்தியமயமாக்கப்பட்டனர்.

இந்தியாவை வென்றவர்களில் பிரிட்டிஷ்காரர்கள் தான் இந்திய உள்ளூர் சமூகங்களை உடைத்து அழித்தனர். உள்ளூர் தொழில்களை நசுக்கினர். எதுவெல்லாம் மிக உயர்வாக இந்திய நாகரீகத்தில் கருதப்பட்டதோ அனைத்தும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. இந்த அழிவு வேலைகளைத் தவிர, வேறு எதையும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு தரவில்லை…:

‘… இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய துன்பம்,  இந்தியா இதற்கு முன் எதிர்கொண்ட எந்த துன்பத்தையும் விட ஆழமானதும் முடிவில்லாததுமாக உள்ளது…’

1857 இந்திய சிப்பாய் கழகத்தின் போது அதனை ஆதரித்து மார்க்ஸ் தன்னுடைய இறுதி வரிகளில் இவ்வாறு எழுதினார்:

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து துரத்தப்படல் வேண்டும்’ – என்பதே அது.

இவை அனைத்தையும் ‘முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல’ மூடி மறைத்துவிட்டு தெனாவட்டாக பார்ப்பன அதிகாரத் திமிரில் உளறி கொட்டுகிறார்; புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் ரவி. இவரது மார்க்ஸ் மற்றும் இந்திய மார்க்சியர்கள் மீதான இவ்வளவு கேடுகெட்ட அற்பத்தனமான காழ்ப்புணர்வுக்கு – வசை பாடுதலுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

இவற்றை மையமாகக் கொண்டே இந்த புல்லுருவி பார்ப்பன அதிகார வெறி பிடித்த RN.ரவி மார்க்ஸை – அவர் வழி பின்பற்றுவோரை துளியும் வெட்கமின்றி,  உண்மைக்கு மாறான புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

படிக்க:

 ஆசான் மார்க்ஸ் பற்றி அவதூறு பரப்பும் பார்ப்பனக் கொழுப்பும் – அதிகார வெறியும் பிடித்த RN ரவி!

 மதுரையில் நடந்த முருகன் மாநாடு! முன்பு நடந்த மார்க்சிஸ்ட் மாநாடு ஒரு ஒப்பீடு!

பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தானதாய் இருந்த கல்வி உரிமை; உத்தியோக உரிமை; உடன்கட்டை ஏறுதலை தடுத்தல்; விதவைகள் மறுமணத்தை ஆதரித்தல்; சனாதன மறுப்பு; பெண் ணடிமைத்தனம் ஒழிப்பு போன்றவற்றில் இந்தியாவின் சீர்திருத்தவாதிகள் வள்ளலார், ஜோதிராவ் பூலே, நாராயண குரு, ஐயா வைகுண்டர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் உணர்வுகளுக்கு இசைவு அளிப்பதற்கேற்றார் போன்ற சிற்சில நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு நடைமுறைப்படுத்தியது; சில சட்டங்களையும் இயற்றியது. இதன் மூலம் சனாதன பார்ப்பனீயக் கொடுஞ்செயல்களுக்கு சாவு மணி அடிக்க வித்திட்டவர்களும் அதே சுரண்டல்கார பிரிட்டிஷாரே!

இந்தப் பெருங்கோபத்தை மூளையில் தேக்கி வைத்துக் கொண்டுள்ள – கமலாலயத்தில் ஊழியம் செய்ய வேண்டிய RN. ரவி, எந்தவித அடிப்படை ஆதாரம் ஏதுமின்றி மானுடத்தின் உலகளாவிய சமூக விஞ்ஞானி ஆசான் கார்ல் மார்க்ஸ் பற்றி நாக்கில் நரம்பின்றி வாய் திறக்க முன்வந்துள்ளார். அவரது இத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே ஒட்ட நறுக்குவோம்.

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் ரவியை விரட்டி அடிப்போம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து ஐயா வைகுண்டரை காவி சாயம் பூசி இந்துத்துவாவில் இழுத்துப் போட முயன்று பார்த்தார். ஆனால் தோற்றுப் போனார். பின்பு கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலாருக்கும் காவி அடிக்க முயன்று,  தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத நிலையில் அதிலும் தோற்றுப் போனார்.

திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து, நெற்றியில் திருநீர் பட்டை; கரங்களில் பட்டைகள்; கழுத்தில் கொட்டைகள், பூணூல் முதற்கொண்டு அணிவித்துப் பார்த்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு தந்த அக்காலத்திய ஆசானை காவி கூட்டத்திற்குள் இழுத்துப் போட முயன்றார்; மக்களின் வெகுண்டெழுந்த கோபத்தால் அதிலும் தோற்றுப் போனார். சட்டமன்றத்திலும் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாடு என்பதை உச்சரிக்க மறுத்து தமிழகம் என சுருக்கப் பார்த்தார்; ஆனால் அதிலும் அடி வாங்கினார்.

சட்டமன்றத்தில் அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும் ஆளுநர் அறிக்கையை வாசிக்காமல் தனக்குத்தான் வானளாவிய அதிகாரம் இருப்பது போல இஷ்டத்திற்கு சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் படித்துப் பார்த்தார்; ஆனால் அசிங்கப்பட்டார்; அவமானப் பட்டார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை கூட புறக்கணித்து வேக நடை போட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து அதற்கு சம்பந்தமே இல்லாத கூட்டத்தின் வழிவந்த ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிற்கு – மக்களுக்கு பாடம் புகட்ட முயன்று அதிலும் தோற்றுப் போனார்.

தமது பீகார் மாநிலம் உட்பட குஜராத், உ.பி., ம.பி., மணிப்பூர், அரியானா, மகராஷ்டிரா, சட்டிஸ்கர், உத்தரகாண்ட், அசாம், பீகார், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு தேனாகப் பாய்வது போலவும், தமிழ்நாட்டில் கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிட்டது போலவும் படம் காண்பித்தார்; அதிலும் சாயம் வெளுக்கப்பட்டார்.

பாலியல் குற்றங்கள் வடமாநிலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் காவிகளால் அதாவது பாரதிய ஜனதா பார்ட்டி என்பதற்குப் பதிலாக ‘பாரதிய ஜல்ஜா பார்ட்டி’ என்று பலரும் சொல்லத் தக்க வகையில் கேவலம் கெட்டத்தனமாக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் உட்பட காவிக் கூட்டம் அரங்கேற்றிக் கொண்டிருக்க கூடிய சூழலில், தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் செயல்களை வைத்து வஞ்சனை மனோபாவத்தோடு தமிழ்நாட்டுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்பினார்; ஆனால் அதிலும் தோற்றுப் போனார்.

தலித்துகள் மீதான அடக்குமுறை கொடிக்கட்டிப் பறக்கும் உ.பி. உட்பட வடநாட்டை போல வேறு எங்கேயுமே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை ஆர்.என்.ரவி ஊதிப் பெருக்குகிறார். மேலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உருவாக்குவதற்கு  அடிப்படைக் காரணம் சனாதன பார்ப்பனீயம் தான் என்பதனையும் மூடி மறைக்கிறார்.

இந்தி சமஸ்கிருதத்தை வானளாவப் புகழ்கிறார்; தமிழ்நாட்டில் மும்மொழிகளை கற்க வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்; மும்மொழித் திட்டம் வேண்டும் என்கிறார்; தேசிய கல்விக் கொள்கையை வரவேற்கிறார்; பல்கலைக் கழகங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் ‘சித்தாந்தத்தை’ புகுத்துகிறார். இதுபோல இவரது ஆளுநர் பதவிக்கு பொருந்தாத எண்ணற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து சதிராட்டம் போடுகிறார்.

ஆனால், தமிழ்நாட்டின் நலனுக்காக தான் ஒன்றிய அரசுடன் கொண்டுள்ள RSS உணர்வுடனான பிணைப்பைப் பயன்படுத்தியேனும்  மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி பங்களிப்பு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரச்சனைக்காகவாவது தமிழர் நலன் சார்ந்து இவரது பதவி காலத்தில் குரல் எழுப்பி இருப்பாரா? பெற்றுத்தந்திருப்பாரா?  ஒன்றுமே இல்லை என்பது தான் நிதர்சனமான பேருண்மை! இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக சகலத்திலும் சதி வேலை செய்து கொண்டு இருக்கிறார் இந்த ஆரியன் ஆர்.என்.ரவி.

எனவே, அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும், தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழ் மக்களை அணி திரட்டி நாகலாந்து மக்கள் இவரை விரட்டி அடித்தது போல், ஆர் என் ரவியை தமிழ்நாட்டை விட்டு ஓட ஓட விரட்டி அடிப்போம் என சபதம் ஏற்போம்.

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் சொன்னவை தான் என்ன?

    காரல் மார்க்ஸ் குறித்து அவதூராக பேசிய ஆளுநர் R.N ரவிக்கு சரியான முட்டை அடி. இந்திய வரலாறு தெரியாத வந்தேறி. RSS. சின் ஏஜென்டை தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டி அடிப்போம்! வாருங்கள் !
    கட்டுரை ஆசிரியர் மிகவும் சிறப்பாக பல உதாரணங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here