பத்திரிக்கைச் செய்தி
“மக்கள் கலை இலக்கியக் கழகம்” சார்பாக, 18 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு “தமிழ் மக்கள் இசை விழா” கடந்த 2026 ஆகஸ்ட் 22 அன்று தஞ்சையில் மிகவும் எழுச்சியோடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
“கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தை துரத்தியடி!
இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்!”
– என்ற போர்க்குணமிக்க முழக்கங்களை வரலாற்றுப் போக்கின் அவசியம் கருதி –
அவற்றையே முதன்மைப்படுத்தி நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழா எதிர்பார்த்ததை விட சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் நடந்து முடிந்திருக்கிறது.
22.08.26 அன்று காலை 9:45 மணிக்கு ம.க.இ.க. நிறுவனர்களில் ஒருவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் அ.முகுந்தன்
மகஇக செங்கொடியை ஏற்றி வைத்தும், அரிவாள் சுத்தியல் சின்னம் பொறிக்கப்பட்ட தியாகிகள் நினைவுத்தூணில் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து எண்ணற்ற தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து “கீழடி நாகரிகம் மற்றும் வேத (அ)நாகரிகம்” பற்றிய கண்காட்சியை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் திறந்து வைத்தார். மக்கள் அவற்றை சாரைசாரையாகப் பார்த்து எழுச்சியுற்றனர்.
திடலில் நமக்கு வழிகாட்டும் புரட்சிகர மார்க்சிய ஆசான்களான தோழர் கார்ல் மார்க்ஸ், தோழர் பிரடெரிக் எங்கெல்ஸ், தோழர் விளாதிமிர் இல்லிச் லெனின், தோழர் ஜோசப் ஸ்டாலின், தோழர் மா-சே-துங் முதலானோர் மற்றும் சீர்திருத்தச் செம்மல்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஐயா வைகுண்டர், வடலூர் வள்ளலார், திருவள்ளுவர், அய்யங்காளி, ஜோதிராவ் பூலே, இளைஞர்களின் விடிவெள்ளி மாவீரன் பகத்சிங் ஆகியோரின் முழு உருவ கட்டவுட்டுகள் திடலில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. திடல் எங்கும் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
கீழைக்காற்று உட்பட பல புத்தகப் பதிப்பகங்கள் நிறுவப் பட்டிருந்தன.
சரியாக காலை 10:00 மணிக்கு கலை நுட்பத்துடன் எழுச்சியை ஏற்படுத்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் இசைச்சமர் பறையிசைக் குழுவினர் இசையை முழங்கினர். ம.க.இ.க. சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எழில்மாறன் தலைமையில் காலை 10:20-க்கு ஆய்வரங்கம் தொடங்கியது. “இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி” என்ற தலைப்பில் சென்னை மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் சிறந்ததொரு ஆய்வுரை நிகழ்த்தினார். ஆய்வரங்கத்தில் மிக முக்கிய ஆய்வுரை நிகழ்த்தவிருந்த கீழடி அகழாய்வறிஞர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணா வருகையில் தாமதம் இருந்ததால் அவரது உரை மாலை நிகழ்வுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மதுரை மாவட்ட ம.க.இ.க. பொருளாளர் தோழர் செங்கொடி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது.
கருத்தரங்கில் “கீழடி நாகரிகத்தை மறைப்பதன் மூலம் தேசிய இனங்களின் உணர்வுகளை சிதைக்கும் ஒன்றிய அரசு” என்ற தலைப்பில் தமிழக மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்களும், “பெரியார் பார்வையில் அழுகி நாறும் வேத நாகரிகம்” என்ற தலைப்பில் ‘புதிய குரல்’ நிறுவனர் தோழர் ஓவியா அவர்களும், “இந்திய வரலாறு – தெற்கும் திசை தான்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் களப்பிரன் அவர்களும், “கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும்” என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட ம.க.இ.க. செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மணி அவர்களும் ஆழமிக்க கருத்துரை வழங்கினர். கீழடி நாகரிகத்தின் தொன்மையை, வரலாற்றை மக்கள் மத்தியில் ஆழப் பதிவு செய்தனர். அகழாய்வறிஞர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் இரண்டு ஆண்டுகள் அரும்பாடு பட்டு கீழடியில் அகழாய்வு செய்து 982 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறைக்கு ஒப்படைத்த பின்னரும், இவ்வறிக்கை தமது ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கோட்பாட்டு பொய்மைக்கு – சரஸ்வதி நாகரிக கற்பனைக்கு எதிராக இருப்பதால் அமர்நாத் அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு கோரும் ஒன்றிய தொல்லியல் துறையையும், ஒன்றிய பாசிச பாஜக அரசையும் – ஆய்வாளர்களும் கருத்துரையாளர்களும் தங்கள் உரைகளின் மூலம் அம்பலப்படுத்தியதோடு கி அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
உரைகளுக்கிடையிடையே சென்னை ‘செந்நெல் கலைக்குழு’ தோழர்களின் புரட்சிகரமான பாடல்கள் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் பாடப்பட்டன. இறுதியில் மாநாட்டின் தீர்மானங்களை மக்கள் கலை இலக்கிய கழகம் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பழனிச்சாமி வாசித்தார். ஆய்வரங்கம், கருத்தரங்கம் நீட்சியாக கீழடி அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்து 2023 ஜனவரியிலேயே ஒன்றிய தொல்லியல் துறைக்கு ஒப்படைத்த 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறையும், ஒன்றிய அரசும் உடனடியாக வெளியிட வேண்டும்; இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுத வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போதைய தவெக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் இயற்ற வேண்டும்; ஒன்றிய அரசு கீழடி அகழாய்வை கிடப்பில் போட்ட சூழலில் தேவையான நிதி ஒதுக்கி கீழடி அகழாய்வை தொடரச் செய்தமைக்கும், அருங்காட்சியகம் அமைத்தமைக்கும் முந்தைய திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்தல்; முந்தைய திமுக அரசு போல கீழடி அகழாய்வு மற்றும் பல்வேறு அகழாய்வுகளை தொடர்ந்திட தற்போதைய தவெக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் இக்கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி போராடுவது என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் பலத்த கரவொலிக்கிடையே நிறைவேற்றப் பட்டன.
மாலை 05:00 மணி அளவில் கீழடியையே பெயர்த்துக் கொண்டு வந்து வைத்தது போன்ற மக்களைத் தட்டி எழுப்பும் வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப் பட்டிருந்தமேடையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் தலைமையில் எழுச்சி ஊட்டும் வகையில் கலையரங்கம் துவங்கியது.
தமிழர் பாரம்பரிய போர்ப்பறை இசையினை ரெட்டிபாளையம் ரங்கராஜன் தப்பாட்டக் குழுவினர் இசைத்தனர்.
கலையரங்க நிகழ்வுக்கு “மக்கள் அதிகாரம்” தமிழ்நாடு புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர் செழியன், “விவசாயிகள் விடுதலை முன்னணி” தமிழ்நாடு புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர், “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் பழனி, “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” தமிழ்நாடு புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழ்த்துரையாக மக்கள் அதிகாரம் மாநிலத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ராஜு அவர்களும், திரைப்பட இயக்குனர் தோழர் ராஜு முருகன் அவர்களும் எழுச்சி ஊட்டும் வகையில் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அமைப்பின் கவிஞர் தோழர் மகாலட்சுமி அவர்கள் எழுச்சியூட்டும் கவிதையை வாசித்தார்.
மாலை திடலுக்கு வந்து சேர்ந்த கீழடி அகழாய்வறிஞர் மற்றும் இயக்குனர், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை திரு அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை ஊடகவியலாளர்கள் சந்தித்து நேர்காணல் மேற்கொண்டனர். அனைத்திற்கும் சளைக்காமல் பதிலளித்தார் அமர்நாத். பின்பு திடலில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து கீழடி தொடர்பான காட்சி அமைப்புகள் அனைத்தையும் கண்டு களித்தார் அமர்நாத். பின்பு எழுச்சியூட்டும் பறை இசையுடன் மக்கள் வெள்ளத்தில் அமர்நாத் கலையரங்க மேடை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் அமர்நாத் அவர்களுக்கு கரவொலி எழுப்பி வரவேற்பளித்தனர். பலரும் புத்தகங்களை அன்பளிப்பாக பரிசளித்தனர். கலையரங்க மேடையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் “கீழடி அகழாய்வு உண்மையும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையும்” என்ற தலைப்பில் இந்திய வரலாறு – அதன் தொன்மை தமிழ்நாட்டில் இருந்து தான் துவங்கப் பெறல் வேண்டும்; அதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் கீழடி அகழாய்வில் தாம் கண்டறிந்த அதிசயத்தக்க அகழாய்வு உண்மைகள்; கிமு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் நாகரிகம் கொடி கட்டி பறந்திருக்கிறது என்பது குறித்தும், காவிரி ஆற்றுப் படுகைகள் இன்னும் ஆழமாக அகழாய்வு செய்யப்பட்டால் தமிழர் நாகரிகம் உலகத்திலேயே மிக மிக தொன்மை வாய்ந்தது என்பதனை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கான ஏராளமான சான்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து தோழர் கோவன் வழிநடத்தலில் புதுகை பூபாளம் கலைக்குழு, ம. க. இ. க. ஜென்.சி இளைஞர்களின் நடன நிகழ்ச்சி, காம்ரேட் கேங்ஸ்டர் கலைக்குழுவின் ராப் சாங், தெலுங்கானா அருணோதயா கலைக்குழுவின் ‘புர்ர கதா’ நிகழ்ச்சி, சிறுநகர் இசைச் சமர் பறை இசைக் குழு, பேராசிரியர் காளீஸ்வரன் நெறி ஆளுகையின் கீழான மாற்று ஊடக மைய கலை நிகழ்ச்சி என அனைத்தும் மக்களின் ஆதரவு மற்றும் கர ஒலியோடு நிகழ்த்தப்பட்டது மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நேரம் போதாமையால் ஒரு பாடலோடு முடிக்கப்பட்டு விட்டாலும் பொதுவில் இசையரங்கம் மக்களுக்கு மிகப்பெரும் உணர்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது. அந்த வகையில், ஒட்டு மொத்த “தமிழ் மக்கள் இசை விழா”வும் 18 ஆண்டு கால இடைவெளியில் எதிர்பார்ப்பை
நிறைவேற்றும் வகையில் திரளான மக்களின் பங்கேற்போடு சீரோடும் சிறப்போடும் எழுச்சி யோடும் நடந்து முடிந்தது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், இசையரங்கம், வாழ்த்தரங்கம் ஆகியவற்றில் பங்கு கொண்ட அனைத்து ஆன்றோர்- சான்றோர் பெருமக்களுக்கும், கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ராவணன் நன்றி கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் எழுச்சியுடன் இசை விழா முடிந்தது.
மொத்தத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்15 வது தமிழ் மக்கள் இசை விழா “வெற்றி மாநாடு” என்று சொல்லும் வகையில் நடந்தேறி முடிந்தது.
இந்த வெற்றிக்கு உழைத்திட்ட எமது ம. க. இ. க. மற்றும் அனைத்து தோழமை அமைப்பின் தோழர்களுக்கும், பல்வேறு வகைகளிலும் உழைப்பு செலுத்திய கலைஞர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும், தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும், பேராதரவு நல்கிய உழைக்கும் மக்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும், அரசியல் ஆதரவாளர்களுக்கும் சிறப்பான உணவு ஏற்பாடு செய்திட்ட சிவகங்கை மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜன் அவர்களுக்கும், முக்கியமாக கீழடி அகழாய்வுக்கு நிலம் கொடுத்து உதவிய மற்றும் முன்னெடுப்புகள் மேற்கொண்ட கீழடி மற்றும் கொந்தகை கிராமப் பகுதி மக்களுக்கும் .ம.க.இ.க. நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
கோவன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.







