ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்…! மார்க்சியம் பயில்வோம்!

ஒட்டுமொத்த மனித சமூக வரலாற்றில் மார்கஸ் தோன்றியே  சுமார் 208 ஆண்டுகள் தான் ஆகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கிடுவோமேயானால் மார்க்சியத் தத்துவம் உருவாகி 176 ஆண்டுகள் தான் நிறைவடைந்துள்ளன.

0

“கார்ல் மார்க்ஸினுடைய வரலாற்றியல் பொருள் முதல் வாதம் விஞ்ஞானபூர்வமான சிந்தனையில் ஒரு மிகப்பெரிய மகத்தான சாதனையாகும். வரலாற்றிலும், அரசியலிலும் இதற்கு முன்னர் இருந்த கருத்தோட்டங்களில் ஆதிக்கம் கொண்டிருந்தது தாறுமாறான ஒழுங்கற்ற நிலையும் ஒரு தலைப்பட்சமான யதேச்சை நிலையுமாகும். அவற்றை மாற்றி அந்த இடத்தில் மிகத் தெளிவாக அனைவரும் காணக்
கூடிய அளவில் ஒருங்கிணைந்த ஒத்திசைவான விஞ்ஞானபூர்வமான தத்துவம் அமர்த்தப்பட்டிருக்கிறது. அது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக எவ்வாறு சமுதாய வாழ்வின் ஒரு அமைப்பு முறையில் இருந்து மற்றொரு மேலான அமைப்பு முறைக்கு வளருகிறது என்பதைக் காட்டுகிறது….”

ஆசான் லெனின்.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரியல் உண்மையை இங்கிலாந்து நாட்டு அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம்” –  என்ற நூலின் மூலம் உலகுக்கு அறிவித்தார்.

இளம் ஹெகலியவாதியாக துவக்கத்திலிருந்த ஆசான் கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்பை முழுமையாக ஏற்றார். அதன்பின் ஹெகலிடமிருந்த கருத்து முதல்வாத பிற்போக்குத்தனத்திலிருந்து விடுபட்டு “சுயமாக” இயக்க இயல் பொருள் முதல் வாதம் – வரலாற்றியல் பொருள் முதல்வாதம் என்ற அரிய கண்டுபிடிப்பான, மானுட சமூகத்திற்கு மிகத் தேவையான சமூக விஞ்ஞானத்தை கண்டுபிடிக்கலானார்.

குரங்கிலிருந்து மனிதனான பின், மனித சமூகம் எந்தெந்த கால கட்டத்தில் இருந்து என்னென்ன வகைகளில் எல்லாம்  வளர்ச்சி பெற்று வளர்ந்து வந்துள்ளது; இனி  அது வளர்ந்து சென்று மனித சமூகத்திற்கு ஏற்றத்தாழ்வற்ற சூழலை உருவாக்க மனிதனின் பணி என்ன? என்பதனை தீர்மானித்து அறிவித்தார்.

முதலாளித்துவத்திற்கு வேட்டு வைக்கும் இந்த ஆகச் சிறந்த சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பால், கதி கலங்கிய முதலாளித்துவம் எத்தனை எத்தனை நாடுகளுக்கு ஆசான் மார்க்சை நாடு கடத்தியது? எத்தனை எத்தனை பொய் வழக்குகளை அவர் மேல் சாற்றியது? கைது செய்து சிறையில் தள்ளியது? எத்தனை எத்தனை இன்னல்களுக்கு அவரை மட்டுமல்ல; அவரது ஆசைக் காதல் மனைவி ஜென்னி உட்பட குழந்தை குட்டிகளை எல்லாம் கூட நரவேதனைக்குத் தள்ளியது; மார்க்சின் உற்ற தோழன் மற்றொரு ஆசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் மட்டும் ஆசான் கார்ல் மார்க்ஸ்க்கு நேசக்கரம் நீட்டாமல் இருந்திருப்பாரேயானால் மார்க்சின் நிலை இன்னும் கூடுதலாக தடுமாறிப் போயிருக்கும் என்பதை எவர்தான் மறுக்கக் கூடும்?

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். அது மனித சமூகத்தின் நிரந்தர விடுதலைக்கான ஆகப்பெரும் கருவி…!

ஏகாதிபத்தியவாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், மத வெறியர்கள், இன்ன பிற உழைக்கும் மக்களின் விரோதிகள், படு பிற்போக்காளர்கள்… என மனித சமூக விரோதிகளின் ஆகப்படு மட்டரகமான செயற்பாடுகளால் மார்க்சிய- லெனினியம் தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம்…!

ஒட்டுமொத்த மனித சமூக வரலாற்றில் மார்கஸ் தோன்றியே  சுமார் 208 ஆண்டுகள் தான் ஆகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கிடுவோமேயானால் மார்க்சியத் தத்துவம் உருவாகி 176 ஆண்டுகள் தான் நிறைவடைந்துள்ளன.

அப்படியானால் ஒட்டுமொத்த மனித சமூக வரலாற்றின் பல்லாயிரம் ஆண்டுகால நீட்சியைக் கணக்கிடுவோமேயானால் மார்க்சியம் குழந்தை பருவத்தை ஒத்ததே…!

ரஷ்யா, சீனா, வியட்னாம், கியூபா… உள்ளிட்ட பல நாடுகள் மார்க்சிய ‌
தத்துவத்தை வெற்றிகரமாக்கி மாபெரும் புரட்சியைக் கண்டு அந்தந்த நாட்டு மக்களுக்கு விடியலைத் தேடி தந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை!

படிக்க:

 சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

 மார்ச் 14:காரல் மார்க்ஸ் நினைவு தினம்! – மீள்பதிவு

துரோகிகளாலும், எதிரிகளாலும் அங்கெல்லாம் மார்க்சிய-லெனினியம் தற்காலிகப் பின்னடைவிற்கு தள்ளப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மை!

ஆனால் இதன் மூலம் மார்க்சிய-லெனினியம் தோற்றுவிட்டது என்று எதிரிகள் மனப்பால் குடிப்பது போல கம்யூனிஸ்டுகளால் எண்ணிடத் தான் முடியுமா…?
ஒருக்காலும் முடியாது!

காரணம் மார்க்சிய-லெனினியம் வறட்டுக் கோட்பாடல்ல; அது ஒரு சமூக விஞ்ஞானம்; அது மீண்டெழும்; உலகம் முழுமைக்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நிரந்தர விடியலைத் தரத்தக்கதான மாபெரும் புரட்சிகளை உண்டாக்கியே தீரும்…!

அதை நோக்கிய பயணத்தில் உண்மை கம்யூனிஸ்டுகள் – தியாகத் தழும்பேறிய கம்யூனிஸ்டுகள் சரியான சித்தாந்த கோட்பாடுகளின் அடிப்படையில் வீறுநடை
போடுவர் என்பது எதார்த்தம்!

அந்த வகையில் ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவு நாளான இன்று – இந்திய நாட்டைக் கவ்விக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்தவும், ஜனநாயகக் கூட்டரசை நிறுவவும் சபதம் ஏற்று முன்னிலும் வேகமாக பயணிப்போம்!

இது ஆசான் கார்ல் மார்க்ஸ் அவர்களின் 143-வது நினைவு நாளில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாக அமையட்டும்…!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here