நேற்றைய மாலை முரசு பத்திரிக்கையில் ஒரு பெட்டி செய்தியை பார்க்க முடிந்தது. முக்கிய செய்திகள் எல்லாம் பத்திரிக்கைகளில் பெட்டி செய்திகள் தான். அமேசான் இந்தியா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தீபாவளி பண்டிகையை ஒட்டி 29,000 கோடிக்கு ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை இன்னும் முடியவில்லை.

பண்டிகை காலங்களில் மக்கள் பொதுவாக உடைகளையும், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும்  வாங்குவதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த பழக்கம் இன்று வரை மக்களிடம் தொடர்கிறது. ஆனால் வடிவத்தில் குறிப்பிட்ட அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்பெல்லாம் பண்டிகை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பமாக பெரிய வணிக வளாகத்திற்கோ அல்லது சென்னை தி.நகர் போன்ற இடங்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் இந்த நிலை  மாற்றமடைந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை காலங்களில் தொழிலாளர்களுக்கு ஆலை போனஸ் அல்லது கடனை முன்பணமாக வழங்கும். இந்த நேரத்தில் தொழிலாளர்களை குறி வைத்து கொடுத்ததை புடுங்க தள்ளுபடி விற்பனையை பெரிய வணிக நிறுவனங்கள் அறிவிக்கும். இது பொங்கல் பண்டிகை காலங்களில் கூட நடக்கும். இதனால் போனஸ் தொகை தொழிலாளர்களின் கைகளுக்கு வராமல் வர்த்தக முதலாளிகளின் பைகளை நிரப்பும்.

இதற்காக சில மணி நேரம் பயணமும், பல மணிநேரம் தேடுதலுக்குப் பின்னர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேருவார்கள்.  சில ஊரக பகுதிகளில் இந்த நிலை நீடித்தாலும் நகரங்களில் நிலைமை மாறி வருகிறது.

இதையும் படிக்க: 

பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

 

இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஒரே வீட்டில் 3 அல்லது 4 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள்.  இருந்த இடத்திலிருந்து தனக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்க smart phone App-ல் buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் பொருட்கள் 1 அல்லது 2 நாட்களில் வீடு வந்து சேரும். நாம் அலைய வேண்டிய வேலையதெல்லாம் இல்லை. நல்லது தானே இதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?

இந்தியா ஏழை நாடு என்றாலும் மக்களிடம் நுகர்வுவெறியை தூண்டி விட்டு கொள்ளை அடிப்பதற்கு ஏதுவாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். அமேசான் என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை அறிவித்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 29 ஆயிரம் கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த 13 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு விற்பனையாகியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பண்டிகை காலத்தில் அமேசானின் இலக்கு 90 ஆயிரம் கோடியாம். இது அமேசானின் விற்பனை மட்டுமே. அமேசான் மட்டுமல்லாமல் flipkart, tatacliq, mantra, Jiomart, Relaince retail, croma என ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது.

உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பொருட்களை வாங்குகிறீர்களா?

ஒருவேளை இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்றால், அது தவறு. நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். ஜவுளிக்கடைகளுக்கோ அல்லது பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கோ நீங்கள் சென்றால் குறிப்பிட்ட பிரிவுக்கு என்று வேலையாட்கள் இருப்பார்கள். அவர்கள் விளக்குவதின் அடிப்படையில் பொருட்களை வாங்கிவிட்டு வந்துவிடுவீர்கள்.

ஆனால் ஆன்லைன் வர்த்தகம் அப்படியில்லை. உங்களுக்கு போனசோ அல்லது சம்பளமோ வருவதற்கு பத்து நாட்களோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே நீங்கள் வாங்கும் பொருட்களை தேட ஆரம்பிக்கிறீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் பல நிறுவனங்களின் பொருட்கள் கொட்டிக்கிடக்கும் அதில் நீங்கள் எதை வாங்குவது என்று தேடி குழப்பம் அடைந்து சரி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுவீர்கள்.

பண்டிகைக்கால விற்பனையில் அமோக தொடக்கம் கண்ட அமேசான், ஃபிளிப்கார்ட்!

பிரச்சனை இனி தான் தொடங்கும் நீங்கள் விரும்பிய பொருட்களை தேடி பார்த்து  விலை அதிகமாக இருப்பதால் வாங்க வேண்டாம் என்று கூட முடிவெடுத்து இருக்கலாம். ஆனால் உங்களை அப்படி எல்லாம் விட்டு விடாது இ-காமர்ஸ் சந்தை. செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் மூலம் நீங்கள் தேடிய குறிப்பிட்ட பொருளை உங்களை வாங்க வைக்க வற்புறுத்தும். நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களுடைய ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளம்பரங்கள் வரும். உங்களிடம் பணம் இல்லை என்றாலும் நீங்கள் வாங்கும் நிலைமைக்கு மனரீதியாக தள்ளப்படுவீர்கள்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உங்களை சுயமாக சிந்திக்கும் திறனை இழக்க செய்கிறது. மனித மூளையை கட்டுப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது. நீங்களே இதை அனுபவித்திருப்பீர்கள். நீங்கள் தேடிய பொருளோ அல்லது வேறொன்றோ விளம்பரமாக உங்கள் ஸ்மார்ட்போனில் வந்து கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஆன்லைன் வர்த்தகம் செயல்படுகிறது. இதனால் தனிநபரின் கடனும் அதிகரிக்கிறது. இதே விழாக்காலங்களில் அமேசான் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து வங்கிகளும் கொள்ளை அடிக்கின்றன. பேங்க் ஆஃபர் என்ற பெயரில் கிரெடிட் கார்டு மூலம் கடனனாளியாக்கி கூட்டுக் கொள்ளையடிக்கின்றன. நம்மை கடனாளியாக்குகின்றன.

இதற்கு உதாரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் இகாமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் வளர்ச்சியை பார்க்கலாம்.

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் மொத்த மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 140% உயர்ந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2023 மே புள்ளி விவரப்படி 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருந்த நேரத்தில் கூட இவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 40 பில்லியன் அமெரிக்க டாலர். இதுவே 2021ல் 36 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2022ல் 44 சதவீதம் உயர்ந்து 49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பொருத்தவரையில் அமேசான் கூறும் வருமானத்தை பார்த்தால் பன்மடங்கு கூடும் என்று தோன்றுகிறது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக அமேசான் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் மாட்டு சாணி வறட்டி வரை விற்பனை செய்கிறது. மளிகை பொருட்கள், காய்கறிகள், மீன் உள்ளிட்ட இறைச்சிகள் என அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. இதனால் சிறுகுறு வணிகர்கள் மொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள்.

பண்டிகை காலங்களில் தொழிலாளர்களும் சாமானிய மக்களும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களினால் சுரண்டப்படுகிறார்கள், கடனாளி ஆக்கப்படுகிறார்கள். நமக்குத் தெரிந்தே நம் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை களவாடுகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். நீங்கள் உழைப்பது நாங்கள் வாழ்வதற்கு என்கிறது முதலாளித்துவம். அதனால் தான் பண்டிகைகளும் விழாக்களும் முதலாளித்துவத்தின் வேட்டைநாய்கள் என்றார் மார்க்ஸ்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here