ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தனது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான உலகளாவிய குறியீடுகளில், “அதிக ஆபத்துள்ள நாடாக” இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள சாகேத் காவல் நிலையத்தில் இளம் பெண் பத்திரிகையாளர்களான 27 வயதான ஷாஹின் கானும், 24 வயதான அவரது தங்கை நஃபிஸா கானும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் ஒருவரது கைபேசிக்கு வந்த அழைப்பில் முகமது கான் என்ற பெயரைப் பார்த்த பெண் காவலருக்கு இவர்கள் முஸ்லிம்கள் என்று அதுவரை தெரியவில்லை. அதன் பிறகு தாக்குதல் இன்னும் கொடூரமானது. அதனுடன் இஸ்லாமிய எதிர்ப்பு வசைச் சொற்களும் சேர்ந்து கொண்டதாக ஷாகின் குற்றம் சாட்டுகிறார்.

“நீ ஒரு முஸ்லிம். உன்னை இன்னும் அதிகமாக அடித்து உதைப்பேன்” என்று ஆவேசமாக அந்தப் பெண் காவலர் கூறியுள்ளார். “எனது தங்கை நஃபீஸா, ஆமாம் நாங்கள் முஸ்லிம்கள்தான். இதில் என்ன தவறு, இது குற்றமா எனக் கேட்டார். நீங்கள் எங்களது கைபேசியை பிடுங்கியது குற்றம். காவல் நிலையத்தில் மூடிய அறைக்குள் பெண்களை அடிப்பது குற்றம். எப்படி இத்தனை குற்றங்களை அடுக்கடுக்காக செய்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்” என்றார் ஷாஹின்.

சகோதரி நஃபீஸா நன்றாக தாக்கப்பட்டதால் அரை மயக்க நிலைக்கு சென்றார். எனவே தனக்கோ அல்லது தனது சகோதரிக்கோ ஏதாவது நடந்தால் காவல்துறை தான் பொறுப்பு என எச்சரித்துவிட்டு, ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள வேண்டும் என ஷாஹீன் வலியுறுத்திய பிறகு, தரைவழி தொலைபேசியில் இருந்து அழைக்க அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகே குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அன்றைய தினமே பிற்பகலில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து புகாரளிக்க அதே காவல் நிலையத்திற்கு வந்தார் ஷாஹின். “நான் புகாரை விவரிக்க தொடங்கி காவல் நிலைய அதிகாரியை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், அதை பதிவு செய்ய மாட்டோம் என மறுத்தனர். எனது புகாரை எப்படி மறுக்க முடியும். அது அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை. பிரதமரின் பெயரை குறிப்பிட்டாலும் பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

முதல் தகவல் அறிக்கை என்பது குற்றத்தை பதிவு செய்து குற்றவியல் விசாரணையை தொடங்குவதற்கான முதல் படியாகும். ஆனால் இதைக் கூட செய்யாமல் காவல்துறை தனது அராஜக போக்கை வெளிப்படுத்தி உள்ளது. சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையினுடைய புதிய பிரிவின் திறப்பு விழாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் வருகை தர இருந்தனர்.

படிக்க: காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை மீதான பாசிச தாக்குதல்!

அந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு 2 சகோதரிகளும் சென்று இருந்தனர். அப்போது டெல்லி முதல்வரிடம் சைக்கிள் ஊழல் குறித்து கேள்வி எழுப்ப முயன்றதால் தங்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியதாக சகோதரிகள் கூறியுள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.

“மிக மிக முக்கியமான நபர்களுக்காக (VVIP) ஒதுக்கப்பட்ட சாலையில் அந்தப் பெண்கள் தங்கள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். வாகனத்தை எடுக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்ட போதும், அவர்கள் மறுத்துவிட்டு அங்கிருந்த கர்ப்பிணி பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று பத்து நிமிடத்தில் அனுப்பி விட்டோம்” என்று டெல்லி காவல்துறை புளுகியுள்ளது.

“ஜீப்பில் ஏற்றப்பட்டவுடன் எங்கள் கைபேசியை பறிக்க முயற்சித்தனர். ஏன் எங்கள் கைபேசியை பிடுங்க முயற்சிக்கிறீர்கள். எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினோம். ஆனாலும் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தில் தண்ணீர் வேண்டும் என்று திரும்பத் திரும்ப கேட்டும் தண்ணீர் தர மறுத்தனர். அங்கு நடந்த தாக்குதல் திகிலூட்டுவதாக இருந்தது”

என்று விவரிக்கிறார் ஷாஹின்.

ஷாஹின் பணிபுரியும் டிஜிட்டல் செய்தி நிறுவன மான 4PM நியூஸ் நெட்வொர்க்கின் ஆசிரியர் சஞ்சய் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிரஸ் கிளப் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வேறு சில பத்திரிகை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

டெல்லியில் நடந்த இன்னொரு சம்பவம்!

2020 – ல் டெல்லி கலவரத்தின் போது சாலையில் காவல்துறையால் 5 முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். தேசிய கீதத்தை பாடுமாறு காவல்துறை அவர்களை கட்டாயப்படுத்தியது. அவர்களில் ஒருவரான 23 வயது ஃபைசான், ஜோதி நகர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கும் அவர் தாக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழித்து இறந்து விட்டார்.

இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இதுவரை எந்த காவல்துறை அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் நிலையத்தில் ஃபைசான் தாக்கப்பட்ட நாளில், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி பழுதடைந்து இருந்ததாக டெல்லி காவல்துறை ஆரம்பத்தில் கூறியது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விளக்கத்தை நிராகரித்து, இதை மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரிக்க உத்தரவிட்டது.

படிக்க: பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய சீமானை கண்டிக்கிறோம்.

விசாரணையில் சிசிடிவி-க்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது. திட்டமிட்டு கேமராக்களை இயங்காமல் செய்து விட்டு அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். ஆனால் அந்த முஸ்லிம் இளைஞர்களை சாலையில் காவல்துறையினர் தாக்குவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருந்தன. இருந்த போதிலும் இரண்டு காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவே 6 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதே போலத்தான் ஷாஹின் மற்றும் நபீஃஸாவுக்கு என்ன நடந்தது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை காவல்துறை மறுப்பதில் இருந்தே அவர்களின் குற்றம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஷாஹின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் அது தனது கூற்றுக்கு முரணாக இருந்தால் டெல்லி காவல்துறையிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறுகிறார் அவர்.

படிக்க: பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அராஜகம்! கண்டனத்துக்குரியது!

மேலும் அந்தக் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரி, எங்கள் மீதான தாக்குதலைத் தடுக்க முயற்சி எதுவும் செய்யாமல், “இவர்களை காப்பாற்ற முடியாத அளவுக்கு பல எஃப்ஐஆர்- களை பதிவு செய்யுங்கள்” என்று கூறியதாக ஷாஹீன் தெரிவிக்கிறார். அவர்களது உடலில் இருக்கும் காயங்கள் எளிதில் மறைந்து விடும். ஆனால் கைபேசியில் முகமது கான் என்ற பெயரைப் பார்த்ததும் அந்தப் பெண் காவலர் அடைந்த ஆத்திரத்தை அந்த சகோதரிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தனது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான உலகளாவிய குறியீடுகளில், “அதிக ஆபத்துள்ள நாடாக” இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது காவல்துறையின் காவலில், விசாரணையின் போது சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தல்கள் அதிக அளவில் நடப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதலாளித்துவக் கட்டமைப்பில் காவல்துறை என்பது ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கவும், ஏழை, எளிய, உழைப்பாளி வர்க்கத்தை ஒடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு அடக்குமுறை அமைப்பாகும். அதிகாரத்தைக் கையில் குவித்து வைத்திருக்கும் காவலர்கள் சட்டப்பூர்வ கிரிமினல் கும்பலாகவே செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் இருந்து, மக்களால் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களைக் கண்காணிக்கவும், தவறிழைத்தால் தண்டிக்கவுமான அதிகாரம் மக்களிடம் இருந்தால்தான் இந்தத் துறையானது உண்மையிலேயே பெருவாரியான மக்களுக்கானதாக இருக்க முடியும்.

குரு

ஆதாரம்: https://article-14.com/post/-release-the-cctv-2-muslim-women-journalists-challenge-delhi-police-denial-of-assault-6a9f9715704a1

1 COMMENT

  1. டெல்லி பெண் பத்திரிக்கையாளர்கள் மீதான காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் குறித்து கட்டுரையாளர் சிறப்பாக அம்பலப்படுத்தி உள்ளார். முதலாளித்துவ வடிவிலான போலி ஜனநாயகம்
    பல்லிழிக்கிறது. சகல அதிகாரங்கள் கொண்ட அமைப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்க அமைப்பாக நீடிக்கும் பொழுது, அவை மக்களை ஒட்டச் சுரண்டும் முதலாளிகளுக்கானதாகவும், மதவெறி கொலைகாரர்களுக்கானதாகவும் செயல்படுகின்ற பொழுது அவர்களிடம் உழைக்கும் மக்களுக்கான – அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடகவியலாளர்களுக்கான நலனை முன்னிலைப்படுத்தி செயல்படும் மாண்புதனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ‘பாராளுமன்ற பன்றி தொழுவம்’ எனும் முதலாளித்துவ அரசாங்கம் கூட அதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாகத்தானே ஒருங்கிணைந்து உழைக்கும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவுகிறார்கள். ஆக, இந்திய நாட்டின் அருதிப் பெரும்பான்மை மக்களின் விடியலுக்கு புரட்சிகர அரசியலை கையில் ஏந்தி செயல்படும் புரட்சிகர இயக்கங்களில் ஐக்கியப்பட்டு களமாடுவதைத் தவிர மக்களுக்கு வேறு மாற்று இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here