
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா (Jalna)மாவட்டத்தில் பரமேஸ்வர் சுஹாஸ் ஹிவாலே (Parameshwar Suhas Hiwale) என்ற ஒரு தலித்தின் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் மனிதாபிமானம் மிக்கவர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமேஸ்வர் கடந்த மே 23ஆம் தேதி அன்று மாட்டுச் சந்தையில் மாட்டை வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்திய பஜ்ரங்தள் அமைப்பினர் ஒரு முஸ்லிம் கசாப்பு கடைக்காரருக்கு விற்பதற்காகத்தான் பரமேஸ்வர் மாட்டை கொண்டு செல்வதாக கூறி அவரிடம் பிரச்சனை செய்துள்ளனர். தனது வீட்டிற்கு தான் காளையை கொண்டு செல்வதாகவும் அதற்கான ஆவணத்தை வைத்துள்ளதாகவும் பரமேஸ்வர் கூறியுள்ளார்.
ஆனால் பரமேஸ்வரின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாத இந்து மத வெறியர்கள் அவரை தாக்கியுள்ளனர். மேலும் பரமேஸ்வரின் சாதியை கேட்டு –அவர் தலித் என்பதை தெரிந்து கொண்டதும்– அவரது வாயில் மாட்டுச் சாணத்தை திணித்துள்ளனர். அது மட்டும் இன்றி பரமேஸ்வரருடன் இருந்த அவரது 11 வயது மகனின் வாயிலும் மாட்டுச் சாணத்தை திணிக்க முயன்றுள்ளனர். மேலும் அவருடன் இருந்த காம்ளி என்பவரையும் தாக்கி அவர்கள் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த பஜ்ரங்தள் அமைப்பினர் இந்த சம்பவத்தை வெளியில் செல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் அவரும் அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்றும் பரமேஸ்வரை மிரட்டியுள்ளனர்.
எனவே பரமேஸ்வர் இது குறித்து வெளியில் கூறாமல் இருந்து விட்டார். இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவியது. இது குறித்து கேள்விப்பட்ட பரமேஸ்வர் தன் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று (அதாவது சுமார் மூன்று மாதத்திற்கு பிறகு) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீடியோ ஆதாரம் உள்ளதால் வேறு வழியின்றி வழக்கை பதிவு செய்து கொண்ட காவல் துறை இதுவரையிலும் எவர் ஒருவரையும் கைது செய்யவில்லை.
மகாராஷ்டிராவில் இப்பொழுது பாஜகவின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்திருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டி இருக்கும்.
மகாராஷ்டிராவில் இந்து மத வெறியர்கள் தங்களின் எதிரிகள் மீது தாக்குதல் தொடுப்பதும் அவர்களின் வாயில் மாட்டுச்சாணத்தை திணிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே நகரத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாடுகளை ஏற்றிச் சென்று கொண்டு இருந்த வாகனத்தை (Truck) வழிமறித்து, வாகனத்தை ஓட்டி சென்றவரை பசு காவலர்கள் (இந்து மத வெறியர்கள்) தாக்கி அவரது மதத்தை இழிவுபடுத்தி பேசியதுடன் அவரது வாயில் மாட்டுச் சாணத்தையும் திணித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடந்த அன்று அந்த ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பொழுது அவரது வாயில் மாட்டுச் சாணத்தை திணித்தது குறித்து புகாரில் கூறவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்ததை ஓட்டுனர் தனது புகாரில் குறிப்பிடாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதை எப்படி புரிந்து கொள்வது? ஓட்டுனரின் புகாரை அப்படியே பதிவு செய்யாமல் இந்து மத வெறியர்களுக்கு சாதகமாக காவல்துறை புகாரை பதிவு செய்துள்ளது என்பதைத் தான் இது காட்டுகிறது.
படிக்க:
♦ மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் ஐஐடி இயக்குநர்!
♦ ஒடிசா-மாலிபார்பத் பழங்குடிகளின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்களை தடுப்போம்.
இந்த ஓட்டுனரின் மீதான தாக்குதல் குறித்த முழு காணொளியும் பின்னர் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து விட்ட காரணத்தால் காவல்துறையினரின் இந்த அயோக்கியத்தனமான செயல்முறை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போய்விட்டது.
இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள (பரமேஸ்வரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட) அதே ஜால்னா மாவட்டத்தில் 2025 பிப்ரவரியில், ஒரு வாகனத்தை பஜ்ரங்தள் அமைப்பினர் வழிமறித்து, ஜான்பாஸ் குரிசி (Janbaaz Qureshi என்ற மாட்டு வியாபாரி) கால்நடைகளை கொல்வதற்காக கொண்டு செல்கிறார் என்று கூறி தாக்கியதாக FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் போது மாட்டுக்கறி கொண்டு சென்றார்கள் என்று கூறி இரண்டு முஸ்லிம்கள் மீது பசு காவலர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாட்டுக்கறிதான் வைத்திருக்கிறார்கள் என்றோ மாடுகளை கொல்வதற்காகத்தான் கொண்டு செல்கிறார்கள் என்றோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தாக்குதல் நடத்துவதும் வாயில் சாணத்தை திணிப்பதும் மகாராஷ்டிராவில் தொடர் நிகழ்வாக உள்ளது.
யார் எதை சாப்பிட வேண்டும் என்பது அந்தந்த நபர்களின் சொந்த விருப்பு வெறுப்பை சார்ந்தது.
படிக்க:
♦ உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!
♦ உங்கள் உணவு அவர்கள் கையில்! உங்கள் உழைப்பு கார்ப்பரேட்டுகள் பையில்!
நம்மைப் பொருத்தவரை மாட்டுக்கறி உண்பதை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவின் சில மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டத்தை நாம் ஆதரிக்கவில்லை.
உண்மையிலேயே ‘சட்டத்திற்கு புறம்பாக’ ஒருவர் மாட்டுக்கறியை வைத்து இருந்தாலும் மாடுகளை கொல்வதற்காக கொண்டு செல்வதாக வைத்துக் கொண்டாலும் அவரை தாக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் நிறுத்தித்தான் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து இந்து மத வெறியர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி இந்துக்களை தம் பக்கம் திரட்டிக் கொள்வது மற்றும் தலித்துகளை எதிரானவர்களாக காட்டி பிற சாதியினரை தம் பக்கம் திரட்டி கொள்வது என்பதை இந்து மத வெறியர்கள் இடத்திற்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கார்ப்பரேட் காவி பாசிசத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்து மத வெறியர்களுக்கு இப்படி மக்களை பிளவுபடுத்தினால்தான் தங்களின் பாசிசத்தை எதிர்த்து மக்களை சிந்திக்க விடாமல் – கேள்வி கேட்க விடாமல் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்து ஒற்றுமை பேசும் இந்துத்துவா -வினர் (ராமனின் வாரிசுகள், சனாதனவாதிகள்) இஸ்லாமியர்கள் மீது மட்டுமின்றி தலித்துகளின் மீதும் எத்தகைய வன்மத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதிலிருந்தாவது ஆர் எஸ் எஸ் பாஜகவினரை ஆதரித்துக் கொண்டிருக்கும் நபர்கள் தங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
– குமரன்






