சொந்த அணிகளையே
ஏய்க்கும் வினவு குழுவினர்!

பாகம்-2


   சமீபத்தில் நடந்த மக்கள் அதிகாரத்தின்  முதல் மாநில மாநாட்டுக்கு அழைப்பதற்காக பல அரசியல் தலைவர்களை சந்தித்த போது அவர்கள் ஒரே குரலில் கேட்ட கேள்வி இதுதான் “உங்கள் அமைப்பின் பெயரை வேறு சிலர் பயன்படுத்திக் கொண்டு எங்களை சந்திக்க வருகிறார்களே, என்ன தோழர் இது” என்று சங்கடப்பட்டனர். அவர்கள் உங்களை மட்டும் ஏய்க்கவில்லை. அவர்களுடன் இருக்கும் அணிகளையே ஏய்க்கிறார்கள் என்று பதிலுரைத்தோம். அதன் சாரம்சம் வருமாறு:

போர்தந்திரம்-செயல்தந்திரம்
குறித்த குழப்படிகளும், ஏய்ப்புகளும்!

2015 ஆம் ஆண்டு கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம் வகுத்தபோது அது பற்றிய அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம். “அதாவது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்சநிலையை எட்டி விட்டதை, அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதை மக்களிடம் கொண்டு செல்வதுடன் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தை தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்களைத் திரட்ட வேண்டும்.

அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். ஆகவே எல்லா சிக்கல்களுக்கும் கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களின் அதிகாரத்தை மையப்படுத்துகின்ற ஒரு புதிய அவசியமான பொது அரசியல் அரங்கத்தை கட்டி முழக்கங்களை வகுத்து மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் புரட்சிகர இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது” என்று 2.2.2015 அன்று வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

2015 முதல் 2020 வரை கட்டமைப்பு நெருக்கடி என்கிற செயல்தந்திரமே எமது அமைப்புக்கு வழிகாட்டியாக இருந்தது. 2020 -ஆம் ஆண்டு இறுதியில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் தங்களை, எமது அமைப்பின் பெயரிலேயே ஒரு அமைப்பாக அறிவித்துக் கொண்டனர் (இனி அவர்களை வினவு குழு என்று அழைப்போம்). இந்த வினவு குழுவினர் 13.01.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், “2015 இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம் அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒரு சில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன் வைக்காமலும் அமைந்திருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

மேலும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல. அரசியலை பிரச்சாரமாக எடுத்து செல்வது தான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்து வரத்தொடங்கியது” என்று மக்கள் அதிகார அமைப்பின் அரசியலையும், அமைப்பின் திசைவழியையும் கொச்சைப்படுத்தினர்.

முதலில் மக்கள் அதிகாரம் பற்றி இந்த கருத்தே அடைப்படையில் தவறாகும். அவதூறு பரப்பும் செயலாகும். மூடு டாஸ்மாக்கை, விவசாயிகளை வாழவிடு, கார்ப்பரேட்-காவி பாசிசம் – எதிர்த்து நில், அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் – அஞ்சாதே போராடு! போன்ற முழக்கங்களின் கீழ் நடந்த பிரமாண்ட மாநாடுகள் தவிர காவிரி உரிமைக்கான நடைப்பயணம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த மக்கள் திரள் போராட்டங்கள் அனைத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டியது.

மையரீதியாக நடத்தப்பட்ட இந்த போராட்டங்கள், மாநாடுகள் அனைத்திற்கும் மத்தியில் பகுதியளவில் நூற்றுக்கணக்கான பகுதி பிரச்சனைகளில் தலையிட்டு போராடியதன் விளைவாக ஒவ்வொரு மாநாட்டிற்கும் மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர் என்பதை நாடே அறியும். ஆனால் கூசாமல் மக்களுடன் அய்க்கியமும் நெருக்கமும் குறைந்து போனது என்று திரித்து புரட்டினர்.

சரி! புரட்சிகர அமைப்பிலிருந்து “விலகி போவதற்கு பொருத்தமாக’, இது அவர்களின் கண்டுபிடிப்பு போல என்று கடந்து போகும் முன்னரே “இப்புரட்சியை சாதிக்க குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் அரசியல் சூழலையும் வர்க்கப் போராட்ட நிலைமைகளையும் கருத்தில் கொண்டு செயல்தந்திர உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறோம். கடந்த 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற அரசியல் செயல்தந்திரத்தின் அடிப்படையில் செயல்பட்டு தமிழக மக்களிடம் குறிப்பிடும்படியான அரசியல் செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றிருக்கிறோம்” என 23-09-2021 அன்று வினவு தளத்தில் ஒரு அறிக்கையை  வெளியிட்டனர்.

எட்டு மாதங்களுக்குள் கருத்தை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உள்ளுக்குள் என்ன நெருக்கடி என்று புரியவில்லை. ஆனால் இது அவர்களின் அரசியல் தெளிவற்ற, சித்தாந்த குழப்பத்தையே காட்டுகிறது. இதற்கு மேலும் சில எடுத்துக் காட்டுகளாக, செப்டம்பர் 2021 வாக்கில் தான் “காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்!” என்ற செயல்தந்திரத்தை அமுல்படுத்த போவதாக அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பை வழிநடத்த திணறிய அப்போதைய அரசியல் தலைமை (தற்போது வினவு) “நமக்கு தேவை தற்சார்பு பொருளாதாரம்! அதை படைக்க மக்களுக்கு வேண்டும் புதிய ஜனநாயகம்! அஞ்சாதே! போராடு! கெஞ்சாதே, பறித்தெடு!” என்று 15-05-2020 -லும், “வேலை, உணவு, வாழ்வதற்கான உரிமை, பொது சுகாதார கட்டமைப்புக்காக போராடுவோம்! தற்சார்பு என்ற பெயரில் நாட்டை மீண்டும் காலனியாக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் சதித்திட்டத்தை முறியடிப்போம்! ஊரடங்கு வடிவிலான கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!”  என்று 31-05-2020-லும் ஒரு மாதத்தில் இரண்டு முழக்கங்களை முன் வைத்து. அதுவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத முழக்கங்களை முன் வைத்து வழிகாட்டுதல்களை கொடுத்தது.

இவ்வாறு துல்லியமாக வெளிப்பட்ட இவர்களின் சித்தாந்த ஒட்டாண்டித்தனம் திடீரென்று உருவாகவில்லை. 20-02-2018-ல் அணிகளுக்கு அவர்கள் அனுப்பிய அறிக்கையில் இருந்தே துவங்கி விட்டது. “இங்கு என்ன போர்தந்திரம், செயல்தந்திரம் முன் வைப்பது, அது பழைய மாதிரியான போர்த்தந்திரம், செயல்தந்திரத்தை பின்பற்றி செல்வதா அல்லது புதிய வகையானதாக வைப்பதா போன்றவற்றை தீர்மானிப்பது என்பது இன்னும் பெரிய விசயங்கள்“ என்று புதிய செயல்தந்திரம் வகுப்பதற்கு பதில், செயல்தந்திரம் வகுக்கும் அரசியல் பணியே மிகப்பெரியது என்று சித்தாந்த பணியை பற்றி மலைக்கதக்க வகையில் பீடிகையாக முன் வைத்தனர். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பினால் அப்போது தலைமையில் இருந்தது யார்? இப்போது புதிய தலைமை என்று டெக்னிக்கலாக சாமாளிக்கின்றனர்.

“சீனப்புரட்சி மற்றும் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளைப் போலவே, சர்வதேசப் பாட்டாளி வர்க்க அனுபவங்களும் படிப்பினைகளும், மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர மற்றும் செயல்தந்திர விதிகளும் வழிகாட்டும் நெறிமுறைகளும் சாராம்சமாகப் போதிப்பது என்னவென்றால், ஒரு புரட்சிக் கட்டத்திலேயே போர்த்தந்திரம் மாறாமலிருக்கும் போதே ஒவ்வொரு தருணத்திலும் பருண்மையான நிலைமைக்கேற்ப, அதாவது புரட்சி இயக்க வெள்ளம் பெருகுவது அல்லது வடிவது – புரட்சி அலை ஓங்கி வீசுவது அல்லது ஓய்வது – என்பதைப் பொருத்து, மோதிக் கொள்ளும் சக்திகளின் உறவு, இயக்கத்தின் வடிவங்கள், வீச்சு, ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு பகுதியின் போராட்ட அரங்கம் ஆகியவற்றைப் பொருத்து அரசியல் மற்றும் இராணுவப் செயல்தந்திரங்கள் மாறுகின்றன. புதிய செயல்தந்திரங்கள் வகுக்கப்பட வேண்டும்.” என்று வழிகாட்டுகிறது எமது ஆவணம்.

அந்த ஆவணத்தின் வழிகாட்டுதல்களை பருண்மையாக அமுல்படுத்துவதற்கு, போர்த்தந்திரம், செயல்தந்திரம் குறித்த அடிப்படை மா.லெ புரிதல் இவர்களுக்கு துளியும் இல்லாத போதிலும், இவர்களின் சித்தாந்த ஒட்டாண்டிதனத்தைப் பற்றி கேள்வி எழுப்பியவர்களை பற்றி அவதூறுகளையும், வசவுகளையும் பரப்பி திரிந்தனர். அதுவரை மா.லெ குழுக்கள் என்று கூறிக் கொண்ட பலரிடம் இருந்த கேடான நடைமுறையான வாய்வழி அவதூறுகள், கிசுகிசுக்கள், கோஷ்டி கட்டுவது போன்ற கம்யூனிச விரோத நடைமுறையை, விமர்சனமாக சுட்டிக்காட்டி போராடி வந்த எமது அமைப்பிற்குள் இவர்களது நடைமுறையானது அதிகாரத்துவமாகவும், சாதியவாதமாகவும் சீரழிந்து போனது.

அடுத்த பதிவுடன் நிறைவுறும்.

பகுதி 1

சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர்! 

5 COMMENTS

 1. நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என பாஜக சொல்வது போல , அதிமுக,நாம்தமிழர் நபர்கள் திமுக மேல் கூறும் குற்றச் சாட்டுகள் போல மாறி மாறி லாவணி பாடாமல் உங்களின் அரசியலை முன்னெடுங்கள்.

 2. காங்கிரஸ் மேல் பழி போட்டு தப்பிக்கும் பாஜக போல தங்களின் செயல் உள்ளது.

 3. அண்ணன் பெயர் தான் தர்மர் ஆனால் நமக்கு கற்பிக்கப்பட்ட மகாபாரதத்தில் வரும் தர்மர் போல அல்ல உண்மையான தர்மரின் முகத்தை மஞ்சுள் பதிப்பகம் வெளியிட்டுள்ள கௌரவர்கள் வெளியீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  இவருக்கு அவ்வளவு தூரம் போகத் தேவையில்லை புரட்சிகர அமைப்புகள் பற்றி இவரது பழைய பதிவுகளை பார்த்தாலே போதும்

 4. நீங்கள் குட்டி முதலாளிய ஆட்கள்.நீங்களே அம்பலமாவீர்கள்,உடன் பயணித்ததில் ஏற்பட்ட பட்டறிவு.

 5. அசோக்குமார் அறிந்து கொள்ள சில உண்மைகள்.
  நீங்கள் அதாவது உங்கள் தலைமை முன்வைக்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சி என்பது இந்தியாவில் உள்ள தேசிய முதலாளிகள் வரை (வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட குட்டிமுதலாளித்துவ அறிவுத் துறையினரையும் உள்ளடக்கியது தான்) உள்ளடக்கிய சோசலிசப் புரட்சிக்கு இடைக்கட்டம் என்பதை புரிந்து கொள்க.
  இது போன்ற அரைகுறையான,புரிதல் இல்லாத கமெண்டுகளை போடுவதற்கென்றே தங்களை பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு இது பற்றி சொல்லித் தரும் ‘அய்யாக்களின்’ வீட்டுக்கு போய் பாருங்கள் உண்மை புரியும் யார் குட்டி முதலாளிகள் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here