மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க முயன்ற கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (KSIDC), தற்போதுள்ள விதிமுறைகளின் படி, உள்ளூர் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான ஏஜென்சிகளை பங்கு விலக்கல் விற்பனையில் ஏலம் எடுக்க அனுமதிக்கப்படாது முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குவிலக்கலுக்கான ஏலத்தில் கேரள அரசு பங்கேற்பதை மத்திய அரசு தடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.ஹெச்எல்எல்லை அரசு நிறுவனமாகத் தக்கவைக்க வேண்டாம் என்று இந்திய அரசு முன்மொழிந்தால், அதை மாநில பொதுத்துறை நிறுவனமாகத் தக்கவைத்துக்கொள்ள மாநில அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, நிலத்தை வைத்திருக்கும் முதல் உரிமை மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும். கேரளாவில் உள்ள ஹிந்துஸ்தான் லைஃப்கேரின் சொத்துக்கள்” வைத்துக்கொள்ளும் உரிமையும் வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் (PSU) பங்கு விலக்கல் விஷயத்தில் ‘ஓப்பன் ஆஃபர்’ விலையை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படும் விலை சூத்திரத்தை முதலாளிகளுக்கு சாதகமாக எளிதாக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதினைந்தாவது நிதிக் குழு, நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) மறுஆய்வுக் குழு ஆகியவற்றின் பரிந்துரையின்படி நிதிக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர்க்கடிக்கப்படும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்:

1986-ல் தொடங்கப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்டெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான கல்வி, தொழில்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் மார்ச் 31, 2022க்கு மேல் இத்திட்டம் நீடிக்கப்படாது என்றும், இத்திட்டம் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில்(எஸ்எஸ்ஏ) இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனங்களுக்குரியது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கடிதம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதிஒதுக்கி சிறப்பு கவனம் அளிக்காமல், திட்டத்தின் செயல்பாடுகளை நீர்த்துப்போகச்செய்யும் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்று இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.

வேலையின்மை:
2021 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நகர்ப்புற வேலையின்மை 9.8% ஆக குறைந்துள்ளது. 2020 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், தொற்றுநோயின் முதல் அலை நாட்டை கடுமையாக தாக்கியபோது நகர்ப்புற வேலையின்மை விகிதம் 20.9% ஆக இருந்தது.

நகர்ப்புறங்களில் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஏப்ரல்-ஜூன் 2021 இல் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 20.8 சதவீதமாக இருந்தது.தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பைக் காட்டுகிறது. .
15-29 வயதுக்குட்பட்ட நகர்ப்புற இளைஞர்களில் 25.5% பேர், நடப்பு ஆண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் வேலையில்லாமல் உள்ளனர், இது முந்தைய ஆண்டின் காலாண்டில் 34.7% ஆக இருந்தது. 15-29 வயதுக்குட்பட்ட நகர்ப்புற பெண்கள் ஆண்களை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 ஃபிப்ரவரியில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.1% ஆக உயர்ந்தது, பிப்ரவரி 2020 இல் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 7.76% ஆக இருந்தது.

‘பிஎஃப்’ என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் 8.6% வட்டியை 8.1 %ஆகக் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், 6.4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் ஓய்வூதிய வருமானம் பாதிக்கப்படும். ஆனால் வட்டி வீதக் குறைப்பு சந்தை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அரசு ஏற்கெனவே உர மானியத்திற்கு அதிகம் செலவளித்துள்ளது; சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கு 7.6% வட்டி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 7.4%, பொது வருங்கால வைப்பு நிதி 7.1% மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 5-10 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது இவற்றுடன் ஒப்பிடும் போது 8.1% அதிகம் தானே என்கிறார். அரசின் ஒட்டுமொத்த செலவினத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான 0.5% வட்டி விகிதம் ஒரு சொற்பத்தொகையே.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கமுடிந்த பாஜக அரசிற்கு இந்த சொற்பத்தொகையை ஒதுக்கமுடியாதது அவர்களின் மக்கள் நலன் மீதான அலட்சியமின்மையையே சுட்டிக்காட்டுகிறது.

2015-16-ம் நிதி ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பகுதி அளவில் பிஎஃப் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான அதிகபட்ச வரம்பு 15 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 65 சதவீத தொகை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

தேசிய உள்கட்டமைப்பு திட்டம்:
6,835 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (என்ஐபி) 9,335 திட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 2020 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 108 டிரில்லியன் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை செயல்படுத்துவதில் 8.44 டிரில்லியன் மதிப்பிலான மூலதனச் செலவினத் திட்டங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது

அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு கடன்களை வழங்குவதற்காக அரசு ஆதரவுடன் செயல்படும் தேசிய நிதிக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கிக்கு (NaBFID) சுமார் ரூ. 1 டிரில்லியன் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உள்கட்டமைப்பு, வளர்ச்சிக்கு நிதி வழங்குவதற்கான தேசிய வங்கியின் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், இவ்வங்கியின் தலைவராக கேவி காமத் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவராக செயல்பட்டுள்ளார்.
அரசின் இணைய சந்தை (GeM) 2016 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்தச் சந்தையின் மொத்தக் கொள்முதல் ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் இச்சந்தையில் நான்கரை ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்நிய முதலீடுகள்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நரேந்திர மோடி ஆட்சியின் போது இந்தியாவில் 500.5 பில்லியன் அமெரிக்க டாலர் நேரடி அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், இது காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளில் செய்யப்பட்டதைக் காட்டிலும் 65 விழுக்காடு அதிகம் ஏனெனில் முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பிறகு எதனால் 2021 அக்டோபரிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர். அந்நிய முதலீடுகளை நிர்ணயிப்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகிதமே தவிர பாஜக அரசின் மீதான நம்பிக்கை அல்ல.
பங்குச் சந்தையில் 12 மாதங்களில் வெளிநாட்டு நிதிமுதலீட்டாளர்கள் (FPIs) ஒட்டுமொத்த ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர்.
வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் (FPIs) 2008 நிதி நெருக்கடியின் போது விற்பனை செய்த மொத்த அளவை விட, 2021 அக்டோபர் முதல் அதிக பங்குகளை விற்றுள்ளனர். ஜனவரி 2008 முதல் மார்ச் 2009 வரையிலான $14.6-பில்லியன் மதிப்பிற்கு நிதி முதலீடுகள் வெளியேறியுள்ளன. அதனுடன் ஒப்பிடுகையில், அக்டோபர் முதல் இப்போது வரை, ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $19.8 பில்லியன் மதிப்புள்ள இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர்.

2021ல் இந்தியாவிற்கு வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடுகள் (FDI) $74.01 பில்லியனாக குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட $87.55 பில்லியன் நேரடி அந்நிய முதலீடுகளைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவு என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையின் கீழ் ‘ரியல் எஸ்டேட் வணிகம்’ என்பதன் அர்த்தத்தை அரசாங்கம் திங்களன்று விரிவுபடுத்தியுள்ளது, ஒரு சொத்தின் குத்தகையிலிருந்து வாடகை/வருமானம் சம்பாதிப்பது, ரியல் எஸ்டேட் வணிகத்திற்குச் சமமாகாது என்று வரையறுத்துள்ளது.

ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டு முதலீடு 2012-2016 காலகட்டத்தில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2017-21 காலகட்டத்தில் 23.9 பில்லியன் டாலர்களாக 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டு முதலீடுகளின் பங்கு 2017-2021 இல் 82 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஐந்தாண்டு காலத்தில் 37 சதவீதமாக இருந்தது.

பங்குச் சந்தையில் தீவிரமான ஏற்ற இறக்கங்களால் வரும் இழப்பீடுகளைத் தவிர்க்க பாதுகாப்புக் (securitization) கருவிகள் உருவாக்கப்பட்டன. ஆனபோதும் இவை பெருமளவில் ஊகலாபம் பெறவே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான சந்தை அமெரிக்கா, ஐக்கிய முடியரசு போன்ற நாடுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. அதுவே அமெரிக்காவில் வீட்டுமனை குமிழி நெருக்கடி உருவாகக் காரணமாக அமைந்தது.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here