ன்றைய நவீன நுகர்வுச் சமூகம் மனிதர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கை முறையையும் தலைகீழாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய செயல்பாட்டாளர்களை இந்த நுகர்வுப் பண்பாடு பின்னுக்கு இழுப்பதும், சீரழிப்பதும், பாதை மாற வைப்பதும்தான் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் வழியில் சமரசமின்றிப் போராடிய முன்னோடிகளின் காலத்தில் நுகர்வு வெறி இந்த அளவுக்கு சமூகத்தைப் பீடிக்கவில்லை. அன்றைய இயக்கத் தோழர்கள் எளிய வாழ்க்கையைத் தேர்வு செய்து, கொள்கைப் பற்றை மட்டுமே முதன்மையாகக் கொண்டு களத்திற்கு வந்தனர். இறுதிவரை உறுதியாகவும் நின்றார்கள்; அதனால்தான் அவர்களால் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைச் சாதிக்க முடிந்தது.

ஆனால் இன்றோ, சமூகச் செயல்பாட்டிற்கு வரும் புதிய தலைமுறையினரில் பலர் கடைசி வரை தளத்தில் நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே பின்வாங்குகிறார்கள். புதிய தலைமுறையினரை மட்டுமல்ல பழைய தலைமுறையினரையும் இந்த நுகர்வு ஆக்டோபஸ் போல ஆட்கொள்கிறது

பொருள் நுகர்வு மட்டுமல்ல… கருத்தியல் நுகர்வும் ஆபத்தானதே!

நுகர்வு என்பது வெறும் பொருள் சார்ந்த நுகர்வு மட்டுமல்ல; கருத்தியல் சார்ந்த நுகர்வும் (Ideological Consumption) ஒரு ஆபத்தான நுகர்வுப் பண்பாடே ஆகும்!

சமூகம் எந்தக் கருத்தின் பக்கம் வெறித்தனமாகச் சாய்கிறதோ, அந்தப் பக்கம் தானும் சாய்ந்து கொண்டு, அது சரியா தவறா என்று எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாமல், “இந்தக் கருத்தும் என்னுடைய கருத்துதான்” என்று கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒரு வகை ‘கருத்தியல் நுகர்வு’.

இத்தகைய கருத்தியல் நுகர்வு, சமூக மாற்றத்தில் ஈடுபடும் தோழர்களிடையே இன்று மிகத் தீவிரமாக ஆட்கொண்டுள்ளது. எதை, எந்த அளவுக்கு, எப்படிப் புரிந்துகொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற வர்க்கப் புரிதல் இன்றி, சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் கிடைக்கின்ற கருத்துகளை எல்லாம் அள்ளி வாரிக்கொள்ளும் இந்த நுகர்வு வெறி, பெரும் குழப்பங்களை உருவாக்குகிறது.

மிக முக்கியமாக, இந்த ‘கருத்தியல் நுகர்வு’ மனிதர்களுக்குள் ஒரு போலிப் பெருமிதத்தை விதைக்கிறது:

தாங்கள் மற்றவர்களை விட மிகவும் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்ற போலி உயர்வெண்ணத்தை (Intellectual Arrogance) அவர்களுக்குள் உருவாக்குகிறது.
களத்தில் நின்று உழைக்கும் மற்ற தோழர்களை “இவர்களுக்கு எதுவும் தெரியவில்லை” என்று ஏளனமாகவும் அலட்சியமாகவும் பார்க்க வைக்கிறது.
அமைப்பின் கூட்டு முடிவுகளை விடத் தங்களால் ‘நுகரப்பட்டக் கருத்துகளே’ மேலானது என்ற தனிநபர் வாதத்திற்கு வழிவகுக்கிறது.

தகவல் பெருக்கமும் குழப்பங்களும்

தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக ஊடகப் பெருக்கமும் நம் முன்னே பெருமளவிலான தரவுகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றன. ஆனால், “அதிகமான தரவுகளும் கருத்துகளும் குவிவது என்பது சரியான அரசியல் அறிவாகிவிடாது” என்பதைப் பலரும் உணர்வதில்லை.

எது சரி, எது தவறு என்று கொள்கை ரீதியாகவும் வர்க்கப் பார்வையோடும் முடிவு எடுப்பதில் ஏற்படும் தடுமாற்றங்கள், தோழர்களுக்கிடையே தேவையற்ற கருத்து முரண்களையும், தனிநபர் மோதல்களையும் வளர்க்கின்றன. இந்த முரண்பாடுகளாலும் போலி ஈகோவாலும் மனக்கசப்படைந்து சிலர் அமைப்பிலிருந்தும் சமூகச் செயல்பாடுகளிலிருந்தும் தங்களை முற்றிலுமாக ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

ஒதுங்குவது அறியாமையே தவிர அறிவாளித்தனம் அல்ல!

இப்படிச் செயல்பாடுகளிலிருந்து விலகி ஒதுங்கி நிற்கும் போக்கு, ‘நவீன காலத்தில் தாங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட்டோம்’ என்பதால் வருவதல்ல; மாறாக, அது அவர்களின் ஆழமான அரசியல் அறியாமையினாலும், கருத்தியல் நுகர்வால் ஏற்பட்ட போலி அகந்தையினாலுமே நிகழ்கிறது.

தனிநபர் பகையும் பாராமுகமும்: நேற்று வரை ஒரே கொள்கைக்காகத் தோள் கொடுத்துப் பயணித்த தோழர்கள், இன்று கருத்து வேறுபாடுகளால் பிரிந்து நின்று, எதிரிகளைப் போல் பாராமுகமாக மாறும் அவலத்தைப் பார்க்கிறோம்.

சுயமுடக்கம்: தங்களின் செயல்பாடுகளைத் தாங்களே முடக்கிக் கொள்வதுடன், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தையும் அவர்கள் அறியாமலேயே முடக்குகிறார்கள்.

அமைப்பின் வலிமையைக் குறைத்தல்: தனிநபர் முரண்பாடுகளாலும் போலி உயர்வெண்ணத்தாலும் விலகி நிற்பவர்கள், முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் மறைமுகமாகச் சாதகமான சூழலையே உருவாக்கித் தருகிறார்கள்.

தமிழ் மக்கள் இசை விழா உணர்த்திய பாடம்

சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழா எனக்கு உணர்த்திய மிக முக்கியமான அரசியல் பாடம் இதுதான்:

ஒரு அமைப்பில் பிளவுகள் ஏற்படலாம்; செயல்பாடுகளில் தற்காலிகத் தொய்வு வரலாம். ஆனால், உழைக்கும் மக்களின் அரசியலையும் வர்க்கக் கோபத்தையும் சரியாகக் கையில் எடுக்கும்போது, மக்கள் மீண்டும் அலை அலையாகத் திரண்டு வருவார்கள். விரக்தியுற்று ஒதுங்கியவர்கள், அமைப்பு வேலைகளில் சுணக்கம் காட்டுபவர்கள், முரண்பட்டு நிற்பவர்கள் அனைவரும் தங்களைச் சுயபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த விழா உரக்கச் சொல்லியிருக்கிறது.

சுயபரிசீலனையே விடுதலைக்கான வழி!

பொருள் சார்ந்த நுகர்வையும், போலி உயர்வெண்ணத்தைத் தரும் கருத்தியல் நுகர்வையும் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க ஒரே வழி சுயபரிசீலனை (Self-Criticism) மட்டுமே.

பொருள் மற்றும் கருத்தியல் நுகர்வை முறியடித்தல்: முதலாளித்துவம் நம் மீது திணிக்கும் ஆடம்பர நுகர்வுப் பண்பாட்டிலிருந்தும், ஆய்வுக்கு உட்படுத்தாத கருத்தியல் நுகர்விலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ளும் கொள்கை உறுதியையும் வர்க்கப் பார்வையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

போலி உயர்வெண்ணத்தைக் கைவிடுதல்: “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற அகந்தையை விட்டுவிட்டு, மக்களிடமிருந்தும் கள அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும் எளிமையைப் பெற வேண்டும்.

தனிநபர் வாதத்தைக் கடத்தல்: “நான்” என்ற சுயமரியாதை அல்லது ஈகோ, அமைப்பின் நலனை விடவும் உழைக்கும் மக்களின் விடுதலையை விடவும் பெரியதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்து முரண்பாடுகளைக் கையாளுதல்: தோழமைகளுக்கிடையேயான முரண்பாடுகள் ‘நட்பு ரீதியான முரண்பாடுகள்’ (Non-antagonistic contradictions). இவற்றை உரையாடல்கள் மூலமும் கொள்கைத் தெளிவு மூலமுமே தீர்க்க வேண்டும்; மாறாகப் பகையாக மாற்றக் கூடாது.

ஒவ்வொரு தோழரும் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொண்டு, அறியாமையிலிருந்தும் போலி உயர்வெண்ணத்திலிருந்தும் வெளிவர வேண்டும். தனித்தனி மனிதர்களாகப் பிரிந்து மேயச் சென்றால் எதிரி நம்மை எளிதில் வீழ்த்திவிடுவான். கூட்டாக, ஒருங்கிணைந்து இயங்குவது மட்டுமே வரலாற்றைப் படைக்கும்.

எழுவோம் மீண்டும்… சுயபரிசீலனையோடு சீறிப்பாய்வோம் எதிரிகளை நோக்கி!

  • தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here